சனி, 11 டிசம்பர், 2021

ப்ரஹ்மம் - மாயை


பிரம்மமே இந்த பிரபஞ்சமாக அல்லது இயற்கையாக நம்மால் உணரப்படுகிறது. அதன்மீது பகவான் ஸ்ரீசங்கரர் தன் விளக்கத்தை வெளிப்படுத்தியதுதான் பாம்பு - கயிறு மற்றும் திருக் - திருஷ்யம் போன்ற அத்வைத தரிசனம் ஆகும்.
இதிலே, ஆதி வேதாந்தம் ஒன்றேயான பிரம்மத்தின் துவக்கம் மற்றும் விரிவு போன்ற நிலைகளை இந்த பிரபஞ்சமாக ஏற்றுக் கொண்டது. அதிலே, பிரம்மம் வேறு, பிரபஞ்சம் வேறு என்றாலும், அந்த பிரபஞ்சத்தின் மூலக் காரணம் இந்த பிரம்மம்தான் என்றது.
ஆனால், பகவான் ஸ்ரீசங்கரர் கூறும் அத்வைதமோ பிரம்மம் மட்டுமே உள்ளது என்றும், அதை பிரபஞ்சமாக எண்ணி மயங்குவது ஜீவாத்மாவின் அவித்தை அல்லது அறியாமையினால்தான் என்றும் கூறப்படுகிறது. அதிலே, அந்த அறியாமையை நாம் அறிந்ததுமே உண்மை மாறிவிடுகிறது.
ஆக, நாம் அறிந்தது நம்மில்தான் நிலையாக உள்ளது. என்பது இவரது சித்தாந்தம்.
ஆதிசங்கரரின் கயிறும், பாம்பும் பற்றிய நியாயககருத்து கூறவருவது என்னவெனில், ஒரு கயிறு பாம்பாகத் தெரியும் வரை, அது பாம்பாகவே உணரப்படுகிறது.
அவ்வாறு பாம்பாக உணரும் போது, அந்த கயிறானது உண்மையில் பாம்பாகவே உள்ளது.
அதாவது, அது பாம்பாக உள்ளதிலிருந்து சற்றும் மாறவே இல்லை.
ஆனால், அதன்மீது வெளிச்சம் பட்டவுடன் அப்படியே தலைகீழாக மாறி, இதுவரை பாம்பாகத் தெரிந்தது, தற்போது கயிறாகத் தெரிகிறது...!
அதாவது, இரண்டுமே ஒன்றுதான் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் என்ன உள்ளது....? எனவே அந்த பாம்பிற்கு ஆதாரமாக கயிறு மட்டுமே அங்கு இருந்தது என்கிறார்.
இதுப்போன்றே, ப்ரஹ்மம் ஒன்று மட்டும்தான் உள்ளது, அதன் வாயிலாக வெளிப்பட்டதுதான் இந்த மாயை என்ற பிரபஞ்சம் என்பதை ஞானம் என்ற வெளிச்சம் வந்தால் மட்டுமே ஒருவன் தன்னை உணர்ந்த உயர்ந்த நிலைக்கு வரமுடியும்.
நன்றி!

வெள்ளி, 10 டிசம்பர், 2021

திருக் - திருஷ்ய விவேகம்!


புத்தகம்  👈

 திருக் - திருஷ்ய விவேகம்!

========================

கயிற்றை பாம்பு என்று நினைத்துக் கொண்டிருக்கின்ற அறியாமை அகன்றால், அது பாம்பு அல்ல கயிறுதான் என்று உணருவதுபோல, மாயை என்பதை அறிந்தால் ப்ரஹ்மமே நித்தியம், அதுவே சத்தியம் என்பதையும், அந்த “ப்ரஹ்மமே நான்” என்பதையும் உணரலாம் என்பதே தத்துவ தரிசனம். 

ஆக, பாம்பாகத் தெரியும் கயிறை உணர அறிவும், விழிப்புணர்வும் அவசியம். அவ்வாறே, இந்த உலகமாகத் தெரியும் ப்ரஹ்மத்தை உணர “ஞானம்” அவசியம். அந்த ஞானத்தின் மூலம் நித்தியமான சத்தியத்தை உணரலாம் என்கிறது அத்வைதம். 

சரி!, இந்த மாயை எப்படி வந்தது? எப்போது வந்தது? ஏன் வந்தது? 

இந்த மாயை என்பது பற்றிப் பலரும் பலவிதமாகக் கூறுவதற்குக் காரணம், அவர்கள் எல்லோருமே பெரும்பாலும் எதிர்மறையாகவே பொருள் எடுத்துக் கொள்கின்றனர். 

மித்யா அல்லது மாயை என்பது அறியாமை என்றும், நிலையாமையை நிலைத்தவை எனக் கொள்ளும் மயக்கம் என்றும், அந்த மாயையிலிருந்து விடுபட்டால்தான் பிரம்மத்தை அறிதல் சாத்தியம் என்றும், மேலும், அந்த மாயை என்பதே துறக்கப்பட வேண்டிய ஒன்று என்பது போல, எல்லாமே ஏற்றி எண்ணங்களாக உள்ளன. 

இந்த குழப்பம் மற்றும் ஏற்றிவைக்கப்பட்ட எண்ணங்கள் மூலம் இந்த மாயையைக் கண்டு மனம் மயங்குகின்றனர், அத்துடன் அந்த மாயைக் கண்டு அஞ்சுகின்றனர். 

ஆனால், அரிதான உண்மை ஒன்று உண்டு. 

அது, அந்த மாயையே ப்ரஹ்மத்தை அறிவதற்கான திறவுகோல் என்றால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகிறதா...?

ஆம்! அதைப் பற்றி அறிய ஆவல் உண்டாகுமானால், இந்த நூலைப் படித்துப் ப்யன் பெறலாம்.


நன்றி! 👀

திங்கள், 29 நவம்பர், 2021

மனமும்! சுய அறிவும்!

 

மனமும்! சுய அறிவும்!

இந்த மேலே உள்ள லின்கினை அழுத்தி பதிவிறக்கம் செய்து படிக்கலாம்.!

மனமும், சுய அறிவும்!

==================

இருப்பது ஒன்றே எனும்போது, எண்ணங்கள் எவருக்கு உண்டாகிறது....!

அதாவது, *மனம் என்பது எங்கிருந்து உதிக்கிறது....?*


இருப்பது ஒன்று என்றால், அதற்கு வேறாக மனம் என்ற மற்றொன்று இருக்க முடியுமா....!?

அப்படி மனம் என்ற மற்றொன்று தனக்கு வேறாக உள்ளது என்று நினைத்துக்கொண்டு இருப்பவர்கள் மட்டுமே, அந்த மனதை அமைதியாக வைத்திருக்க வேண்டும், அதன் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டும், அதனால், மனம் கடந்த மனோலயம் உள்ளது என்றும், மனதை மயக்கும் மற்ற பல பயிற்சிகளை பற்றிக் கொள்கின்றனர்.

ஒரு மீனுக்கு நான் தண்ணீரில்தான் இருக்கிறோம் என்பதை என்றுமே அறிந்துக் கொள்ள முடியாது. அத்துடன் அதற்கு வேறாக தண்ணீர் உள்ளது, அதை அருந்த வேண்டும் என்ற தாகமும் அதற்குக் கிடையாது.

ஆனால், அறிவினால் மேம்பட்ட மனிதன் தன் சுய அறிவை தன்னில் உணரத் தொடங்குவதினால், உண்டாகும் தாகம், தன்னை அறிய தனக்கு வேறாக வெளியே ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களாக உள்ள புற அறிவை, சுய அறிவென்று எண்ணிக்கொள்கிறான்.

அறியாமையினால், அந்த சுய அறிவாகவே “நான் இருக்கிறேன்” என்பதை அறியாமல், அதை தனக்கு வேறாக வெளியே அறிய முயற்சிக்கிறான்.

அதாவது, ஒரு மீன் ‘தான் தண்ணீரில் இருப்பதை’ அறியாமல், தனக்கு தண்ணீரைக் காட்டிக் கொடுங்கள் என்பது போன்று இவன் முயற்சிக்கிறான்.

அதே சமயம், அவனிடம் உள்ள அந்த அதீத சுய அறிவு, தன்னை தனக்கு அறிவிக்க ஆவல் கொண்டு, தன் அறிவின் வெளிப்பாடாக வெளியே பலவற்றைப் படைத்துக் கொள்கிறது.

அதுவே சாஸ்திரம், சத்குரு போன்றவைகள் எல்லாமே!...

புதன், 24 நவம்பர், 2021

கடவுள் துகள்

கடவுள் துகள்!

===========

இன்று உலகம் தேடிகொண்டிருக்கும் ஆய்வாளர்கள் சொல்லாத ஒரு அறிய உண்மையை நம்முடைய மகான் திருமூலர் அன்றே கூறிவிட்டார்.

ஹிக்ஸ் போசோன் சொல்லும் அந்த கடவுள் துகள் எப்படி இருக்கும்?...

 


கடவுள் துகள் புத்தகம்     👈

ஆகவே, அணுவுக்குள் அணுவானவனை, உங்கள் உயிருக்கு உயிரானவனை (சீவனை) சிவம் என்று அறிவதில் ஏன் தயக்கம்?.... அத்துடன், அணுக்கூட்டங்களின் தொகுப்பாகிய இந்த உடலை ஆளுகின்ற அந்த அறிவை, ஆன்மாவை, உயிரைப்பற்றி உரைக்கும் உன்னத வேத வாக்கியத்தை உணர்வதில் என்ன உறக்கம்?. ஆகவே, “அதுவாகவே நான் இருக்கிறேன்” என்று கூறுவதில் என்ன மயக்கம்!...? 

ஆகவே, உன்னுடைய உணர்வாகிய உயிரே உண்மையில் சிவம்…! என்று அனுபவமாக உன்னால் உணர்ந்துக் கொள்ளலாமே தவிர, அதை உனக்கு வேறாக ஆலயங்களில் தேடி அலைவதினால், ஒரு நாளும் உன்னுடைய அனுபவமாக்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். 

தேடிக் கண்டுகொண்டேன் - 

திருமாலொடு நான்முகனும்

தேடித் தேடொணாத் தேவனை என்னுளே

தேடிக் கண்டுகொண்டேன்.


வெள்ளி, 12 நவம்பர், 2021

சாதன சதுஷ்டயம்

 

சாதன சதுஷ்டயம்

இந்த நூலைப் படிக்க கீழே உள்ள லின்கினை அழுத்தவும்.

“சாதன சதுஷ்டயம்” என்ற நான்கு சாதனங்களை விவேகம், வைராக்கியம், சமாதி சட்க சம்பத்தி, முமுக்ஷுத்துவம் என்று அழைக்கப்படுகிறது. இதனை “சாதன சதுஷ்டய சம்பத்தி” என்றும் அழைக்கலாம்.

  இதில், “விவேகம்” என்பது இந்த உலக வாழ்க்கையில் எது நிலையானது, எது நிலையற்றது என்பதனைப் பற்றி சிந்தித்து, அதனைப் பற்றிய சரியான புரிதல் உண்டாவதே ஆகும்.

 அடுத்து, இந்த உலக சுகத்தின் மீதும், மறு உலகங்களான சொர்க்க லோகம், பித்ரு லோகம், பிரம்ம லோகம் போன்ற லோகங்களை அடைய வேண்டும், அங்கு சென்று சுகமாக இருக்க வேண்டும் என்ற அறியாமை கொண்ட ஆசைகளை அகற்றுவதே “வைராக்கியம்” ஆகும்.

 அத்துடன், மனவடக்கம், புலனடக்கம், தியாகம், பொறுமை, நம்பிக்கை, ஒருமுகப்படுதல் போன்ற ஆறு நற்பண்புகளை அடைவதே “சமாதி சட்க சம்பத்தி” எனப்படும்.

 இறுதியில் முக்தியை விரும்புகின்ற உத்தம சாதகனுக்கு உண்டாகும் உண்மையான ஆசையே “முமுக்ஷுத்வம்” எனப்படும்.

திங்கள், 27 செப்டம்பர், 2021

பேருணர்வும்! உள்ளுணர்வும்!


பேருணர்வும் - உள்ளுணர்வும் =========================== மனிதனிடம் உள்ள பிரக்ஞை (உணர்வு) இன்னும் தன் சுயநிலையை உணரவில்லை என்றே கூறலாம். அதாவது, மனிதனிடம் காணப்படும் பிரக்ஞை இப்போதிருக்கும் நிலையில், பெருமளவுக்கு, இன்னும் மனதின் பிம்பங்களைச் சார்ந்துதான் இயங்குகிறது. தூயப் பிரக்ஞை என்பதை, இன்னும் நம்மில் பெரும்பாலானவர்கள் அறிய முடியாத ஒன்றாகத்தான் அனேகமாக இன்றுவரை இருக்கிறது. பிரக்ஞை மனதின் ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தனக்குள் தானே விழித்துக்கொள்ளும் போதுதான், அதன் உண்மைத்தன்மையை உணர்கிறது. அதுவரை மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியன் போன்று பிரகாசிக்க முடியாமல் இருக்கிறது. அதாவது, ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணங்களால் உண்டான மனதின் ஆதிக்கத்தில் இருந்து அது விழித்துக்கொள்ளும் போது மட்டுமே, மனிதன் பிரபஞ்ச பிரக்ஞையின் பரிமாண தளங்களின் மேல் நிலையை நோக்கி முன்னேறுகிறான். புதியதொருஉயர் அறிவுத்தளத்தை அடைகிறான். அதாவது, ஒரு அறிவு முதல் ஆறு வரை படிப்படியாக முன்னேறிய நிலையில், இந்த ஆறாம் அறிவுப் பரிமாணத்தினைக் கொண்டு தன்னை அறிய ஆவல் கொண்டால், அதை விட உயர் அறிவுப் பரிமாணத்துடன் கூடிய உன்னத உணர்வுத்தளத்தில், அவனுடைய பிரக்ஞையும், பார்வையும் புதிய ஆற்றலை அடைகின்றன. இதனால், இவனிடம் இன்னும் விழிப்புக் கொள்ளாத நிலையிலிருக்கும், பல புதிய சக்திகள் மற்றும் சித்துக்கள் அவனுக்கு வந்து சேர்கின்றன. அப்பொழுதுதான், ‘நான்' என்னும் உணர்வு, பிரக்ஞையின் அடிப்படைத் தன்மையாக இருப்பதால், தூய பிரக்ஞை நிலையில்தான், அவனது சுத்தப் பிரக்ஞையான 'நான்' உணர்வு நிலைத்து நிற்க முடியும். இந்த நிலைதான், பிரபஞ்சம் தன்னைத்தானே உணர்ந்துக் கொண்ட முதல் சுயவுணர்வு நிலை என்றும் கூறலாம். பிரபஞ்சம் நம் அனைவரின் வழியாகவும் படிப்படியாகத் தன்னைத் தானே உணர்ந்துகொள்கிறது. அதாவது, படைக்கப்பட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும், அவைகளுக்கு கிடைத்துள்ள அறிவாற்றலின் பரிமாணமும் படிப்படியாக முன்னேறியதின் அர்த்தம் இதுதான். நம்முடைய உயர் வாழ்க்கை என்னும், இந்த ஜாலம் மிகுந்த அனுபவத்தின் அடிப்படைப்பயனே, நாம் இந்தப்பிரபஞ்சம்தான் என்னும் உயரிய உண்மையை நேரடியாக உணர்ந்துக் கொள்வதுதான். அத்தகைய, அந்த எல்லையில்லா பிரபஞ்ச பேருணர்வு, அதன் எல்லைக்குள் இருக்கும் இந்த உடலில்உள்ளுணர்வாக உணர முடியும். அதைத்தான் நம் சித்தர் பெருமக்கள் “அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது” என்றனர். இந்த சித்தர்கள் கூறியதின் உள்ளார்ந்த கருத்து என்னவெனில், நம் உடலிலும், மனத்திலும் இயங்கும் பிரபஞ்சப் பிரக்ஞை (உள்ளுணர்வு) நம்மை நமக்கு ‘நான்' என்று அடையாளம் காட்டுகிறது. அதேப்போன்று, இந்த அகண்ட பிரபஞ்சப் பிரக்ஞையான பேருணர்வு என்ற ‘நான்' தன்னை என்னவாகக் காண்கிறது? இந்த மாபெரும் பிரபஞ்சத்தை, அதாவது இந்த விஸ்வத்தை, தன் உடலாகத்தான் அது காண முடியும், அல்லவா? அதாவது, தன் ரூபத்தை அது விஸ்வரூபமாகத்தானே காண முடியும்? ஆக, நம் ஒவ்வொருவரின் பின்னாலும் இருந்து இயங்கும், அந்த அகண்டாகாரமான ‘நான்'தான், உண்மையில் நம் ஒவ்வொருவரின் உடல்கள் மற்றும் மனங்கள் வழியாகத் தன்னை அறிந்துக் கொள்கிறது. இந்த பேருண்மையை ஒருவர் தன்னுள் உணரும் பொழுது மட்டுமே, அவர் தன்னுடைய தற்போதைய தளத்திலிருந்து, தன்னை தானே பார்த்துக்கொள்ள முடிகிறது. அப்போதுதான் நம்மையே நாம் விஸ்வரூபமாகக் காணமுடியும். அதாவது, நம்மை நாம் இந்த பிரபஞ்சமாகக் காணமுடியும். அப்பொழுதுதான், “நான் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதைப் போன்று, இந்த பிரபஞ்சம் என்னுள் இருக்கிறது” என்ற ஆழமான கருத்தும் புரியவருகின்றது. இந்த உடல் மட்டும்தான் ‘நான்’ என்னும் எண்ணத்தை விடுத்து, தனக்குள் இருந்து இயங்கும் பேருணர்வுப் பிரக்ஞையை, இந்த பிரபஞ்சப் பிரக்ஞை என்று புரிந்துக் கொண்டால்தான் விஸ்வரூபம் என்னும் கருத்தின் உட்பொருளை, நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துக்கொள்ளலாம். இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியவரும் பொழுதுதான் திருமூலர் கூறிய ‘தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்பதும் புரிய வரும். அவர்களே, மரணத்தை வென்றவர்கள். ஆம்! அவர்களுக்கு மட்டுமே ‘என்` மரணம் என்று தனியாக ஏதுமில்லை! இந்த மரணம் என்பது, வந்து போகின்ற இந்த உடலுக்குத்தானே தவிர தனக்கு இல்லை என்ற புரிதலில், நான் பிறப்பதும் இல்லை!, இறப்பதும் இல்லை என்ற நிலையில், அவர்களுக்கு மரண பயம் என்பது முற்றிலும் அற்றுப் போகின்றது. அவனையே ஞானி, யோகி, ப்ரஹ்மம் என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. நன்றி!

வியாழன், 23 செப்டம்பர், 2021

நிர்வாண சடகம்


Audio MP3  👈

Book 👈

நிர்வாண சடகம் =============== சடகம் என்றால் ஆறு என்று பொருள். இது ஆறு ஸ்லோகங்கள் கொண்டது. இந்தத் தேகம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்த வாக்கின்படி நீக்கிவிட்டு, “இதுவல்ல, அதுவல்ல” என்று கூறி, இறுதியில் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், பரமான்மாவுன் ஒன்றே என்று சொல்லும் வேத மகா வாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து மிக அழகாக எழுதப்பட்ட இந்த ஆறு ஸ்லோகங்களும் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது. எல்லாவற்றிற்குமே ஒரு தொடக்கமும், வளர்ச்சியும், முடிவும் இருப்பது தெரிகிறது. இவை அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பதும், இவைகள் அனைத்தையும் சாட்சியாகப்பார்த்துக் கொண்டு இருக்கும் “நான்” இவைகளில் இருந்து வேறுபட்டவன். நமது உடல் நமக்குத் தெரிந்த பின்தான் உலகமே நமக்குத் தெரிய வருகிறது. அந்த உலகத்தை நாம் நமது சூக்ஷ்ம ஐம்புலன்களால் அறிகிறோம். ஐம்புலன்களும் செயல்பட அதனதற்கு வேண்டிய ஸ்தூலக் கருவிகளும் நம்மிடம் இருக்கின்றன. அவைகளும் நமது உடலின் அங்கங்களே. உடலே நாம் அல்ல என்கிறபோது அந்தக் கருவிகளோ, அல்லது அவைகளை இயக்கும் நுண் புலன்களோ நாமாக எப்படி இருக்க முடியும்? அதனால், அவைகளும் நாம் அல்ல. அப்படியானால், நம்மை நாமாக எப்போதும் உணர்கிறோமோ, அப்பொழுது, அந்த “நான்” யார்? என்று கேட்டு, அதைப்பற்றிய சதா சர்வ காலமும் சிந்தித்துப் பார்க்க முடியும். ஆக, இந்த ‘நான்’ என்று கிளம்புகின்றவன் யார்? எங்கு இருக்கிறான்? என்று ஆராய்ந்து, உணர்ந்துப் பார்த்தால், ஒவ்வொருவரின் இதயகுகைக்குள்ளே, தன்னில் தானாய் ஒளிர்ந்து கொண்டிருக்கும் உணர்வே “சிவம்”. அந்த ‘சிவமே நான்’ என்பதை இந்த ஆறு பாடல்களின் வாயிலாக உபதேசிக்கிறார் பகவான் ஆதிசங்கரர். அவரது அந்த ஆறு பாடல்களுக்க்கான விளக்க உரை இந்த ஆடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் கேட்டு, கற்று பயனடைய வாழ்த்துக்கள். இதன் MP3 ஆடியோ பகுதியை பதிவிறக்கம் செய்ய விரும்பினால், கீழே உள்ள இணையத்தில் இருந்து, பெற்றுக் கொள்ளலாம்.
நன்றி!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்