சனி, 29 ஜூன், 2019

பக்தி


பக்தி
என்னுரை
=======

ஒருவன் பயணத்தை மேற்கொள்ள முதலில் அடைய வேண்டிய  இலக்கை  நிர்ணயிக்கவேண்டும்.  இலக்கு நிர்ணயித்து முடித்தவுடன், அதற்கான சரியானப்பாதையைத்  தேந்தெடுக்க வேண்டும். 

அப்பொழுதுதான் அவன் அந்த சரியான பாதையில், சரியான காலத்தில், சரியான இலக்கை அடையமுடியும்.

அதுவே, அவன் நிர்ணயித்த இலக்கு சரியாக இருந்து, பாதை தவறாக இருந்தால், அவன் சுற்றுப்பாதையில் சுற்றித்திரிந்து அந்த இலக்கை அடைய  காலதாமதம் 
ஏற்பட்டு, அந்த இலக்கை அடையமுடியாமல், பயணம்  பயனற்றுப்  போக வாய்ப்பு 
உள்ளது.

அவன் பாதையைச் சரியாகத் தேர்ந்தெடுத்து, சென்றடைய வேண்டிய இலக்கைச் சரியாகத் தேர்ந்தெடுக்க தவறினாலும், அவன் நினைத்த இந்தப்பயணம் பலன் 
இல்லாமல் போய்விடும்.

அதுபோல, ஒவ்வொரு மனிதனும் இந்த பூமியில் பயணம் செய்துக்கொண்டு இருக்கின்றான். ஆனால், தான் மேற்கொண்ட இந்தப் பயணம் எதற்காக என்பதையும், பயணத்தின் முடிவு என்ன என்பதையும் அறியாமலேயே பெரும்பாலான மனிதர்கள் பயணித்துக்கொண்டுள்ளனர்.

எவனொருவன் இந்த மகத்தான மனிதப் பிறவியின் மகத்துவம் தெரிந்துக் கொண்டு, தான் மேற்கொண்டுள்ள பயணத்தின் உண்மைத் தன்மையை அறிந்துக் கொண்டு, இனியாவது பயணத்தைச் சரியாகத் தொடர நினைத்தான் என்றால்,  அவனது இலக்கு இறை(அ)வனைத் தவிர வேறு என்னவாக இருக்கமுடியும்.

இறைவனை இலக்காக அடையும் இலட்சிய பயணத்தை மேற்கொள்ளும் ஒருவன், அதற்கான பாதையைச் சரியாக அறிந்து கொள்ள வேண்டும். இறைவனை அடையும் பாதைகள் பல இருந்தாலும், அதில் சரியான பாதையை அறிந்து கொள்வதில்தான், அவனது பயணம் பயனுடையதாக முடியும்.

இதை எவன் ஒருவன் புரிந்துக் கொண்டு, தவறான இலக்கை அடைய, தவறான பாதையில் பயணம் மேற்கொள்வதை தவிர்த்து, சரியான இலக்கையும், சரியான பாதையையும் அறிகின்றானோ, அவனே ஆறாவது அறிவின் அவசியத்தை அறிந்த அறிவுடையவன் ஆகின்றான்.

உண்மை அறிவை அறிய விரும்பும் ஒருவன் ‘சாஸ்திரம்’ என்ற வரைபடத்தின் 
துணைக்கொண்டு, பக்தி” என்ற சரியான பாதையை தேர்ந்தெடுத்து, “இறைவன்” என்ற இலக்கை அடைய “ஆத்மகுரு” என்ற வழிகாட்டியுடன்  பயணத்தை 
மேற்கொண்டால், அவனே அந்த பயணத்தின் முழுப் பலனையும் அடைந்து “பிறவாமை” என்ற பெரு நிலையை அடைகின்றான்.

அப்படிப்பட்ட அந்தப்பெரு நிலையை அடைகின்ற சரியானப் பாதையை இந்தப் “பக்தி” என்ற நூல் வழிகாட்டப் போகின்றது.


ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!



அத்வைத பஞ்சரத்னம்




அத்வைத பஞ்சரத்னம்

========================


முன்னுரை


இங்கு அத்வைதத்தை மையமாகக் கொண்ட ஐந்து ஸ்லோகங்கள் உள்ளன. இந்த ஸ்லோகங்களை விளைமதிக்க முடியாத ரத்தினத்துடன் ஒப்பிடுவதற்குக் காரணம், ரத்தினம் எப்படி ஒளி விட்டு பிரகாசிக்கின்றதோ, அதுப்போல, இந்த ஸ்லோகங்கள் ஒளிப்பொருந்திய பிரகாசத்துடன் காணப்படுகின்றது.


இந்த  “அத்வைத பஞ்சரத்னம்” என்ற ஸ்லோகங்கள் பகவான் ஸ்ரீ சங்கரர் அவர்களால் எழுதப்பட்டது.

இந்த ஸ்லோகங்களில் அனைத்திலுமே  ‘சிவோஹம்’ என்று முடிவடைகின்றது. அதாவது, சிவோஹம் என்றால், அஹம் சிவம் என்ற அர்த்தத்தில் நான் சிவம் என்று பொரு கொள்ளலாம். அல்லது சிவம் என்றால் மங்கலம் என்று ஒரு அர்த்தம் இருப்பதால், நான் மங்கல ஸ்வரூபம் கொண்டவன் என்றும் பொருள் கொள்ளலாம். 

மங்கலம் என்றால் மகிழ்ச்சி என்ற பொருளில், நான் மகிழ்ச்சியை உடையவன் என்பதினால், நான் மோக்ஷத்தை அடைந்தவன் என்று பொருளாகின்றது.
பொதுவில், நான் பூர்ணமானவன், ஆனந்தமானவன் என்ற நிலையில் இந்த ஸ்லோகங்கள் முடிவடைகின்றது.

‘சிவோஹம்’ என்பதை “அஹம் பிரஹ்மாஸ்மி” என்றும் கூறலாம்.

என்னை நான் மங்கலம் உடையவனாக கருதுவதினால், என்னுடைய நிலை மிகவும் மகிழ்ச்சிகரமான நிலையில் உள்ளது என்பதை அறிய முடிகின்றது.

நான் சிவம் என்று புரிந்து கொண்ட பிறகு என்னுடைய உண்மையான நிலையை நான் எப்படி அனுபவிக்கின்றேன் என்பதை இந்த ஸ்லோகங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஒவ்வொருவனும் தன்னுடைய சுய அனுபவங்களின் வாயிலாக சில அறிவை அடைகின்றார்கள். அதுப்போல, சிலர் தான் அடைந்த அனுபவங்களை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டி, இதுபோன்ற அனுபவத்தை நீயும் அடையலாம் என்ற உபதேசத்தின் வாயிலாக மற்றவர்களுக்கு அறிவைப் கொடுக்கின்றார்கள்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் 
கற்றனைத்து ஊறும் அறிவு.  – குறள்.

மணற்கேணியில் , கொஞ்சம் தோண்டினால் நீர் வரும். அந்த நீரை மொண்டு எடுத்தால் மேலும் நீர் வரும்.  வற்றி விடாது.

அது போல, படித்ததை பகிர்ந்து கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கு தர வேண்டும். அப்படி கொடுக்க கொடுக்க மேலும், மேலும் அறிவு வளரும்.

கற்றது எனக்கு மட்டும் தான் என்று வைத்துக் கொண்டு இருந்தால், நாளடைவில் மணல் உள்ளே விழுந்து அந்த கேணி மூடிக் கொள்ளும். மூடிக் கொள்ளா விட்டாலும்,  தேங்கிய நீர் கெட்டுப் போய் விடும்.

அது போல,  ஒரு தரம் கல்வி கற்று விட்டால் அப்படியே விட்டு விட முடியாது. மறதி வரும். மற்ற விஷயங்கள் வந்து குழப்பும். மேலும், மேலும் அதைப்பற்றிய அனுபவம் உண்டாகின்ற வரை படித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் கல்வியின் பயன் முழுமையாக இருக்கும். 

உதாரணமாக, ஒருவன் இந்த உலக விவகாரங்களில் ஈடுபட்டு, தன் வாழ்க்கையின் அத்யாவசியத் தேவைகளுக்காக, தன்னிடம் உள்ள பணத்தை சிறிதாக உபயோகப்படுத்தி, அதை முதலீடாகக் கொண்டு, அதன் வாயிலாக, அதிக பணத்தை சம்பாதித்து சந்தோசப்படுவதைப் போன்று, இந்த அதிகப்படியான அறிவை அடைய தன்னிடம் உள்ள சிற்றறிவை சிறிதாவது உபயோகப்படுத்தி, கூற வருகின்ற உண்மையை ஒருவன் அறிந்து கொள்ள முயன்றான் என்றால், அவன் நிச்சயமாக அந்த பேரறிவை அடைந்து சந்தோசத்துடன் வாழ்வான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

இவ்வாறு, ஒருவன் அறிவை அடைய மற்றவர்களிடமிருந்து தகவல்களைச் சேகரிப்பதை ‘சிரவணம்’ என்றும், சேகரித்த தகவல்களை தன் அறிவினால், ஆராய்வதை ‘மனனம்’ என்றும், ஆராய்ந்து அடைந்த அனுபவத்தை நடை முறைப்படுத்தினால் அதை ‘நிதித்யாஸனம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.

அதாவது முதலில் அறிவைப் பெற அதைக் கேட்டும், அதன்பிறகு அதைப்பற்றி சரியான முடிவுக்கு வர சிந்தித்தும், சிந்தித்த சிந்தனையில் கிடைத்த உண்மையை நடைமுறைப்படுத்துவதும் ஆகும்.

ஒரு சிலர் மிகவும் கடினமாக உழைத்து பணத்தை சம்பாதிப்பார்கள். ஆனால், அவர்கள் அதனை செலவு செய்யத் தயங்குவார்கள். மற்றவர்களுக்கும் கொடுக்கவும் மாட்டார்கள். இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்,

பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் 
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள், கூடுவிட்டு 
ஆவிதான் போயின பின்பு யாரே அனுபவிப்பார் 
பாவிகாள் அந்தப் பணம்? – ஔவையர்.

சிலர் பணத்துக்காகப் பாடுபட்டுகின்றனர். பணத்தைத் தேடிக்கொள்கின்றனர். தேடிய பணத்தை யாருக்கும் தெரியாமல் புதைத்து வைக்கின்றனர். அனுபவிக்காமல் மறைத்து வைக்கின்றனர். இவர்கள் கேடு கெட்ட மனிதர்கள். இப்படிக் கேடுகெட்ட மனிதரே! ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். உங்கள் உடம்புக் கூட்டை விட்டுவிட்டு உங்கள் ஆவி (உயிர்) போன பின்பு அந்தப் பணத்தை யார்தான் அனுபவிக்கப் போகிறார்கள்? பாவிகளே! சொல்லுங்கள். 

என்று ஔவைப்பாட்டி வருந்துவது போன்று, தன்னிடம் உள்ள ஆறாவது அறிவைப் பயன் படுத்தி, அதன் வாயிலாக பெற்ற அனுபவ அறிவை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்காமல் சுயநலம் கருதி வாழ்பவன், தானே தனக்கு கேடினை உண்டாக்கிக் கொள்கின்றான்.

இப்படிப்பட்டவர்கள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கின்ற நிலையை கவனித்தோமானால், “நான்”, “எனது”, “என்னுடையது” போன்ற வார்த்தைகளின் பொருள் உணராது, அதனை தன் இஷ்டம் போல பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள்.

இவர்களது அஹங்காரமும் (நான்), மமகாரமும் (எனது) இவர்களை தன் நிலை அறியாத தற்குறிகளாக மாற்றி, அறிய வேண்டிய அரிய உண்மையை இவர்களுக்கு மறைத்து, சேர வேண்டிய இடம் சென்று, சேர முடியாமல் தடுக்கப்பட்டு விடும்.

ஆகவே, உயர் ஞானத்தை அடைந்த உத்தம மஹான்கள் இவர்களை மாற்ற விரும்பி, அவர்களது கருணையை இத்தகைய ஸ்லோகங்களின் வாயிலாக வாரி வழங்கியிருக்கின்றார்கள்.

எனவே, இந்த ஐந்து ஸ்லோகங்களையும் கற்று, அதன் விளக்கத்தை புரிந்துக் கொண்டு, பிறருக்கும் அதை புகட்டி, பிறவாப் பெரு நிலையை ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்.


நன்றி!

என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்


பஜகோவிந்தம் கூறும் வாழ்க்கைத் தத்துவம்
======================================================================





என்னுரை

பக்தியும், ஞானமும் ஒருவனின் இரண்டு கண்கள் போன்றது. ஒன்று இன்றி மற்றொன்றின் உதவியால் காட்சிகளைக் காண முயற்சிப்பது, எவ்வாறு அவனின் அறியாமையை சுட்டிக்காட்டுகின்றதோ, அதுபோன்று பக்தி இன்றி, ஞானத்தை அடைய முயற்சிப்பதும், ஞானம் இன்றி பக்தியை மட்டும் செய்து வருவதும் மிகப்பெரிய அறியாமையே ஆகும்.

ஞான மார்க்கமும், பக்தி மார்க்கமும் ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாதது என்று பலரும் கூறக்கேட்டிருக்கின்றோம்.

இது அறிவிலிகளின் அறியாமைதானே தவிர, வேறு ஒன்றும் கூறுவதற்கு இல்லை.

பக்தி என்பது ஞானத்திற்கான முதல் படி ஆகும். ஒருவனை ஞானத்தில் கொண்டு சேர்க்காத பக்தி பயனற்ற பக்தி என்றுதான் கூற வேண்டும்.

ஒருவனது பக்தி சகுண பக்தியாக இருக்கும் பொழுது, அதாவது, உருவங்களை வழிபடுகின்ற பொழுது, அவனிடம் இறைவன் வேறு, நான் வேறு என்ற துவைத புத்தி இருக்கும். அதே பக்தி நாளடைவில் நிர்குண பக்தியாக மாறும்பொழுது, பக்தனுக்கும், பகவானுக்கும் இடையிலான வித்தியாசம் மறைந்து ஏகத்துவம் (ஒன்றே) உண்டாகிவிடுகின்றது.

பக்தி மார்க்கத்தில் பக்தனும் பகவானும் என இருவரும் இருப்பது உண்மை தான். ஆனால், ஆழமான பக்தியின் வெளிப்பாடு, அந்த பக்தனையும், பகவானையும் உள்ளத்தால் ஒன்றாக்கி விடுகின்றது. பகவானை சரணடைந்த பக்தன் ஒருபொழுதும் பகவானிடமிருந்து பிரிந்து, தனியாக இருக்க முடியாது.

உலகறிந்த அத்வைதிகளான சுகர், மதுசூதனசரஸ்வதி, சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற மிகச் சிறந்த பக்திமான்களாகத் திகழ்ந்தவர்களும், தற்பொழுது நம்மிடையே வாழ்ந்த இராமகிருஷ்ண பரமஹம்ஸர், ரமண மஹரிஷி, சந்திரசேகர சரஸ்வதி போன்றவர்களும் பக்தியில் குறைந்தவர்கள் இல்லை. அதே சமயம் ஞானத்தில் உயர்ந்தவர்களாகவும் இருந்தார்கள்.

மறுபக்கம் தாயுமானவர், அருணகிரிநாதர், மாணிக்கவாசகர் போன்ற சிறந்த பக்திமான்கள் கூட அத்வைதத்தை ஏற்றுக்கொண்டு அதைப் போற்றிப் புகழ்ந்து பாடியுள்ளார்கள்.

அத்வைதம் என்றால் ஒன்றைத்தவிர வேறு இல்லை என்பதுதான். அப்படியென்றால் யார் யாருக்கு உபதேசம் செய்வது? ஸர்வம் பிரம்மமே என்றிருக்கையில் உபதேசிப்பவர் யார்? உபதேசம் பெறுவது யார்? ஆகவே ஞான மார்க்கத்தை உபதேசிப்பவர்கள் பக்தியைக் குறித்து பேசக் கூடாது என்பது அறியாமையினால் உண்டாவதுதான் என்கின்றார் பரமாச்சாரியார்.

மேலும், பகவத்கீதையை படிக்கும் பொழுதும் அல்லது யோகவாசிஷ்டத்தில் வசிஷ்டர் இராமபிரானுக்கு வழங்கும் உபதேசங்களை கேட்கும் பொழுதும், தத்தாத்ரேயரின் அவதூதகீதையோ, அல்லது தாயுமானவரின் பக்தி பாடல்களோ, ஆதி சங்கரரின் விவேக சூடாமணியோ எதைக் கற்றாலும், கேட்டாலும் இந்த படைப்புக்கள் எல்லாம் ஒருவனை ‘மாயையின்’ திரைக்குப் பின்னால் அழைத்துச் சென்று, அவனுக்கு அத்வைத ஞானத்தை ஊட்டுகின்றது.

இதுபோன்ற படைப்புக்கள் அனைத்தும் ஒருவனை அறியாமையிலிருந்து விடுபட வைக்க மஹான்களின் கருணையினால் கிடைக்கப்பெற்றவை. மஹான்கள் அனைவரும் அனுபவத்தின் கொடுமுடியை தொட்டவர்கள்.

அனுபவத்தின் வாயிலாகவே ஞானத்தைப் பெற்றவர்கள். ஆகவே அவர்கள் பக்தி செய்து அடைந்த அனுபவங்கள் ஞானத்திற்கு பொருந்தாதவை என்று பேதமை புத்தியுடன் புலம்பிக்கொண்டிருப்பவர்களை எண்ணிப் பரிதாபம் கொள்வதைத்தவிர வேறு ஒன்றும் சாத்தியமில்லை.

நம்முடைய வாழ்க்கையை நாம் எப்படி வாழ வேண்டும் எனத் திடடவட்டமாகப் பார்க்க வேண்டும். அதற்கு வாழ்க்கைத் தத்துவம், அல்லது நியதி என்ன என்று ஆராய வேண்டும். அதை ஞானிகள் சான்றிதழுடன் தந்தால்தான் அது நமக்கு ஏற்கக்கூடியதாகவும் அமையும்.

அப்படிப் பார்க்கும்போது சிறு வயதிலேயே ப்ரஹ்மசர்ய ஆச்ரமத்திலேயே சன்யாஸியாகி, தனது 32 வருட வாழ்வுக்குள் மஹா ஞானியாகி, அத்வைத சித்தாந்தத்தை நிலை நாட்டி, ஸர்வக்ஞ பீடத்தில் அமர்ந்து, ஸனாதன தர்மத்தை உலகிற்குத் தந்து, நான்கு காஞ்சி மடங்களை ஸ்தாபித்து, ஸனாதன தர்மத்தைக் காக்கும் பொறுப்பை அவர்களிடம் தந்து 32-வது வயதில் நிர்வாணமாகிய ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் அவர்கள் நமக்குத் தொகுத்தளித்த இந்த “பஜ கோவிந்தம்” என்ற திவ்ய காவ்யத்தைப்போல மிகவும் சுலபமாகப் பின்பற்றக்கூடிய சான்றிதழ் வெறுண்டோ?

நம் வாழ்வின் தவறான நோக்கம் நம்மை எங்கு கொண்டு செல்லும், சரியான நோக்கம் எப்படி அமைய வேண்டும், வாழ்க்கை என்பது என்ன?, வாழும் முறை யாது?, அதனால் நமக்கு நிகழும் பலன் ஏது?, சரியான வாழ்க்கை முறை எங்ஙனம் அமைய வேண்டும்? எனக்கூடிய தத்துவங்களைத் தெள்ளத் தெளிய ஸ்ரீ ஆதி சங்கரர் இந்த திவ்ய காவ்யத்தில் தந்துள்ளார்.

அதில் தந்துள்ள தத்துவங்களைச் சரிவர கிரஹித்து, அவைகளை அயராது சரிவர நாம் பின்பற்றினோமானால் நம் வாழ்க்கை முறை மிகச் சீரும் சிறப்பும் பெற்று, வளமுடனும், ஆற்றலுடனும், தார்மிகமாகவும், அமைதியுடனும் அமைந்து நம்மை ஜீவன்முக்தன் நிலைக்கு உயர்த்த ஹேதுவாகும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

 நன்றி!

என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.

மனிதப்பிறவி


ஸ்ரீ குருப்யோ நம:


மனிதப்பிறவி
(சுவாமி பிரபஞ்சநாதன்)

முகவுரை

ஒரு செல் உயிரி அமிபாவில் தொடங்கி, பல செல் உயிரியான மனிதன் வரை அனேக ஜீவராசிகள் இந்த பிரபஞ்சத்தில் இன்றுவரை காணப்படுகின்றன.

இவைகளில் ஒவ்வொன்றும், உடலாலும், மனத்தாலும், குணத்தாலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படுகின்றன. ஒன்று போல மற்றொன்று இருப்பதில்லை.

அவைகள் கொண்டுள்ள புலன்களான கண், காது, மூக்கு, நாக்கு, தொடுஉணர்வு என்ற ஐந்து கர்மேந்திரியங்களினாலும் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்டு காணப்படுகின்றன.

அதுப்போலவே, ஐந்து ஞானேந்திரியங்களாலும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டு, ஒன்றைப் போல மற்றொன்று இருப்பதில்லை.

ஒரு ஜீவராசி மற்ற ஜீவராசியினால் பகலில் காணமுடியாத காட்சியைக்கூட இரவில் தெளிவாக காண்கின்றது. ஒன்றினால் கேட்க முடியாத மிக நுட்பமான சத்தத்தை மற்றொன்றினால் மிக நன்றாக கேட்க முடிகின்றது. மிக அருகே சரியாக நுகர முடியாத வாசனைகளை கூட சில ஜீவராசிகள் எத்தனையோ பல அடிகள் தூரத்திலேயே உணர்கின்றன. ஒன்றி்னால் விருப்பமுடன் சுவைக்க முடியாத சுவையை மற்றொன்று விருப்பமுடன் சுவைத்து உண்டு மகிழ்கின்றது. அதுப்போலவே, தொடுவதினாலேயே ஒன்றுக்கு ஒன்று இன்பம் அடைகின்ற நிலையில் பல வித்தியாசங்களையும் இந்த ஜீவராசிகளின் வாழ்வில் காணமுடிகின்றது.

இந்த உயிரினங்களுக்கு இடையே காணப்படுகின்ற பெரும்பாலான ஒற்றுமை வயிற்றுப் பசிக்கு உணவு தேடுவது மட்டுமே.

அதில் ஒரு சில ஜீவராசிகள் உண்பது, உறங்குவது, புணர்வது, மல, ஜலம் கழிப்பது போன்ற அன்றாட செயல்களில் இவைகள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன.

இந்த உயிரினங்களின் சிந்தனா சக்தி தனக்கு கொடுக்கப்பட்ட அறிவைப் பொருத்து ஓர் அறிவு கொண்டது முதற்கொண்டு ஆறறிவு படைத்த மனிதன் வரை மாறுபடுகின்றன.

இங்கே சிந்திக்க வேண்டியது என்னவெனில், அரிதான, கிடைத்தற்கரிய மனிதப் பிறவி கொண்டு, மற்ற உயிரினங்களுக்கு கிடைக்காத ஆறறிவு படைத்த மனிதனும் தன்னை விட குறைந்த அறிவு கொண்ட ஜீவராசிகளைப் போன்றே தானும் வாழ விரும்புவது மட்டுமே ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கின்றது. 

இயற்கையின் படைப்பில் எல்லா ஜீவராசிகளுக்கும் அதனதன் அறிவுக்கும், அடைந்த உடலுக்கும் ஏற்ற சுழ் நிலையில் வாழ்ந்து அனுபவிக்க இந்த உலகத்தில் அனேக மகிழ்சி தரக்கூடிய விசய சுகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் ஒவ்வொரு உயிரினமும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகின்றன. தனக்கு வருகின்ற துன்பங்களை அவைகள் ஒருபொழுதும் விரும்புவதில்லை. இதில் மனிதனும் விதி விலக்கல்ல.

ஆனால், இங்கு பிரச்சனை என்னவெனில், கொடுக்கப்பட்ட உயர் அறிவை எப்படிப் பயன் படுத்துவது என்பதை அறிந்து கொள்ளாத மனிதன், தன்னிலும் கீழான அறிவையும், பலத்தையும் கொண்ட உயிரினங்களை ஆதரிக்காமல், அவைகளின் மகிழ்ச்சியைப் பறித்து, தனக்கு சுய நலமாக அவைகளைப் பயன்படுத்திக் கொண்டு, அவைகளின் மகிழ்ச்சிக்கு பங்கம் விளைவித்து, அவைகளின் மகிழ்ச்சியையும் சேர்த்து, தான் மட்டுமே அனுபவிக்க நினைப்பதினால், மற்ற ஜீவராசிகளை ஆதிக்கம் செலுத்தி, அடக்கி ஆண்டுக்கொண்டு, துன்புறுத்தி மகிழ்கின்றான்.

இத்தகைய நிலை ஆதி மனிதனிடத்தில் இல்லை. காரணம் அவன் இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்ததால், தன் வயிற்றுப் பசிக்காக மட்டுமே மற்ற ஜீவராசிகளைப் போன்று உணவை வேட்டையாடிப் பெற்றான், உண்டான், மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து வாழ்ந்து, தனக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவின் வாயிலாக பல புதிய கண்டு பிடிப்புகளைக் கண்டறிந்து, மற்ற அனைத்து உயிரினங்களும் நன்மை பெரும் பொருட்டு வாழ்ந்து மடிந்தான்.

ஆனால், இன்றைய நாகரீக மனிதனோ, தான் கற்ற கல்வியின் வாயிலாக மிகுந்த சுய நலமுடன் தன் முன்னோர்கள் கண்டு பிடித்த கண்டுபிடிப்புகளை பல தவறான பயன் பாட்டிற்கு பயன் படுத்தி, மற்ற உயிரினங்களின் ஒற்றுமையைக் குழைத்து, தான் மட்டுமே போகத்தினை அனுபவிக்கும் மோகத்தினால், மதியிழந்த செயல்கள் பல செய்து, மகிழ்ச்சியை இழந்து, பல நோய்களை அடைந்து இறுதியில் மருத்துவமனையில் மரணத்தை தழுவுகின்றான்.

இத்தகைய நிலை இந்த மனிதப்பிறவிக்கு எப்படி உண்டானது?

இதற்கு யார் காரணம்? அல்லது எது காரணம்?

மனிதன் தன்னிடம் கொண்டுள்ள பிரத்யேகமான ஆறாவது அறிவான பகுத்தறிவை வளர்க்க, அவன் கண்டறிந்த நவீன கல்வி முறையே காரணம் என்று நினைத்துக் கொள்கின்றான்.

எப்படி?

அன்றைய காலத்தில் மனிதர்கள் கல்வி கற்பதற்காக, குருகுலத்திற்குச் சென்று குருவிற்கு சேவை செய்து கல்வியைக் கற்றுக் கொண்டு, கற்ற கல்வியினால் பெற்ற பலனை, தன்னுடைய சேவை மனப்பான்மையினால், தன்னைப் போன்றே மற்றவர்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தினால், தான் செய்த சேவையைப் போன்றே, மற்றவர்களும் சேவையைச் செய்து, சேவையைப் பெற வேண்டும் என்ற நிலை இருந்தது.

இந்த சேவையினால் கிடைக்கின்ற மகிழ்ச்சிக்கு ஈடு, இணை இல்லை என்பதை அனுபவ உண்மையாக அறிந்தவர்கள் “தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்று மகிழ்ச்சியுடன் மற்ற அனைவரையும் வாழ வைத்தனர்.

ஆனால், இன்றைய காலத்தில் மனிதர்கள் கல்வி கற்பதற்காக, கல்லூரிகளுக்குச் சென்று, பணம் கொடுத்து கல்வியைக் கற்றுக் கொண்டு, கற்ற கல்வியினால், மற்றவர்களுக்கு பணத்தை சம்பாதிக்கும் ஆசையைக் காட்டி, பகட்டாக வாழ்வதற்கு பணத்தை அடைவதே மகிழ்ச்சி என்று மற்றவர்களையும் நம்பவைத்து, தான் கற்ற கல்வியினால் செலவிட்ட பணத்தைக் கொண்டு, தனக்கு கிடைத்த தொழிலின் வாயிலாக கல்வியில் விட்ட பணத்தை மற்றவர்களிடம் கருணையின்றி வசூலிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

“தான் விட்ட பணத்தை பெறுக இவ்வையகத்திடம்” என்று பணத்திற்காகவே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு, கற்ற கல்வியின் பயனாக, பணத்தை மட்டுமே நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

மேலும், இன்றைய கல்வி முறையில் மாணவர்களைப் பாடங்களை மனப்பாடம் செய்து, அதிக மதிப்பெண்களைப் பெற பயிற்றுவிக்கப்படுவதினால், அவர்கள் ஆதிக மதிப்பெண்களை மட்டுமே பெறும் நோக்கத்தோடு, தன்னுடன் கல்வி கற்கும் சக மாணவர்களிடத்திலேயே, காழ்புணர்ச்சி கொண்டு போட்டி, பொறாமை, தாழ்வு மனப்பான்மை, சுயநலம், கோழைத்தனம், தற்கொலை எண்ணம், அல்லது கொலை செய்தல் போன்ற கெட்ட குணங்களை வளர்த்திக் கொண்டு விடுவதினால், அவர்களிடம் பணிவு, பண்பாடு, தைரியம், தேசப்பற்று, தியாகம், கருணை போன்ற எந்த நற்குணங்களையும் எதிர்ப்பார்க்க முடிவதில்லை.

அதனால், இன்றைய மனித சமுதாயம் மகிழ்ச்சி இன்றி, சுயநலத்துடன் மற்ற உயிரினங்களை துன்புறுத்தி, அவைகளுடன் சேர்ந்து இவர்களும் துயரத்துடன் வாழ்ந்து, துயரத்துடன் மடிந்து வருவதை கண்கூடாக இன்று காண முடிகின்றது.

இதிலிருந்து மீள்வது எப்படி?

“அரிது அரிது மானிடராகப் பிறத்தல் அரிது!” என்று நமக்கு அன்றே கூறிய நம்முடைய பாட்டியின் வாக்கினை ஏற்று, அவள் மற்றவர்களுக்கு உபதேசித்து, தானும் வாழ்ந்து காட்டியப் படி, நாமும் வாழ முற்பட்டால் இனி வருகின்ற மனித சமுதாயம் நல்ல மாற்றத்தை அடைந்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்பதில் ஐயமில்லை.

இன்றைய கல்வித் திட்டத்தில் அன்றைய ஆன்றோர்களான நம் முன்னோர்களின் மெய்ஞ்ஞான வாழ்க்கை உபதேசங்களை பாடங்களாக மீண்டும் கொண்டு வர வேண்டும்.

ஔவைப் பாட்டியின் ‘ஆத்திச்சூடி’ போன்ற பாடங்களை கற்று ‘அறம் செய்ய விரும்பு’,   ‘ஆறுவது சினம்’ என்று மனித வாழ்க்கைக்குத் தேவையான புருஷார்த்தங்களை பற்றி, இன்றைய மாணவர்களிடம் கற்பித்தால் மட்டுமே இந்த மனித சமுதாயம் கவலையின்றி, மகிழ்ச்சியை அடைந்து, மனிதப் பிறவியின் மகத்துவத்தை அறிய முடியும்.

தன்னைப் பற்றிய அறிவை அடைந்த மனிதனே மனிதர்களுள் மகத்தானவனாகின்றான். அப்படி மகத்தான மனிதனாக மாற அவனது மனம் நல்ல எண்ணங்களை எண்ணி அதை நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

மனித மனம் மிகவும் சக்தி வாய்ந்தது. அதில் சேகரிக்கப்படுகின்ற விசயங்களைப் பொருத்தே அவனது புத்தி, சித்தம், அஹங்காரம் என்ற அந்தக்கரணம் செயல்படும். அதனால், அவன் நல்ல விசயங்களை கற்று, அதன் படி வாழ்ந்தால் மட்டுமே மனிதப் பிறவியின் உயர்ந்த உன்னதத்தை புரிந்து கொள்ள முடியும்.

அந்தக்கரண சுத்தியே மனிதனின் புறக்கரணங்களான கண், காது, மூக்கு, நாக்கு மற்றும் உடலினை சுத்தமான, நல்ல விசய சுகங்களை நோக்கி ஈர்க்கும். கெட்ட விசய சுகங்களை விரும்பாமல் தவிர்க்கும்.

“எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்  
எண்ணியர் திண்ணியர் ஆகப்பெரின்” - திருக்குறள்

நாம் எண்ணும் எண்ணங்களே நமது வாழ்வாக அமைகிறது. நாம் இன்று வாழும் வாழ்க்கை நேற்றைய நமது எண்ணங்களின் தொகுப்பு என்பதினால், நல்ல விசயங்களைக் கற்று, அதன்படி நின்று, மற்றவர்களையும் நல்ல வழியில் வாழ வைப்போம்.

நன்றி!


என்றும் அன்புடன்,

சுவாமி பிரபஞ்சநாதன்.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்