இந்த 'நான்' எங்கிருந்து அல்லது எதிலிருந்து தோன்றுகிறது?
என்பதை சற்று ஆழமாக ஆராய்ந்தால், அந்த “நான்” என்ற உணர்வும் அந்த காரண சரீரத்திடமிருந்தே உண்டாகிறது. ஆனால், இதிலிருந்து வெளிப்படுகின்ற “நான்” தனித்துவமான தன்னுடைய ‘நான்’ என்று மனம் நினைத்துக் கொள்வதால், அது, மனம், புத்தி, சித்தம் மற்றும் அஹங்காரம் என்ற அடுத்தடுத்த பரிமாணத்தில் சிக்கிக் கொள்கிறது.
இந்த சிக்கலின் காரணமாக ஈஸ்வரனின் காரணத்தேகத்தை தனித்த தன்னுடைய தேகமாகக் கருதிக் கொள்கிறது. ஆனால், உண்மையில் காரணத் தேகம் என்ற ஒன்று, பிரபஞ்ச மனமாகிய “ஈஸ்வரன்” என்பதினால், அதை ‘மாயை’ என்றே சாஸ்திரம் அழைக்கிறது.
அதாவது, ‘மா’ என்றால் ஒடுங்குதல் என்றும், ‘யா’ என்றால் விரிதல் என்றும் பொருள்.
ஆக, இந்த மனம் விரிந்து உலகம் தோன்றுவதற்கும், ஒடுங்கி உலகம் மறைவதற்கும் இந்த காரண சரீரம் என்ற மாயையே காரணம் ஆகும்.
பொதுவாக, மாயை எனும் சொல்லே உலகம் தன்னிலிருந்து தோன்றுவதற்கும், தன்னில் வந்து ஒடுங்குவதற்கும் அடிப்படைத் தத்துவம் ஆகும். அதாவது, இல்லாததை இருப்பதாகக் காட்டி மனதை மயக்குவது “மாயை” எனலாம்.
அப்படிப்பட்ட இந்த காரண சரீரத்தை நிலையானதா?, நிலையற்றதா? என அறிய முடியாததாக இருப்பதினாலும், அதில் புதைந்துள்ள அறியாமைகள் வெளிப்படாத நிலையில் அது விதை (பீஜம்) வடிவாக உள்ள நிலையைத்தான் 'அவ்யக்தம்' என்று சாஸ்திரம் அழைக்கிறது.
அதாவது, காரண சரீரம் வெளிப்படாத நிலையில் அவ்யக்தமாக இருக்கின்றது.
இதுதான் நாம் ஆழ்ந்து உறங்குபோது நிகழ்கிறது.
அதாவது, நாம் உறங்கும்போது, நம்முடைய மனம் மற்றும் உடல் அந்த காரண சரீரத்தில் ஒடுங்கி விடுகிறது. அதாவது, நம்முடைய விழிப்பு நிலையில், இந்த ஸ்தூல சரீரத்தினால், நாம் பெற்ற அனுபவங்கள்யாவும் ஒரு விதையாக, அதாவது, வெளிப்படாமல் அவ்யக்தமாக ஒடுங்குகின்றன.
அதுப்போன்றே, கனவு நிலையில் சூக்கும சரீரத்தினால், நாம் பெற்ற அனுபவங்கள் யாவும் ஒரு விதைப்போன்று அவ்யக்தமாக ஒடுங்குகின்றன. இவ்வாறு ஒடுங்கும் இடமே காரண சரீரம் ஆகும்.
நன்றி!