வெள்ளி, 17 ஏப்ரல், 2020

மனம்


மனம்

மனிதன் என்பவன் உடலாலும், உயிராலும் ஆனவன். மனம் என்பது மனிதனுக்கான சிறப்புத் தகுதி. அதுவே அவனின் உடலையும், உயிரையும் அவனுக்குக் காட்டிக் கொடுக்கின்றது

கண்ணுக்குத் தெரிகின்ற புலன்களினால் உண்டாகும் அனுபவங்களைக் கண்ணுக்குத் தெரியாத மனமே உணர்கின்றது. உண்மையில் மனம் உணர்வதையே தான் உணர்வதாய் நாம் நம்புகின்றோம்.

அத்தகைய உணர்வே நம்முடைய வாழ்க்கையை அடையாளப் படுத்துகின்றது. நம் வாழ்வில் நடக்கின்ற அல்லது எதிர்கொள்கின்ற அனைத்து சம்பவங்களைக் குறித்த, பல்வேறு சிந்தனைகளை சிந்திப்பதும் மனமே.

அதன் வழியாகவே நம் ‘இருப்பை’ நாம் உணரவும், நமக்கான உலகை நாம் உண்டாக்கவும் முயல்கின்றோம்.

கண்ணிற்குத் தெரியாத அருவமான மனமே, கண்ணிற்குத் தெரிகின்ற உருவமான உடலுக்கு உறுதுணையாக இருக்கின்றது. பொதுவாகப் பார்த்தால் உடலாகத் தெரியும் நாம், நுட்பமாகப் பார்க்கும் போது மனமாக இருக்கிறோம். இன்னும் கொஞ்சம் நுட்பமாகப் பார்க்கும்போது உயிராக மட்டும் இருக்கின்றோம்.

மனம்தான் எல்லாச் செயல்களுக்கும் அடிப்படை என்பதில், உறுதியுடன் இருக்கும் நமக்கு, மனதின் தெளிவற்ற தொடர் எண்ணங்கள் நம்மை அலைக்கழிப்பதைக் காணும் பொழுது, மனதின் கட்டுப்பாட்டில் நாம் இருக்கின்றோமா அல்லது நம் கட்டுப்பாட்டில் மனம் இருக்கின்றதா எனும் சந்தேகம் தானாகவே வந்து விடுகின்றது.

அத்தகைய இந்த மனதை சிக்கல்களில் இருந்து விடுவித்து, சீர்படுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில்தான் நம் சமயம் பல்வேறு கடவுள்களையும், வழிபாடுகளையும் புகுத்தியது.

மனதைச் சீர்படுத்திவிட முடியும் என்றால் மனம் நம் கட்டுப்பாட்டில் இருக்கிறது எனப்பொருள். சிலப் பயிற்சிகள் மூலமாகவும், சில வழிபாடுகள் மூலமாகவும், மனதைச் சீரமைத்து விடலாம் எனச் சிலர் முயற்சிக்கின்றனர்.

உண்மையில், மனம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஆனால், நம் கட்டுப்பாட்டில் இருப்பது போலக் காட்சியளிக்கும் கானல் நீர் போன்றது. நீர்ப்போலத் தெரிகின்றது என்று அருகில் சென்றால் ஒன்றும் இருக்காது. 

அதற்காக நீர் போல நமக்குத் தெரிந்ததை பொய்யென்று கூறிவிட முடியுமா? முடியாது.

இதுதான் மாயையின் இலக்கணம்.

மனதைப் பற்றிக் கூறும் பொழுது, மனதின் இயல்பைப் பற்றி அறிந்துக் கொள்வது அவசியமாகிறது. நம்மால் மனதின் இயல்பை உள்ளவாறே விளங்கிக் கொள்ள இயலும் என நினைப்பது இயலாததாகவே இருக்கும்.

காரணம், மனதினுள் நுழையும் அனைத்து எண்ணங்களும் அங்கு தங்கி விடுவதில்லை. தொடர்ந்து நினைவு கொள்ளப்படுகின்ற எண்ணங்களே அங்கு நிலைப் பெறுகின்றன.

இதனால், மனதை எண்ணங்களின் தொகுப்பென்று மட்டும் கருதாமல், அதற்குள் இல்லாதப் பல புதிதான எண்ணங்களும் எழுவதைக் காணும் பொழுது, மனம் என்பது எண்ணங்களின் தற்காலிக இருப்பிடம் என்றும் அறியலாம்.

எண்ணங்கள் வந்து போகுமிடமாக மனதைக் கொள்வதே மிகச் சரியானதாக இருக்கும்.

நமக்குள் நுழையும் எண்ணங்களில் எதைத்தக்க வைத்துக் கொள்ளலாம், எதை ஒதுக்கலாம் என்பதை புத்தி முடிவு செய்யும்.

பொதுவாக, எண்ணங்களை நாம் இரண்டு வழிகளில் பார்க்கின்றோம். ஒன்று நல்ல எண்ணம், மற்றொன்று கெட்ட எண்ணம். உண்மையில் அப்படியான இரண்டுவித எண்ணங்கள் இருக்கின்றனவா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை.

இருப்பது ஒரு எண்ணம் மட்டுமே. அதை இரண்டு கோணங்களில் நாம் பார்க்கிறோம். அவ்வளவே.

ஆக, நாம் நல்ல எண்ணம் என நினைப்பது பிறிதொருவருக்கு கெட்ட எண்ணமாகத் தோன்றலாம். அவர் கெட்ட எண்ணம் எனச் சொல்வது நமக்கு நல்ல எண்ணமாகத் தோன்றலாம்.

எண்ணம் எதுவாய் இருந்தாலும் அதைத் தக்க வைப்பதையும், தவிர்ப்பதையும் நாம் மட்டுமே முடிவு செய்ய வேண்டும். அதுவே, எண்ணங்களை எதிர்கொள்ளும் ‘சாட்சி பாவனை’ வழிமுறையாகும்.

எண்ணங்கள் வருவதையும், போவதையும், சாட்சியாக நின்று கவனிக்கச் சொல்லும் சிறப்பான சிந்தனையை சீர் நோக்கிப் பாராமல் ‘சாட்சி’ பாவத்தை நம்மால் விளங்கிக் கொள்ளவே இயலாது.

சாட்சி பாவனைக்கு ஒருவன் தயாராக தவம் இருக்க வேண்டாம், கடினமான யோகப்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டாம், தத்துவக்கருத்துகளை ஊன்றிப்படிக்க வேண்டாம், கோயில் கோயிலாகச் செல்ல வேண்டாம், குறிப்பிட்ட குருவிடம் தீட்சை பெறவும் வேண்டாம்.

கொஞ்சம் அவனின் அகத்தில் நுழைந்து ‘நான் யார்?’ எனும் விசாரணையை மேற்கொண்டால் மட்டும் போதும். அந்தக் கேள்வி அவனின் அடையாளங்களில் இருந்து முதலில் அவனை விடுவித்து பிற்பாடு அவனிலிருந்தே அவனை விடுவித்து விடும்.

‘நான் யார்?’ எனும் ஆய்வைத் துவங்கும்போது பிண்டமும், அண்டமுமாக இருமைப்பட்டு இருக்கின்ற இந்த அண்டம், ஒருகட்டத்தில் அகண்ட அண்டமாக மட்டுமே காட்சியளிக்கும் அற்புதத்தை நிகழ்த்தும். அவ்வற்புதம் குறித்தான அனுபவங்கள், ஆளுக்கு ஆள் மாறுபடும் என்றாலும், அவ்வற்புதத்தின் வேராய் இருப்பது  ‘இருமை ஒருமையாக மாறி நிற்கும்’ காட்சியே ஆகும்.

அண்டத்தின் இயல்பான ஒருமையை உணர்ந்தாலும், பிண்டமாகிய தன் இயல்பான இருமை நிலையிலிருந்து, வெளி வந்துவிட முடியுமா? எனக் கேட்கத் தோன்றும்.

நல்ல கேள்விதான்.

நம் இயல்பிலிருந்து வெளிவந்துவிட வேண்டும் என்ற கற்பனையைக் கற்பித்துக் கொள்வதும் மனமே ஆகும்.

நம் இயல்பு என நாம் கற்பனை செய்து வைத்திருக்கும் இருமை அல்லது பன்மைகளின் பாதிப்பிலிருந்து விடுபட முயன்றால் போதும். அதற்கான முயற்சியை இயல்பாகத் தூண்டுவதே ‘நான் யார்?’ எனும் கேள்வியின் வழியாக நாம் பெறும் அனுபவம்.

மேலும், இந்த மனதைப் பற்றிய விசாரத்தை MP3 ஆடியோ பகுதிகளாக கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய ஆடியோக்களைக் கேட்க விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள முகவரி லின்க்கினை அழுத்தி MP3 ஆடியோக்களை பதிவிறக்கம் செய்துக் கொண்டு கேட்டுக் கொள்ளலாம்.


நன்றி!

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

புதன், 15 ஏப்ரல், 2020

வெட்டவெளி

   

வெட்டவெளி
========================


பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்துக் கொண்டிருக்கும்’ ஒரு இயக்கம். அதாவது, ஒளியிலிருந்து விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கே ‘பிரபஞ்சம்’ என்று பெயர்.

'பிரபஞ்சம்' எனும் சொல் சமஸ்கிருதச்சொல். அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே. நன்கு விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும் சொல்லே 'பிரபஞ்சம்' என்றும், தமிழில் பேரண்டம் என்றும் கூறப்படுகின்றது.

பிரபஞ்சத்தை ஒருபோதும் இந்த ஊனக் கண்களால் ழுமையாகப் பார்த்துவிட முடியாது. அறிவியல் ஆய்வுகள் கூட, அனுமானத்தினால் மட்டுமே அதனை வரையறுத்துக் கூறுகின்றது.

ஆக, பிரபஞ்சத்தின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதைக் கூட, முடிந்த முடிவாக விஞ்ஞானத்தினால் உறுதி செய்ய முடியாததிற்குக் காரணம், அது விநாடிக்கு, விநாடி விரிந்துக் கொண்டே இருக்கின்றது.

அத்தகைய இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரம் ஆகவும், அடிப்படையாகவும் இருப்பது வெளி ஆகும்.
இங்கு ‘வெளி’ என்று கூறுவதை பஞ்ச பூதங்களிலுள்ள ‘ஆகாயம்’ என்று தவறாகப் புரிந்துக் கொள்ளக் கூடாது.

இதனை வெட்டவெளி எனத் தமிழ் சித்தர்கள் மிகவும் வெளிப்படையாகக் கூறுகின்றனர்.

நாம்தான் அதைப் புரிந்துக் கொள்ள முடியாத விழிப்புற்ற ‘புத்தி சக்தி’ அற்றவர்களாக இருக்கின்றோம்.

அந்த வெட்டவெளியையே, இருப்பு, இறைவன், மெய்ப்பொருள், ஆதிமூலம் எனப் பலவாறு அழைக்கப்படுகின்றது.

இந்த வெட்டவெளியிலிருந்து வெளிப்பட்டதே இந்த பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்கள், சூரியக் குடும்பம், பூமி, உயிரினங்கள், மனிதன் என எல்லாமே.

வெட்டவெளியில் இருந்து ‘பிரபஞ்சம்’ தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் மூலமாக அறிவியலாரும் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் பெருவெடிப்புக்கு சில வினாடிகள் முன்பு, என்ன நிகழ்ந்திருக்கும் என்பதை? அறிவியல் இன்றும் ஆய்வாக மட்டுமே வைத்திருக்கின்றது.

மெய்ஞானமோ முடிந்த முடிவை ‘சித்தாந்தம்’ ஆக்கிச் சிறப்பாகத் தந்திருக்கின்றது.

பேரண்டப்பெரு வெளியை மிகவும் எளிமையான வழியில் புரிந்து கொள்ளலாம்.
எவ்வித அசைவும் இல்லாதிருக்கும் வெட்ட வெளியில், திடீரென ஒரு அசைவு நிகழ்கிறது.

அந்த அசைவு ஏற்படுவதற்கு, எந்த இயக்கம் காரணமாக இருந்ததோ, அந்த இயக்கமே இந்த மொத்தப் பேரண்டம் முதற்கொண்டு, அனைத்தும் இயங்குவதற்கு அடிப்படையாக இருக்கின்றது.

வெட்டவெளியின் ஒரு புள்ளியில் நிகழும் அழுத்தம் காரணமாக வெடிப்பு உண்டாகி, அந்த வெடிப்பின் அசைவால், மொத்த அண்டங்கள் விரிகின்றன.

இதை, சமயத்தின் வாயிலாக சற்று ஆழமாக விளங்கிக் கொள்ள முயற்சிக்கலாம்.

அதாவது, வெட்டவெளி, பேரண்டம் போன்றவற்றை சிவம், சக்தி எனும் தெய்வங்களாக சமயம் வகுத்துள்ளது.

‘சிவம்’ என்பது வெட்டவெளியைக் குறிப்பது.

சிவம்’ என்றால் உயிருள்ளது. ‘சவம்’ என்றால் உயிரற்றது என நாமறிவோம்.

சிவத்தை நுட்பமாக சிந்தித்தால் இயக்கமற்று, ஆனால் உயிருள்ளதாகக் காட்சியளிக்கும். சவத்தை இன்னும் நுட்பமாக சிந்தித்தால் உயிரற்றதோடு அசைவற்றது எனத் தெரிந்துக் கொள்ளலாம்.

அதாவது, இயக்கமில்லாமல் உயிரோடு இருக்கும் வெட்ட வெளியே ‘சிவம்’ எனப்படுகின்றது.

திடீரென வெளியில் நிகழும் அழுத்தமே வெடிப்பு அல்லது விரிவாகிறது என்று ஏற்கனவே பார்த்தோம்.

அந்நிலையில் ‘சிவம்’ உயிருள்ள இயக்கமாக மாறுகிறது. உயிருள்ள, இயக்கமற்ற, வெட்ட வெளியான ‘சிவம்’ இயக்கத்திற்கு வரும் போது ‘சக்தி’ என அழைக்கப்படுகின்றது.

இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டு மானால், உயிருள்ள, இயக்கமற்ற, வெளியைச் ‘சிவம்’ என்றும், உயிருள்ள, இயக்கங்கள் நிகழும், வெளியை ‘சிவசக்தி’ என்றும் கொள்ளலாம்.

‘சிவசக்தி’ என்பது, அசையாத சிவத்தையும், அந்த சிவத்திடமிருந்து வெளிப்பட்ட, அசையும் சக்தியையும் ஒன்றாக இணைத்து ‘அர்த்தநாரீஸ்வரன்’ என்ற ஒரு கடவுளை உருவகப்படுத்தி சமயம் வழிபடுகின்றது.

வெட்டவெளியின் ஒரு சிறுபுள்ளியில் திடீரென நிகழும், இந்த அசைவால் உண்டாகும் சத்தமும் (நாதம்), வெளிச்சமும் (ரூபம்) பேரண்டத்திற்கான தோற்றப்புள்ளிகள்.

அதாவது, ஒரு பேரணுவில், நடந்த வெடிப்பில், பல்வேறு அணுக்களாக இந்த பேரண்டம் வெளிப்பட்டது.
அந்த வெடிப்பில் (அசைவில்) முதலில் ‘ஒலி’ தோன்றி, அதன்பிறகே ‘ஒளி’ தோன்றியதை அறியலாம்.

‘நாதம்’, ‘விந்து’ என இரண்டு சொற்களை சமயத்தில் தோற்றக் குறியீடுகளாகக் குறிப்பிடுவர்.

‘நாதம்’ என்பது ஒலி. ‘விந்து’ என்பது ஒளி.

நாத விந்து கலாதி நமோநம எனும் அருணகிரி நாதரின் ‘திருப்புகழ்’ ஒரு சான்று. ‘நாதம் (ஒலி)’ முதலிலும், ‘விந்து (ஒளி’) பிற்பாடும் என்பதாகவே அப்பாடலும் கூறுகின்றது.

நம்முடைய மக்களால் ஏற்படுத்திக் கொள்ளப் பட்ட மதங்கள் அவ்வொலியை ‘ஓம்’ என்றும், ‘ஆமென்’, ‘ஆமீன்’, என்றும் கூறுகின்றார்கள்.

சமயத்தில் இறைவனை ‘நாதன்’ என்றே குறிப்பிடுகிறார்கள். ‘சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி’ என்றும், ‘நாதன் நாமம் நமச்சிவாயவே’ எனக்கூறுவதையும் இங்கு நினைவில் கொள்ளவும்.

ஆக பிரபஞ்சத்தோற்றத்திற்கு அடிப்படையான நாதத்திற்கு (ஒலிக்கு) மூலமான பொருளைச் சுட்டும் குறியீடு நாதன்.

அடுத்து, வெளிச்சத்தை ‘சோதி’ எனக் குறிக்கலாம்.

முதலில் வெட்டவெளி மட்டுமே இருந்தது, அந்த வெட்டவெளியில் உண்டான அசைவில், அதாவது, அந்த பெரு வெடிப்பின் போது, எழுந்த ஓசையை ‘ஓம்’ என்றும், அதன் பிறகு வெளிப்பட்ட வெளிச்சத்தை ‘சோதி’ என்றும் அறியலாம்.

அடுத்து, வெட்டவெளிக்குள் நிகழ்ந்த பெருவெடிப்பின் இயக்கத்தின் துவக்கத்தில் வெளிப்பட்ட (சப்தத்தை) ‘ஓம்’ என்ற ‘ஒலி’ யைச் சுட்டி நிற்பவர் ‘விநாயகர்’ ஆவார்.

அவருக்கு வடிவைக்கப்பட்ட வடிவமும் ‘ஓம்’ என்ற அக்ஷரம் போன்றே காணப்படும். விநாயகரின் திருவுருவை வலது காது முதல் தொடங்கி தலையை சுற்றி வளைத்து இடது காது வரை கொண்டு வந்து தொங்கும் தும்பிக்கை வரை கொண்டு வந்து சுழித்தால் ‘ஓம்’ என்ற பிரணவ வடிவம் புலப்படும். அதனால் அவர் நாத முதல்வர் எனப்படுகின்றார்.

அடுத்து, ஒலியைத் தொடர்ந்து உதிக்கும், ஒளியைச் சுட்டி நிற்பவர் ‘முருகன்’ ஆவார். முருகனின் பிறப்பும் சிவனின் நெற்றிக் கண்களில் இருந்து வந்த ஒளியின் மூலமாகவே நிகழ்ந்தது என புராணக் கதைகளில் படித்திருக்கின்றோம்.

ஆகவே, வெட்டவெளியில் இருந்து வெளிப்பட்ட ‘ஒலி’ - யை ‘விநாயகர்’ எனவும், ‘ஒளி’ - யை ‘முருகன்’ எனவும் கொண்டு சமயம் வழிபடுகின்றது.

ஆதிநடு அந்தம் கடந்த நித்தியானந்தப் போதமாய் பந்தம் தண்ந்த பரஞ்சுடராய் எனும் குமரகுருபரரின் கந்தர்கலி வெண்பா வரிகளைக் கவனியுங்கள். சோதிப்பிழம்பதோர் மேனியாக எனும் கந்தபுராண வரியையும் நினைவு கூர்வோம். ஓங்காரத்து உள்ளொளிக்குள்ளே முருகனுருவங் கண்டு என்று கந்தர் அலங்காரத்தில் அருணகிரிநாதர் குறிப்பிடுவதைக் கவனியுங்கள்.

‘சிவசக்தி’ என்பது, இந்த மொத்த பிரபஞ்சத்தையும் இயக்கிக் கொண்டிருக்கின்ற இயக்க ஆற்றலை சிவன், சக்தி எனவும், அந்த சிவசக்தியிலிருந்து வெளிப்பட ‘ஒலி’, ‘ஒளி’ ஆற்றல் களை அவர்களின் இரண்டு குழந்தைகளாக ‘விநாயகர்’, ‘முருகன்’ எனவும் அறியாமையில் உள்ள பாமர மக்களுக்காக சமயம் வடிவமைத்துக் கொடுத்தது.

நாம் நம் அறியாமையினால், அந்த வடிவமைக்கப்பட்ட உருவங்களை மட்டுமே பிடித்துக் கொண்டு, அந்த உருவங்களுக்கு பின்னால் ஒளிந்துக் கொண்டிருக்கின்ற உண்மையான ‘இருப்பு’ எது என்பதை அறிய மறுக்கின்றோம்.

இந்த ‘இருப்பு’ என்பது, வழிபடுகின்ற கற்சிலைகளில் மட்டும் இல்லை. படைக்கப்பட்ட ஒவ்வொரு பொருள்களிலும், உயிர்களிலும் உள்ளேயும், வெளியேயும் இருக்கின்றது. அதை எப்பொழுது நாம் உணருகின்றோமோ, அப்பொழுதே நாம் நம்மை அறிந்தவர்களாகின்றோம்.

இதை விடுத்து, சிவன், சக்தி, விநாயகர், முருகன் எனும்போது, அதனை ஆற்றல்களாக புரிந்துக் கொள்ளாமல், ஆட்களாகப் புரிந்துக் கொள்ளும் அபக்குவ நிலையே, தன்னை அறிவதற்குத் தடையாக இருக்கிறது.

வெட்டவெளியின் ஓரிடத்தில் திடீரென நிகழும் அசைவு அல்லது விரிவே பிரபஞ்சத் தோற்றத்துக்கான அடிப்படை நிகழ்வு எனும் பொழுது, அவ்வாறு நிழந்த அந்த அசைவு படைக்கப்பட்ட அனைத்திலும். இருக்கின்றது.

அந்த அசைவை ‘இயக்கம்’ என்று விஞ்ஞானம் கூறுகின்றது. அந்த அசைவை ‘உயிர்’ என்று மெய்ஞ்ஞானம் கூறுகின்றது. இதுதான் வித்தியாசம்.

அந்த உயிரின் ‘இருப்பை’ படைக்கப்பட்ட ஒவ்வொருப் பொருளிலும் உற்று கவனித்தால், அதை நாம் உணரலாம்.

விஞ்ஞானத்தை ‘அறிவு’ எனக் கொண்டால், மெய் ஞானத்தை ‘அனுபவம்’ எனக்கொள்ளலாம்.

விஞ்ஞானம் தான் கண்டறிந்த அறிவை தனிப்பட்டதாக மாற்ற முயல்கிறது. அந்த அறிவை, அனுபவத்தைப் பொதுப்படையானதாக உணரச் செய்வது மெய்ஞானம்.

பொருளைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு வேண்டுமானால், புறத்தில் வளர விஞ்ஞானம் அவசியமானதாக இருக்கலாம். அருளைச் சார்ந்து வாழ்பவர்களுக்கு, அகத்தில் வளர மெய்ஞானம் அவசியம்.

ஒருவனை அவனிலிருந்து விடுவித்து, வெட்டவெளியில் சிறுதுகளாக உணரச் செய்வதே உண்மையான மெய்ஞானம் ஆகும். மற்றவைகள் எல்லாம் எப்படிப்பட்ட புனிதமான விசயங்களைப் புரிய வைத்தாலும், அவைகள், அவனைப் பந்தப்படுத்துகின்ற பொய்ஞானம் ஆகும்.



@@@@@ ஓம் தத் சத்! @@@@@

ஞாயிறு, 12 ஏப்ரல், 2020

அறிவும் அறியாமையும்





மூன்று காலங்களையும் முக்கியமாகக் கருதுகின்ற மனிதன் எப்பொழுது எனக்கு நல்ல காலம் வரும் என்று அடிக்கடி ஜோதிடர்களை சந்தித்து சந்தேகம் கேட்கின்றான்.

மனித வாழ்க்கையின் தலையெழுத்தே, அவன் பிறந்த நேரத்தால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதான ஒரு நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கின்ற ஒரு மனிதனின் வாழ்வியல் சம்பவங்களை முன்கூட்டியே சொல்லிவிட முடியும் என நம்மில் பலர் அசட்டுத்தனமாக நம்பிக்கையும் கொள்கின்றனர்.

அதன் காரணமாக, ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் விடாமல் பிடித்துக் கொண்டு, ஒவ்வொரு ஜோதிடர்களின் இல்லங்களுக்கும், அலுவலகங்களுக்குமாக இங்கும், அங்கும் அலைந்துக் கொண்டிருக்கின்றார்கள்.

காலம் மனிதனை அலைக்கழிக்கிறதா? அல்லது காலமெனும் ஒன்றை உண்டாக்கிக் கொண்டு, மனிதன் அலைந்துக் கொண்டிருக்கிறானா?

உண்மையில் காலமென்ற ஒன்று தனித்து இல்லை. நாமே உருவாக்கிக் கொண்ட மாயக் கண்ணாடி அது.

தண்ணீரில் தெரியும் தன் பிம்பத்தைக் கண்டு பயப்படும் நரியைப் போன்று அந்தக்கண்ணாடியில் தெரியும் நம் பிம்பத்தைக் கண்டு நாமே பயப்படுகின்றோம்.

ஒரு மனிதனின் வாழ்வு அவன் தலையெழுத்தைக் கொண்டே அமைகின்றது என, இந்த மனிதச்சமூகம் தொடர்ந்து நம்பி வருகின்றது. தலையெழுத்தை இரண்டு காரணிகள் தீர்மானிப்பதாகவும் அது கருதுகின்றது.


அவைகள், பிறந்த இடம் மற்றும் பிறந்த நேரம். பிறந்த நேரம் காலத்தைக் குறிப்பது. பிறந்த இடம் என்பது வெளியின் (Space) பகுதியோடு ‘இருப்பு’ கொண்டது.

ஒரு குறிப்பிட்ட மனிதரின் ஜாதகம் என்பது அவர் பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கணக்கில் கொண்டே கணிக்கப்படுகின்றது.

முதலில் காலம்தான் (Time) மனிதனைப் பயமுறுத்து கின்றது என்றோம். இப்போது அதனுடன் வெளியின் (Space) குறிப்பிட்ட பகுதியையும் (இடத்தையும்) இணைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

அதாவது, ஒரு மனிதனால் காலத்தையும், தேசத்தையும் அளவீடுகளாகக் கொள்ளாமல், அவன் இருப்பை அடையாளப் படுத்தி விட முடியாது.

காலமும், தேசமும் நம் அனுபவத்திற்கு உட்பட்டது. மனதினால் ஒரு எண்ணத்தை எண்ணி, அதனைக் கவனத்தில் கொண்ட அந்த ஒரு விநாடியை ‘காலம்’ என்றும், அவ்வாறு தோன்றிய அந்த ஒரு எண்ணம் மறைந்து, அடுத்த எண்ணம் உண்டாவதற்கும் உள்ள இடைவெளியை ‘தேசம்’ என்றும் கொள்ளலாம்.

அந்த ‘இருப்பு’, கால, தேசங்களுக்கு அப்பாற்பட்டது. அதை காலத்தின் (Time) உதவிக் கொண்டோ, அல்லது தேசத்தின் (Space) உதவிக்கொண்டோ அறிந்திட முடியாது.

மனிதன் தன்னை அடையாளப்படுத்தும் விதமாக, தன்னுடைய பிறந்த தினத்தைக் கொண்டாடும் காலம் (Time) மற்றும் இடத்தை (Place or Space) கணக்கில் கொண்டே நாம் இங்கு விசாரம் செய்வோம்.


*****

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

மெய் அறிவு




                                        மெய் அறிவு’ புத்தகத்தை பதிவிறக்கம் செய்ய மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்.

இந்த நூலின் தலைப்பு மெய் அறிவு என்பதாகும். அதாவது, இங்கு மெய் என்பதை தமிழ் மொழியில் ‘உடல்’ என்றும், ‘உண்மை’ என்றும் இரண்டு விதங்களில் அர்த்தங்கள் கொள்ளலாம்.

இங்கு அறிவுஎன்று கூறப்படுவது ஒன்றே ஒன்று மட்டும்தான் இருக்கின்றது. அதையே நாம் ‘இறைவன்’ என்கின்றோம்.

இந்த அறிவு என்ற ஒன்று மட்டுமே அனைத்து உயிர்களின் உள்ளேயும் அந்தர்யாமியாக இருந்து, அவைகளை இயக்குகின்றது.

படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களிலும், ஓரறிவு படைத்த ஒரு செல் உயிரியான ‘கொரோனா’ முதல், ஆறறிவு படைத்த பல செல்கள் உயிரியான ‘மனிதன்’ வரை, உடல் என்ற உபாதியைப் பொருத்து அறிவால் மாறுபடுகின்றது.

இதில், மனிதன் மெய் என்ற வார்த்தைக்கு, ‘உடல்’ என்று பொருளை எடுத்துக் கொண்டான் எனில், அவனது புரிதல் உடல் சார்ந்த அறிவாக மட்டுமே தனித்து நின்று விடுகின்றது. அதே மனிதன் மெய் என்ற வார்த்தைக்கு, ‘உண்மை’ என்று பொருளை எடுத்துக் கொண்டான் எனின், அவனது புரிதல் உண்மை அறிவான இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றது.

ஒரு வகுப்பறையில் படிக்கின்ற பல மாணவர்களுக்கும், ஆசிரியர் ஒரே மாதிரியாகத்தான் பாடங்களை நடத்துகின்றார். ஆனால், அந்த மாணவர்களுக்குள் அதை புரிந்துக் கொள்கின்ற அறிவில் வித்தியாசம் இருப்பதினால், ஒருவன் அந்த பாடங்களை ஒழுங்காக புரிந்துக் கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக இருக்கின்றான்.

ஆனால், அதே வகுப்பறையில் படிக்கின்ற மற்ற சில மாணவர்களோ, அதே பாடங்களை சரியாக புரிந்துக் கொள்ளாததினால், குறைந்த மதிப்பெண்கள் பெற்று, பாடங்களில் பின் தங்கிய மாணவர்களாக இருக்கின்றனர்.

அதாவது, அவரவர்கள் புரிந்துக் கொள்வதை வைத்து, அவர்கள் ‘அறிவு’ இருக்கின்றது.

இதுப்போன்றே, இந்த மெய் அறிவு என்ற பதத்தை ‘உண்மை’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘ஞானி’ என்று அழைக்கப்படுகின்றான்.

இந்த மெய் அறிவு என்ற பதத்தை ‘உடல்’ அறிவாக புரிந்துக் கொண்டவன் ‘அஞ்ஞானி’ என்று அழைக்கப் படுகின்றான்.

இங்கு புரிதல்தான் வித்தியாசம்!

செவ்வாய், 24 மார்ச், 2020

எல்லாமே எண்ணங்கள்



நிலையான ஆனந்தத்திற்கு நித்தமும் தடையாக இருப்பது, ‘நான்’, ‘எனது’ என்ற அபிமான எண்ணங்களே என்பதை அறிவதற்கு, இங்கு ‘அறிவு’ அவசியமாகின்றது.

இந்த பிரத்யேகமான ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால், அவனால் மட்டுமே இந்த இன்ப, துன்பங்களில் இருந்து விடுதலை அடைவது சாத்தியமாகின்றது.

இவ்வாறு எண்ணங்களை அறிந்த நான் இறப்பதே ‘முக்தி’ எனப்படுகின்றது.

அதாவது,

மனம் இறப்பது முக்தி!
உடல் இறப்பது மரணம்!

இதை அறிவதே இங்கு ‘அறிவு’ அல்லது ‘ஞானம்’ எனப்படுகின்றது.

பல்வேறு எண்ணங்களால் சூழப்பட்ட இந்த சூக்ஷுமமான மனம், தன்னால் கற்பித்துக் கொள்ளப்பட்ட இந்த ஸ்தூல உடலை, தன்னை அறியாமலேயே மரணத்தை நோக்கி, அனுதினமும் அழைத்துச் செல்கின்றது என்பதை, இதே மனதால் நான் அறியாமல் இருக்கின்றேன்.

ஆனால், ‘அந்த மரணம்’ இந்த ஸ்தூல உடலுக்கு உண்டாகும் பொழுது, இந்த உடலைச் சார்ந்துள்ள உலகம், உறவுகள், சொத்து, சுகம் என்ற அனைத்தும், எனக்கும், என்னைச் சார்ந்தவர்களுக்கும் துயரத்தை உண்டாக்கி, இறுதியில் என் இறப்பிற்குப் பிறகு இல்லாமல் மறைகின்றது.

அதுவே, ‘அந்த மரணம்’ இந்த சூக்ஷும மனதிற்கு மட்டும் உண்டாகும் பொழுது, அந்த மனம் இறப்பதினால், அனைத்து துயரங்களுக்கு காரணமாக இருந்த அனைத்திலிருந்தும் இந்த மனமும், தன்னைச் சார்ந்தவர்களின் மனதிற்கும் விடுதலையைப் பெற்றுத் தருகின்றது. இந்த மனதின் இறப்பினால், எனக்கும், மற்றவர்களுக்கும் இன்பம் மட்டுமே உண்டாகின்றது.

இதை அறிவதே, ‘ஞானம்’ எனப்படுகின்றது.


வியாழன், 5 மார்ச், 2020

ஆன்ம அனுபவம்


ஆன்ம அனுபவம்



உத்தம ஞானிகள் எப்பொழுதும் தன் சுயத்திலேயே இருப்பதால், மற்றவர்கள் பார்வைக்கு அவர்கள் உலக விவகாரங்களில் ஈடுபடுவது போன்று தோன்றினாலும், அவர்களைப் பொருத்தவரை அவற்றை முயல் கொம்பு போன்று உண்மையற்றது என்று ஒதுக்கி விடுவார்கள்.

ஒரு நாடக மேடையில் நடிக்கும் நடிகன் பல கதா பாத்திரங்களில், நடிப்பவர்களின் மத்தியில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை ஏற்று, அந்தப் பாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பார். அது மேடையோடு முடிந்து விடும். அனால், அவரது உண்மை நிலை அவருக்கு நன்றாகத் தெரியும்.

அதுப்போல,

ஆன்மானுபவத்தில் எப்பொழுதும் நிலைத்துள்ள உத்தம ஞானிகள் செயலும் நடிகர் போன்றதே, அவரும் உலக விவகாரங்களில் நடிக்க வந்தாலும், அதை உண்மையென்று ஏற்றுக் கொள்ளாமல், நாம் நடிக்கவே வந்துள்ளோம் என்று தெரிந்து கொண்டு செயல்களைப் புரிவதால், அதில் பந்தப்பட மாட்டார். தன் உண்மை சொரூபத்தில் எப்பொழுதும் இருப்பார். உலக விவகாரங்கள் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
     
இந்த உண்மையை உணர்ந்த இவர்களது பிராரப்தம், இவர்களது ஞானாக்கினியால் எரிந்த துணியின் சாம்பல் போன்று ஆகிவிடுவதால், பார்ப்பதற்கு காட்சியில் துணி இருந்தாலும், அது பயனற்றது போன்று, இவர்கள் பிராரப்தமும் பலனைக் கொடுப்பதில்லை. பலன் இல்லாத எந்த கர்மப் பதிவும் இவர்களுக்கு சேராது.

இவர்கள் மறைப்பொருளை மறைக்காமல் மற்றவர்களுக்கு உரைப்பதிலும், உற்சாகத்துடன் சத்சங்கங்களில் ஈடுபடுவதும் இவர்களது இயல்பாக இருக்கும். இவர்கள் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும் தங்கள் அமைதியை இழக்க மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பார்கள்.

இவ்வாறு உத்தம ஞானிகள் போன்று, ஒவ்வொரு சாதகனும் தன்னிடத்திலேயே இந்த தகுதியைத் தேட வேண்டும்.

இதில், எந்த தகுதி குறைவாக இருக்கின்றதோ, அதை அனுபவத்தில் அறிந்து, அதனை நிறைவு செய்ய தீவிரமாக முயற்சிக்க வேண்டும். உத்தம ஞானியைப் போன்று உயர அனைவரும் ஊக்கமுடன் முயற்சிக்க வேண்டும்.

வியாழன், 13 பிப்ரவரி, 2020

தன்னை அறியும் மனம்





மேலே உள்ள இணைப்பை அழுத்தி புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ஹரிஓம்!
ஸ்ரீ குருப்யோ நம:

முகவுரை

ஒரு தொடக்கம் என்று இருந்தால், அதன் முடிவு நிச்சயம் இருந்தாக வேண்டும். இந்த தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையில் உள்ள இடை ‘வெளியை’ காலம் என்று அழைத்துக் கொண்டு, அதன் தோற்றம் - மறைவு குறிப்பிடப்படுகின்றது.

இது படைக்கப்பட்ட பொருள்கள் எதுவாக இருப்பினும், அவைகள் அத்தனைக்கும் இந்த காலம் பொருந்தும். அதனால், படைத்தல் என்றால், அதற்கு முடிவாக அழித்தல் என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கும்.

இதில், ஜடப் பொருள்களாகட்டும், உயிர் பொருள்களாகட்டும் அனைத்திற்கும் ஆதாரமான மூலப்பொருள் என்ற ‘பரம்பொருள்’ ஒன்று இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால்தான், படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் மீண்டும் மூலத்தை (பரம்பொருளை) நோக்கி நகர்கின்றது. இந்த நகர்கின்ற காலம் பொருள்களைப் பொருத்து மாறுபடுகின்றது.

இந்த கால வேற்றுமைகளுக்குக் காரணம், அவைகள் கடந்து வந்த பாதைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் என்ற இருமைகள் எனலாம்.

எது ஒன்று, இதுபோன்ற இருமைகளில் சிக்கிக் கொள்கின்றதோ, அது, அந்த மூலத்தை அடைவதற்கு இங்கும், அங்கும் அலைந்து காலதாமதம் ஆகின்றது.

இங்கு காலம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள ‘இடைவெளி’ என்பதினால், அந்த ‘வெளி’ ஒன்றே அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

இங்கு ‘வெளி’ என்று குறிப்பிடுவது, இந்த பிரபஞ்சத்தையே வெளிப்படுத்துகின்ற வெட்டவெளி(ஆகாசம்) பற்றி கூறப்படுகின்றது.

இத்தகைய வெட்டவெளியில் மிதக்குகின்ற பிரபஞ்சத்திற்குள் காணப்படுகின்ற கோடானு, கோடி சூரியன்களும், விண்மீண்களும், அந்த சூரியன்களை சுற்றுகின்ற கோள்களும், அந்த கோள்களில் வசிக்கின்ற கோடானு, கோடி சீவர்களும் என அத்தனைக்கும் ஆதாரமாக, அதனுள்ளே ‘உள் வெளியாக’ ஊடுறுவி இருக்கின்றது.

ஆம், அதுவே, பரவெளி, பரம்பொருள், பரமாத்மா, பரமேஸ்வரன், பராசக்தி, பரிபூரணம் என பலவாறாக அழைக்கப்படுகின்றது.

அந்த வெட்டவெளி என்ற வெள்ளைத் திரையினிலே, ‘பிரபஞ்சம்’ என்ற வர்ணப்படம் திரையிடப்பட்டு, தினசரி மூன்று காட்சிகளாக கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என திரைப்படம் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.

திரைப்படத்தின் கதாநாயகனாக ‘பரமாத்மா’ மிகச்சிறப்பாக படத்தில் நடிக்கின்றார். அவரது நடிப்பை பார்க்க விரும்பிய அவரது ரசிகர்களான, அனேக சீவர்களும், அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு, உலகம் என்ற அரங்கினுள் அமர்ந்து, உல்லாசமாக படம் பார்த்துக் கொண்டு உள்ளனர்.

படம் பார்த்து முடிக்கின்றவரை, அந்த படத்தில் வருகின்ற காட்சிகளாகவே இந்த சீவர்கள் மாறி விடுவதினால், அந்த காட்சிகளுக்கு வேறாக, ‘நான்’ என்ற ’இன்னார்’ அந்த திரையரங்கத்தின் உள்ளே இருப்பதை மறந்துவிட்டு, அந்த திரைப்படத்துடன், திரைப்படமாக ஒன்றாகி விடுகின்றன.

அதாவது, காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என ‘திரிபுடி’ (மூன்றும்) இல்லாமல் ஒன்றாகி விடுகின்றன.

படத்தைப் பார்ப்பவன், படத்தின் காட்சிகள், படத்தில் உள்ள அனைத்தும் என இதில் எந்தவித பேதமைகளும் இன்றி ஒன்றாக மாறி விடுவதைப் போன்று, இந்த உலகத்தை உண்மை என்று கருதி, அதனுடன் ஒன்றாகி, அதிலிருந்து விடுபட முடியாமல், உண்மை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற வரை, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம்.

இதற்குக் காரணம், மனம் கற்பித்துக் கொண்ட கற்பனைகளுக்கு ஏற்ப, இந்த உலகம் ஒவ்வொரு விதமாக ஒவ்வொருவருக்கும் உண்மை போன்று, காட்சியாகின்றது.
திரைப்படம் முடிந்ததுமே, நாம் அதிலிருந்து பிரிந்து, வெளியே வந்து, அது பொய் என அறிந்து, இந்த உலகத்தை உண்மை என்று அபிமானிக்கின்றோம்.

அதுப்போன்று, இந்த உண்மை உலகத்தில் ஒன்றாகிப் போன நம் மனம், அதிலிருந்து விடுபட்டு, நம் உண்மை சொரூபத்தை அறிந்து கொண்டால் மட்டுமே, இந்த படம் பார்த்ததின் (உடல் எடுத்ததின்) பலன் நமக்கு உண்டாகும்.

அந்த ‘பலன்’ என்னவெனில், திருப்தி, ஆனந்தம், அமைதி, மெளனம் என பலவாறாக பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.

அந்த பேரானந்தம் மட்டுமே பலனாக மனதில் நிலைத்திருக்க வேண்டுமெனில், மனதின் அறியாமை அகற்றப்பட வேண்டும். அதற்கு மனதை விசாரித்து, அதன் உண்மைத் தன்மையை உணர வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு, இந்த நூலை ஏகாந்த பரவெளிக்கு எளிமையுடன் படைக்கின்றேன்.


நன்றி! 

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.


புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்