நிலையான ஆனந்தத்திற்கு
நித்தமும் தடையாக இருப்பது, ‘நான்’, ‘எனது’
என்ற அபிமான எண்ணங்களே என்பதை அறிவதற்கு, இங்கு ‘அறிவு’ அவசியமாகின்றது.
இந்த பிரத்யேகமான ஆறாவது அறிவு மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளதால்,
அவனால் மட்டுமே இந்த இன்ப, துன்பங்களில் இருந்து விடுதலை அடைவது சாத்தியமாகின்றது.
இவ்வாறு எண்ணங்களை அறிந்த
“நான்” இறப்பதே
‘முக்தி’ எனப்படுகின்றது.
அதாவது,
மனம் இறப்பது
முக்தி!
உடல் இறப்பது
மரணம்!
இதை அறிவதே இங்கு ‘அறிவு’ அல்லது ‘ஞானம்’ எனப்படுகின்றது.
பல்வேறு எண்ணங்களால்
சூழப்பட்ட இந்த சூக்ஷுமமான மனம், தன்னால் கற்பித்துக் கொள்ளப்பட்ட இந்த ஸ்தூல உடலை,
தன்னை அறியாமலேயே மரணத்தை நோக்கி, அனுதினமும் அழைத்துச் செல்கின்றது என்பதை, இதே மனதால்
நான் அறியாமல் இருக்கின்றேன்.
ஆனால், ‘அந்த மரணம்’ இந்த ஸ்தூல உடலுக்கு உண்டாகும்
பொழுது, இந்த உடலைச் சார்ந்துள்ள உலகம், உறவுகள், சொத்து, சுகம் என்ற அனைத்தும், எனக்கும்,
என்னைச் சார்ந்தவர்களுக்கும் துயரத்தை உண்டாக்கி, இறுதியில் என் இறப்பிற்குப் பிறகு
இல்லாமல் மறைகின்றது.
அதுவே, ‘அந்த மரணம்’ இந்த சூக்ஷும மனதிற்கு மட்டும்
உண்டாகும் பொழுது, அந்த மனம் இறப்பதினால், அனைத்து துயரங்களுக்கு காரணமாக இருந்த அனைத்திலிருந்தும்
இந்த மனமும், தன்னைச் சார்ந்தவர்களின் மனதிற்கும் விடுதலையைப் பெற்றுத் தருகின்றது.
இந்த மனதின் இறப்பினால், எனக்கும், மற்றவர்களுக்கும் இன்பம் மட்டுமே உண்டாகின்றது.
இதை அறிவதே, ‘ஞானம்’ எனப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக