அகண்ட சக்ஷிதானந்த ஸ்வரூபமாகிய அந்த பரிபூரண பரமானந்த இருப்பு ஒன்று மட்டுமே என்றும் இருக்கிறது. எல்லையில்லாத அந்த ஆனந்த அறிவு அணுவுக்குள் அணுவாகவும், பிருஹத்துக்கு பிருஹத்தாகவும் இருக்கிறது.
‘அணு’ என்றால் புலன்களுக்கு புலப்பட முடியாத மிகமிகச் சிறியது என்றும், ‘பிருஹத்’ என்றால், மிக, மிகப்பெரியது என்றும் பொருள்.
சாஸ்திரங்களின் உபதேசம் எல்லோருக்கும் ஒன்று போலவே உபதேசிக்கப்பட்டாலும், அவைகள் மாணவர்களின் (சிஷ்யர்களின்) பக்குவத்தைப் பொறுத்தே ஒவ்வொருவரும் அதனால் பிரயோஜனம் அடைகிறார்கள்.
அந்தவகையிலே, சனாதன தர்மம் என்ற மிகப்பெரிய ஆலமரத்தின் அழகான கிளைகளாக உள்ள உபநிஷதங்களில் வருகின்ற உபதேசப்பகுதிகளில், தேவராஜாவான இந்திரன், அசுர ராஜாவான விரோசனன் ஆகிய இருவருக்கும் பிரஜாபதி என்ற குருவானவர் பாடங்களை உபதேசிக்கும்பொழுது, "கண்ணினால் எவன் பார்க்கிறானோ அவனே ஆத்மா" என்று ஒரே வரியில் உபதேசத்தைச் செய்கிறார்.
கண் முதலான புறக்கரணங்கள், மனம் முதலான அகக்கரணங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் பின்னால், அவற்றுக்கு ஆதாரமாக இருக்கிற ஒரு வஸ்துவை அவர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டார்.
ஆனால் இதை சரியாகப்புரிந்து கொள்ளாமல் அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே கண்களால் பார்த்துக் கொள்ளும்படியாகத் தோன்றும் தங்களுடைய பிரதி பிம்பங்களையே “ஆத்மா” என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள்.
பிரதிபிம்பத்தில் சரீரம் தானே தெரிகிறது?
அதனால் சரீரமே ‘ஆத்மா’ என்று விரோசனன் முடிவாகத்தீர்மானம் செய்து விடுகிறான். அதிலிருந்து நாஸ்திகவாதம், லோகாயதம், போன்றவைகளில் எல்லாம் ஈடுபாடு உண்டாகி, அவைகள் அசுரர்களின் கொள்கையாகி விடுகிறது.
இந்திரனும் முதலில் சரீரத்தையே ‘ஆத்மா’ என்று தவறாகப் புரிந்துக் கொண்டாலும், அதன் பிறகு அவன் தன் விவேகத்தைக் கொண்டு
விசாரித்து, பிருகு முனிவர் எவ்வாறு, தனக்கு கிடைத்த பகுத்தறிவைக் கொண்டு, இந்த உடலாகிய
அன்னமயகோசத்திலிருந்து ஒவ்வொன்றாகப் பகுத்துப் பார்த்து, இறுதியில் ஆனந்தமயகோசம் எப்படிப்பட்டது,
என்பதை அறிந்துக் கொண்டதுப் போன்றே, இங்கே இந்திரனும் ஸ்தூல தேகத்திலிருந்து சூக்ஷும
தேகமான கனவு சரீரம், அதன்பிறகு கனவுகளும் இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிற காரண சரீரம் முதலான
ஆனந்தமயகோஷம் வரை ஆராய்ந்து, அந்த அறிவை அறிந்துக் கொண்டு, “அதுவே நான்” என்று தெரிந்து கொள்கிறான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக