சனி, 7 ஆகஸ்ட், 2021

பதஞ்சலி யோக சூத்திரம் (விபூதி பாதம்)

 


அறிமுக உரை  👈


பதஞ்சலி யோக சூத்திரம் (விபூதி பாதம்) புத்தகம்


அறிவின் மீது, ஏற்றி வைக்கப்பட்ட இந்த மனம் அறிவது எல்லாமே, அந்த ஏக அறிவு இருப்பதினால்தான் என்பதை எளிதாக அறிய முடிகின்றது. ஆதலால், அறிவதை அந்த அறிவுக்கு ஒத்திசைவோடு கூடிய பகுத்தறிவு கொண்டு அறியப்பட வேண்டும். அதைவிடுத்து, அறிவதை எல்லாம் ‘அறிவு’ என்று ஏற்றி வைத்துக் கொண்டால், அது மனதின் அறியாமையை மேலும் வலுவாக்கும். 

அந்த அறிவோ சுயம் பிரகாசமானது. 

உதாரணமாக, சூரிய ஒளிப்பிரகாசம் சந்திரன் மீது விழும் பொழுது, சுயம் பிரகாசமற்ற சந்திரன், அந்த சூரியப் பிரகாசத்தைப் பெற்றுக் கொண்டு, தன்னுடைய சுயப்பிரகாசம் போன்று, வெளிப்படுத்திக் கொள்கிறது. 

அந்த சந்திரனிடம் உண்டான பிரகாசம் உண்மையில் சூரியனுடையது. 

அவ்வாறே, அறிவுப்பிரகாசம் மனதின் மீது விழும் பொழுது, சுயம் பிரகாசமற்ற மனம், அந்த அறிவுப்பிரகாசத்தைப் பெற்றுக் கொண்டு, தன்னுடைய சுயப்பிரகாசம் போன்று, வெளிப்படுத்திக் கொள்கிறது. 

அந்த மனதிடம் உண்டான பிரகாசம் உண்மையில் அறிவினுடையது.

ஆகவே, நமது முன்னோர்கள் சில நல்ல விசயங்களை நமக்குக் கூற வரும்பொழுது, அவர்களை பின்தொடர்ந்து வருபவர்கள் எளிதாக எதையும் ஏற்றுக் கொள்ளுமாறு, எடுத்துக் கூறுவது, நமக்கு ஒன்றும் புதிய விசயமல்ல. 

அதுப்போன்றுதான், ‘நான் கடவுள்’ என்கிற இதுவும். எனவேதான், இருமைகளற்ற ஒருமை உணர்வு, ஆன்ம விடுதலையை நம் அனுபவத்தில் கொண்டு வரும் என்று சொல்லாமல் சொல்லி உள்ளனர். 

ஆகவே, மனம் தன் போக்கில் போகாமல், தன்னை அந்த அறிவாகவே அறிந்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள். 

“தத்துவமஸி” - அதுவாகவே நீ இருக்கிறாய். 

“தோன்றியது தொம் பதம் தற் பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம் மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே
”. - திருமந்திரம். 

இதை உணர்ந்தவர்களே அறிவார்கள். 

ஆனால், அதை தன் அறிவு சொரூபமாக உணராமல், ஏற்றி வைத்துக் கொண்ட எண்ணங்களின் அடிப்படையில், தன்னை “ப்ரஹ்மம்” என்று பாவித்துக் கொள்வதும், செயல் எதுவும் செய்ய மாட்டேன் என்று, ‘சும்மா இருப்பதே சுகம்’ எனக்கருதி, சோம்பேறிகளாக தன் வயிற்றை வளர்ப்பதும், வீண் விவாதங்கள் பல புரிந்து, அறிவாளி போன்று தன்னைக் காட்டிக் கொள்வதும் போன்ற, விவேகமற்ற மனிதர்களாக பலரும் உள்ளனர். 

இன்னும் சிலரோ, அது ஒன்றுமே இல்லாத வெற்று உணர்வு, அது வெறுமையாக மட்டுமே உள்ளது. ஆகவே, அதைப்பற்றி ஆர்வம் காட்டினால், “நான் ஜடம்” ஆகி, செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவேன் என பயந்து, இதனால், இந்த உலக சுகத்தை முற்றிலுமாக இழந்து விடுவேன் எனக் கருதி, அதை “சூன்யம்” என விட்டு விடவே விரும்புகிறார்கள். அத்துடன், தங்களது மனத்தால் எதையாவது பற்றிக் கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறார்கள். 

அதனால்தான், பஞ்ச கோஷங்களான உடல், மனம், புத்தி, பிராணன் மற்றும் ஆனந்தம் என எதையாவது பற்றாமல், இவர்களால் இருக்கவே முடிவதில்லை. 

அதனால், அந்த பற்றற்றான் பதத்தைப் பற்றி இவர்களால் அறிய முடிவதில்லை. 

இதிலே, இன்னும் சிலரோ, மனதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், கட்டாயம் தனித்து இருக்க வேண்டும், தியானம் செய்ய வேண்டும், கற்பம் சாப்பிட வேண்டும், முப்பு முடிக்க வேண்டும் என, எதையாவது மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு, அந்த எண்ணங்களால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள். 

இவர்களைக் கண்ட, திருமூலர் கூறுகிறார். 

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந்தானே”. - திருமந்திரம். 

இவ்வாறு அரிதாக கிடைத்த ‘ஆறறிவு’ படைத்த மனித உடலைப் பெற்றவர்கள், தங்களது அலைபாயும் மனதை ஆய்வுக்கு உட்படுத்தி, விசாரத்தின் வாயிலாக, விழிப்புற்ற புத்தியைக் கொண்டு, விவேகத்தை அடைந்தவர்கள் மட்டுமே, இத்தகைய சாஸ்திரங்களைக் கற்றறிந்துக் கொள்ளக் கூடிய தகுதியுடைய ‘அதிகாரிகள்’ என்று சனாதன தர்மம் அறிவிக்கிறது. 

அத்தகைய அதிகாரிகளுக்கு மட்டுமே, “சாதன சதுஷ்டய சம்பத்தி” என்ற நான்கு தகுதிகள் உண்டாகும்.

 அவைகள்,

1. விவேகம்.

2. வைராக்யம்

3. ஷமாதி ஷட்க சம்பத்தி:

(இது ஆறு பண்புகளின் தொகுப்பு ஆகும்).

ஷமம் - மனக்கட்டுப்பாடு.

தமம் - புலன்கள் கட்டுப்பாடு.
உபரமம் - கடமையைச் செய்தல்
திதிக்ஷா - பொறுமை, சகித்துக் கொள்ளுதல்
ஸ்ரத்தா - நம்பிக்கை
சமாதானம் - மன ஒருமுகப்பாடு.


4. முமுக்ஷுத்வம். 

இந்த நான்கு சாதனைகளும் சம்பத்தி (செல்வம்) எனப்படும்.

இந்த நான்கு சாதனைகளின் இருப்பிடம் நமது மனம் என்பதினால், இதை ஒரு அகச் செல்வம் என்று அறிந்து, “அந்த அறிவாகவே நான் இருக்கிறேன்” என்ற இரண்டற்ற அத்வைத நிலையை அடைய வேண்டும். 

இவர்களுக்கு மட்டுமே “தன்மயமாதம்” என்ற, தன்னுடைய இயல்பான சொரூபம் அனுபவமாகும். 

அத்தகையவர்களால் மட்டுமே தங்களது கர்ம வினைகளின் ஒட்டு மொத்த தொகுப்பாகிய ‘சஞ்சித கர்மா’ என்ற காரண உடலை அழிக்கவும் முடியும். 

“தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே”. - திருமந்திரம். 

இவ்வாறு, அந்த காரண தேகத்தை (சஞ்சித கர்மாவை) அழிவுக்கு உட்படுத்துவது, மனதின் “மஹா பிரளயம்” என்கிறது சாஸ்திரம். அந்த மஹாபிரளயத்தை அறியும், அறிவின் “இருப்பு நான்” என்பதினால், ‘நானே மனாதீதன், ‘நானே குணாதீதன், ‘நானே தத்வாதீதன்’ ஆகின்றேன். 

எனக்கு (அறிவு) வேறாக இருப்பதாகத் தெரிவது எல்லாமே, என்னுடைய அறிவு சொரூபத்தின் மீது, ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களான மனதின் மாயத் தோற்றங்களே என்பதையறிந்து, அந்த மனதை “மாயை” எனத் துறந்து, எதனாலும் துன்பமடையாமல் எப்பொழுதும் இருப்பவனே “ஜீவன் முக்தன்”. 

நன்றி!                          என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

பகுத்தறிவும் பரிணாமமும்

 


அகண்ட சக்ஷிதானந்த ஸ்வரூபமாகிய அந்த பரிபூரண பரமானந்த இருப்பு ஒன்று மட்டுமே என்றும் இருக்கிறது. எல்லையில்லாத அந்த ஆனந்த அறிவு அணுவுக்குள் அணுவாகவும், பிருஹத்துக்கு பிருஹத்தாகவும் இருக்கிறது. 

‘அணு’ என்றால் புலன்களுக்கு புலப்பட முடியாத மிகமிகச் சிறியது என்றும், ‘பிருஹத்’ என்றால், மிக, மிகப்பெரியது என்றும் பொருள். 

சாஸ்திரங்களின் உபதேசம் எல்லோருக்கும் ஒன்று போலவே உபதேசிக்கப்பட்டாலும், அவைகள் மாணவர்களின் (சிஷ்யர்களின்) பக்குவத்தைப் பொறுத்தே ஒவ்வொருவரும் அதனால் பிரயோஜனம் அடைகிறார்கள். 

 அந்தவகையிலே, சனாதன தர்மம் என்ற மிகப்பெரிய ஆலமரத்தின் அழகான கிளைகளாக உள்ள உபநிஷதங்களில் வருகின்ற உபதேசப்பகுதிகளில், தேவராஜாவான இந்திரன், அசுர ராஜாவான விரோசனன் ஆகிய இருவருக்கும் பிரஜாபதி என்ற குருவானவர் பாடங்களை உபதேசிக்கும்பொழுது, "கண்ணினால் எவன் பார்க்கிறானோ அவனே ஆத்மா" என்று ஒரே வரியில் உபதேசத்தைச் செய்கிறார். 

கண் முதலான புறக்கரணங்கள், மனம் முதலான அகக்கரணங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் பின்னால், அவற்றுக்கு ஆதாரமாக இருக்கிற ஒரு வஸ்துவை அவர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டார். 

ஆனால் இதை சரியாகப்புரிந்து கொள்ளாமல் அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே கண்களால் பார்த்துக் கொள்ளும்படியாகத் தோன்றும் தங்களுடைய பிரதி பிம்பங்களையே “ஆத்மா” என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள். 

பிரதிபிம்பத்தில் சரீரம் தானே தெரிகிறது? 

அதனால் சரீரமே ‘ஆத்மா’ என்று விரோசனன் முடிவாகத்தீர்மானம் செய்து விடுகிறான். அதிலிருந்து நாஸ்திகவாதம், லோகாயதம், போன்றவைகளில் எல்லாம் ஈடுபாடு உண்டாகி, அவைகள் அசுரர்களின் கொள்கையாகி விடுகிறது. 

இந்திரனும் முதலில் சரீரத்தையே ‘ஆத்மா’ என்று தவறாகப் புரிந்துக் கொண்டாலும், அதன் பிறகு அவன் தன் விவேகத்தைக் கொண்டு விசாரித்து, பிருகு முனிவர் எவ்வாறு, தனக்கு கிடைத்த பகுத்தறிவைக் கொண்டு, இந்த உடலாகிய அன்னமயகோசத்திலிருந்து ஒவ்வொன்றாகப் பகுத்துப் பார்த்து, இறுதியில் ஆனந்தமயகோசம் எப்படிப்பட்டது, என்பதை அறிந்துக் கொண்டதுப் போன்றே, இங்கே இந்திரனும் ஸ்தூல தேகத்திலிருந்து சூக்ஷும தேகமான கனவு சரீரம், அதன்பிறகு கனவுகளும் இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிற காரண சரீரம் முதலான ஆனந்தமயகோஷம் வரை ஆராய்ந்து, அந்த அறிவை அறிந்துக் கொண்டு, “அதுவே நான்” என்று தெரிந்து கொள்கிறான்.

நான் யாரு?

 

 


புத்தகம்  👈

“நான்” என்பது என்ன? என்பதை அறிந்துக் கொண்டால் வழிபடுபவன் - வழிபடப்படும் கடவுள் என்ற இருமை நிலைகள் இல்லாமல் போகிறது. 

இதை அறிவுசார்ந்த, மனதைக் கடந்த மகத்தான உணர்வுநிலை எனலாம். 

      ‘அறிவு’ என்பதாக இதுவரை நாம் அறிந்து வைத்துக்கொண்டுள்ள அனுபவங்களை எல்லாம் கடந்து, “சுயவுணர்வை” (உள்ளுணர்வை) அறிந்துக் கொண்ட பின்னர், அந்த உள்ளுணர்வாகிய சுயவுணர்வில் ஆழ்ந்துபோகும் அனுபவம்தான் “நான்” எனப்படுகிறது. 

உடல் அழியும். உடல்சார்ந்த மனம்கூட அழிந்து போகும். ஆனால், இந்த உடலையோ, மனதையோ சார்ந்திராத ஆன்மாவாகிய “தன்னுணர்வு” (தன்னை அறியும் அறிவு) என்றுமே அழிவற்றது. 

ஆகவே, மனத்தைக் கடந்து உள்ளே சென்றால், உள்ளுணர்வைச் சந்திக்க முடியும். அதை அனுபவமாக அனுபவிக்கவும் முடியும். 

அதை உணர்கிற உள்ளூணர்வே “நான்”.  அதன் அனுபவமே “நான்”. அதை அறிபவனும் “நான்”. 

ஆக, உணர்வு! (சத்), அறிவு! (சித்), அனுபவம்! (ஆனந்தம்), என ஒன்றேயாகிய “சத்சிதானந்தம் நான்”.

சனி, 29 மே, 2021

ப்ரஹ்மோபநிஷதம்

 

ப்ரஹ்மோபநிஷதம்


முகவுரை

  

உபநிஷதங்களின் வரிசையில் 11 - வது உபநிஷதமாக இந்த ப்ரஹ்மோபநிஷதம் உள்ளது. இதில் ப்ரஹ்ம ஞானமும், முக்தனாகும் உபாயமும் ப்ரகடனப் படுத்தப்பட்டுள்ளது.

 நாம் பூணூல் மாற்றிக் கொள்ளும் பொழுது கூறப்படும் யக்ஞோபவீத தாரண மந்திரம் இதிலிருந்துதான் எடுக்கப்பட்டது. 

இந்த ப்ரஹ்மோபநிஷதம் மொத்தம் 23 ஸ்லோகங்களைக் கொண்டது. அந்த ஸ்லோகங்களின் வாயிலாக அந்த பரப்ரஹ்மத்தை மனித உடலில் நான்கு இடங்களில், நான்கு வடிவங்களில் தியானிக்க முடியும் என்கின்றது இந்த உபநிஷதம். 

அவைகள் தொப்பூழ், இருதயம், கழுத்து, மற்றும் தலை உச்சி என்ற நான்கு முக்கியப் பகுதிகளின் மூலம் அந்த தெய்வீகசக்தி வெளிப்பட்டுக் கொண்டிருப்பதாக இந்த “ப்ரஹ்மோபநிஷதம்” எடுத்துக் கூறுகின்றது.

புதன், 31 மார்ச், 2021

சிவ ரகஷியம் (ரிபு கீதை)

 

சிவ ரகஷியம் - ரிபு கீதை



ஒருவர் எல்லா எண்ணங்களையும் விட்டுவிட்டு, மனமற்ற ஒரு நிலையை அடைய வேண்டும்

அதாவது மனம் இல்லாத நிலை என்பது, ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களாக உள்ள எல்லா வடிவங்களையும் விட்டுவிட வேண்டும்

அனைத்தும் கற்பனையானவை.

உலகமும், இயற்கையாகவும் பிரம்மா என்று ஒரு படைப்பாளி இல்லை. அவ்வாறே

அல்லது விஷ்ணு என்று அழைக்கப்படுபவர். மரணம் இல்லை. அங்கே

நல்லொழுக்கம், தூய்மை, உண்மை அல்லது பயம் இல்லை. பிரம்மம் மட்டும் இருக்கிறது. குரு அல்லது சீடர் இல்லை.

‘ஒன்று’ (இரட்டை அல்லாதது) மட்டுமே உண்டு. அதுவே பிரம்மம். ‘இரண்டு’ (இருமைகள்) என்பது இல்லவே இல்லை என்பதால் அடிமைத்தனம், விடுதலையும் என்பதுவும் இல்லை.

ஆதலால் பந்தம் - மோட்சம் என்பதுவும் இல்லை. இங்கு உள்ளபடி மரணம் இல்லை, பிறப்பும் இல்லை.

உண்மையில் நானோ, நீயோ, இந்த உலகமோ இல்லை. இங்கே எந்த காரணமும் விளைவும் இல்லை. உள்ளே அல்லது வெளியே இல்லை;

முழுமை அல்லது அபூரணம் இல்லை.

எல்லா எண்ணங்களும் இல்லாத நிலையில், மனதைப் போல ‘இல்லை’ ஆக, ‘நான் தான்’ போன்ற எந்த சிந்தனையும் இல்லை.

பிரம்மம் ’எப்போதும் சாத்தியம். உணர்வு என்பது இருப்பு.

அங்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற விழிப்புணர்வும் உள்ளது. நான் அதுவாகவே இருக்கின்றேன்.

திங்கள், 29 மார்ச், 2021

ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள்

 

ஸ்ரீ கரபாத்திர சுவாமிகள்

(வாழ்க்கை வரலாறு)

 


புத்தகம்  👈

நம்முள் உள்ள அறியாமை இருளை நீக்கி, ஒளி பொருந்திய ஆன்ம  ஞானத்தை அளிப்பவரே குரு. அத்தகைய குருவானவர் நமக்கு சத்தியத்தைக்  காட்டிக் கொடுப்பதினால், நாம் அவரை சத்குரு என்று அழைக்கின்றோம். 

 அத்தகைய குருவருள் இருந்தால் மட்டும்தான், அவரை அடைபவர்களுக்கு திருவருள் உண்டாகும். 

அதாவது, நம்மையே நம்மால் முழுமையாகக் காண முடியுமா? என்றால், நிச்சயமாக முடியாது. காரணம், நமது கண்ணையே நம்மால் காண்பது நடக்காத காரியம் அல்லவா? 

அனைத்தையும் காண்கின்ற கண்களினால், தன் கண்ணை காண்பதற்கு அதற்கு வேறாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி அவசியமாகின்றது. 

அதாவது, நம் கண்களை நாம் பார்தேயாக வேண்டும் எனில், அதற்கு வேறாக ஒரு முகம் பார்க்கும் கண்ணாடித் தேவைப்படுவது போன்று, நம்மைப் பற்றி நாம் முழுமையாக அறிந்துக்கொள்ள வேண்டுமானால், அதற்கு அவசியமாக ஒரு குருவும் தேவைப்படுகின்றார். 

அத்தகைய அற்புதமான ஒரு குருவைப் பற்றி அவசியம் அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். 

ஆம்!, அவரே ஸ்ரீ ல ஸ்ரீ கரபாத்திர சிவப்பிரகாச சுவாமிகள் ஆவார்.

சனி, 13 மார்ச், 2021

சனாதன தர்மமும்! சத்தியமும்!

 

]ஓம் ஸ்ரீ குருப்யோ நம:

 

 சனாதன தர்மமும்! சத்தியமும்!


 

இந்த “நான்” என்பதற்கு ஆதாரமானது எது? என்ற கேள்வியை எழுப்பி, அதற்கான பதிலை அறிய ஆர்வம் பிறந்தது? 

ஆம்! 

அந்த ஆர்வத்தினால், உண்டான என்னுடைய உன்னத அறிவு மையம், உணர்சிகளால் உண்டான உயிரினங்களின் பல்வேறு உடல்களின் மூலம், ஒரு அறிவு உடைய தாவரங்கள் முதல், ஆறறிவு கொண்ட மனிதர்கள் வரை, பிரதிபிம்பிக்கின்ற பொழுது, அந்த உடல்களின் தன்மைக்கு ஏற்ப, அவைகளின் பிரஞ்ஞை (பேருணர்வு) வெளிப்படுவது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்படுகின்றது. 

அதன் அடிப்படையில், அரிதான இந்த மனித உடல் கிடைத்த உயிரினங்கள் மட்டுமே, தனக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேகமான புலன்களாகிய புறக்கரணங்கள் மற்றும் அகக் கரணங்களைக் கொண்டு, “நான்” என்ற தன்முனைப்புக்கு காரணமான தன்னுணர்வு மையத்தை எளிதாக அறிந்து, அதன் உணர்ச்சிகளால் வெளிப்பட்ட பல்வேறு எண்ணக்குவியல்களின் ஒட்டுமொத்த தொகுப்பாகிய மனதைக் கடந்து, மகத்தான தன் சுயத்தை, எளிதாக அகத்தில் கண்டு கொள்ள முடியும்.

 அந்த அகப்பயணத்தில் தாங்கள் கண்டறிந்த ஆழமான பல அரிய உண்மைகளை ஒன்றாகத் தொகுத்து, அதன் வாயிலாக அவர்கள் உணர்ந்த வந்த, அந்த உன்னத அறிவை “வேதங்கள்” என்கின்றோம். 

இந்த வேதங்கள் என்பது, சமய நூல்கள் அல்ல. 

வேதங்கள் என்பது, அன்றைய ரிஷிகள் தங்கள் உள்ளத்தின் உள்ளே உணர்ந்து, வெளிப்படுத்திய அக உளவியல் உண்மைகளை தொகுத்து, அந்த பேருணர்வின் பெருமைகளாகப் பேசப்பட்டது. 

வேதங்களில் சிருஷ்டி அல்லது படைப்பு பற்றிய தத்துவங்களைக் கடவுளர்கள் என்ற கருத்துக்கள் வழியாக வெளிப்படுத்தி விளக்கினார்கள். 

பிரஜாபதி, விஷ்ணு, ருத்ரன் என்றும், இந்திரன், அக்னி, வாயு, வருணன் என்றும், இயற்கையின் தத்துவார்த்தங்களைக் குறியீடுகளாகக் கொண்டு, அவர்கள் அகத்தில் அறிந்துக் கொண்ட ஆழ்தள உண்மைகளை அப்படியே அறிவித்தனர். 

 இங்கே கூறப்படும் படைப்பு என்பது, அவர்களது அறிவுணர்வு வெளியில் நிகழ்ந்த ‘படைப்பு’ ஆகும். 

அத்தகைய இந்த அறிவுணர்வு வெளியில் அகம் - புறம் என்னும் இருமைகள் எல்லாம் என்றுமே கிடையாது. 

அந்த இருமைகளான பிரிவுகள் எல்லாம், இந்த பேருணர்வு பிரக்ஞையில், (அந்த அறிவாக) தன்னை அறிந்துக் கொள்வதற்கு முந்தைய நிலையாகிய அறியாமையில், அந்த உணர்ச்சிகளின் தொகுப்பாகிய “மனம்” காரணமாக இருந்தது. 

தன்னை அறிய ஆதாரமாக இருந்த “நான்” என்னும் தன் முனைப்பின் மூலத்தை அறிந்து, அதை தன்னுணர்வு மயமாக அறிந்து, அதற்கான ஆதியைக் கண்டறிந்தார்கள். 

அதுவே, “பிரம்மம்” என்று குறிப்பிட்டார்கள். 

இதில், “பிரம்மம்” என்பது கடவுள் அல்ல. அது ஒரு ‘தத்துவம்’ மட்டுமே ஆகும்.

 அதுவும் அவர்களால் மற்றவர்களின் புரிதலுக்காக ஏற்றி வைக்கப்பட்ட ‘நாமம்’ (பெயர்) என்றே கூறலாம். 

உண்மையிலேயே, அந்த பேருணர்வு பெரு நிலைக்கு, நாம, ரூபங்கள் எல்லாம் கிடையாது. 

அந்த நாம, ரூபங்களின் வாயிலாக அறிவை அறிய எடுத்துக் கொண்ட முயற்சி, அறியாமையில் கொண்டு சென்று விட்டதினால், உண்டான சந்தேகத்தில் எழுந்த கேள்விக்கு விடை காண வேண்டிய கட்டாயம் உண்டாகி விட்டது. 

 அதிலே, பிரம்மம் என்பது என்ன?

என்ற கேள்வி எழும் பொழுது, அதற்கு அவர்கள் தந்த பதில், ‘ப்ரக்ஞானம் பிரம்ம’ என்பது மட்டும்தான். 

அதாவது, அறிவுணர்வுதான் (Consciousness) பிரம்மம். 

அதுவே முழுமுதற்பொருள்.


புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்