ஆன்ம அனுபவம்
உத்தம ஞானிகள் எப்பொழுதும்
தன் சுயத்திலேயே இருப்பதால், மற்றவர்கள் பார்வைக்கு அவர்கள் உலக விவகாரங்களில் ஈடுபடுவது
போன்று தோன்றினாலும், அவர்களைப் பொருத்தவரை அவற்றை முயல் கொம்பு போன்று உண்மையற்றது
என்று ஒதுக்கி விடுவார்கள்.
ஒரு நாடக மேடையில் நடிக்கும்
நடிகன் பல கதா பாத்திரங்களில், நடிப்பவர்களின் மத்தியில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை
ஏற்று, அந்தப் பாத்திரமாகவே தன்னை மாற்றிக் கொண்டு நடிப்பார். அது மேடையோடு முடிந்து
விடும். அனால், அவரது உண்மை நிலை அவருக்கு நன்றாகத் தெரியும்.
அதுப்போல,
ஆன்மானுபவத்தில் எப்பொழுதும்
நிலைத்துள்ள உத்தம ஞானிகள் செயலும் நடிகர் போன்றதே, அவரும் உலக விவகாரங்களில் நடிக்க
வந்தாலும், அதை உண்மையென்று ஏற்றுக் கொள்ளாமல், நாம் நடிக்கவே வந்துள்ளோம் என்று தெரிந்து
கொண்டு செயல்களைப் புரிவதால், அதில் பந்தப்பட மாட்டார். தன் உண்மை சொரூபத்தில் எப்பொழுதும்
இருப்பார். உலக விவகாரங்கள் அவர்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.
இந்த உண்மையை உணர்ந்த
இவர்களது பிராரப்தம், இவர்களது ஞானாக்கினியால் எரிந்த துணியின் சாம்பல் போன்று ஆகிவிடுவதால்,
பார்ப்பதற்கு காட்சியில் துணி இருந்தாலும், அது பயனற்றது போன்று, இவர்கள் பிராரப்தமும்
பலனைக் கொடுப்பதில்லை. பலன் இல்லாத எந்த கர்மப் பதிவும் இவர்களுக்கு சேராது.
இவர்கள் மறைப்பொருளை
மறைக்காமல் மற்றவர்களுக்கு உரைப்பதிலும், உற்சாகத்துடன் சத்சங்கங்களில் ஈடுபடுவதும்
இவர்களது இயல்பாக இருக்கும். இவர்கள் எத்தகைய ஆபத்தான சூழ்நிலையிலும் தங்கள் அமைதியை
இழக்க மாட்டார்கள். இவர்கள் எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பார்கள்.
இவ்வாறு உத்தம ஞானிகள்
போன்று, ஒவ்வொரு சாதகனும் தன்னிடத்திலேயே இந்த தகுதியைத் தேட வேண்டும்.
இதில், எந்த தகுதி குறைவாக
இருக்கின்றதோ, அதை அனுபவத்தில் அறிந்து, அதனை நிறைவு செய்ய தீவிரமாக முயற்சிக்க வேண்டும்.
உத்தம ஞானியைப் போன்று உயர அனைவரும் ஊக்கமுடன் முயற்சிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக