பேருணர்வும் - உள்ளுணர்வும்
===========================
மனிதனிடம் உள்ள பிரக்ஞை (உணர்வு) இன்னும் தன் சுயநிலையை உணரவில்லை என்றே கூறலாம். அதாவது, மனிதனிடம் காணப்படும் பிரக்ஞை இப்போதிருக்கும் நிலையில், பெருமளவுக்கு, இன்னும் மனதின் பிம்பங்களைச் சார்ந்துதான் இயங்குகிறது.
தூயப் பிரக்ஞை என்பதை, இன்னும் நம்மில் பெரும்பாலானவர்கள் அறிய முடியாத ஒன்றாகத்தான் அனேகமாக இன்றுவரை இருக்கிறது.
பிரக்ஞை மனதின் ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு, தனக்குள் தானே விழித்துக்கொள்ளும் போதுதான், அதன் உண்மைத்தன்மையை உணர்கிறது.
அதுவரை மேகங்களால் மறைக்கப்பட்ட சூரியன் போன்று பிரகாசிக்க முடியாமல் இருக்கிறது.
அதாவது, ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணங்களால் உண்டான மனதின் ஆதிக்கத்தில் இருந்து அது விழித்துக்கொள்ளும் போது மட்டுமே, மனிதன் பிரபஞ்ச பிரக்ஞையின் பரிமாண தளங்களின் மேல் நிலையை நோக்கி முன்னேறுகிறான். புதியதொருஉயர் அறிவுத்தளத்தை அடைகிறான்.
அதாவது, ஒரு அறிவு முதல் ஆறு வரை படிப்படியாக முன்னேறிய நிலையில், இந்த ஆறாம் அறிவுப் பரிமாணத்தினைக் கொண்டு தன்னை அறிய ஆவல் கொண்டால், அதை விட உயர் அறிவுப் பரிமாணத்துடன் கூடிய உன்னத உணர்வுத்தளத்தில், அவனுடைய பிரக்ஞையும், பார்வையும் புதிய ஆற்றலை அடைகின்றன.
இதனால், இவனிடம் இன்னும் விழிப்புக் கொள்ளாத நிலையிலிருக்கும், பல புதிய சக்திகள் மற்றும் சித்துக்கள் அவனுக்கு வந்து சேர்கின்றன.
அப்பொழுதுதான், ‘நான்' என்னும் உணர்வு, பிரக்ஞையின் அடிப்படைத் தன்மையாக இருப்பதால், தூய பிரக்ஞை நிலையில்தான், அவனது சுத்தப் பிரக்ஞையான 'நான்' உணர்வு நிலைத்து நிற்க முடியும்.
இந்த நிலைதான், பிரபஞ்சம் தன்னைத்தானே உணர்ந்துக் கொண்ட முதல் சுயவுணர்வு நிலை என்றும் கூறலாம்.
பிரபஞ்சம் நம் அனைவரின் வழியாகவும் படிப்படியாகத் தன்னைத் தானே உணர்ந்துகொள்கிறது. அதாவது, படைக்கப்பட்ட உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியும், அவைகளுக்கு கிடைத்துள்ள அறிவாற்றலின் பரிமாணமும் படிப்படியாக முன்னேறியதின் அர்த்தம் இதுதான்.
நம்முடைய உயர் வாழ்க்கை என்னும், இந்த ஜாலம் மிகுந்த அனுபவத்தின் அடிப்படைப்பயனே, நாம் இந்தப்பிரபஞ்சம்தான் என்னும் உயரிய உண்மையை நேரடியாக உணர்ந்துக் கொள்வதுதான்.
அத்தகைய, அந்த எல்லையில்லா பிரபஞ்ச பேருணர்வு, அதன் எல்லைக்குள் இருக்கும் இந்த உடலில்உள்ளுணர்வாக உணர முடியும்.
அதைத்தான் நம் சித்தர் பெருமக்கள் “அண்டத்தில் உள்ளது, பிண்டத்தில் உள்ளது” என்றனர்.
இந்த சித்தர்கள் கூறியதின் உள்ளார்ந்த கருத்து என்னவெனில், நம் உடலிலும், மனத்திலும் இயங்கும் பிரபஞ்சப் பிரக்ஞை (உள்ளுணர்வு) நம்மை நமக்கு ‘நான்' என்று அடையாளம் காட்டுகிறது.
அதேப்போன்று, இந்த அகண்ட பிரபஞ்சப் பிரக்ஞையான பேருணர்வு என்ற ‘நான்' தன்னை என்னவாகக் காண்கிறது?
இந்த மாபெரும் பிரபஞ்சத்தை, அதாவது இந்த விஸ்வத்தை, தன் உடலாகத்தான் அது காண முடியும், அல்லவா?
அதாவது, தன் ரூபத்தை அது விஸ்வரூபமாகத்தானே காண முடியும்?
ஆக, நம் ஒவ்வொருவரின் பின்னாலும் இருந்து இயங்கும், அந்த அகண்டாகாரமான ‘நான்'தான், உண்மையில் நம் ஒவ்வொருவரின் உடல்கள் மற்றும் மனங்கள் வழியாகத் தன்னை அறிந்துக் கொள்கிறது.
இந்த பேருண்மையை ஒருவர் தன்னுள் உணரும் பொழுது மட்டுமே, அவர் தன்னுடைய தற்போதைய தளத்திலிருந்து, தன்னை தானே பார்த்துக்கொள்ள முடிகிறது.
அப்போதுதான் நம்மையே நாம் விஸ்வரூபமாகக் காணமுடியும். அதாவது, நம்மை நாம் இந்த பிரபஞ்சமாகக் காணமுடியும்.
அப்பொழுதுதான், “நான் இந்த பிரபஞ்சத்தில் இருப்பதைப் போன்று, இந்த பிரபஞ்சம் என்னுள் இருக்கிறது” என்ற ஆழமான கருத்தும் புரியவருகின்றது.
இந்த உடல் மட்டும்தான் ‘நான்’ என்னும் எண்ணத்தை விடுத்து, தனக்குள் இருந்து இயங்கும் பேருணர்வுப் பிரக்ஞையை, இந்த பிரபஞ்சப் பிரக்ஞை என்று புரிந்துக் கொண்டால்தான் விஸ்வரூபம் என்னும் கருத்தின் உட்பொருளை, நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துக்கொள்ளலாம்.
இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியவரும் பொழுதுதான் திருமூலர் கூறிய ‘தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்’ என்பதும் புரிய வரும்.
அவர்களே, மரணத்தை வென்றவர்கள். ஆம்! அவர்களுக்கு மட்டுமே ‘என்` மரணம் என்று தனியாக ஏதுமில்லை! இந்த மரணம் என்பது, வந்து போகின்ற இந்த உடலுக்குத்தானே தவிர தனக்கு இல்லை என்ற புரிதலில், நான் பிறப்பதும் இல்லை!, இறப்பதும் இல்லை என்ற நிலையில், அவர்களுக்கு மரண பயம் என்பது முற்றிலும் அற்றுப் போகின்றது.
அவனையே ஞானி, யோகி, ப்ரஹ்மம் என்று பலவாறாக அழைக்கப்படுகிறது.
நன்றி!
திங்கள், 27 செப்டம்பர், 2021
வியாழன், 23 செப்டம்பர், 2021
நிர்வாண சடகம்
Book 👈
வெள்ளி, 17 செப்டம்பர், 2021
உள்ளுணர்வு
உள்ளுணர்வு
^^^^^^^^^^^^^^^^
நாம் ஒவ்வொருவரும் ‘நான் இன்னார்' என்று நம்பிக் கொண்டிருப்பது, நினைவுகளும், புத்தியும், கற்பனையும் சேர்ந்து மனத்தளத்தில் உருவாகியிருக்கும் ஒரு பிம்பம். தனிமனங்களைக் கடந்த அந்த பேருணர்வு பிரக்ஞையின் சுயப்பிரகாச ஒளி அந்தப் பிம்பத்தின் மீது பட்டுப் பிரதிபலிக்கும்போது, அந்தப் பிரதிபலிப்பின் வழியாக உடலும், மனமும் சுயப்பிரக்ஞை கொண்டு இயங்குகின்றன.
உண்மையின் இயல்பான அந்த உள்ளுணர்வு யாருக்கும் சொந்தமானதல்ல. அது எல்லையும், வடிவமுமற்ற ஒரு உணர்வுவெளி. அகண்டாகாரமானது. பிரபஞ்ச ரீதியானது. உடலைக் கொண்டு வாழும் ஒவ்வொரு ஜீவனின் பிரக்ஞையிலும் அது பிரதிபலிக்கிறது. இதை நமது சனாதன தர்மம் “பிரக்ஞானம் ப்ரஹ்ம” என்று எடுத்துரைக்கிறது. இதையறியாத ஒவ்வொரு ஜீவனும் தன் அறியாமையினால், அந்தப் பிரதிபலிப்பைத் தனியான ஒரு ‘நான்' என்று நினைத்துக் கொள்கிறது.
ஒரு ஜீவனின் மரணத்தின்போது ‘மனம்’ என்னும் அறிவு மண்டலம் செயலற்றுப் போய்விடுகிறது. அதனால் அதில் பிரபஞ்ச ரீதியான ‘நான்' பிரதிபலிப்பதில்லை. அந்த உடலிலும், மனதிலும் இயங்கிய சுய உணர்வு என்ற ‘உள்ளுணர்வு’ மறுபடியும், இந்த பிரபஞ்ச பேருணர்வு மண்டலத்தில் போய்க் கலந்துவிடுகிறது. இந்தக் காரணத்தால் நம் அனைவரின் பின்னாலும் இருந்து இயங்கும் ‘நான்', ஒரே ‘நான்'தான். பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஒரு ‘நான்'தான் இருந்துக் கொண்டுள்ளது. அதுவே இறைவன். அதுவே ப்ரஹ்மம்.
தன்னுணர்வை தனித்தறிய முடியாத நிலையில், ஜடப்பொருளாக உள்ள பாறையின் நிலையிலிருந்து மனிதன் வெகுதூரம் முன்னேறி வந்து விட்டான். ஆனால், அவனாலும் தன்னுள்ளே உள்ள அந்த முழுப்பிரக்ஞையை முழுமையாக உணர்ந்துக்கொள்ள முடிய வில்லை. அதற்குக்காரணம், அவன் புறத்திலிருந்து ஏற்றி வைத்துக் கொண்ட ஏராளமான எண்ணங்களை “அறிவு” என்று கருக்கொண்டு, அந்த எண்ணங்களின் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளான்.
அதாவது, முழுப்பிரக்ஞை இல்லாத நிலையில், நம்மை நாம் அறிய முடியாதவாறு, நம்முடைய ஆறாம் அறிவுக்கு கீழே உள்ள பல பரிமாண தளங்கள் நமக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது, நமக்குப் புரிந்துக் கொள்ள முடியாதவாறு அறியாமைகள் சூழப்பட்ட சூழலில் மனம் சிக்கிக் கொண்டுள்ளதால், உள்ளுணர்வை முழுமையாக உணர முடிவதில்லை.
அதேசமயம், பெரும்பாலான மனிதர்கள் ஏற்றி வைத்துக்கொண்ட எண்ணங்களினால் உண்டான தெரிந்ததை வைத்துக்கொண்டு, அதிலே தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போல் பாவனை செய்துக்கொண்டு, தவறான கருத்துகளின் மூலம், பல தவறான முடிவுகளை எடுப்பவர்களாகவே இருக்கிறார்கள்.
அதற்குக்காரணம், அவர்கள் ஏற்றி வைத்துக்கொண்ட அஹங்காரத்தின் வெளிப்பாடாக, நம் தன்மானம் என்ன ஆவது? என்று பயப்படுகிறார்கள். அதனால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சிக்கல் வாய்ந்ததாக மாறி விடுகிறது. அதாவது, எனக்கு எதுவுமே ஒழுங்காகத் தெரியாது! என்பதையே, பலரும் தெரிந்து வைத்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்றே கூற வேண்டும்.
ஒவ்வொரு மனிதர்களின் ஞாபகங்கள் என்று, ஏற்றி வைக்கப்பட்ட ஏராளமான எண்ணப்பதிவுகள், அவர்களது ஆழ்மனதில் அப்படியே இருக்கின்றன. அந்த சேகரிக்கப்பட்ட எண்ணங்களெல்லாம் கோப, தாபங்களாகவும், வன்முறைகளாகவும், விருப்பு, வெறுப்புகளாகவும், போட்டி, பொறாமைகளாகவும், சுயநலம், சுயப்பச்சாதாபங்களாகவும், சண்டை, சச்சரவுகளாகவும் ஆகி, ஏராளமான எதிர்மறை உணர்ச்சிகள் நிறைந்த நிலையில் இன்றைய மனிதர்கள் பெரும்பாலும் இருக்கிறார்கள்.
அவர்களது ஆழ்மனதில் என்ன நடந்துக்கொண்டிருக்கிறது? என்பதைப் பற்றிய தெளிவு எவருக்கும் இல்லை. அவர்கள் விழித்துக் கொண்டிருக்கும்போது மட்டுமல்லாமல், தூக்கத்திலும் இந்த தீய எண்ண சக்திகள், கனவுகளாக அவர்களை அலைக்கழித்துத் துன்புறுத்துகின்றன.
இதுவரையில், இந்த மனித இனம் சந்தித்த பல்வேறு சரித்திரம் சார்ந்த சங்கடங்கள் எல்லாவற்றிலும், மனிதன் தனக்கு அனுபவம் கொண்ட உணர்ச்சிகளாக பயம், வன்முறை, அதிர்ச்சிகள், சிக்கல்கள் போன்றவைகளை பிரக்ஞையின் அடித்தளத்தில், ஆழ்மனதில் இன்னும் தொடர்ந்து அழுத்தி வைத்துக் கொண்டிருக்கிறான். அவனது, அந்த ஆழ்மன இருளிலுள்ள உயிர் மட்டும் உள்ளே துடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த உயிருணர்வின் உதவியால், மனமாக வெளிப்படும் வெவ்வேறான எதிர்மறை உணர்ச்சிகள் அவனது உறவுகளைச் சீர்குலைக்கின்றன.
என்ன செய்வது? என்று அவனுக்குத் தெரிவதில்லை. அந்தச் சக்திகளோடு போர் புரிந்து, அவன் நிச்சயமாக வெற்றி பெற முடியாது. அவனைவிட அவைகள் அதிகம் சக்தி வாய்ந்தவைகள். அவன் இந்த அடிமன இருளை வென்று கடந்து, உள்ளுணர்வை உணர்ந்து, உள்ளொளி பெற்று, தெளிவுடன் வாழ வேண்டுமானால், அதற்கான சில அடிப்படை விஷயங்களை மனிதனாகப் பிறந்த அனைவரும், அவசியம் அறிந்துக் கொண்டாக வேண்டும்.
சனி, 4 செப்டம்பர், 2021
வெட்டவெளி தத்துவம்
வெட்டவெளி தத்துவம்
======================
பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்துக் கொண்டிருக்கும்’ ஒரு இயக்கம். அதாவது, ஒளியிலிருந்து விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் ஒன்றிற்கே ‘பிரபஞ்சம்’ என்று பெயர்.
பிரபஞ்சம் எனும் சொல் சமஸ்கிருதச்சொல்.
அதன் பொருள் ‘நன்கு விரிந்தது’ என்பதே ஆகும்.
அதாவது, நன்கு விரிந்த அல்லது விரிந்து கொண்டிருக்கும் அமைப்பைக் குறிக்கும் சொல்லே பிரபஞ்சம்.
அதை தமிழில் “பேரண்டம்” எனச் சொல்லலாம்.
பிரபஞ்சத்தை ஒருபோதும் இந்த ஊனக்கண்களால் ழுமையாகப் பார்த்துவிட முடியாது. அறிவியல் ஆய்வுகள் கூட, அனுமானத்தினால் மட்டுமே அதனை வரையறுத்துக் கூறுகிறது.
ஆக, பிரபஞ்சத்தின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்பதைக் கூட, முடிந்த முடிவாக, விஞ்ஞானத்தினால் உறுதி செய்ய முடியாது. காரணம், அது விநாடிக்கு, விநாடி விரிந்துக் கொண்டே இருக்கின்றது.
அத்தகைய இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாகவும், அடிப்படையாகவும் இருப்பது “வெளி” ஆகும்.
இங்கு ‘வெளி’ என்று கூறுவதை பஞ்ச பூதங்களிலுள்ள ‘ஆகாயம்’ என்று தவறாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. இதனை “வெட்டவெளி” எனத் தமிழ் சித்தர்கள் கூறுகின்றனர்.
இதுவே, “பிரம்மம்”, “சிவம்”, “இருப்பு”, “இறைவன்”, “அல்லா”, ”யெகோவா”, “மெய்ப்பொருள்”, “ஆதிமூலம்” எனப் பலவாறு அழைக்கப்படுகின்றது.
இந்த வெட்டவெளியிலிருந்து வெளிப்பட்டதே இந்த பேரண்டங்கள், அண்டங்கள், விண்மீன் குடும்பங்கள், சூரியக் குடும்பம், பூமி, மற்றும் அதில் வாழும் உயிரினங்களுடன் மனிதன் முதலான எல்லாமே.
வெட்டவெளியில் இருந்து இந்த ‘பிரபஞ்சம்’ தோன்றியதை பெருவெடிப்புக் கொள்கையின் மூலமாக அறிவியலாரும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ஆனால் பெருவெடிப்புக்கு சில வினாடிகள் முன்பு, என்ன நிகழ்ந்திருக்கும் அல்லது எது இருந்தது என்பதை? அறிவியல் இன்றும் ஆய்வாக மட்டுமே வைத்திருக்கின்றது.
மெய்ஞானமோ முடிந்த முடிவை ‘சித்தாந்தம்’ ஆக்கி விட்டது.
அத்தகைய அகண்ட பேரண்டத்தைப் பற்றியும், அதன் உண்மைத்தன்மைப் பற்றியும், அதற்கும் இறைவனுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பற்றியும் எளிமையாக இந்த ஆடியோ பதிவின் வாயிலாக அறிந்துக் கொள்ளலாம்.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...