சனி, 29 மே, 2021

ப்ரஹ்மோபநிஷதம்

 

ப்ரஹ்மோபநிஷதம்


முகவுரை

  

உபநிஷதங்களின் வரிசையில் 11 - வது உபநிஷதமாக இந்த ப்ரஹ்மோபநிஷதம் உள்ளது. இதில் ப்ரஹ்ம ஞானமும், முக்தனாகும் உபாயமும் ப்ரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

 நாம் பூணூல் மாற்றிக் கொள்ளும் பொழுது கூறப்படும் யக்ஞோபவீத தாரண மந்திரம் இதிலிருந்துதான் எடுக்கப்பட்டது. 

இந்த ப்ரஹ்மோபநிஷதம் மொத்தம் 23 ஸ்லோகங்களைக் கொண்டது. அந்த ஸ்லோகங்களின் வாயிலாக அந்த பரப்ரஹ்மத்தை மனித உடலில் நான்கு இடங்களில், நான்கு வடிவங்களில் தியானிக்க முடியும் என்கின்றது இந்த உபநிஷதம். 

அவைகள் தொப்பூழ், இருதயம், கழுத்து, மற்றும் தலை உச்சி என்ற நான்கு முக்கியப் பகுதிகளின் மூலம் அந்த தெய்வீகசக்தி வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாக இந்த ப்ரஹ்மோபநிஷதம் எடுத்துக் கூறுகின்றது.

புதன், 31 மார்ச், 2021

சிவ ரகஷியம் (ரிபு கீதை)

 

சிவ ரகஷியம் - ரிபு கீதை



ஒருவர் எல்லா எண்ணங்களையும் விட்டுவிட்டு, மனமற்ற ஒரு நிலையை அடைய வேண்டும்

அதாவது மனம் இல்லாத நிலை என்பது, ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களாக உள்ள எல்லா வடிவங்களையும் விட்டுவிட வேண்டும்

அனைத்தும் கற்பனையானவை.

உலகமும், இயற்கையாகவும் பிரம்மா என்று ஒரு படைப்பாளி இல்லை. அவ்வாறே

அல்லது விஷ்ணு என்று அழைக்கப்படுபவர். மரணம் இல்லை. அங்கே

நல்லொழுக்கம், தூய்மை, உண்மை அல்லது பயம் இல்லை. பிரம்மம் மட்டும் இருக்கிறது. குரு அல்லது சீடர் இல்லை.

‘ஒன்று’ (இரட்டை அல்லாதது) மட்டுமே உண்டு. அதுவே பிரம்மம். ‘இரண்டு’ (இருமைகள்) என்பது இல்லவே இல்லை என்பதால் அடிமைத்தனம், விடுதலையும் என்பதுவும் இல்லை.

ஆதலால் பந்தம் - மோட்சம் என்பதுவும் இல்லை. இங்கு உள்ளபடி மரணம் இல்லை, பிறப்பும் இல்லை.

உண்மையில் நானோ, நீயோ, இந்த உலகமோ இல்லை. இங்கே எந்த காரணமும் விளைவும் இல்லை. உள்ளே அல்லது வெளியே இல்லை;

முழுமை அல்லது அபூரணம் இல்லை.

எல்லா எண்ணங்களும் இல்லாத நிலையில், மனதைப் போல ‘இல்லை’ ஆக, ‘நான் தான்’ போன்ற எந்த சிந்தனையும் இல்லை.

பிரம்மம் ’எப்போதும் சாத்தியம். உணர்வு என்பது இருப்பு.

அங்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற விழிப்புணர்வும் உள்ளது. நான் அதுவாகவே இருக்கின்றேன்.

திங்கள், 29 மார்ச், 2021

ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்

 

ஸ்ரீ கரபாத்திர சுவாமிகள்

(வாழ்க்கை வரலாறு)

 


புத்தகம்  👈

நம்முள் உள்ள அறியாமை இருளை நீக்கி, ஒளி பொருந்திய ஆன்ம  ஞானத்தை அளிப்பவரே குரு. அத்தகைய குருவானவர் நமக்கு சத்தியத்தைக்  காட்டிக் கொடுப்பதினால், நாம் அவரை சத்குரு என்று அழைக்கின்றோம். 

 அத்தகைய குருவருள் இருந்தால் மட்டும்தான், அவரை அடைபவர்களுக்கு திருவருள் உண்டாகும். 

அதாவது, நம்மையே நம்மால் முழுமையாகக் காண முடியுமா? என்றால், நிச்சயமாக முடியாது. காரணம், நமது கண்ணையே நம்மால் காண்பது நடக்காத காரியம் அல்லவா? 

அனைத்தையும் காண்கின்ற கண்களினால், தன் கண்ணை காண்பதற்கு அதற்கு வேறாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அவசியமாகின்றது. 

அதாவது, நம் கண்களை நாம் பார்தேயாக வேண்டும் எனில், அதற்கு வேறாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் தேவைப்படுவது போன்று, நம்மைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு அவசியமாக ஒரு குருவும் தேவைப்படுகின்றார். 

அத்தகைய அற்புதமான ஒரு குருவைப் பற்றி அவசியம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். 

ஆம்!, அவரே ஸ்ரீ ல ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.

சனி, 13 மார்ச், 2021

சனாதன தர்மமும்! சத்தியமும்!

 

]ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

 

 சனாதன தர்மமும்! சத்தியமும்!


 

இந்த நான்என்பதற்கு ஆதாரமானது எது? என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலை அறிய ஆர்வம் பிறந்தது? 

ஆம்! 

அந்த ஆர்வத்தினால், உண்டான என்னுடைய உன்னத அறிவு மையம், உணர்சிகளால் உண்டான உயிரினங்களின் பல்வேறு உடல்களின் மூலம், ஒரு அறிவு உடைய தாவரங்கள் முதல், ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை, பிரதிபிம்பிக்கின்ற பொழுது, அந்த உடல்களின் தன்மைக்கு ஏற்ப, அவைகளின் பிரஞ்ஞை (பேருணர்வு) வெளிப்படுவது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்படுகின்றது. 

அதன் அடிப்படையில், அரிதான இந்த மனித உடல் கிடைத்த உயிரினங்கள் மட்டுமே, தனக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேகமான புலன்களாகிய புறக்கரணங்கள் மற்றும் அகக் கரணங்களைக் கொண்டு, நான் என்ற தன்முனைப்புக்கு காரணமான தன்னுணர்வு மையத்தை எளிதாக அறிந்து, அதன் உணர்ச்சிகளால் வெளிப்பட்ட பல்வேறு எண்ணக்குவியல்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகிய மனதைக் கடந்து, மகத்தான தன் சுயத்தை, எளிதாக அகத்தில் கண்டு கொள்ள முடியும்.

 அந்த அகப்பயணத்தில் தாங்கள் கண்டறிந்த ஆழமான பல அரிய உண்மைகளை ஒன்றாகத் தொகுத்து, அதன் வாயிலாக அவர்கள் உணர்ந்த வந்த, அந்த உன்னத அறிவை வேதங்கள் என்கின்றோம். 

இந்த வேதங்கள் என்பது, சமய நூல்கள் அல்ல. 

வேதங்கள் என்பது, அன்றைய ரிஷிகள் தங்கள் உள்ளத்தின் உள்ளே உணர்ந்து, வெளிப்படுத்திய அக உளவியல் உண்மைகளை தொகுத்து, அந்த பேருணர்வின் பெருமைகளாகப் பேசப்பட்டது. 

வேதங்களில் சிருஷ்டி அல்லது படைப்பு பற்றிய தத்துவங்களைக் கடவுளர்கள் என்ற கருத்துக்கள் வழியாக வெளிப்படுத்தி விளக்கினார்கள். 

பிரஜாபதி, விஷ்ணு, ருத்ரன் என்றும், இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்றும், இயற்கையின் தத்துவார்த்தங்களைக் குறியீடுகளாகக் கொண்டு, அவர்கள் அகத்தில் அறிந்துக் கொண்ட ஆழ்தள உண்மைகளை அப்படியே அறிவித்தனர். 

 இங்கே கூறப்படும் படைப்பு என்பது, அவர்களது அறிவுணர்வு வெளியில் நிகழ்ந்த படைப்பு ஆகும். 

அத்தகைய இந்த அறிவுணர்வு வெளியில் அகம் - புறம் என்னும் இருமைகள் எல்லாம் என்றுமே கிடையாது. 

அந்த இருமைகளான பிரிவுகள் எல்லாம், இந்த பேருணர்வு பிரக்ஞையில், (அந்த அறிவாக) தன்னை அறிந்துக் கொள்வதற்கு முந்தைய நிலையாகிய அறியாமையில், அந்த உணர்ச்சிகளின் தொகுப்பாகிய மனம் காரணமாக இருந்தது. 

தன்னை அறிய ஆதாரமாக இருந்த நான் என்னும் தன் முனைப்பின் மூலத்தை அறிந்து, அதை தன்னுணர்வு மயமாக அறிந்து, அதற்கான ஆதியைக் கண்டறிந்தார்கள். 

அதுவே, பிரம்மம் என்று குறிப்பிட்டார்கள். 

இதில், பிரம்மம் என்பது கடவுள் அல்ல. அது ஒரு தத்துவம்மட்டுமே ஆகும்.

 அதுவும் அவர்களால் மற்றவர்களின் புரிதலுக்காக ஏற்றி வைக்கப்பட்ட நாமம் (பெயர்) என்றே கூறலாம். 

உண்மையிலேயே, அந்த பேருணர்வு பெரு நிலைக்கு, நாம, ரூபங்கள் எல்லாம் கிடையாது. 

அந்த நாம, ரூபங்களின் வாயிலாக அறிவை அறிய எடுத்துக் கொண்ட முயற்சி, அறியாமையில் கொண்டு சென்று விட்டதினால், உண்டான சந்தேகத்தில் எழுந்த கேள்விக்கு விடை காண வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது. 

 அதிலே, பிரம்மம் என்பது என்ன?

என்ற கேள்வி எழும் பொழுது, அதற்கு அவர்கள் தந்த பதில், ப்ரக்ஞானம் பிரம்ம என்பது மட்டும்தான். 

அதாவது, அறிவுணர்வுதான் (Consciousness) பிரம்மம். 

அதுவே முழுமுதற்பொருள்.


வியாழன், 4 மார்ச், 2021

ஆத்மாவை அறியும் வழி!


அறிவை அறிவதற்கு மூன்று விசயங்கள் முக்கியமாகக் கூறப்படுகின்றது. 

இதை மாகான்கள் பாமரமக்களுக்கு எளிதில் புரிய வைக்க முடியாது, மற்றும் அவரவர்கள் பிராரப்தம் மனம் போன போக்கில் கொண்டு செல்வதை தடுக்கவும் முடியாது என்பதினால், அவள் அருளாலே அவளை அறியட்டும் என்று பக்தியில் கொண்டு செல்வார்கள். 

பக்தியே ஞானத்திற்கு வழி! அந்த பக்தி பராபக்தியாக இருக்க வேண்டுமே தவிர, மூட பக்தியாக மாறி விடக்கூடாது. அதுதான் மிகவும் முக்கியம். 

புரிந்து கொள்பவர்களுக்காக மட்டுமே இங்கு இதை பராவித்யா - பகிர்ந்து கொள்கின்றது. 

அவைகள், காண்பான், காட்சி, காணப்படும் பொருள். 

இதில் காண்பவன் யார்? 

காட்சியும், காணப்படுகின்ற பொருளும் எப்படி உண்டாகின்றது? 

இதனை சிறிய உதாரணத்துடன் விளங்கிக்கொள்ள முயற்சிக்கலாம். 

 

காண்பவன் - உணர்வு அல்லது அறிவு

காட்சி - மனம்

காணப்படும் பொருள் - காமாட்சி.

 

காண்பவன் (அறிவு), காட்சியினால் (மனம்) காணப்படும் பொருளாகிய காமாட்சியைக் கண்டதும், அவள் மீது ஆசைப்படுகின்றான். அல்லது பக்தி கொள்கின்றான். (காமாட்சி = காமம் + ஆட்சி). 

காணப்படும் பொருட்கள் காமத்தினால் (மனதினால்) ஆட்சி செய்யப்படுகின்றது. அதாவது காமாட்சியினால் ஆட்சி செய்யப்படுகின்றது. அவளே மாயை. 

இதனால், காண்பவன் (அறிவு) காணப்படும் பொருளின் (காமாட்சியின்) வசம், காட்சியினால் (மனதினால்) மயங்கு கின்றான், அல்லது ஆசைப்படுகின்றான். அல்லது பக்தி செய்கின்றான். 

காண்பவனால் (அறிவால்) தனக்கு வேறாக இருக்கின்ற காணப்படும் பொருளாகிய காமாட்சியைக் கண்டு ஆசைப்படுவதற்கு ஆதாரமாக காட்சி (மனம்) இருப்பதினால், அவனால், அவள்மீது பக்தி செய்யாமல் இருக்க முடியாது. 

உண்மையில், காட்சி (மனம்) இல்லையென்றால், காணப்படும் பொருளாக காமாட்சியும் இல்லை. 

ஆக, காண்பவன் யார்? ...

புதன், 3 மார்ச், 2021

சச்சிதானந்தம்

 


புத்தகம்  👈

மேற்கண்ட இணைப்பை அழுத்தி இந்த நூலைப் பதிவிறக்கம் செய்து படித்துக் கொள்ளலாம்.


சச்சிதானந்தம் என்பதில், இந்த விழிப்பு நிலையத்தான் ‘அறிவு’ என்றும் கூறுகின்றோம். இதைத்தான் சுப்பிரமணியபாரதி ‘சுத்த அறிவே கடவுளின் சுயரூபம்’  என்று கூறுகின்றார். 

(சுத்த அறிவே சிவமென்று கூறும் சுருதிகள் கேளீரோ? - பல பித்த மதங்களிலே தடுமாறிப் பெருமை அழிவீரோ? - பாரதியார்.) 

அந்த சுத்த விழிப்புணர்வாகிய அறிவு எதை அறிகின்றதோ, அந்த அறியப்படும் பொருளும், அந்த பொருளைப் பற்றிய அறிவும் என அறிபவன், அறிவு, அறியப்படும் பொருள் ஆகிய மூன்றும் ஒன்றாகிய ஒரு நிலையில், அந்த அறியப்படும் பொருளுக்கு சாட்சியாக எது இருந்துக் கொண்டு, அனைத்தையும் அறிகின்றதோ அதுவே, அறிவுஎனப்படுகின்றது. அதைத்தான் சிவம் எனப்படுகின்றது. 

அவ்வாறு அறியப்படும் பொருளொன்று, உண்மையிலேயே இருக்கிறதா? இல்லையா? என்று அறிவதற்கே அந்த அறிவு இருந்தால்தான் முடியும் என்பதினால், அந்த சுத்த அறிவின் இருப்புணர்வு நிலையைத்தான் விழிப்புணர்வு நிலைஎனப்படுகின்றது. 

அத்தகைய விழிப்பு நிலை உணர்வு ஒன்று மட்டுமே, முழுமுதல் உண்மையாக இருக்கவும் செய்கின்றது. அதற்கு வேறாக எதுவுமே இல்லை என்பதுவும் புரிகின்றது. 

இந்த உலகமே உண்மையிலேயே இருக்கிறதா? இல்லை! வெறும் தோற்ற மாயையா? என்ற சந்தேகம் ஒருவருக்கு உண்டானால்கூட, இதை அறியக்கூடிய அறிவாக நான் இருக்கிறேன் என்ற தன் சுயத்தை (தன்னுணர்வை) அவர் என்றுமே சந்தேகிக்க மாட்டார். 

இத்தகைய உண்மையாகக் காணப்படுகின்ற இந்த உலகத்தின் வியாவகாரிக சத்யமாக உள்ள அனைத்திற்கும் சாட்சியாக இருந்துக் கொண்டு, மற்ற எல்லாவற்றையும் விட, தன்னில் தானாய் முழு உண்மை நிலை உடையதாக இருக்கின்ற, இருப்பாகிய இந்த விழிப்புணர்வு அறிவை மட்டுமே சாஸ்திரம் பாரமார்த்திக சத்யம்என்கின்றது. 

அந்த வகையிலே, ‘சித்’ ஆகிய அறிவு, சத்ஆகிய இருப்பாக (உண்மையாக) இருப்பதினால்தான், அதிலே ஆனந்தம் அடைய முடிகின்றது. 

அந்த ஆனந்த அறிவின் உண்மையான இருப்பே, சச்சிதானந்தம் எனப்படுகின்றது.


ஓம் தத் சத்!

சனி, 27 பிப்ரவரி, 2021

முழுமை!

 

ஸ்ரீ குருப்யோ நம:


மேற்கண்ட இணைப்பை அழுத்தி இந்த பதிவை PDF புத்தகமாகப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


முழுமையைப் பற்றி முழுமையாக புரிந்துக் கொள்ள முடியுமா..? 

சற்றே முயற்சிக்கலாம்!...

முழுமை என்றால் பூரணம் அல்லது பரிபூரணம் என்று பொருள்.

அதாவது, முழுமையில் இருந்து எதைப் பிரித் தெடுத்தாலும், எஞ்சி இருப்பதும் முழுமையே. 

அப்படி, தனியாக பிரிந்து விடுமானால், அதை முழுமை என்று கூற முடியாது. அது குறையுள்ளது அல்லது தேய்வுற்றது எனப்படும். 

ஆக, முழுமையானது என்ற ஒன்று இருக்கு மானால், அதுவே இறைவ(நா)ன். 

அந்த இறைவன் என்ற ஒன்றை பூரணம் என்றுதான் சாஸ்திரம் கூறுகின்றது. 

அப்படிப்பட்ட அந்த முழுமைக்கு வேறாக இருந்துக் கொண்டு. அந்த முழுமையைப் பற்றி, முழுமையாக என்றுமே அறிந்துக் கொள்ள முடியாது. 

பிறகு எப்படித்தான் அந்த முழுமையை அறிவது? 

கோவில்களுக்கும், தீர்த்த யாத்திரைகளுக்கும் சென்று வந்தால் அறிந்துக் கொள்ள முடியுமா? 

அதையும் பல காலங்களாக நாம் நம் நடை முறையில் செய்துக் கொண்டுதானே உள்ளோம். 

ஆனால் ஒருவரும் உருப்படியாக அந்த முழுமையைப் பற்றி முழுமையாக அறிந்துக் கொண்டதாகத் தெரியவில்லையே. 

அப்படி அறிந்துக் கொண்டிருந்தால், அமைதியை அடைந்து சும்மா இரு!, சொல் அற! என்று இருந்திருப்போமே! 

சரி!, சில விசயங்களை நம்மால், அனுபவத்திற்கு நேரடியாக கொண்டு வந்து, உணர முடியா விட்டாலும், சில விளைவுகளைக் கொண்டாவது, அவைகளை நாம் நம் அனுபவத்தில் கையாள முடிகின்றதே. 

அந்த வகையிலே, நாம் பயன்படுத்தும் மின்சாரம், நம் சாதாரண கண்களால், நேரடியாகக் காண முடியாவிட்டாலும், அதன் பயனை நம் அனுபவத்தில் மின் விளக்குகளால் பிரகாசமான வெளிச்சத்தையும், மின் விசிறிகளால் சுகமான காற்றையும் அனுபவித்து மகிழ்கின்றோம். 

அந்த வெளிச்சம் வருவதற்கும் மற்றும் சுகமான காற்று வீசுவதற்கும் காரணமான அந்த மின் விளக்கு, மின் விசிறி போன்ற உபகரணங்களுக்கு ஆதாரமான மின்சாரத்தை நாம் எப்படிக் கண்களினால் காண முடியா விட்டாலும், அதன் பயனாக வெளிச்சத்தையும், காற்றையும் பெறுவதுப் போன்று, கண்ணிற்குத் தெரியாத கடவுளை இந்த கல்லிலே வடித்து, அதன் வாயிலாக அதன் பயனை முழுமையாக அடைய முடியுமா? 

முடியும் என்றால், எல்லோருக்கும் ஒரே மாதிரியாகப் பயன்படும் மின்சாரம் போன்று, கல்லிலே உள்ள கடவுளும், எல்லோருக்கும் ஒரே மாதிரியாகப் பயனைக் கொடுக்க வேண்டுமல்லவா? 

ஏன் அவ்வாறு நடைப் பெறுவதில்லை? 

அதற்கான கண்டுபிடிப்புகளுக்கு காரணமான அறிவியலும், ஆன்மீகமும் ஒரே ஒரு இலக்கை மட்டுமே அடைய முயற்சிக்கின்றது. 

ஆனால், அவைகளின் வாயிலாக இலக்கை அடைய வேண்டிய பாதைகள் அனேகமாக உள்ளன. 

எந்தப் பாதையின் வழியாகச் சென்றால், எளிதாக இலக்கை அடைய முடியும் என்பதை, அந்த இலக்கை அடைந்து, அதன் வாயிலாக பலன் பெற்ற ஒருவர் பாதைக் காட்டினால்தானே, அந்தப் பாதையில் செல்வது எளிதாகவும், சரியாகவும் இருக்கும். 

அத்தகைய தகுதியான நபர் யார்? 

அவரதுப் பாதை என்ன? 

ஆம்! அவரே சத்குரு!, அவரது பாதையே, சாஸ்திரம். 

அந்த சாஸ்திரம் என்ன கூறுகின்றது?... 

தத்வமஸி (நீ அதுவாகவே இருக்கிறாய்!) 

அதுவே, அறிய வேண்டியப் பாதை. 

அதுவே, அடைய வேண்டிய இலக்கை நமக்குக் காட்டிக் கொடுக்கும் குரு. 

அதுப்போன்றே, நம்முடைய உலகியல் பாதைகளான பல்வேறு பாடத்திட்டத்தில் விலங்கியல் பிரிவில் கண்ணிற்குத் தெரியாத நுண்கிருமி பற்றி படித்திருக்கின்றோம். 

அவ்வாறே, தாவரவியலிலும் அதைப் படித்திருப்பது நினைவு இருக்கலாம். 

அதற்கு காரணம் ஒரு செல் உயிரியான அமிபா என்ற நுண் கிருமிகள் முதற்கொண்டு, தாவர செல்கள் முதற்கொண்டு, பல செல் உயிரினமான மனிதன் வரை எல்லாமே அணுக்களால் ஆனவைகள். 

ஆக, அனைத்தையுமே அந்த அணுவுக்குள் அடக்கி விட, இன்றைய அறிவியலும் விரும்புகின்றது. 

அதையே அணுவுக்குள் அணுவானவன் என்கின்றது ஆன்மீகம். 

இதிலே, படைக்கப்பட்ட அனைத்துமே அணுவுக்குள் அடங்கி விடுகின்றது என்கின்ற பொழுது, அந்த உயிரினங்கள் பல்கிப் பெருகவும் அணுக்களே காரணமாகின்றன. 


அந்த வகையிலே,

அண்டசஞ் சுவேதசங்கள் உற்பிச்சம் சராயுசத்தோ
டெண்தரு லெண்பத்து நான்கு நூறாயிரந்தான்
உண்டுபல் யோனியெல்லாம் ஒழித்து மாநுடத்துதித்தல்
கண்டிடில் கடலைக் கையால் நீந்தினன் காரியங்காண்

- சிவஞான சித்தியார்.

1. அண்டஜம் - (முட்டையில் தோன்றுவன) - பறவைகள், பாம்பு, பல்லி, பூச்சி வகைகள்.

2. சுவேதஜம் - (வியர்வை அழுக்கில் தோன்றுவன) - கிருமிகள்.

3. உற்பீஜம் - (விதைகளில் தோன்றுவன) - மரம், செடி, பயிர்கள்.

4. சராயுஜம் - (கருப்பையில் தோன்றுவன) - மனித, மிருக உயிர்கள். என 84 இலட்சம் வகைகளில் உயிரினங்கள் படைக்கப்படுகின்றன.

அதிலே, அரிதான மிக உயந்த மனிதப் பிறவியில் உடல் கிடைப்பது மிக, மிக அரிது.

அத்தகைய உயர்ந்த மனிதப்பிறவி கிடைப்பது என்பது, கடலைக் கையால் நீந்திக் கடப்பது எவ்வளவு அபூர்வமோ அவ்வவளவு அபூர்வம் என்கின்றது இந்த பாடல் வரிகள்.

அத்தகைய ஒரு விந்தணுவின் தொகுப்பாகிய மனித உடலைக் கொண்டு, உணர்வாக அந்த அறிவு உலாவும் இடமே இந்த வெளி ஆகும்.

அந்த உணர்வு வெளியைத்தான் வெட்டவெளி என்றும் சிற்றம்பலம் அல்லது அறிவாகாசம் என்றும் அழைக்கிறோம்.

இந்த வெளியின் எல்லையை எடுத்துக் கொண்டால், என்றுமே கணக்கிட முடியாதது.

அதன் தூரம், எல்லை என்பது, இன்றுவரை எந்த அறிவியல் ஆய்வுகளாலும் அறிந்துக் கொள்ள முடியாதவாறு உள்ளது.

காரணம், இந்த வெளி இன்னும் விரிந்துக் கொண்டே போகின்றது என்கின்றது நவீன விஞ்ஞானம்.

அது கூறுவதுப் போன்று, இந்த வெளியைக் கடந்து, தூரமாக சென்று கொண்டே இருந்தால் என்ன வரும்? 

இன்னும் வெளி…! 

சரி அதையும் கடந்து சென்றால்?

பல ஒளியாண்டுகள் கடந்து, அதன் பின் என்ன?... 

நாம் இதுவரை அறிந்த தூரம் 1500 கோடி ஒளியாண்டுகள் என்று கூறலாம். 

அதற்குக் காரணம், நம் அறிவியல் கூறுவது போன்று, பெரு வெடிப்பு (Big Bang) நிகழ்ந்தது 1500 கோடி ஆண்டுக்கு முன்புதான். 

சரி! அந்த தூரத்தை கடந்து விட்டால், அதன் பின் இருப்பது என்ன? 

என்று சிந்தித்தால்...! 

அல்லது பிக் பாங் என்ற பெரு வெடிப்பு நிகழ்வுக்கு முன்பு என்ன இருந்தது? 

என சிந்தித்தால்…! 

அல்லது இந்த மொத்த பிரபஞ்சமும் அழிந்த பிறகு என்ன இருக்கும்? 

என சிந்தித்தால்...! 

அதற்கு அப்பால் உள்ளதைக் கற்பனையாகக் கூட சிந்திப்பதை ஏற்க முடியாமல் மனம் மயங்கி நிற்கின்றது. 

ஆனால், ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அவ்வளவு சாதாரணமாக விட்டு விடுவதற்கா இந்த மனம் இந்த மனித உடலை எடுத்துள்ளது? 

மற்ற உடல்களினால், சாதிக்க முடியாததை, சாதிக்கக் கூடிய சாதனமாகத்தானே இந்த மனித உடல் இருக்கின்றது. எனவே, இந்த மனித உடலைக் கொண்டு. மனதை விசாரித்து, விடைக் காண வேண்டிய கட்டாயம் உள்ளது. 

விசாரத்தின் விளைவாக. மனதைக் கடந்த, விழிப்புற்ற புத்தியினால், விவேகத்தை அடைந்த வனுக்கு, உண்மை வெளிப்பட்டது. 

ஆம்! அந்த உண்மைக்குப் பெயர்தான் முழுமை…” 

ஆக, இந்த முழுமையை விளங்கிக் கொள்ள இன்னும் சில உதாரணங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். 

அதாவது, மனித மனதின் புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கிறதே அது எப்படி எனில், அது ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிட்டுத்தான் புரிந்துக் கொள்ளும். ஒப்பீடு அல்லாத முழுமையான ஒன்றை, அதனால், அப்படியே புரிந்துக் கொள்ள முடியாது. 

உதாரணமாக, உங்கள் நண்பரின் சிறு குழந்தைக்கு பிறப்பிலிருந்தே ஒரு நிறத்தை மட்டும் அறிந்துக் கொள்ளக்கூடியதாக உள்ளது. 

அந்தக் குழந்தைக்கு மற்ற நிறத்தை பிரித்து அறியக்கூடிய புலனாக அதன் கண்கள் இல்லாத காரணத்தினால், அது ஒரே ஒரு  நிறமான மஞ்சள் நிறத்தை மட்டும் காணுகின்றது. 

அந்த வகையில், அந்தக் குழந்தைக்கு பார்ப்பது எல்லாமே மஞ்சளாகத்தான் தெரிகின்றது. (நீங்கள் மஞ்சள் கண்ணாடியைப் போட்டுப் பார்த்து, எல்லாமே மஞ்சளாகத் தெரிவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அதைக் கழற்றி விடுகின்றீர்கள். 

ஆனால், அந்தக் குழந்தைக்கு அது சாத்திய மில்லை…!) அந்தக் குழந்தைக்கு மஞ்சள் நிறத்தை மட்டுமே அறியக்கூடிய கண்களாக அவைகள் உள்ளதினால், அந்த மஞ்சள் நிறத்திற்கு வேறாக மற்ற நிறத்தை அந்தக் குழந்தைக்கு காட்டிப் புரிய வைக்க முடியாது.

அதனால், மஞ்சள் நிறமும் இப்படித்தான் இருக்கும் என்று கூறவும் முடியாது. 

இதனால், நீங்கள் அந்தக் குழந்தைக்கு மஞ்சள் நிறம் என்றால், இப்படித்தான் இருக்கும் என்று எப்படி எடுத்துக் கூறினீர்கள் என்றாலும், அந்தக் குழந்தைக்கு மஞ்சள் நிறத்தை தவிர, மற்ற நிறத்தை பார்த்திராதக் காரணத்தினால், அந்த மஞ்சள் நிறமே இப்படித்தான் இருக்கும் என்று கூட புரிந்துக் கொள்ள முடியாது. 

அந்தக் குழந்தைக்கு நீங்கள் எப்படி புரியவைப்பீர்கள்? 

சற்று யோசித்து பாருங்கள்!... 

இதோ இருக்கே, இதுதான் மஞ்சள்... என நீங்கள் விளக்க, விளக்க அந்தக் குழந்தை எங்கே?, எங்கே? எனத் தேடிக் கொண்டேதான் இருக்கும். 

அந்தக் குழந்தையினால், கடைசிவரை புரிந்து கொள்ளவே முடியாது. 

மஞ்சளை புரிந்து கொள்ள மஞ்சள் அல்லாத ஒன்று வேண்டும் அல்லவா?... 

ஒரு துளி... ஒரே ஒரு துளி...! 

ஒரே ஒரு குண்டூசி முனை அளவு சிகப்பு நிறம் அந்த கண்களால் பார்க்க முடிந்து விட்டால் போதும், அதைக் காட்டிக் கொடுத்து, இதோ பார், இதன் பெயர் சிகப்பு. இது அல்லாத மற்றது எல்லாம்தான் மஞ்சள் என்றால், அந்தக் குழந்தைக்கு புரிந்து விடும். அதுவும் மஞ்சள் நிறத்தைப் புரிந்துக் கொள்ளும். 

இப்படித்தான் நாமும், அந்தக் குழந்தையைப் போன்று, நம்மை நாமே, நமக்கு வேறாகத் தேடிக் கொண்டிருக்கின்றோம். 

நமக்கு அல்லாத ஒன்றாக, நம்மை நாமே இந்த உலகம் முழுவதும் வலைவீசித் தேடிக் கொண்டு இருக்கின்றோம். 

அந்தக் குழந்தைக்கு மஞ்சள் நிறத்தை மட்டும் பார்க்கும் சக்தி இருந்தும், அதனால், மஞ்சள் நிறத்தை புரிந்துக் கொள்ள முடியாமல் இருப்பதுப் போன்று, நமக்கு நம்மை யார்? என்று தெரிந்திருந்தும், நமக்கு வேறாக, நம்மை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். 

எப்படி முழுமையான மஞ்சள் நிறத்தில் இருந்து, மஞ்சளைப் பிரித்து அறிய, அதற்கு வேறாக வேறு ஏதாவது நிறம் இருந்தால், அதனுடன் ஒப்பிட்டு, இதுப் போன்று இல்லை, எனவே, அது சிகப்பு, இது மஞ்சள் எனக் கூறலாம். 

அதுப்போல. ஒன்றேயான அந்த முழுமை யிலிருந்து, அதற்கு வேறாக ஒன்று இருப்பின், அதனுடன் ஒப்பிட்டு, இது வேறு என்பதினால், நீ அதுவாக இருக்கின்றாய் என்று ஒப்பிட்டுக் கூறலாம். 

ஆனால், இருப்பதோ ஒன்று மட்டுமே, அதற்கு வேறாக ஒன்றுமே இல்லை என்கின்ற பொழுது, எப்படி பிரித்து காட்டி விளக்க முடியும்? 

எப்படி முழுமையில் இருந்து, முழுமையை பிரிக்கமுடியாதோ, அப்படியே, ஒன்றேயான அந்த இறைவனில் இருந்து, அவனுக்கு வேறாக எதையும் பிரிக்க முடியாது. அப்படிப் பிரித்துப் பார்ப்பது எல்லாமே ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களான மனதினால் மட்டும்தான். 

எனவே, என்னிலிருந்து, எனக்கு வேறாக இறைவனைத் தேடுவது என்பது என்றுமே முழுமையாகாது. 

ஆகவே, நல்லவன் ஒருவனைப் புரிந்துக் கொள்ள, கெட்டவன் ஒருவன் தேவை... 

யோசித்து பாருங்கள்! 

இந்த உலகத்தில் எல்லோருமே நல்லவர்கள் என்றால், நல்லவன் என்பதற்கான அர்த்தத்தை உங்களால் உள்வாங்க முடியுமா...? 

பெரிது என்பதை புரிந்து கொள்ள, சிறிது என்பதும் தேவை அல்லவா? 

அழகை புரிந்து கொள்ள அசிங்கம் தேவை... 

வெப்பத்தைப் புரிந்து கொள்ள குளிர்ச்சி தேவை... 

இப்படி ஒப்பிட முடியாத முழுமையாகவே இருக்கும் அந்த முழுமையை, அதற்கு வேறாக, நம் மனதினால் பலவாறாக ஏற்றி வைத்துக் கொண்டு, எண்ணங்களின் கற்பிதத்திற்கு ஏற்றவாறு, எங்கேயோ வெளியே வெளியில் தேடிக் கொண்டிருந்தால், அது எப்படி கிடைக்கும்?. 

அது எப்படி அனுபவமாகும்? 

அது, நம் மனம், புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற அந்தக்கரணங்களுக்கு அப்பாற்பட்டது. 

கண்கள், காதுகள், நாக்கு, மூக்கு, தொடுவுணர்வு என்ற புறக்கரணங்களால் புரிந்துக் கொள்ள முடியாதது. 

தன்னை உணர்தல் என்ற உண்மையான ஆன்மீகத்தை, சாதாரணமாக புரிந்து கொள்ள முடியாததற்கு காரணம், தனக்குள் என்ன இருக்கிறது? என்பதை தேடி போனவர்கள்...! 

அதாவது உண்மையைத் தேடிப் போனவர்கள், அந்த உண்மை ஒரு முழுமையான உணர்வு என்பதை உணர்ந்து கொண்டார்கள். 

அந்த முழுமையான உணர்வு ஒன்று மட்டுமே இருக்கின்றது என்றும், அதுவும் அறிவாக வெளிப்படும் போது ஆனந்தம் அடைவதையும் கண்டு பிடித்தார்கள். 

அந்த உணர்வு வெளிப்படும் இடத்தைத்தான் வெளி என்றார்கள். அந்த உணர்வுவெளி - யைத்தான் சிற்றம்பலம்என்றார்கள். 

அதாவது, அறிவு (சித்) நடனமிடும் அம்பலம் சிற்றம்பலம் (சித் + அம்பலம்) என்பதினால், அந்த உணர்வுவெளியே, நம் இதயவெளி. 

நம் இதயவெளியே சிதாகாசம். 

அந்த சிதாகாசமே அறிவாகாசம்”. 

அந்த அறிவாகாசத்தின் இருப்பிடமே இதயம்.

இது நம்முடைய பௌதீக இதயம் அல்ல!. 

நாம் இந்த பௌதீக உடல் எடுப்பதற்கு முன்பு இருந்த, சூக்ஷும இருப்பு. 

ஆகவே, நான் வந்து போகின்ற இந்த உடல் அல்ல!. மனம் அல்ல! 

அவைகளுக்கு அப்பாற்பட்ட, அழிக்க முடியாத, நான்என்ற இருப்பு. 

அந்த நான்என்ற இருப்பு கொண்ட, தன் உணர்வின் வெளிப்பாடே, தன்னை அறிகின்ற அறிவு. 

 அந்த அறிவு வெளிப்படுகின்ற இடமே வெளி. 

ஆம்! அந்த அறிவு வெளிப்படும் இடமே இந்த வெட்டவெளி… அந்த வெட்ட வெளியே அணு. 

அந்த அணுவே முழுமை. 

அந்த அணுவுக்குள் அணுவாகவே அனைத்தும் உள்ளது. அந்த அணுவில் இருந்து வெளிப்படும் சக்தியே இந்த மொத்த பிரபஞ்சம். 

இந்த மொத்த பிரபஞ்சத்தையே தன்னுள் முழுமையாக அடக்கியுள்ளது அந்த வெட்ட வெளியாகிய அணு. 

அந்த முழுமையிலிருந்து, முழுமையைப் பிரித்து எடுத்தாலும், எஞ்சி இருப்பது முழுமையே. 

ஆக, அந்த முழுமையே நான்”. 

முழுமையாகிய நானே எல்லாவற்றிலும் முழுமையாக இருக்கின்றேன். என்னை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், என்னை நான் மாற்றத்திற்கு உட்படுத்திக் கொள்ள முடியும். 

நான் என்றும் இருக்கின்ற இருப்பு. 

அப்படிப்பட்ட முழுமையான நான் என்ற தன்னைப்பற்றியும், தன்னுணர்வின் இருப்பைப் பற்றியும் உண்மையை உணர்ந்த உத்தமர்களே இருப்பதெல்லாம் இறைவ(நா)னே!” என்ற ஞானிகள். 

அவர்களே! முழுமையை உணர்ந்த முனிவர்கள்.


ஓம் தத் சத்!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்