சனி, 29 ஜூன், 2019

மனீஷா பஞ்சகம்




ஸ்ரீ குருப்யோ நம:

மனீஷா பஞ்சகம்
(ஆதி சங்கரர் அருளியது)





ஆதி  சங்கரர்  அருளிய  பல்வேறு  படைப்புகளில்  “மனீஷா பஞ்சகம்” முக்கியமான ஒன்றாகும். சாதி அபிமானத் தியாகம்  (சாதி துவேஷம் இல்லாமல் இருப்பது)  என்ற பண்பு  அனைவரும்  வளர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று என்பதை  உணர்த்தும்  படைப்பாகும்.  

“பஞ்சகம்” என்றால் ஐந்து பொருட்களின் சேர்க்கை என்று அர்த்தம்.  சமஸ்கிருத  மொழியில்  ‘மனீஷா’ என்றால் நிச்சயமான அறிவு (ஞானம்) என்று பொருள். நம்பிக்கையினாலோ, கொள்கையினாலோ  அல்லாமல், ஒரு உயர்ந்த அறிவுக் கருவியின் மூலம் ஐயமின்றி ஏற்படும்  உறுதியான  அறிவே  “மனீஷா”  எனப்படும்.  இந்த  நிச்சய அறிவை  விளக்கும்  ஐந்து  ஸ்லோகங்களே “மனீஷா பஞ்சகம்”  எனப்படுகின்றன.

இந்த மனீஷா பஞ்சகம் உருவாவதற்கு வழிவகுத்த சம்பவம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்தச் சம்பவமே சாதி அபிமானத் தியாகத்தின் முக்கியத்துவத்தை  உணர்த்த  வல்லது.

ஒரு நாள் சங்கரர் காசியில் கங்கையில் நீராடிவிட்டு தன் சீடர்களுடன் குறுகிய பாதை ஒன்றில் சென்று கொண்டிருக்க, சற்றுத்தொலைவில் அக்காலத்தில் தீண்டத்தகாதவராக கருதப்பட்ட புலையன் ஒருவர் நாய்களோடு வந்து கொண்டிருந்தார். அவருக்குப் பரிவாரங்களாக நான்கு  வேட்டை நாய்கள் சங்கரருக்கு மிக அருகில் வந்து விட்டதை உணர்ந்த சங்கரரின் சீடர்கள், அப்புலையனைப் பார்த்து “விலகிப்போ.. விலகிப் போ..” என்று ஒதுங்கி வழிவிடச் சொன்னார்கள்.

ஜாதி பேதங்களால், தீண்டாமை என்னும் தீய நோய் பரவி இருந்த காலம் அது. சீடர்களின் இந்தச் செயலுக்கு அவர்களது  குருவே காரணம் எனக்  கண்ட  அந்த  புலையன்  துணிந்து  சங்கரரிடம்  கேட்கிறார்.

அன்னமயாதன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் |
யதிவர தூரீகர்த்தும் வாஞ்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி ||

“துறவிகளில் மேலானவரே! தாங்கள்  விலகிப்போ என்று கூறியது இந்த உடலையா? அப்படியென்றால், என்னுடைய உடலும் சோற்றால் ஆன ஒரு ஜடம், தங்களுடைய உடலும்  சோற்றால் ஆன ஒரு ஜடம், ஒரு ஜடத்திலிருந்து இன்னொரு ஜடம்  எப்படி  விலகும்? அல்லது தாங்கள் விலகிப் போ என்று கூறியது இந்த உடலுக்குள் இருக்கும் சைதன்யத்தையா? சைதன்யமான ஆத்மா எனக்குள்ளும், உங்களுக்குள்ளும்,  எங்கும் பரவியுள்ளதே, அது எப்படி விலகிப் போக முடியும்? எனவே தாங்கள் விலகிப் போ என்று எதைக் கூறினீர்கள்?”

மேலும் அவர் தொடர்ந்தார்.

கிம் கிம்கங்காம்புனி பிம்பிதே அம்பரமணௌ சண்டாலவாடீபய:
புரே சாந்தரமஸ்தி காஞ்சனகடீ ம்ருத்கும்பயோர்வாம்பரே |
ப்ரத்யக்வஸ்துனி நிஸ்தரங்க ஸஹஜாநந்தாவ போதாம்புதௌ |
விப்ரோயம்
வபசோயமித்யபி மஹான் கோயம் விபேதப்ரம: ||

கதிரவனின் பிம்பம் கங்கையிலும் விழுகிறது, சாக்கடையிலும் விழுகிறது, இதனால் கதிரவனுக்கு இழுக்கு ஏற்படுவது இல்லையே? மேலும் பரந்து விரிந்து கிடக்கும் ஆகாயம் மண் பானைக்குள் இருந்தாலும் சரி, பொன் பானைக்குள் இருந்தாலும் சரி, ஆகாயம் வேறு படுவதில்லையே? இந்த அறிவை தாங்கள் அறிந்திருக்கக்கூடுமே, அப்படி இருந்தும் ஏன் உங்களையும் என்னையும் பேதப்படுத்தி விலகிப் போ என்று கூறினீர்கள்?”

மேற்கூறிய கேள்விகளைக் கேட்டவுடன், சங்கரர் எவ்விதச் செருக்கும் இல்லாமல், அந்நொடியிலேயே அப்புலையனிடம் பணிந்து  “அத்வைத அறிவில் நிலைத்து நிற்கும் தாங்களே என் குரு” என்று வணங்கி “மனீஷா பஞ்சகம்” எனும் படைப்பை  அருளினார்.

பாரத பூமியெங்கும் பாகுபாட்டால் சமுதாயம் பிளவு பட்டு இருந்த காலம் அது. மத ரீதியான குழப்பங்கள் உச்சத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில் பிறப்பால் பேதம் காணும் ஜாதிப் பாகுபாட்டினால் தீண்டாமை என்ற கத்தி சமுதாயத்தை துண்டு போட்டுக் கொண்டிருந்த காலத்தில் சங்கரரின் வருகை நிகழ்ந்தது. தவறான சிந்தாந்தங்களைப் பரப்பி மக்களை திசை திருப்பும் முயற்சிகள் நடைபெற்று வந்த வேளை  அது.

குறிப்பாக பாரத நாட்டில் பிறப்பால் உயர்வு, தாழ்வு கருதும் ஜாதி பேதம் வேதங்களின் உண்மைத் தன்மையை அறியாத சில மூடர்களால் பரப்பப்பட்டு இன்று வரை ஆழமாக  வேறூன்றி இருக்கின்றது.

இத்தகைய பேதங்களை களையவும், வேதங்களின் உண்மைத் தன்மையை உலகிற்கு உரைக்கவும், உபநிடதங்களின் உண்மைகளை  உலகறியச் செய்யவும், வரும் காலம்  ஜாதி, மத  பேதமற்ற சமுதாயம் உருவாகவும் பாடுபட்டவர்களில் ஆதிசங்கரரும்  ஒருவர் ஆவார்.

அவ்வகையிலே இந்த மனிஷா பஞ்சகத்தில் ஜாதித்து வேஷத்தை களைய வேண்டும் என்பதும் முக்கியமான நீதி. 

“ஷூத்ரன்” என்ற சொல்லினால் பிறவியில் கீழ்ப்பட்டவனாகவும், “பிராமணன்” என்ற சொல்லினால் பிறப்பால் உயர்ந்தவன் என்றும் மனிதர்களைப் பிரித்துள்ளது இந்த வேதம் என்பதை யாரோ சில தகாதவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு உண்மைக்கு புறம்பாக வேதத்தின் கருத்தை அறியாத மூடர்களால் பரப்பப்பட்டு வந்துள்ளது.

ஒவ்வொரு மனிதனையும்  ‘நீயே அதுவாக இருக்கின்றாய்’ என்று  கூறும்  வேதமா  இது  போன்ற ஜாதிப் பிரிவினையை உருவாக்கி இருக்கும். சற்றே யோசியுங்கள்!

நீயே எதுவாக இருக்கின்றாய்? என்று வேதம் கூறுகின்றது?

எல்லையற்ற அந்த பரமாத்மாவும், இந்த உடல் என்ற எல்லைக்குள் இருக்கும் ஜீவாத்மாவும் ஒன்றுதான் என்று கூறும் வேதமா இப்படி மனிதர்களை ஜாதிவாரியாக பிரித்து இருக்க முடியும்?...

இதுபோன்ற அறியாமையை தகர்த்தெறியவே ஆதிசங்கரர் புலையனுடன் நடத்திய நாடகமே இந்த மனிஷா பஞ்சகம் உருவாக காரணமாக இருந்தது என்றால் அது மிகையாகாது.

வேதங்கள் உண்மைக்கு புறம்பாக எதனையும் கூறவில்லை. வேதத்தை அரைகுறையாகப் படித்துவிட்டு தன்னுடைய மனம் போன போக்கில் அறியாமை ஜனங்களிடம் தவறான விளக்கங்கள் கொடுத்து கற்பித்த கற்பனையே இந்த பாகுபாடு.

உலகில் உள்ள எல்லா மனிதர்களையும் பிறப்பால் சமத்துவமாகவும், பின் அவர்கள் ஏற்று வாழும் வாழ்க்கையை வைத்து மூன்று விதமாக அடையாளம் காட்டுகின்ற வேத மந்திரம் மனிதர்களை நான்கு பிரிவாக அமைக்கின்றது.

ஜன்மநா ஜாயதே ஷூத்ர: கர்மணா ஜாயதே த்விஜ: |
வேதாத்யாயி பவேதிப்ரோ ப்ரஹ்மா ஜானாதி பிராஹ்மண: ||

இதன்  அர்த்தம்  என்ன?

பிறப்பில் எல்லா மனிதர்களும் ஷூத்ரர்களாகவே பிறக்கின்றார்கள். அதாவது ஷூத்ரன் என்பவன் தக்கது எது?, தகாதது எது? என்ற அறியாமையினால் கட்டுப் பாடுகளற்ற, உடலும், மனமும் வேண்டுவன வற்றையெல்லாம்  வேண்டும் போது  தன்  மனம்  போன  போக்கில்  செய்துக்  கொண்டிருப்பவன்.

பிறந்த குழந்தைகள் எல்லாம் இதுபோல இருப்பதால் நாம் எல்லாருமே ஷூத்திரர்களாகவே பிறக்கிறோம். ஆதலால் பிறப்பில் அனைவரும் சமமே! என்பதை நன்கு அறிய வேண்டும்.

இவ்வாறு சமமாக பிறந்தவன் தான் கற்கும் கல்வியின் மூலம் எது தக்கது ?, எது தகாதது ? என்பதை அறியும் அறிவே அவனை ஷூத்திரனிலிருந்து மாற்றத்திற்கு கொண்டு  செல்கின்றது.

இந்த மாற்றம் முக்கியம் என்பதால் இதனை மறுபிறப்பாகவே நம் சான்றோர்கள் கருதினர். அதனாலேயே, கல்வித் தொடக்கம்  ஏற்று  கற்கவேண்டிய உண்மையான  கல்வியை  கற்றுத்   தேர்ந்து,  அந்த  கற்ற கல்வியின் படி நின்று, தருமப்படி வாழ்பவர்களை ஷூத்திரர்களிலிருந்து வேறுபடுத்தி ‘த்விஜர்’ என்று அழைப்பர்.  அதாவது, ‘த்வி’ என்றால்  இரண்டு, ‘ஜ’ என்றால் ஜன்மம். ஆக, இரண்டு முறை  பிறந்தவன் என்று அழைப்பர்.

அன்றையக்காலங்களில் குருகுலக்கல்வியின்  வாயிலாக அனைத்து தரப்பினருமே ஒன்றாக கல்வி பயின்றனர். சாதாரணமானவனிலிருந்து,   அரசகுமாரன் வரை  அனைவருக்கும் ஒரே  மாதிரியான 64 கலைகளுடன் கூடிய கல்வி கற்பிக்கப்பட்டன.

நல்லது எது?,  தீயது எது?  என்ற  அறிவை  அறிந்து,  தான்  ஏற்ற தொழிலுக்கும், வாழ்க்கை முறைக்கும்  ஏற்ற தருமப்படி  வாழ்கின்ற  துவிஜர்கள்  சிலர், இதனினும் மேலே  உயரும்  பொருட்டு,  வேதங்களின்  உண்மைகளை ஆய்ந்துணரவும், அதன்படி தான் எடுத்துக் கொண்ட  தருமத்திற்கேற்ப  நடந்து,  வேத விதிகளின் படி, ஆன்ம ஞானமே குறிக்கோளாக  ஏற்று தங்கள்  வாழ்க்கை முறைகளை  மாற்றிக் கொள்பவர்களை ‘விப்ரர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.

இந்த விப்ரர்களே தீர்க்கமான அறிவாலும், யோகத்தாலும் ஆன்ம விசாரனையில் பலனை அடைந்து பிரஹ்மம்’ என்ற பரமார்த்த ஞானத்தை அடைந்தவர்கள் எவரோ அவர்களே “பிராஹ்மணர்கள்” என்று அழைக்கப்பட்டனர். அதாவது பிரஹ்ம  ஞானத்தை  அடைந்தவன்  ‘பிராமணன்’  என்று   அழைக்கப்படுகின்றான்.

பிறப்பினாலோ, வேதங்களை படிப்பதினாலோ, முற்றுப்பெறாத கல்வியினாலோ, அல்லது வெளி வேடத்தினாலோ  ஒருவன் விப்ரன்  என்றோ,  பிராஹ்மணன் என்றோ  கருதப்படமாட்டாது.

பிறந்த குழந்தைகள் அனைவரும் பிறப்பால் சமமே, அவர்களே தாங்கள் கற்கும் கல்வியின் அடிப்படையில் அவர்களது வாழ்க்கை முறை எப்படி மாற்றத்தை அடைகின்றதோ அதற்கேற்ப அவர்கள் “த்விஜன்”, “விப்ரன்”, “பிராஹ்மணன்’”என்று ஏற்று வாழ்ந்து வந்தனர்.

ஆகவே, வேத சாஸ்திரத்தின்படி ஒருவன் பிறப்பால் த்விஜனாகவோ, விப்ரனாகவோ, அல்லது பிராஹ்மணனாகவோ என்றுமே இல்லை.

நல்ல நடத்தையினாலும், தான் ஏற்ற கர்ம, தர்ம நியாயங்களினாலும், எல்லாக் குழந்தைகளும் த்விஜன், விப்ரன், பிராஹ்மணன்  என்ற மாற்றத்தை  விரும்பியே ஏற்று வளர்ந்து வந்தன.  இங்கே பிறப்பு எதற்கும் பொறுப்பல்ல!. தீண்டாமை என்ற தீங்கு ஏதும் இங்கு இல்லை!. ஜாதி என்னும் பிரிவினை இல்லை!. ஆனால் வாழ்க்கை  என்ற பொறுப்பு  இருக்கின்றது.

தருமம், கருமம் போன்ற காரணங்கள் காரியங்களுக்கு ஆதாரமாக இருக்கின்றது. எல்லா வகை மனிதர்களும் அவரவர்களின் பாதையில் உயர்வடையும் வழி இருக்கின்றது. அவர்கள் பயணிக்கின்ற பாதைகள் பலவாக இருப்பினும், அந்த பாதைக்கேற்ற பண்பே அவனை மேலோனாகக் காட்டுகின்றது.

இதனால் என்ன நன்மை என்றால், மனிதனின் ஒழுக்கமே அவனது வாழ்க்கையில் அவனை உயர்ந்தவனாகவோ, தாழ்ந்தவனாகவோ வாழ்வதற்கு காரணமாக அமைகின்றது. அதாவது ஒருவனை மேலோனாக ஆக்குவது அவனது பண்பும், நடத்தையுமே அன்றி வேறு அல்ல என்பதாகும்.

ஆகவே, யாதும் ஊரே! யாவரும் கேளிர்!! என்ற சம நோக்குப் பார்வை வரவேண்டும். இதுவே அத்வைத ஞானத்தின் ஆதார பலன். அ + த்வைதம் என்பது இரண்டற்ற ஒன்றே என்பதாகும்.

மேலும் இந்த உயர்ந்த அறிவைக் கற்றால் மட்டும் போதாது, “கற்றபின் நிற்க அதற்குத்தக” என்ற வள்ளுவனின் குறளின் படி, அவ்வறிவிலேயே நிரந்தரமாக நிற்க வேண்டும். இதற்குப் பெயர்தான் ‘ஞான நிஷ்டை’ ஆகும்.

நிஷ்டை என்றால் வழுவாமல் நிற்றல் என்பது பொருள். கற்றபடி நிற்க வில்லையென்றால் தருமம் தவறியவராக ஆகின்றோம். அப்படி ஒரு தவறு ஏற்பட்டால் அதனை திருத்திக் கொள்ள முயலவேண்டும். அதற்கு பணிவும், விடாமுயற்சியும் தேவை.

இனி மனிஷா பஞ்சகம் என்ன போதிக்கின்றது என்பதை பார்க்கலாம்….

உபநிஷத்துக்களில் முதன்மையாக விளக்கப்படும் மஹா வாக்கியமான அந்த அத்வைத அறிவை, இந்த ஐந்து சுலோகங்கள் மூலமாகப் பல்வேறு வழிகளில் சாரமாக விளக்கியுள்ளார்.

முதல் இரண்டு சுலோகங்களில், ஜீவ பிரம்ம ஐக்கியம் பற்றி விளக்கியுள்ளார்.

மூன்றாவது சுலோகத்தில் அத்வைத அறிவை அடைவதற்குப் பின்பற்ற வேண்டிய வழிகளையும், அதனால் கிடைக்கும் பலன்களையும் விளக்கியுள்ளார்.

நான்காவது சுலோகத்தில் ஆத்மா அறிவு சொரூபமானது என்றும், அதை ஏன் புற அறிவினால் அறிய முடியாது என்றும் விளக்கியுள்ளார்.

ஐந்தாவது சுலோகத்தில் அத்வைத அறிவின் பலன் ஆத்மாவை ஆனந்தம் என அறிவதே என்று விளக்கியுள்ளார்.
ஒவ்வொரு சுலோகத்திலும் தன்னுடைய நிச்சயித்த அறிவை நிலைநாட்டியுள்ளார்.

“விழிப்பிலும், கனவிலும், ஆழ்ந்த உறக்கத்திலும் எந்த தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, பிரபஞ்சத்தின் சாட்சியாக எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல” என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவராக இருந்தாலும் சரி, அல்லது சமுதாயத்தில் உயர்வாக கருதப்படுபவராக இருந்தாலும் சரி, அவரே என் குரு என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை. -  ஆதி சங்கரர்.

“அனைத்து உயிர்களுக்குள் இருக்கும் ஜீவாத்மாவும், உலகத்திற்கே சாட்சியாக இருக்கும் பரமாத்மாவும் ஒன்று என்ற அத்வைத அறிவை எவர் ஒருவர் அடைந்து, அந்த அறிவிலேயே நிலைத்து நிற்கிறாரோ, அவர் புலையனாக இருந்தாலும் சரி, வேதம் ஓதும் அந்தணராக இருந்தாலும் சரி, அவரே எனது “ஆசான்” என்பதே ஜகத்குரு ஆதி சங்கரரின் நிச்சயமான அறிவு ஆகும்.

மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் உண்மை அறிவை உணரவேண்டி, சாதி வேற்றுமை இல்லாமல் சமுதாய வளர்ச்சிக்காக சம நோக்கு என்ற பண்பை நாம் அனைவரும் வளர்த்து கொள்ள ஆதி சங்கரரின் மனீஷா பஞ்சகம் உதவும் என்பது திண்ணம்.

ஆஹார நித்ரா பயம் மைதுனானிஞ் சாமான்ய மேதத் பசுபிர் நரணாம் |
ஞானம் நராணாம் அதிகோ விசேஷோ ஞாநேந ஹீந: பசுபிஸ் ஸ்மான: ||

எல்லா உயிர்களுக்கும், உணவு, உறக்கம், பயம், காமம் முதலிய தருமங்கள் பொதுவாக இருப்பினும், மனிதன் மட்டுமே தன்னை அறியும் ஞானத்திற்கு தகுதியானவன். அத்தகைய உயர்ந்த அறிவை பயன்படுத்தாவிடில் மனிதனும் விலங்கினைப் போலவே ஆகின்றான் என்பது மேற்கண்ட சுலோகத்தின் பொருள்.

அவ்வாறு தன்னை அறிதலே உண்மையான “ஞானம்” என்றும், மற்ற உலக விஷயங்களை அறிதல் “விஞ்ஞானம்” என்றும் “அமரகோஷம்” என்ற வடமொழி காவியம் கூறுகின்றது.


ஓம் தத் சத்!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.


மந்திர ஜபத்தின் மகிமை


மந்திர ஜபத்தின் மகிமை
================


முன்னுரை


ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं
द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् ।
एकं नित्यं विमलमचलं सर्वधीसाक्षिभूतं
भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि ॥

ப்ரஹ்மானந்தம் பரமஸுகதம் கேவலம் ஞானமூர்த்திம் 
த்வந்த்வாதீதம் ககனஸத்ருசம் தத்வமஸ்யாதிலக்ஷ்யம் |
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுணரஹிதம் ஸத்குரும் தம் நமாமி ||

பிரம்மானந்த ரூபியும் பரமசுகத்தையளிப்பவரும், ஞானமே வடிவாகியவரும், இரட்டைகளுக்கு அப்பாற்பட்டவரும், ஆகாயம் போன்றவரும், ‘தத்-த்வ-மஸி’ முதலிய மகா வாக்கியங்களின் லக்ஷ்யமாகியவரும், ஒப்பற்றவரும், சாசுவதமானவரும், பரிசுத்தரும், அசையாதவரும், எல்லோருடைய புத்திக்கும் ஸாக்ஷியாய் விளங்குபவரும், மனதிற்கெட்டாதவரும் முக்குணங்களைக் கடந்தவருமாகிய ஸத்குருவை நமஸ்கரிக்கிறேன்.
- குருகீதை

இந்த “மந்திர ஜபத்தின் மகிமை” என்ற நூலை அடியேன் எழுதவேண்டியதின் அவசியம் ஏன் உண்டானது என்றால், அனேக ஆன்மீக சாதகர்களும் அவரவர்களுக்கு பிடித்த, விருப்பமான தெய்வத்தின் நாமத்தை ஜபம் செய்து வருகின்றனர்.

ஒருவன் தனக்கு கொடுக்கப்பட்ட இந்த ஒரே உடலில், பலவிதமான வேலைகளைச் செய்யுமாறு அமைக்கபட்டுள்ள உடல் உறுப்புக்களில் இந்த உறுப்புக்களை நான் மிகவும் விரும்புகின்றேன். இந்த, உடல் உறுப்புக்களை நான் வெறுக்கிறேன் என்று கூறுவது எப்படி அபத்தமாக இருக்குமோ, அதுபோல, எங்கும், எதிலும், நீக்கமற நிறைந்துள்ள அந்த ஒரே பரப்பிரம்மத்தின் பலவிதமான சக்திகளாக வெளிப்பட்ட பல தேவதைகளின் செயலைக் கண்டு, தனக்கு இந்த, தேவதைகளை மட்டும் விரும்புகின்றேன், இந்த, இந்த தேவதைகளை வெறுக்கின்றேன் என்று கூறுவதும் அவனது அறியாமையின் அபத்தம் என்றுதான் கூறவேண்டும்.

இதில் ஒரு சில சாதகர்கள் எதற்காக இறை நாமத்தை ஜபிக்கின்றோம் என்ற புரிதல் இன்றி ஜபம் செய்கின்றனர். அதுகூட பரவாயில்லை, அந்த அறியாத இறை நாம ஜபத்தினாலே கூட, ஜபிப்பவரின் மனம், அந்த நாமத்தின் மகிமையினால் தூய்மையை நாளடைவில் அடைந்து விடும்.

ஆனால், ஒரு சிலர் அந்த மந்திரத்தின் பலனாக சித்த சுத்தி அடைவதற்குப் பதிலாக, அஷ்டமா சித்துக்கள் கிடைக்க வேண்டும் என்றும், அந்த, அந்த மந்திரத்திற்கு உரிய தேவதையை நேரில் சந்திக்க வேண்டும் என்றும், ஒரு சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, மற்றவர்களுக்கு கேடுகளைச் செய்யும் மாந்திரீக முறைகளை கற்று, மற்றவர்களை தொந்தரவு கொடுக்க வேண்டும் என்றும், இன்னும் சிலர் எந்த மந்திரத்தினைக் கொண்டு, இளம்பெண்களை வசியம் செய்யலாம் என்றும் கெட்ட எண்ணத்தினாலேயே மந்திரங்களை ஜபிக்கின்றனர்.

இந்த நூல் அவர்களது தவறான எண்ணங்களை மாற்றி, மந்திர ஜபத்தின் உண்மையான நோக்கம், எதுவாக இருக்கவேண்டும் என்பதையும். இறை நாம ஜபத்தின் மகிமையையும், அதற்குத் தேவையான அறிவையும் வெளிச்சம் போட்டு காட்டுகின்றது.

எந்த ஒரு ஆன்மீக சாதகனும், சத்குருநாதரும், சாஸ்திர விசாரமும் இன்றி, அந்த ஜபத்தின் பலனாக இறைவனை அறிய முடியாது என்பதையும், இந்த இரண்டையும், இரண்டு கண்களாக எவன் ஒருவன் பாவித்து, சத்குருநாதரின் உபதேச மந்திரத்தை விடாமல் அனுதினமும், மனதினால், ஜபம் செய்து வருகின்றானோ, அதன் அபரிமிதமான பலனாக, தனக்கு கிடைத்த இந்த மானிடப் பிறவியின் பெரும் பயனை இப்பிறவியிலேயே, அடைந்து விட்டான் என்பதை ஆணித்தரமாக அறிவிக்க முடியும்.

காரணம், அந்த சாதகன் பலகோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பலனாக, அவனுக்கு இந்த நூல் அறிய பொக்கிஷமாக அவன் கையில் கிடைத்துள்ளது என்றால், அது மிகையாகாது.

இந்த நூலின் வாயிலாக அந்த பரம்பொருளின் பரம பவித்ரமான சுவாஸத்தினை தன்னுடைய சுவாஸமாக அறிந்து கொண்டு, அன்றைய ரிஷி முனிவர்கள் அடைந்த அந்த பேரானந்த பெருநிலையை தன்னுடைய அன்றாட சுவாஸத்தினாலேயே, இவனும் அறிந்து, தன்னை அறியும், அற்புத மகாமந்திரத்தை இந்த நூலின் வாயிலாகவே அறிந்து கொண்டு, அந்த பரப்பிரம்மத்தின் பரமானந்த பரவச நிலையை இவனும் அடைகின்றான்.

எனவே, இந்த நூலைப் படிக்கின்ற சாதகர்கள் இந்த நூலை மிகவும் சிரத்தையாக படித்து, அந்த பவித்ரமான மகா மந்திரத்தை அறிந்து, அதன் பலனாக பிறவிப்பெருங்கடலை கடக்கமுடியும்.


ஓம் தத் சத்!



என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

கர்மமும்! ஞானமும்!


ஓம் ஸ்ரீ குருப்யோ நம:


கர்மமும்! ஞானமும்!
======================





ஆதியில் அந்த சத் ஒன்று மட்டுமே இருந்தது. அது தனித்து இருந்துகொண்டு, தன்னிடமிருந்தே இந்த அனைத்தையும் படைத்தது.

இருண்ட உலகம், அடர்ந்த காடுகள், நீர் நிலைகள், அதன் மத்தியிலே ஆங்காங்கே அனேக ஜந்துக்கள் காணப்பட்டன. ஒரு நாள் பெய்த மழையில் பல காளான்கள் முளைப்பது போன்று, திடிரென்று ஒரு மாலைப்பொழுதில் இலட்சக்கணக்கான ஈசல் பூச்சிகள் பூமிக்கு அடியில் இருந்து உயிர் பெற்று வெளிவருகின்றதைப் போன்று, பஞ்ச பூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவைகளின் சேர்க்கையினால் உயிர்கள் உடல் எடுத்து தோன்ற ஆரம்பித்தன.

அந்த உடல்களினால் வெளிவந்த உயிர்களிலேயே சிறப்பான உயிரினமாக மனிதன் காணப்பட்டான்.

ஒரு பொருளைப் படைக்கின்ற ஆற்றலும், பேரறிவும் கொண்டவன், அந்தப் பொருளை நுகர்கின்ற நுகர்வோர்கள் அதைப்பற்றிய அறிவைப் பெற்றிருந்தால் மட்டுமே அதைச் சரியாக கையாள முடியும். இல்லையேல், அந்தப் பொருளை எப்படி கையாளுவது அல்லது பயன்படுத்துவது என்ற அறிவு இன்றி அதைக் கெடுத்து விடுவார்கள்.

அதனால், அந்தப் பொருளைத் தயாரித்த நிறுவனமே, அந்தப் பொருளை பெற்ற நுகர்வோர் அதை எப்படிக்கையாள வேண்டும் என்பதை, அறிவிக்கும் ஒரு அறிவுப்புத்தகமாக அந்தப் பொருளுடனேயே “கையாளும் கையேடு” (Operating Manual) என்ற ஒரு புத்தகத்தை இணைத்திருக்கும்.

அந்த பொருளை நுகர்ந்தவன் அந்த கையேட்டினைப் படித்து, அதில் கூறப்பட்ட விளக்கங்களை அறிந்துக் கொண்டு, அந்த பொருளை பயன்படுத்தினான் என்றால், அந்தப் பொருள் நன்றாகச் செயல்படும். நீண்ட நாட்களும் உழைக்கும்.

இந்தப்பாணியை, எல்லாம் வல்ல அந்த சத்திய வஸ்து, அன்றே இந்த உலகைப்படைக்கும் பொழுதே, உலகத்தைக் கையாளும் கையேடாக “வேதம்” என்ற புத்தகத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தியது.

ஓம் தத் சத்!

சிதம்பர ரகசியம்


சிதம்பர ரகசியம்
===========




முன்னுரை

உண்மை இருக்கும் இடத்தில் உற்சாகம் இருக்கும். உற்சாகம் இருக்கும் இடத்தில் உயர் அறிவு பிரகாசிக்கும். இந்த உண்மை, உற்சாகம், மற்றும் உயர் அறிவு என இந்த மூன்றும் இணைந்து இருக்கின்ற இடமே இறைவனை அறிகின்ற உன்னதமான இடம்.

இவ்வாறு இந்த மூன்றும் குடி கொண்டுள்ள உன்னதமான ஒரே இடம் இந்த மனித தேகம் (உடல்) என்றால் அது மிகையாகாது.

இப்படிப்பட்ட இந்த மனித உடலினுள்ளே வெட்ட வெளியில் சிதம்பரம் என்று அழைக்கப்படுகின்ற (“சித் என்றால் அறிவு”, “அம்பரம் என்றால் ஆகாசம்”) சித் + அம்பரம் - சிதம்பரத்தில், அதாவது, சிதாகாசத்தில் ஆனந்த தாண்டவம் புரிகின்ற சிவமாக ஸ்ரீ நடராஜனின் திவ்யமான இருப்பிடம் இந்த மனித தேகத்தில் உள்ள ஹ்ருதயம் ஆகும்.

(ஹ்ருதயம்: ஹ்ருதி - இதயத்திற்குள் + அயம் - வீற்றிருப்பவன்)

பிரபஞ்சமாகிய இந்த ஆடலரங்கத்தில் இடை விடாது ஆடும் அந்த ஆடலரசன் ஆடவில்லை எனில் ஒருவன் வாழ்வது எங்கே? இப்படி, மனித தேகத்தில் உள்ள ஹ்ருதயத்தில் இறைவனின் ஆடல் மகத்துவத்தை அறிகின்ற ஆற்றல் ஞானிகளுக்கு மட்டுமே உண்டு. அவன் ஆடுவது ஆனந்தத் தாண்டவம். இந்தத் தாண்டவம் பலவகைப்படுகிறது. சிதம்பரம் கோயில் மூலஸ்தானத்தில் உள்ள நடராஜர் சிலை சிற்பத்தின் வலது பக்கமாக பார்த்தோமானால், அங்கு ஒரு திரை தொங்க விடப்பட்டிருக்கும். அந்தத் திரையை எல்லா நேரமும் திறந்து வைத்துத் தரிசனம் செய்து வைக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்குள்ளே தான் "சிதம்பர ரகசியம்" உள்ளது. இது தான் இந்தக் கோயிலின் முக்கியத்துவமும் புனிதமும் கூட.

இறைவனின் உருவ தத்துவமான சிவலிங்க தத்துவத்தை மட்டுமல்லாது, உருவமற்ற அந்தப் பரம்பொருளின் அரூப தத்துவத்தையும், எல்லையற்றப் பரம்பொருள் எங்கும் விரிந்து பரந்து இருப்பதையும் இங்கு ரகசியமாகக்கூறப்படுகின்றது.

ஆகாயம் எவ்வாறு உருவமில்லாமல் இருந்தாலும், பார்ப்பதற்கு உருவம் இருப்பதைப் போல் இருக்கின்றதோ, அதுப்போல, இந்தப் பரம்பொருளும் உருவமற்றது. ஆனால், பார்ப்பதற்கு உருவம் இருப்பது போன்று உள்ளது. பரம்பொருள் எல்லையற்று பரந்து விரிந்து காணப்படுகின்றது என்பதினால், அதை ஆதியில் வாழ்ந்த மக்கள் உருவகப்படுத்தி வழிபாடு செய்யவில்லை. அதுவே, நாளடைவில், சாதாரண மனிதனுக்கு இறைவனை வெட்டவெளியில் வெளிப்புறத்தில் காட்டமுடியாது என்பதினால், ஒரு உருவத்தில் வடித்துக் கொடுத்து, அவனுடைய திருப்திக்காக வழிபட ஏற்பட்டதுதான் இந்த உருவ வழிபாடு.

காலப் போக்கில் வழிபாட்டில் இரு முறைகள் ஏற்பட்டன. ஒன்று உருவ வழிபாடு. மற்றது அருவ வழிபாடு.

அருவ வழிபாடு நிர்குண உபாசனை எனப்படும். அதாவது, உருவமற்ற, குணங்களற்ற வெட்டவெளியை வழிபடுவது. இது எல்லோராலும் முடியாதது. சராசரி மனிதனால் நினைத்துக் கூடப்பார்க்க முடியாத ஒன்று. காரணம், கடவுளை அறிவினால் விசாரித்து அறிந்து, மனம், உடல், உலகம் இவைகளைக் கடந்து தன்னுள்ளே உள்ள ஹ்ருதயத்தில் அந்தத் தலைவனை அறிந்து, அவனின் பரிபூரணப் பேரானந்தத்தைப் பெற எல்லாராலும் முடியாது.

யோகிகளும், ஞானிகளும் அதற்கெனப் பயிற்சிகள் பல செய்து, தங்கள் உள்ளத்தையே இந்த ஆகாயமாக நினைத்துக் கொண்டு, அங்கே உள்ள ஹ்ருதயத்தில் தாமரைப்பூவில் இறைவனை ஏற்றிவைத்து, சிவமாக தன்னுள்ளே வழிபட்டு, அந்த பரிபூரண இறை சக்தியைக் வெளிக்கொண்டு வந்து பேரானந்த பெரு நிலையை எட்டுவதுதான் அவர்களின் உண்மையான இலக்கு ஆகும்.

தங்கள் தவத்தாலும், தியான வழிபாடுகளாலும் அடைந்த ஒன்றைச் சாதாரண மனிதன் அடைய முடியுமா? வழிபாடுகளிலேயே மிகச் சிறந்த ஒன்றான இறைவனைத் தன்னுள்ளே காணுதல் எல்லாராலும் எளிதாக முடியாத ஒன்று.

ஆனால், ஒருவனிடம் ஒரு உருவத்தைக் காட்டி, இதுபோன்றுதான் இறைவன் இருப்பான் என்று அவனுக்கு அவனது உடலின் தத்துவங்களை ஆலயமாக அமைத்து, அதன் கர்பகிருஹத்தில் சிவத்தை பிரதிஷ்டை செய்து வழிபடும் ஒரு வழிமுறைதான் இந்தச் சிதம்பர ரகசியத்தில் உள்ளது. இவ்வாறு அகத்தில் உள்ள சிவத்தை புறத்தில் வழிபடுவதை சிதம்பர ரகசியமாக கோயில் அமைப்பில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

பூம வித்யா



பூம வித்யா
=======


இந்த பூமவித்யாவில் கூறப்படும் கருத்துக்களின் சாரம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.


·        சாகா சந்திர நியாயம்: மூன்றாம் பிறையை மரக்கிளையைக் காட்டி பிறகு தெரிய வைக்கும் உத்தி

·        ஆனந்தம்தான் பிரம்மஸ்வரூபம் என்று எடுத்துக்கொண்டு பிரம்மத்தை உணர வைத்தல்

·        பிரம்ம ஞானத்தை அடைய வேண்டுமென்றால் குருவின் உபதேசம் மூலமாகத் தான் முயற்சி செய்ய வேண்டும்.

·        நடுநிலை அதிகாரிகளுக்கு சில பண்புகள் தேவை, அதையும் இந்த அத்தியாயத்தில் விளக்கப்படுகிறது.

·        குருவிடம் எப்படிப்பட்டவனாக செல்ல வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது

ஓம் தத் சத்!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்