திங்கள், 27 செப்டம்பர், 2021

பேருணர்வும்! உள்ளுணர்வும்!


பேருணர்வும் - உள்ளுணர்வும் =========================== மனிதனிடம் உள்ள பிரக்ஞை (உணர்வு) இன்னும் தன் சுயநிலையை உணரவில்லை என்றே கூறலாம். அதாவது, மனிதனிடம் காணப்படும் பிரக்ஞை இப்போதிருக்கும் நிலையில், பெருமளவுக்கு, இன்னும் மனதின் பிம்பங்களைச் சார்ந்துதான் இயங்குகிறது. தூயப் பிரக்ஞை என்பதை, இன்னும் நம்மில் பெரும்பாலானவர்கள் அறிய முடியாத ஒன்றாகத்தான் அனேகமாக இன்றுவரை இருக்கிறது. பிரக்ஞை மனதின் ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தனக்குள் தானே விழித்துக்கொள்ளும் போதுதான், அதன் உண்மைத்தன்மையை உணர்கிறது. அதுவரை மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியன் போன்று பிரகாசிக்க முடியாமல் இருக்கிறது. அதாவது, ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணங்களால் உண்டான மனதின் ஆதிக்கத்தில் இருந்து அது விழித்துக்கொள்ளும் போது மட்டுமே, மனிதன் பிரபஞ்ச பிரக்ஞையின் பரிமாண தளங்களின் மேல் நிலையை நோக்கி முன்னேறுகிறான். புதியதொருஉயர் அறிவுத்தளத்தை அடைகிறான். அதாவது, ஒரு அறிவு முதல் ஆறு வரை படிப்படியாக முன்னேறிய நிலையில், இந்த ஆறாம் அறிவுப் பரிமாணத்தினைக் கொண்டு தன்னை அறிய ஆவல் கொண்டால், அதை விட உயர் அறிவுப் பரிமாணத்துடன் கூடிய உன்னத உணர்வுத்தளத்தில், அவனுடைய பிரக்ஞையும், பார்வையும் புதிய ஆற்றலை அடைகின்றன. இதனால், இவனிடம் இன்னும் விழிப்புக் கொள்ளாத நிலையிலிருக்கும், பல புதிய சக்திகள் மற்றும் சித்துக்கள் அவனுக்கு வந்து சேர்கின்றன. அப்பொழுதுதான், ‘நான்' என்னும் உணர்வு, பிரக்ஞையின் அடிப்படைத் தன்மையாக இருப்பதால், தூய பிரக்ஞை நிலையில்தான், அவனது சுத்தப் பிரக்ஞையான 'நான்' உணர்வு நிலைத்து நிற்க முடியும். இந்த நிலைதான், பிரபஞ்சம் தன்னைத்தானே உணர்ந்துக் கொண்ட முதல் சுயவுணர்வு நிலை என்றும் கூறலாம். பிரபஞ்சம் நம் அனைவரின் வழியாகவும் படிப்படியாகத் தன்னைத் தானே உணர்ந்துகொள்கிறது. அதாவது, படைக்கப்பட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும், அவைகளுக்கு கிடைத்துள்ள அறிவாற்றலின் பரிமாணமும் படிப்படியாக முன்னேறியதின் அர்த்தம் இதுதான். நம்முடைய உயர் வாழ்க்கை என்னும், இந்த ஜாலம் மிகுந்த அனுபவத்தின் அடிப்படைப்பயனே, நாம் இந்தப்பிரபஞ்சம்தான் என்னும் உயரிய உண்மையை நேரடியாக உணர்ந்துக் கொள்வதுதான். அத்தகைய, அந்த எல்லையில்லா பிரபஞ்ச பேருணர்வு, அதன் எல்லைக்குள் இருக்கும் இந்த உடலில்உள்ளுணர்வாக உணர முடியும். அதைத்தான் நம் சித்தர் பெருமக்கள் “அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது” என்றனர். இந்த சித்தர்கள் கூறியதின் உள்ளார்ந்த கருத்து என்னவெனில், நம் உடலிலும், மனத்திலும் இயங்கும் பிரபஞ்சப் பிரக்ஞை (உள்ளுணர்வு) நம்மை நமக்கு ‘நான்' என்று அடையாளம் காட்டுகிறது. அதேப்போன்று, இந்த அகண்ட பிரபஞ்சப் பிரக்ஞையான பேருணர்வு என்ற ‘நான்' தன்னை என்னவாகக் காண்கிறது? இந்த மாபெரும் பிரபஞ்சத்தை, அதாவது இந்த விஸ்வத்தை, தன் உடலாகத்தான் அது காண முடியும், அல்லவா? அதாவது, தன் ரூபத்தை அது விஸ்வரூபமாகத்தானே காண முடியும்? ஆக, நம் ஒவ்வொருவரின் பின்னாலும் இருந்து இயங்கும், அந்த அகண்டாகாரமான ‘நான்'தான், உண்மையில் நம் ஒவ்வொருவரின் உடல்கள் மற்றும் மனங்கள் வழியாகத் தன்னை அறிந்துக் கொள்கிறது. இந்த பேருண்மையை ஒருவர் தன்னுள் உணரும் பொழுது மட்டுமே, அவர் தன்னுடைய தற்போதைய தளத்திலிருந்து, தன்னை தானே பார்த்துக்கொள்ள முடிகிறது. அப்போதுதான் நம்மையே நாம் விஸ்வரூபமாகக் காணமுடியும். அதாவது, நம்மை நாம் இந்த பிரபஞ்சமாகக் காணமுடியும். அப்பொழுதுதான், “நான் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதைப் போன்று, இந்த பிரபஞ்சம் என்னுள் இருக்கிறது” என்ற ஆழமான கருத்தும் புரியவருகின்றது. இந்த உடல் மட்டும்தான் ‘நான்’ என்னும் எண்ணத்தை விடுத்து, தனக்குள் இருந்து இயங்கும் பேருணர்வுப் பிரக்ஞையை, இந்த பிரபஞ்சப் பிரக்ஞை என்று புரிந்துக் கொண்டால்தான் விஸ்வரூபம் என்னும் கருத்தின் உட்பொருளை, நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துக்கொள்ளலாம். இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியவரும் பொழுதுதான் திருமூலர் கூறிய ‘தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்பதும் புரிய வரும். அவர்களே, மரணத்தை வென்றவர்கள். ஆம்! அவர்களுக்கு மட்டுமே ‘என்` மரணம் என்று தனியாக ஏதுமில்லை! இந்த மரணம் என்பது, வந்து போகின்ற இந்த உடலுக்குத்தானே தவிர தனக்கு இல்லை என்ற புரிதலில், நான் பிறப்பதும் இல்லை!, இறப்பதும் இல்லை என்ற நிலையில், அவர்களுக்கு மரண பயம் என்பது முற்றிலும் அற்றுப் போகின்றது. அவனையே ஞானி, யோகி, ப்ரஹ்மம் என்று பலவாறாக அழைக்கப்படுகிறது. நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்