வெள்ளி, 17 செப்டம்பர், 2021

உள்ளுணர்வு


உள்ளுணர்வு ^^^^^^^^^^^^^^^^ நாம் ஒவ்வொருவரும் ‘நான் இன்னார்' என்று நம்பிக் கொண்டிருப்பது, நினைவுகளும், புத்தியும், கற்பனையும் சேர்ந்து மனத்தளத்தில் உருவாகியிருக்கும் ஒரு பிம்பம். தனிமனங்களைக் கடந்த அந்த பேருணர்வு பிரக்ஞையின் சுயப்பிரகாச ஒளி அந்தப் பிம்பத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கும்போது, அந்தப் பிரதிபலிப்பின் வழியாக உடலும், மனமும் சுயப்பிரக்ஞை கொண்டு இயங்குகின்றன. உண்மையின் இயல்பான அந்த உள்ளுணர்வு யாருக்கும் சொந்தமானதல்ல. அது எல்லையும், வடிவமுமற்ற ஒரு உணர்வுவெளி. அகண்டாகாரமானது. பிரபஞ்ச ரீதியானது. உடலைக் கொண்டு வாழும் ஒவ்வொரு ஜீவனின் பிரக்ஞையிலும் அது பிரதிபலிக்கிறது. இதை நமது சனாதன தர்மம் “பிரக்ஞானம் ப்ரஹ்ம” என்று எடுத்துரைக்கிறது. இதையறியாத ஒவ்வொரு ஜீவனும் தன் அறியாமையினால், அந்தப் பிரதிபலிப்பைத் தனியான ஒரு ‘நான்' என்று நினைத்துக் கொள்கிறது. ஒரு ஜீவனின் மரணத்தின்போது ‘மனம்’ என்னும் அறிவு மண்டலம் செயலற்றுப் போய்விடுகிறது. அதனால் அதில் பிரபஞ்ச ரீதியான ‘நான்' பிரதிபலிப்பதில்லை. அந்த உடலிலும், மனதிலும் இயங்கிய சுய உணர்வு என்ற ‘உள்ளுணர்வு’ மறுபடியும், இந்த பிரபஞ்ச பேருணர்வு மண்டலத்தில் போய்க் கலந்துவிடுகிறது. இந்தக் காரணத்தால் நம் அனைவரின் பின்னாலும் இருந்து இயங்கும் ‘நான்', ஒரே ‘நான்'தான். பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஒரு ‘நான்'தான் இருந்துக் கொண்டுள்ளது. அதுவே இறைவன். அதுவே ப்ரஹ்மம். தன்னுணர்வை தனித்தறிய முடியாத நிலையில், ஜடப்பொருளாக உள்ள பாறையின் நிலையிலிருந்து மனிதன் வெகுதூரம் முன்னேறி வந்து விட்டான். ஆனால், அவனாலும் தன்னுள்ளே உள்ள அந்த முழுப்பிரக்ஞையை முழுமையாக உணர்ந்துக்கொள்ள முடிய வில்லை. அதற்குக்காரணம், அவன் புறத்திலிருந்து ஏற்றி வைத்துக் கொண்ட ஏராளமான எண்ணங்களை “அறிவு” என்று கருக்கொண்டு, அந்த எண்ணங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளான். அதாவது, முழுப்பிரக்ஞை இல்லாத நிலையில், நம்மை நாம் அறிய முடியாதவாறு, நம்முடைய ஆறாம் அறிவுக்கு கீழே உள்ள பல பரிமாண தளங்கள் நமக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது, நமக்குப் புரிந்துக் கொள்ள முடியாதவாறு அறியாமைகள் சூழப்பட்ட சூழலில் மனம் சிக்கிக் கொண்டுள்ளதால், உள்ளுணர்வை முழுமையாக உணர முடிவதில்லை. அதேசமயம், பெரும்பாலான மனிதர்கள் ஏற்றி வைத்துக்கொண்ட எண்ணங்களினால் உண்டான தெரிந்ததை வைத்துக்கொண்டு, அதிலே தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போல் பாவனை செய்துக்கொண்டு, தவறான கருத்துகளின் மூலம், பல தவறான முடிவுகளை எடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். அதற்குக்காரணம், அவர்கள் ஏற்றி வைத்துக்கொண்ட அஹங்காரத்தின் வெளிப்பாடாக, நம் தன்மானம் என்ன ஆவது? என்று பயப்படுகிறார்கள். அதனால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சிக்கல் வாய்ந்ததாக மாறி விடுகிறது. அதாவது, எனக்கு எதுவுமே ஒழுங்காகத் தெரியாது! என்பதையே, பலரும் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும். ஒவ்வொரு மனிதர்களின் ஞாபகங்கள் என்று, ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணப்பதிவுகள், அவர்களது ஆழ்மனதில் அப்படியே இருக்கின்றன. அந்த சேகரிக்கப்பட்ட எண்ணங்களெல்லாம் கோப, தாபங்களாகவும், வன்முறைகளாகவும், விருப்பு, வெறுப்புகளாகவும், போட்டி, பொறாமைகளாகவும், சுயநலம், சுயப்பச்சாதாபங்களாகவும், சண்டை, சச்சரவுகளாகவும் ஆகி, ஏராளமான எதிர்மறை உணர்ச்சிகள் நிறைந்த நிலையில் இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள். அவர்களது ஆழ்மனதில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது? என்பதைப் பற்றிய தெளிவு எவருக்கும் இல்லை. அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல், தூக்கத்திலும் இந்த தீய எண்ண சக்திகள், கனவுகளாக அவர்களை அலைக்கழித்துத் துன்புறுத்துகின்றன. இதுவரையில், இந்த மனித இனம் சந்தித்த பல்வேறு சரித்திரம் சார்ந்த சங்கடங்கள் எல்லாவற்றிலும், மனிதன் தனக்கு அனுபவம் கொண்ட உணர்ச்சிகளாக பயம், வன்முறை, அதிர்ச்சிகள், சிக்கல்கள் போன்றவைகளை பிரக்ஞையின் அடித்தளத்தில், ஆழ்மனதில் இன்னும் தொடர்ந்து அழுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். அவனது, அந்த ஆழ்மன இருளிலுள்ள உயிர் மட்டும் உள்ளே துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த உயிருணர்வின் உதவியால், மனமாக வெளிப்படும் வெவ்வேறான எதிர்மறை உணர்ச்சிகள் அவனது உறவுகளைச் சீர்குலைக்கின்றன. என்ன செய்வது? என்று அவனுக்குத் தெரிவதில்லை. அந்தச் சக்திகளோடு போர் புரிந்து, அவன் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. அவனைவிட அவைகள் அதிகம் சக்தி வாய்ந்தவைகள். அவன் இந்த அடிமன இருளை வென்று கடந்து, உள்ளுணர்வை உணர்ந்து, உள்ளொளி பெற்று, தெளிவுடன் வாழ வேண்டுமானால், அதற்கான சில அடிப்படை விஷயங்களை மனிதனாகப் பிறந்த அனைவரும், அவசியம் அறிந்துக் கொண்டாக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்