செவ்வாய், 10 டிசம்பர், 2019

பவானி அஷ்டகம் (ஆதி சங்கரர் அருளியது)



பவானி அஷ்டகம்
==================




பவானி உன்னுடைய அடிமை நான் என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். பவாநி த்வம், பவானி உன்னுடைய, (த்வம் என்றால் உன்) என்று இவன் சொல்லுகின்ற பொழுதே, அம்பாள் இவனுக்கு பாவானித்வம் என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகின்றாள் என்று சிலேடை பண்ணுகிறார்.

முதலில் இவன் பிரார்த்திக்கின்ற போது பவானி என்றால் அம்பாள் என்று வழிபட ஆரம்பிக்கிறானாம்.

பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி.

மறுபடி, பவானித்துவம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் பவானித்துவம் என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, பவானி என்றால் ஆகிவிடுகின்றேன் என்று அர்த்தம்.

தீர்க்க சுமங்கலி பவ என்கின்றோமே, இங்கே பவ என்றால் ஆவாய் என்று அர்த்தம்.

பவானி என்றால் ஆகின்றேன். பவானித்வம் என்றால் நீயாகவே நான் ஆகிவிடுகின்றேன் என்று அர்த்தம்.

எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கின்றான் பக்தன்.

தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகின்றாள் அம்பிகை என்பதை இங்கு அறிய வேண்டும்.

பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், பவானி உன் (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, ஆமாமப்பா பவானித்வம்தான் என்கிறாள்.

அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகின்றாள்.

பவானித்வம் என்றால் பவானியின் தன்மை என்றும் அர்த்தம்.

பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகின்றான்.

இதுவே தன் மயமாதல்! அதுவே தன் சொரூபம்!

மாயா பஞ்சகம் (ஆதிசங்கரர் அருளியது)


மாயா பஞ்சகம்
(ஆதிசங்கரர் அருளியது)








மாயை ஒன்றே எங்கும் வியாபித்துள்ளது. இந்த மாயை இரு பெரும் சக்திகளாக வெளிப்படுகின்றது.

அவைகள், 1. ஆவரணம். 2. விக்ஷேபம் என்பனவாகும்.

இதில், ஆவரணம் என்பது மறைக்கும் சக்தி. விக்ஷேபம் என்பது தோன்றும் சக்தி எனப்படும். ஜீவர்களுக்கு தன் உண்மை சொரூபத்தை அறிய விடாமல் மறைக்கின்ற சக்தியை ‘ஆவரணம்’ என்றும், இந்த உலகத்தை உண்மையாகத் தன் மீது ஏற்றி வைத்து பார்த்தல் ‘விக்ஷேபம்’ என்றும் கூறப்படும்.

ஆவரணம் நம் உள்ளேயே அந்தர்யாமியாக இருக்கின்ற ஆத்மாவை அறிய விடாமல் மறைக்கின்றது. விக்ஷேபம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காட்டி, அதை நம்ப வைத்து ஏமாற்றுகின்றது.

கண்களுக்கு காட்சியாகும் கானல் நீர் பார்ப்பதற்கு உண்மை போன்றே இருக்கும், அருகே சென்று விசாரித்துப் பார்த்தால், அங்கு நீர் இல்லை என்பது தெரிய வரும்.

அதுபோன்று, இந்த மாயா உலகம் பார்ப்பதற்கு உண்மை போன்று நம் கண்களுக்கு காட்சியாகின்றது. அதுவே, நம்மை நாம் சுயமாக விசாரித்துப் பார்க்கும் பொழுது, இது நம்முடைய எண்ணங்களில் வெளிப்பாடு என்பது புரிய வரும்.

இந்த நிலைக்கு காரணமான மாயைகளின் தன்மை பற்றி ஜகத்குரு ஆதி சங்கரபகவத்பாதாள் அவர்கள் தான் இயற்றிய ஐந்து ஸ்லோகங்களில் மிக அழகாக எடுத்துக் கூறுகின்றார்.

அதுவே “மாயா பஞ்சகம் எனப்படும்.

இதன் மூலம் சமஸ்கிருத மொழியில் உள்ளது. இந்த ஸ்லோகங்களின் விளக்கங்களை எளிய தமிழ் மொழியில் அனைவரும் படித்து பயன் அடையும் பொருட்டு கொடுக்கப்படுகின்றது.

நிர்வாண சடகம் (ஆதிசங்கரர் அருளியது)






முன்னுரை

சடகம் என்றால் ஆறு என்று பொருள். இது ஆறு ஸ்லோகங்கள் கொண்டது.

இந்தத் தேகம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்த வாக்கின்படி நீக்கிவிட்டு, இதுவல்ல, அதுவல்ல என்று கூறி, இறுதியில் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், ஆதிப்பரமான்மாவுன் ஒன்றே என்று சொல்லும் வேத மகா வாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து மிக அழகாக எழுதப்பட்ட இந்த ஆறு ஸ்லோகங்கள் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது.

கயிற்றை பாம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும் வரை அந்தப் பிரமை நம்மை விட்டு அகலாது. பார்க்கப்படுவது என்ன என்று முதலில் தோன்ற வேண்டும். அதன் உண்மையை அறிய தேவையான ஒளியும் வேண்டும். அந்த ஒளியும் சரியான கோணத்தில் விழவேண்டும். அப்போதுதான் ஒருவனுக்கு உண்மை தெரிய வரும்.

அதே போன்று இங்கு முதலில் அழியும்-அழியாத பொருட்களின் தன்மைகளை ஒருவன் அறியவேண்டும். உடல், மனம், புத்தி இவைகள் எல்லாம் ஒருநாள் அழியக்கூடியன என்றால், நமது தினசரி அனுபவங்களிலேயே அவைகள் எப்போது அழிகின்றன, அப்படி அழிந்தும் நாம் இல்லாது போய்விட்டோமா என்று பார்த்து, அவைகள் எல்லாம் நமக்கு இருக்கின்றன என்றால் நாம் யார் என்று நமது தன்மையை நம் அனுபவங்கள் கொண்டே அறிய முயற்சிக்க வேண்டும்.

எது நித்தியமோ அதை மட்டும் பற்றிக்கொண்டு, அநித்தியமானவைகளை அகற்றுவதில் முதல் படியாக உடல் பற்றிய உண்மைகளை இங்கு அறிகின்றோம்.

வியாழன், 5 டிசம்பர், 2019

மூன்று குணங்கள்


பரிபூரண ஞான சொரூபியாக விளங்கும் பிரம்மத்தினிடத்தில் (கயிற்றில் பாம்புபோல்) ஏற்றி வைக்கப்பட்ட (ஆரோபித்த) இந்த கண்ணிற்குத் தெரிகின்ற ஸ்தூல தேகத்தை நான் என்று அபிமானித்துக் கொள்கின்ற இந்த ஜீவர்களுக்கு சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களே (சூட்சும கூறுகள்) இந்த பிரபஞ்ச உற்பத்திக்கு காரணமாக அமைகின்றன.

மாயையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இந்த உலகம், உடல் இந்த மூன்று குணங்களை உடையதாக இருக்கின்றது.



இந்த மூன்று குணங்களை நன்கு அறிந்து விட்டால், அதன்பிறகு, அவைகளில் ஒவ்வொரு குணமாக நீக்கி, மூன்றும் நீங்கும் பொழுது, மாயையை நீக்கி விடுவதற்கு சமமாகி விடும்.

இது பூரணமான பிரம்மத்தை அடைவதற்கு சுலபமாக்கி விடும் விசார சாதனமாகும்.

இவ்வாறு குணத்தை நீக்குவதற்கு அதை விசாரம் செய்து அதன் தன்மையை உணர வேண்டும்.
மாயை புருஷனை சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் ஆதாரத்தை நாடி சரணடைந்து விட்டால், இதை சுலபமாகக் கடந்து விடலாம்.

ஜீவனுக்கு பல பிறவிகள் எடுப்பதற்கு காரணம் குணத்தின் மீதுள்ள பற்றுதான் என்று சாஸ்திரம் கூறுகின்றது.

எனவே, குணங்களைப்பற்றியும், அது எவ்வாறு நம்மை பந்தப்படுத்துகின்றது. இதன் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த குணத்திலிருக்கின்றோம் என்று அறிந்து கொள்ள வேண்டும். இறுதியில் குணங்களின் பிடியிலிருந்து விடுபட்டவன் எப்படி இருப்பான் என்பதையும் அறிய வேண்டும்.

எனவே, இவைகள் ஞானத்திற்கு நேரிடையாக உதவி செய்வதால், இந்த விசாரத்தை ஞானயோக சாதனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதன், 20 நவம்பர், 2019

ஆன்மா என்ற அம்மா - சிறு கதை புத்தகம்




(சிறு கதை)

இந்த உலக விவகாரத்தில் வெளிப்படையான உண்மை (Apparently Reality) என்னவெனில், ஒருவன் ஆசையின் காரணமாக, அறிவற்ற பல காரியங்களைச் செய்து, பணத்தின் பின்னால் ஓடிக் கொண்டு, தனக்கு நன்மையை மட்டுமே விரும்பும் தாய் கூறும் புத்திமதியை உதாசீனப்படுத்தி, அந்த தாயையும் அனாதையாக்கி அன்பு இல்லத்தில் சேர்த்து விட்டு, தன் பணத்திற்காகத் தன் பின்னால் வருகின்ற அற்ப உறவுகளை அவசியம் என்று கருதி, அதன் பின்னே சென்று, அறிய வேண்டியதை முழுமையா(Absolute Reality) அறியாமல் அற்ப ஆசைகளினால், மனதிடம் சிக்கிக் கொண்டு, ஆட்டங்கள் பல ஆடி, முடிவில் தான் வந்த இந்தப் பிறவியின் நோக்கம் புரியாமலேயே, இந்த மனித உடலின் மிகச் சிறப்பான ஆறாவது அறிவான புத்தியைப் பயன் படுத்தாமலேயே, இந்த புனித உடலை விட்டு மரணத்தை தழுவி விடுகின்றான்.

இந்த கதையிலிருந்து ஒன்றேயான பரமா(ஆ)ன்மாவையும், அதன் பிரதிபிம்பமான ஜீவனையும், ஒன்றென அறிய தடையாக இருப்பது ஆசை என்பதை அறிய வேண்டும்.

அப்படிப்பட்ட ஆசைகளை கண்ணிற்குத் தெரியாத சூக்ஷும மனமே தன் சம்ஸ்காரங்களாகச் சேர்த்து வைத்துக் கொண்டு, அவைகளை பரு உடலின் வாயிலாக அனுபவிக்க விரும்பி, அதற்கேற்ற உடலை ஸ்தூலமாக எடுத்து அனுபவித்துக் கொள்கின்றது.

வெள்ளி, 15 நவம்பர், 2019

தியானம்




தியானம் என்பது ஸ்ரீ பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்க யோகத்தின் ஏழாவது படி நிலை ஆகும்.

இதற்கு முன்பாக ஆறு படி நிலைகளை ஏற வேண்டும்.

ஆனால், எடுத்த உடனேயே தியானம் செய்ய பலர் விரும்புகின்றனர்.

தியானம் செய்வதற்கு முன் இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்யாகாரம், தாரணை என்ற இத்தனை படி நிலைகளை கடக்க வேண்டி இருக்கிறது.

இன்று பலர் காலையில் குளித்து விட்டு சாமி படத்தின் முன்பு, சிறிது நேரம் அமர்ந்து "தியானம்" செய்தேன் என்கிறார்கள்.

அது அல்ல தியானம்.

தியானம் என்றால் எதைப் பற்றி தியானம் செய்வது?

கடவுளை என்றால் எந்தக் கடவுளை?

ஜோதி வடிவிலா?

எதை நோக்கி தியானம் செய்வது?

போன்ற கேள்விகள் எழும்.

உண்மை என்ன என்றால், இந்த அனைத்து கேள்விகளும் அர்த்தம் இல்லாதவை.

தியானம் என்பது எதைப் பற்றியும் அல்ல.

ஒன்றையுமே சிந்திக்காமல் இருப்பது தியானம்.

எதுவுமே மனதில் இல்லாமல் இருப்பது தியானம்.

மனம் முழுவதும் காலியாக இருப்பது தியானம்.

எதை பற்றியோ சிந்திப்பது என்றால், சிந்திக்கும் நான், சிந்திக்கப்படும் அது என்ற இரண்டு இருக்கும் அல்லவா?

இங்கே ‘துவைதம்’ உண்டாகிவிடும்.

துவைதம் என்றால் இரண்டு. 

அத்வைதம் என்றால் இரண்டற்றது என்று பொருள்.

தியானத்தில் அந்த இருமைகள் மறையும்.

நான், அது என்று வேறுபாடு மறைந்த பின் எதை சிந்திப்பது? 

எதை தியானம் செய்வது?

சித்தம் முழுமையான வெற்றிடமாக இருக்கும்.

அந்த வெற்றிட அனுபவமே சிவானுபவம்.

புதன், 2 அக்டோபர், 2019

சகஜ சமாதி


சகஜ சமாதி
**************


முகவுரை


சஹஜ் என்றால் இயல்பான என்பது பொருளாகும். சமாதி என்பது நிசப்தமான ஆயினும் உயிரோட்டமுள்ள விழிப்புணர்வு நிலை என்பதாகும்.

அதாவது, விழிப்பும், உறக்கமும், கனவுமற்ற ஓர் அறிவு நிலை.

எனவே, சகஜ சமாதி என்பது விழிப்புணர்வுடன் கூடிய, அறிவாற்றல் பொருந்திய ஆனந்த அமைதி நிலை அனுபவம் ஆகும்.

இந்த நிலையில் அளவற்ற ஆற்றல் பெருகி, அறிவுத் திறன் கூடி, படைப்பாற்றல் எல்லையற்ற அமைதி மற்றும் ஆனந்தம் உண்டாகின்றது.
இதற்கு என்ன செய்ய வேண்டும்.

''சாசுவத முக்தி நிலை ஈதென்று உணர்த்தியே சகச நிலை தந்து வேறொன்றும் எண்ணாமலுள்ளபடி சுகமா யிருக்கவே ஏழையேற் கருள்செய்'' - என்கின்றார் தாயுமான சுவாமிகள்.

அதாவது, நிலையான முக்தி நிலை இதுதான் என்று எனக்கு உணர்த்தி, அதில் எப்பொழுதும் இயல்பாக இருக்கின்ற நிலை தந்து, வேறு ஒன்றையும் எண்ணாமல் இருக்குப்படி ஆனந்தமாக இருக்கவே அருள் செய்வாய் என்று பாடுகின்றார்.

அப்படிப்பட்ட சகஜ சமாதி பயில்வது எவ்வாறு?

''தண்ணீரிலிருந்து துள்ளி நிலத்தில் விழுந்து துடித்துக் கொண்டிருக்கும் மீனை எடுத்து மறுபடியும் தண்ணீரிலேயே விட்டு விட்டால் அது அடையும் அதன் இயல்பு நிலையே சகஜ நிலை'' என்கின்றார் பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர்.

நீருக்குள் பிறந்து, நீரிலேயே வாழ்ந்து முடியக் கூடியது மீன். அதன் ஆனந்தம் நீருக்குள்தான் இருக்கிறது. நீருக்குள் இங்குமங்கும் நீந்தி விளையாடி, உணவைத் தேடி உண்டு உயிர் வாழக் கூடியது மீன். மீனுக்கு நீர்தான் உலகம். நீரை விட்டு மீனைப் பிரிப்பது என்பது அதைக் கொல்வதாகும்.

இவ்வாறு, ஒவ்வொரு ஜீவனும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள கொடுக்கப்பட்ட உடலினைக் கொண்டு முயற்சிக்கும் இயல்புதான் சகஜம் எனப்படும்.

இதில், ஓரறிவு ஜீவர்கள் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை அதனதன் இயல்பு நிலையில் இருக்க விரும்பும்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்