வியாழன், 13 பிப்ரவரி, 2020

தன்னை அறியும் மனம்





மேலே உள்ள இணைப்பை அழுத்தி புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

ஹரிஓம்!
ஸ்ரீ குருப்யோ நம:

முகவுரை

ஒரு தொடக்கம் என்று இருந்தால், அதன் முடிவு நிச்சயம் இருந்தாக வேண்டும். இந்த தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையில் உள்ள இடை ‘வெளியை’ காலம் என்று அழைத்துக் கொண்டு, அதன் தோற்றம் - மறைவு குறிப்பிடப்படுகின்றது.

இது படைக்கப்பட்ட பொருள்கள் எதுவாக இருப்பினும், அவைகள் அத்தனைக்கும் இந்த காலம் பொருந்தும். அதனால், படைத்தல் என்றால், அதற்கு முடிவாக அழித்தல் என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கும்.

இதில், ஜடப் பொருள்களாகட்டும், உயிர் பொருள்களாகட்டும் அனைத்திற்கும் ஆதாரமான மூலப்பொருள் என்ற ‘பரம்பொருள்’ ஒன்று இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

அதனால்தான், படைக்கப்பட்ட அனைத்துப் பொருள்களும் மீண்டும் மூலத்தை (பரம்பொருளை) நோக்கி நகர்கின்றது. இந்த நகர்கின்ற காலம் பொருள்களைப் பொருத்து மாறுபடுகின்றது.

இந்த கால வேற்றுமைகளுக்குக் காரணம், அவைகள் கடந்து வந்த பாதைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் என்ற இருமைகள் எனலாம்.

எது ஒன்று, இதுபோன்ற இருமைகளில் சிக்கிக் கொள்கின்றதோ, அது, அந்த மூலத்தை அடைவதற்கு இங்கும், அங்கும் அலைந்து காலதாமதம் ஆகின்றது.

இங்கு காலம் என்பது இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள ‘இடைவெளி’ என்பதினால், அந்த ‘வெளி’ ஒன்றே அனைத்தையும் தீர்மானிக்கின்றது.

இங்கு ‘வெளி’ என்று குறிப்பிடுவது, இந்த பிரபஞ்சத்தையே வெளிப்படுத்துகின்ற வெட்டவெளி(ஆகாசம்) பற்றி கூறப்படுகின்றது.

இத்தகைய வெட்டவெளியில் மிதக்குகின்ற பிரபஞ்சத்திற்குள் காணப்படுகின்ற கோடானு, கோடி சூரியன்களும், விண்மீண்களும், அந்த சூரியன்களை சுற்றுகின்ற கோள்களும், அந்த கோள்களில் வசிக்கின்ற கோடானு, கோடி சீவர்களும் என அத்தனைக்கும் ஆதாரமாக, அதனுள்ளே ‘உள் வெளியாக’ ஊடுறுவி இருக்கின்றது.

ஆம், அதுவே, பரவெளி, பரம்பொருள், பரமாத்மா, பரமேஸ்வரன், பராசக்தி, பரிபூரணம் என பலவாறாக அழைக்கப்படுகின்றது.

அந்த வெட்டவெளி என்ற வெள்ளைத் திரையினிலே, ‘பிரபஞ்சம்’ என்ற வர்ணப்படம் திரையிடப்பட்டு, தினசரி மூன்று காட்சிகளாக கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என திரைப்படம் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.

திரைப்படத்தின் கதாநாயகனாக ‘பரமாத்மா’ மிகச்சிறப்பாக படத்தில் நடிக்கின்றார். அவரது நடிப்பை பார்க்க விரும்பிய அவரது ரசிகர்களான, அனேக சீவர்களும், அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு, உலகம் என்ற அரங்கினுள் அமர்ந்து, உல்லாசமாக படம் பார்த்துக் கொண்டு உள்ளனர்.

படம் பார்த்து முடிக்கின்றவரை, அந்த படத்தில் வருகின்ற காட்சிகளாகவே இந்த சீவர்கள் மாறி விடுவதினால், அந்த காட்சிகளுக்கு வேறாக, ‘நான்’ என்ற ’இன்னார்’ அந்த திரையரங்கத்தின் உள்ளே இருப்பதை மறந்துவிட்டு, அந்த திரைப்படத்துடன், திரைப்படமாக ஒன்றாகி விடுகின்றன.

அதாவது, காண்பான், காட்சி, காணப்படும் பொருள் என ‘திரிபுடி’ (மூன்றும்) இல்லாமல் ஒன்றாகி விடுகின்றன.

படத்தைப் பார்ப்பவன், படத்தின் காட்சிகள், படத்தில் உள்ள அனைத்தும் என இதில் எந்தவித பேதமைகளும் இன்றி ஒன்றாக மாறி விடுவதைப் போன்று, இந்த உலகத்தை உண்மை என்று கருதி, அதனுடன் ஒன்றாகி, அதிலிருந்து விடுபட முடியாமல், உண்மை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற வரை, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம்.

இதற்குக் காரணம், மனம் கற்பித்துக் கொண்ட கற்பனைகளுக்கு ஏற்ப, இந்த உலகம் ஒவ்வொரு விதமாக ஒவ்வொருவருக்கும் உண்மை போன்று, காட்சியாகின்றது.
திரைப்படம் முடிந்ததுமே, நாம் அதிலிருந்து பிரிந்து, வெளியே வந்து, அது பொய் என அறிந்து, இந்த உலகத்தை உண்மை என்று அபிமானிக்கின்றோம்.

அதுப்போன்று, இந்த உண்மை உலகத்தில் ஒன்றாகிப் போன நம் மனம், அதிலிருந்து விடுபட்டு, நம் உண்மை சொரூபத்தை அறிந்து கொண்டால் மட்டுமே, இந்த படம் பார்த்ததின் (உடல் எடுத்ததின்) பலன் நமக்கு உண்டாகும்.

அந்த ‘பலன்’ என்னவெனில், திருப்தி, ஆனந்தம், அமைதி, மெளனம் என பலவாறாக பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.

அந்த பேரானந்தம் மட்டுமே பலனாக மனதில் நிலைத்திருக்க வேண்டுமெனில், மனதின் அறியாமை அகற்றப்பட வேண்டும். அதற்கு மனதை விசாரித்து, அதன் உண்மைத் தன்மையை உணர வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு, இந்த நூலை ஏகாந்த பரவெளிக்கு எளிமையுடன் படைக்கின்றேன்.


நன்றி! 

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.


புதன், 18 டிசம்பர், 2019

ஸ்ரீ திரிபுர ரகசியம்


ஓம் தத் சத்

ஸ்ரீ திரிபுர ரகசியம்
(ஞான காண்டம்)



முன்னுரை

     இந்த அரிய நூலானது, சம்ஸார சமுத்திரத்தில் மூழ்கி இருக்கின்ற மனிதர்களை அவர்களது பிறப்பு, இறப்பு என்கின்ற துக்கத்திலிருந்து மீட்டெடுக்கும் பொருட்டு, ஹரிதாயனர் என்ற மகரிஷியால் நாரதருக்கு உபதேசிக்கப்பட்ட திரிபுரையின் மாகாத்மியத்தை வடமொழியில் இருந்து தமிழில் திருச்செந்தூரை சேர்ந்த திரு. வி. ஆர். சுப்பிரமண்ய அய்யர் அவர்களின் அரிய முயற்சியானால் அனைவரும் படித்து அறிந்து கொள்ள முடிந்தது. இந்த நூலை தற்பொழுது அடியேன் எளிய தமிழில் இன்றைய இளைய சமுதாயம் படித்து பயன் அடைய வேண்டும் என்று தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. 

   இந்த நூலிலே மனிதனாக பிறந்தவன் அடையத்தக்க பரம புருஷார்த்தத்திற்கு சாதனமாக விளங்கும் முதற்சாதனமான பரா பக்தியை செய்வது பற்றியும், அவ்வாறு, உண்மையான பக்தியை செய்பவனும், அவன் பக்தி செய்யப்படுகின்ற வஸ்துவும் என இரண்டையும் ஒன்றாக்கும் சங்கமமே சரணாகதி, அனுக்கிரஹம் என்று எடுத்துக்கூற, சாதுக்களின் சங்கமத்தை உண்டாக்கிக் கொள்ள வேண்டும், அப்படிப்பட்ட சத்துக்களின் சங்கமமே சத்சங்கம் என்பதை அறிந்து, அவர்களின் திருவாய் வழியாக விசாரம் மேற்கொண்டு, அவர்கள் கூறுவதை (சிரவணம்) கேட்டு, சிந்தனை (மனனம்) செய்து,   பக்குவிகளாக மாறிய ஜிஞ்ஞாஸுகளை அந்த அறிவில் நிலைப்பெற்று நிற்கின்ற (நிதித்யாசனம்) அனுபவத்திற்கு அழைத்துச் செல்வதே, ஸ்ரீ திரிபுர ரகசியம் என்ற மிக உயர்ந்த, உன்னதமான வழி என்று அந்த ஞானத்தைப் பற்றி இங்கு போதிக்கப்படுகின்றது.

நன்றி!


என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

திங்கள், 16 டிசம்பர், 2019

கைவல்ய நவநீதம்


கைவல்ய நவநீதம் - மின் புத்தகம்
============================

ஆத்ம ஞானத்தை அடைய விரும்புகின்ற முமுக்ஷுக்களுக்கு அனேக நமஸ்காரங்கள்.

இதுவரை இந்த முக நூலில் எழுதப்பட்ட “கைவல்ய நவநீதம்” என்ற நூலுக்கு உரை நடை பகுதிகளை இதற்கு முன்பாக எத்தனையோ மகான்களும், ஞானிகளும் எழுதியிருக்க இவன் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்று நினைக்கலாம்.

இந்த பராவித்யா முகநூல் பகுதிகளை தொடந்து படித்து வருகின்ற அன்பர் திரு. இசக்கிமுத்து ஐயா அவர்கள் என்னை எழுதும்படி கூறியதின் வாயிலாக ஈஸ்வர சித்தம் வெளிப்பட்டு, அடியேனை ஒரு கருவியாக்கி இந்த கைவல்ய நவநீதம் என்ற மூல நூலுக்கு உரை நூல் எழுத வைத்தது.

மற்றபடி இதில் “என் செயல் ஆவது ஒன்றுமில்லை. எல்லாம் அவன் செயலே”இந்த “கைவல்ய நவநீதம்” புத்தகத்தை மின் புத்தகமாக பெற விரும்புபவர்கள் கீழே உள்ள இணையதள லின்கினை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நன்றி!


என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.






நன்றி! :pray:

என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

பவானி அஷ்டகம் (ஆதி சங்கரர் அருளியது)



பவானி அஷ்டகம்
==================




பவானி உன்னுடைய அடிமை நான் என்று பக்தன் துதிக்க ஆரம்பிக்கிறானாம். பவாநி த்வம், பவானி உன்னுடைய, (த்வம் என்றால் உன்) என்று இவன் சொல்லுகின்ற பொழுதே, அம்பாள் இவனுக்கு பாவானித்வம் என்கிற நிலையை அநுக்கிரஹித்து விடுகின்றாள் என்று சிலேடை பண்ணுகிறார்.

முதலில் இவன் பிரார்த்திக்கின்ற போது பவானி என்றால் அம்பாள் என்று வழிபட ஆரம்பிக்கிறானாம்.

பரமசிவனுக்கு முக்கியமான எட்டுப் பெயர்களில் ஒன்று பவன் என்பது. பவனின் பத்தினி பவானி.

மறுபடி, பவானித்துவம் என்ற இந்த இரண்டு வார்த்தைகளை இவன் சொன்ன மாத்திரத்தில், அம்பாள் பவானித்துவம் என்ற நிலையை அநுக்கிரஹம் செய்வாள் என்னும்போது, பவானி என்றால் ஆகிவிடுகின்றேன் என்று அர்த்தம்.

தீர்க்க சுமங்கலி பவ என்கின்றோமே, இங்கே பவ என்றால் ஆவாய் என்று அர்த்தம்.

பவானி என்றால் ஆகின்றேன். பவானித்வம் என்றால் நீயாகவே நான் ஆகிவிடுகின்றேன் என்று அர்த்தம்.

எல்லாம் பிரம்மம் என்ற அத்வைத ஞானம் உண்டாகி இப்படிச் சொல்கின்றான் பக்தன்.

தாஸனாக இருக்கப் பிராத்தித்தவனைத் தானாகவே ஆக்கிக்கொண்டு விடுகின்றாள் அம்பிகை என்பதை இங்கு அறிய வேண்டும்.

பவானி, உன் தாஸனாக என்னைத் துளி கடாக்ஷியம்மா என்று பிரார்த்திக்க ஆரம்பித்த பக்தன் மூன்றாவது வார்த்தையைச் சொல்லக்கூட அவகாசம் தராமல், பவானி உன் (பவானித்வம்) என்று அவன் சொல்லும்போதே அம்பாள் இடைமறித்து, ஆமாமப்பா பவானித்வம்தான் என்கிறாள்.

அதாவது நானும் நீயும் ஒன்றேதானப்பா என்கிற பரம ஞானத்தை வழங்கி விடுகின்றாள்.

பவானித்வம் என்றால் பவானியின் தன்மை என்றும் அர்த்தம்.

பக்தனே பவானித்வம் பெற்று பராசக்தியோடு தன்மயமாகி விடுகின்றான்.

இதுவே தன் மயமாதல்! அதுவே தன் சொரூபம்!

மாயா பஞ்சகம் (ஆதிசங்கரர் அருளியது)


மாயா பஞ்சகம்
(ஆதிசங்கரர் அருளியது)








மாயை ஒன்றே எங்கும் வியாபித்துள்ளது. இந்த மாயை இரு பெரும் சக்திகளாக வெளிப்படுகின்றது.

அவைகள், 1. ஆவரணம். 2. விக்ஷேபம் என்பனவாகும்.

இதில், ஆவரணம் என்பது மறைக்கும் சக்தி. விக்ஷேபம் என்பது தோன்றும் சக்தி எனப்படும். ஜீவர்களுக்கு தன் உண்மை சொரூபத்தை அறிய விடாமல் மறைக்கின்ற சக்தியை ‘ஆவரணம்’ என்றும், இந்த உலகத்தை உண்மையாகத் தன் மீது ஏற்றி வைத்து பார்த்தல் ‘விக்ஷேபம்’ என்றும் கூறப்படும்.

ஆவரணம் நம் உள்ளேயே அந்தர்யாமியாக இருக்கின்ற ஆத்மாவை அறிய விடாமல் மறைக்கின்றது. விக்ஷேபம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று காட்டி, அதை நம்ப வைத்து ஏமாற்றுகின்றது.

கண்களுக்கு காட்சியாகும் கானல் நீர் பார்ப்பதற்கு உண்மை போன்றே இருக்கும், அருகே சென்று விசாரித்துப் பார்த்தால், அங்கு நீர் இல்லை என்பது தெரிய வரும்.

அதுபோன்று, இந்த மாயா உலகம் பார்ப்பதற்கு உண்மை போன்று நம் கண்களுக்கு காட்சியாகின்றது. அதுவே, நம்மை நாம் சுயமாக விசாரித்துப் பார்க்கும் பொழுது, இது நம்முடைய எண்ணங்களில் வெளிப்பாடு என்பது புரிய வரும்.

இந்த நிலைக்கு காரணமான மாயைகளின் தன்மை பற்றி ஜகத்குரு ஆதி சங்கரபகவத்பாதாள் அவர்கள் தான் இயற்றிய ஐந்து ஸ்லோகங்களில் மிக அழகாக எடுத்துக் கூறுகின்றார்.

அதுவே “மாயா பஞ்சகம் எனப்படும்.

இதன் மூலம் சமஸ்கிருத மொழியில் உள்ளது. இந்த ஸ்லோகங்களின் விளக்கங்களை எளிய தமிழ் மொழியில் அனைவரும் படித்து பயன் அடையும் பொருட்டு கொடுக்கப்படுகின்றது.

நிர்வாண சடகம் (ஆதிசங்கரர் அருளியது)






முன்னுரை

சடகம் என்றால் ஆறு என்று பொருள். இது ஆறு ஸ்லோகங்கள் கொண்டது.

இந்தத் தேகம் நானல்ல, எனது இந்திரியங்கள் நானல்ல என்று நாம் பார்க்கும் அனைத்து உபாதிகளையும் வேதாந்த வாக்கின்படி நீக்கிவிட்டு, இதுவல்ல, அதுவல்ல என்று கூறி, இறுதியில் எஞ்சியுள்ள ஜீவான்மாவும், ஆதிப்பரமான்மாவுன் ஒன்றே என்று சொல்லும் வேத மகா வாக்கியங்களின் உண்மையை ஆராய்ந்து மிக அழகாக எழுதப்பட்ட இந்த ஆறு ஸ்லோகங்கள் பகவான் ஸ்ரீ ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது.

கயிற்றை பாம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும் வரை அந்தப் பிரமை நம்மை விட்டு அகலாது. பார்க்கப்படுவது என்ன என்று முதலில் தோன்ற வேண்டும். அதன் உண்மையை அறிய தேவையான ஒளியும் வேண்டும். அந்த ஒளியும் சரியான கோணத்தில் விழவேண்டும். அப்போதுதான் ஒருவனுக்கு உண்மை தெரிய வரும்.

அதே போன்று இங்கு முதலில் அழியும்-அழியாத பொருட்களின் தன்மைகளை ஒருவன் அறியவேண்டும். உடல், மனம், புத்தி இவைகள் எல்லாம் ஒருநாள் அழியக்கூடியன என்றால், நமது தினசரி அனுபவங்களிலேயே அவைகள் எப்போது அழிகின்றன, அப்படி அழிந்தும் நாம் இல்லாது போய்விட்டோமா என்று பார்த்து, அவைகள் எல்லாம் நமக்கு இருக்கின்றன என்றால் நாம் யார் என்று நமது தன்மையை நம் அனுபவங்கள் கொண்டே அறிய முயற்சிக்க வேண்டும்.

எது நித்தியமோ அதை மட்டும் பற்றிக்கொண்டு, அநித்தியமானவைகளை அகற்றுவதில் முதல் படியாக உடல் பற்றிய உண்மைகளை இங்கு அறிகின்றோம்.

வியாழன், 5 டிசம்பர், 2019

மூன்று குணங்கள்


பரிபூரண ஞான சொரூபியாக விளங்கும் பிரம்மத்தினிடத்தில் (கயிற்றில் பாம்புபோல்) ஏற்றி வைக்கப்பட்ட (ஆரோபித்த) இந்த கண்ணிற்குத் தெரிகின்ற ஸ்தூல தேகத்தை நான் என்று அபிமானித்துக் கொள்கின்ற இந்த ஜீவர்களுக்கு சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களே (சூட்சும கூறுகள்) இந்த பிரபஞ்ச உற்பத்திக்கு காரணமாக அமைகின்றன.

மாயையிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட இந்த உலகம், உடல் இந்த மூன்று குணங்களை உடையதாக இருக்கின்றது.



இந்த மூன்று குணங்களை நன்கு அறிந்து விட்டால், அதன்பிறகு, அவைகளில் ஒவ்வொரு குணமாக நீக்கி, மூன்றும் நீங்கும் பொழுது, மாயையை நீக்கி விடுவதற்கு சமமாகி விடும்.

இது பூரணமான பிரம்மத்தை அடைவதற்கு சுலபமாக்கி விடும் விசார சாதனமாகும்.

இவ்வாறு குணத்தை நீக்குவதற்கு அதை விசாரம் செய்து அதன் தன்மையை உணர வேண்டும்.
மாயை புருஷனை சார்ந்து செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் ஆதாரத்தை நாடி சரணடைந்து விட்டால், இதை சுலபமாகக் கடந்து விடலாம்.

ஜீவனுக்கு பல பிறவிகள் எடுப்பதற்கு காரணம் குணத்தின் மீதுள்ள பற்றுதான் என்று சாஸ்திரம் கூறுகின்றது.

எனவே, குணங்களைப்பற்றியும், அது எவ்வாறு நம்மை பந்தப்படுத்துகின்றது. இதன் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது என்பதை பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

நாம் எந்த குணத்திலிருக்கின்றோம் என்று அறிந்து கொள்ள வேண்டும். இறுதியில் குணங்களின் பிடியிலிருந்து விடுபட்டவன் எப்படி இருப்பான் என்பதையும் அறிய வேண்டும்.

எனவே, இவைகள் ஞானத்திற்கு நேரிடையாக உதவி செய்வதால், இந்த விசாரத்தை ஞானயோக சாதனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்