வெள்ளி, 7 ஏப்ரல், 2023

உன்னை நீ அறிவாயா! [வகுப்பு - 16] - நிறைவுப்பகுதி.



நமக்குள்ளே இருக்கும் படைப்பாற்றத்தான் ஈஸ்வரன் என்று பார்த்தோம். அந்த படைப்பாற்றல் என்ன செய்யும்? முதலில் படைக்கும், பின் படைத்தவற்றை காக்கும், பிறகு வேண்டாத அல்லது காலாவதியான படைப்புகளை அழிக்கும்.
இங்கு இன்னொரு முக்கியமான விசயத்தை கவனிக்க வேண்டும். இந்த பாடத் திட்டத்தை மீண்டும், மீண்டும் கேட்க வேண்டும். அப்போதுதான் இங்கு கூற வருகின்ற படைப்பின் இரகசியம் விளங்கும். இங்கு உண்மையிலேயே ஈஸ்வரன் என்பவன் படைக்கும் சக்தி மட்டும்தான். அதனால்தான் படைத்தவற்றை அது அழிப்பதுப் போன்று தோன்றினாலும், உண்மையில் அது வேறு ஒன்றாகப் படைக்கப்படுகின்றது என்பதை மறந்து விடக்கூடாது. அறிவியல் கூற வருவதும் இதைத்தான். ஒரு ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது. ஆனால், ஒரு ஆற்றலை வேறு ஒரு ஆற்றலாக மாற்ற முடியும்.
சரி விசயத்திற்கு வருவோம். இங்கு உங்களது சந்தேகம் என்னெவெனில், அழிப்பது எப்படி படைப்பாகும்? அதுவும் படைப்புதான். அழிக்காமல் படைக்க முடியாது. ஒன்றை அழிக்காமல் இன்னொன்றை படைக்க முடியாது. நாம் எதை படைக்க வேண்டும் என்றாலும், அதற்கு ஒரு சக்தி வேண்டும். அந்த சக்தி நாம் உண்ணும் உணவில் இருக்கிறது. அந்த உணவை உண்டு, ஜீரணம் செய்து, அதில் இருந்து பெற்ற சக்தியால் நாம் இந்த உடல் என்ற படைப்பை செய்கிறோம்.
அதுப்போல, மலையை உடைத்து, அதில் இருந்து கல் எடுத்து சிலை செய்கிறோம். இப்படி அழிப்பதும், படைப்பதும் சேர்ந்தே நிகழ்கிறது.
இந்த படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலை மூன்று கடவுள்கள் செய்வதாக கூறுகிறார்கள். அந்த மூன்று கடவுளும் ஒன்றுதான். அந்த ஈஸ்வர சாந்நித்தியம் நமக்குள் சுடர் விட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த மூன்றும் ஒரு சக்திதான் என்றால், அதற்கு ஒரு பெயர் இருக்க வேண்டும் அல்லவா? ஒரு பொருள் என்று இருந்தால், அதற்கு ஒரு பெயர் வேண்டும் அல்லவா? அதன் பெயர்தான் பிரணவம் என்ற ஓம். அது எப்படி ? ‘அ’ என்று சொல்லும் போது சொல் பிறக்கிறது. ‘உ’ என்று சொல்லும் போது அது நிலைக்கிறது. அதாவது, ‘அ’ என்ற சப்தத்தை நீண்ட நேரம் சொல்ல முடியாது. மூச்சு காற்று வேகமாக வெளியேறி விடும். ‘உ’ என்று சொல்லும் போது நீட்டி சொல்லலாம். சொல்லிப் பாருங்கள். ‘ம்’ என்று சொல்லும் போது அது அந்த சப்தம் முடிகிறது. இப்படி, தோற்றம், நிலைப்பு, முடிவு என்ற மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு வார்த்தையில் சொல்வது என்றால், அதுதான் “ஓம்” என்ற ஒற்றை வார்த்தை. “ஓம்” என்ற பிரணவம் இயல்பான சப்தம். “ஓம்” என்ற பிரணவம் படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலையும் கூறும் ஒரு சொல். சரி! மீண்டும் தொடங்கிய இடத்துக்கு வருவோம். அம்மா என்று சொன்னால், உங்களுக்கு உங்கள் தாயின் நினைப்பு வரும் அல்லவா. லட்டு என்று சொன்னால் லட்டின் ஞாபகம் வருகிறது அல்லவா? ஆக, ஒரு சொல், அது குறிக்கும் பொருளை நமக்கு நினைவுக்கு கொண்டு வரும். அது மட்டும் அல்ல, அந்த பொருள் சம்பந்தமான உணர்ச்சிகளையும் கொண்டு வரும். லட்டு என்றால், நாக்கில் எச்சில் ஊறும். காதலியின் பெயரைச் சொன்னால், காதலன் முகம் மலரும். எனவே, ஒரு சொல் அது குறிக்கும் பொருளையும், அது சம்பந்தமான உணர்ச்சிகளையும் கொண்டு வரும். “ஓம்” என்ற சொல், நமக்குள் இருக்கும் அந்த மாபெரும் படைப்பாற்றலை குறிக்கிறது. நாம் அந்த சக்தியை உணர வேண்டும். மனிதன் உன்னதமானவன். உயர்ந்தவன். படைப்பின் உச்சக்கட்டம் மனிதன். தன்னைத் தான் அறியாததால் கீழே விழுந்து விட்டவன்.
தன் திறமை, ஆற்றல் தெரியாமல் தவிப்பவன். அவனை கை தூக்கி விட்டு, அவனுடைய திறமையை, ஆற்றலை அவனுக்கு நினைவு படுத்துவது இந்த ஓம் என்ற ஒற்றைச் சொல். நன்றி!🙏

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்