ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

ஆத்ம வித்யா விலாஸம் (பகுதி - 1)

தேடிக்கண்டு கொண்டேன்



இந்த உடல் என்ற தேரில் ஒருவன் (ஆன்மா) பயணம் செய்கிறான். அந்த தேரை சரியாகச் செலுத்த தேரோட்டி (புத்தி) என்ற ஒருவனும் தேவைப்படுகின்றான். மேலும், அந்த தேரில் பூட்டப்பட்ட குதிரைகளை (ஐம்புலன்கள்) சரியாகக் கையாளக்கூடிய கடிவாளம் (மனம்) என்பதையும், அந்த தேரோட்டி தன் கையில் பிடித்திருக்கின்றான். அந்த கடிவாளத்தைக் கொண்டுதான், தேரோட்டி தேரை சரியாக இயக்கமுடியும்.

 ஆம்! அந்த கடிவாளம்தான் மனம். 

அந்த தேரோட்டியாகிய புத்தி, தேரை (உடலை) சரியாக செலுத்த வேண்டியதினால், அந்த ஐந்துக் குதிரைகளின் (புலன்களின்) கடிவாளத்தைக் (மனதை) கண்டிப்பாக பிடித்திருக்க வேண்டும். பிடியை விடும்போது, குதிரைகள் சுதந்திரமாக ஓடும். 

ஆகவே, உடல் என்ற தேரிலே, ஐந்து புலன்கள் என்ற குதிரைகள் (ஐம்புலன்கள்) அந்த தேரை இழுக்கின்றன. அந்த தேர் (உடல்) செல்லும் பாதைகள் (உலகியல் விஷய சுகங்கள்) பலவாறாக உள்ளன. 

ஆகவே, உடல் என்ற தேர்ப்பயணம் சரியாக இருக்க வேண்டுமானால், அந்தக் கடிவாளம் (மனம்) சரியாகக் கையாளப்பட வேண்டும். கடிவாளம் (மனம்) முறையாகக் கையாளப்படவில்லை எனில், அந்த குதிரைகள் (புலன்கள்) கட்டுப்பாடு இழந்து, கண்டபடி தடம் மாறிப்போய், அந்த தேரை (உடலை) படுகுழியில் தள்ளவும் வாய்ப்புகள் உள்ளது. 

ஆகவே, நம் உடல் என்ற தேர், புத்தி என்ற தேரோட்டியின் கையில் உள்ளது. அந்த புத்தி என்ற தேரோட்டியோ, ஐம்புலன்கள் என்ற குதிரைகளைக் கொண்டுதான் தேரை இயக்குகின்றான். ஆனால், அந்த குதிரைகளோ (ஐம்புலன்கள்) ‘மனம்’ என்ற கடிவாளம் கொண்டுதான் கட்டுப்படுத்தப்படுகின்றன. 

ஆகவே, ஐம்புலன்கள் என்ற குதிரைகள் சரியாக ஓட வேண்டுமானால், அவைகள் கட்டப்பட்டுள்ள மனம் என்ற கடிவாளத்தை, புத்தி என்ற தேரோட்டி சரியாகக் கையாள வேண்டும். அப்போது மட்டுமே, ஆன்மா என்ற அந்த தேரின் (உடலின்) உரிமையாளன் ஊர் போய் சேர முடியும்.

இறைவன் மஹத்தானவன்!

 மஹத்

=======



[இறைவன் மஹத்தானவன்]

இன்றைய நவீன விஞ்ஞானம் இதுபோன்ற சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்டு, அதன் பாணியில், இதை மேட்டர் மற்றும் எனெர்ஜி” (Matter and Energy) என்று கூறுகின்றது.


அதாவது, மேட்டர் என்ற பொருள் நம்முடைய சனாதன தர்மத்தில் கூறப்பட்ட பரம்பொருள் (சிவம்) என்பதாகவும், எனெர்ஜி என்பது, ஆற்றல் அல்லது சக்தி என்பதாகவும் உள்ளது.

 

E = MC2

E = Energy (ஆற்றல் அல்லது சக்தி)

M = Mass (or) Matter (பொருள் அல்லது சிவம்)

C2 = Speed of Light (அறிவொளியின் விரிவு     அல்லது வேகம்)

 

ஆக, நவீன விஞ்ஞானம் கூறுவதுப் போன்று ஒரு ஆற்றலை (சக்தியை) ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது, ஆனால், ஒரு ஆற்றலை வேறொரு ஆற்றலாக மாற்ற முடியும் என்பதே.

 

இதன் அடிப்படையில் பார்த்தாலும், இந்த புத்தி சக்தி என்பது, ஒரு அறிவு தாவரத்தில் தொடங்கி, ஆறு அறிவு படைத்த மனிதன் வரை பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட மாறுதலுக்கு உட்பட்டே இருக்கின்றது.

 

எனவே, இந்த சக்தி மாற்றம் என்பது, ஒரு அறிவிலிருந்து, ஆறு அறிவு வரை விரிந்துக் கொண்டே உள்ளதினால், இந்த பிரபஞ்சம் என்பதின் புத்தி சக்தி (மஹத்) விரிந்துக்கொண்டே போகின்றது என்கின்றது நவீன விஞ்ஞானம்.

 

ஆக, பிரக்ருதியானது இன்னமும் விரிந்த நிலையில் மஹத் என்னும் அறிவு நிலையை மேம்படுத்திக்கொண்டே உள்ளது.

 

அந்த அறிவின் விரிவு நிலையே, அதில் படைக்கப்பட்ட உயிரினங்களில் ஒரு அறிவு முதல், ஆறு அறிவு வரை பிரகாசிக்கின்றது.

 

அந்த அறிவு பிரகாசிக்கின்ற உடல்கள் என்பதில், அந்தந்த உயிரினங்களிடையே உள்ள புலன்கள் மற்றும் மனதின் சக்தியைப் பொருத்து மாறுபடுகின்றது.

 

ஆக, இந்த சக்தியை ஆக்கவோ, அழிக்கவோ, முடியாது, ஆனால், மாற்றத்திற்கு உட்படுத்த முடியும் என்பதற்கு ஏற்ப, பல்வேறு உபாதிகளாகிய உடல்கள் மூலம் அறிவு விரிந்துக் கொண்டே போகின்றது.

 

அதே சமயம், அதன் அறியும் திறனில் ஏற்படும் வித்தியாசம் என்பது, படைக்கப்பட்ட உடல்களைப் பொருத்துத்தான் உள்ளதே தவிர, அந்த அறிவில் எந்த மாற்றமும் இல்லை.

 

அதாவது, ஒரு கணித சூத்திரத்தில், எந்த, எந்த எண்களை மாற்றி, மாற்றி கொடுக்கிறோமோ, அந்தந்த எண்ணிற்கு ஏற்றவாறு விடைகள் சரியாக கிடைக்கும்.

 

அதாவது, சூத்திரத்தில் கொடுக்கப்படுகின்ற எண்களுக்கு ஏற்றவாறு, அதன் விடைகள் மாறி, மாறி வந்தாலும், அது சரியாக இருக்க, அந்த சூத்திரம் மட்டும் மாறாமல் இருக்க வேண்டும்.

 

அதுப்போன்று, படைக்கப்பட்ட உடல்களின் வித்தியாசங்களைப் பொருத்து, அதில் பிரகாசிக்கும் புத்திசக்தி, மாறி, மாறி இருந்தாலும், அதற்கு ஆதாரமான அந்த அறிவு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கின்றது.

 

இப்படித்தான் இந்த பிரபஞ்சம் எதைப் படைத்து, எதைக்காத்து, எதை அழித்தாலும், அத்தனைக்கும் ஆதாரமான அந்த அறிவு மட்டும் மாறாமல் இருப்பதினால்தான், இந்த பிரபஞ்சம் நியதி மாறாமல் உள்ளது. இதைத்தான் ரிதம் என்று அழைக்கிறோம்.


ஆக, இந்த பிரக்ருதி உள்படப் பிரபஞ்சம் என்பது 24 தத்துவங்களில் அடங்கியிருக்கிறது.

 

இதிலே, பிரகிருதி என்பது முதல் தத்துவம்.

அதற்கு ப்ரதானம் என்றும் ஒரு பெயர் உள்ளது. அதிலிருந்து மஹத் என்ற இரண்டாவது தத்துவம் வருகிறது.

இது மனிதனிடம் காணப்படும் புத்தி சக்தி போன்றது. அதுபோல, இந்த பிரிகிருதியின் புத்தி சக்திதான் மஹத் எனப்படுகின்றது. இதை தமிழில் பேருணர்வு என்றும் கூறலாம்.

பிரக்ருதியோடு புருஷனை தொடர்பு படுத்துவது இதுவே. அதாவது, மாயையுடன் ப்ரஹ்மத்தை தொடர்பு படுத்துவது இந்த மஹத் என்ற அறிவுதான்.

இந்த அறிவிலிருந்தே, இந்திரியங்கள். மனம் உள்ளிட்ட மற்ற அனைத்தும் பிறக்கின்றன. அவைகள் மூலம் அனைத்தும் அறியப்படுகின்றன.

இந்த மஹத் என்னும் அறிவு நிலை உயிரினங்களுக்கு முக்குண அடிப்படையில், மூன்று விஷயங்களை உருவாக்குகிறது.

 

அது, தன்னுணர்வு நிலை (EGO), பிரித்து உணரும் நிலை (DISCRIMINATION) மேலும், இந்த இரண்டு நிலைகளையும் கொண்ட மனம் (MIND) என்னும் சிந்தனா சக்தி நிலை ஆகும்.

அஜாதவாதம்

 அஜாதவாதம் என்றால் என்ன?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^



பக்திப் பாதையில் பயணிக்கின்ற பாமரனுக்கு “அநநன்ய பக்தி” என்பது என்ன? என்று தெரியாததால், துவைத பக்தியிலேயே இறுதிவரை இருந்து, இறந்தும் போகின்றான். 

இதன்காரணமாக, இவர்கள் மீண்டும் பிறப்பு - இறப்பு என்ற சம்ஸார சக்கரத்தில் சுற்றிக்கொண்டே இருக்கின்றனர். பிறவாப் பெருநிலையாகிய முக்தி என்ற பதத்தை இவர்கள்  இறுதிவரை அடைய முடியாமல் போகின்றது.

எனவே, எவன் ஒருவன் இறைவனை இருமைகள் கடந்து, ஒன்றேயாகிய ஏக இறைவனாக காண ஆசைப்படுகின்றானோ, அவனே, இறைவனும், நானும் பிரிக்க முடியாத பூரணம் என்றும், அந்த பூரணத்தில் இருந்து எதைப் பிரித்தாலும், அங்கு எஞ்சியிருப்பதும் பூரணமே என்று புரிந்துக் கொள்வான்.
 
பூரணம் என்றால், முழுமையானது. அந்த முழுமையில் இருந்து எதைப் பிரித்து எடுத்தாலும், அங்கு எஞ்சி இருப்பது முழுமையாகிய ‘இறைவன்’ மட்டுமே என்பதை ஏற்கின்ற பக்குவமுள்ள பக்தனுக்கு மட்டுமே ‘அத்வைதம்’ என்பதும், என்னவென்று புரிய வரும். காரணம் குறையுள்ள ஒன்றை யாரும் பூரணம் அல்லது முழுமை என்று கூறுவதில்லை. ஆகவே, இறைவன் முழுமையானவன் எனும்போது, அவனிடமிருந்து எதையுமே பிரிக்க முடியாது. 
      இவ்வாறு ஜீவன்கள் நாம் நினைத்துக் கொண்டிருப்பதுப் போன்று, பலவல்ல என்றும், ஒரே சைதன்யம்தான் எல்லாரிலும், எல்லா இடத்தும் பிரகாசிக்கின்றது என்றும், உன்னைத் தவிர வேறொரு ஜடப் பொருளும் கிடையாது என்று, அஜாதவாதம் அருமையான முறையில், அனைவருக்கும் தெள்ளத்தெளிவாக பல இடங்களில் எடுத்துரைக்கின்றது.

பொதுவாக, இந்த பௌதிக உலகில் வெளிப்படையாகத் தெரிகின்ற ஜீவன்களுக்குள் நிலவும் வித்தியாசங்களையும், ஞானம் - அஞ்ஞானம் என்ற இருமைகளின் அடிப்படையில் உண்டான வாதங்களுக்கு, நேரடியாக எந்த பிரதிவாதமும் காணப்படவில்லை என்றாலும், இந்த சம்வாதத்தின் அடிப்படையாக உள்ள ‘திருஷ்டி - சிருஷ்டி தத்துவம்’ இதுப்போன்ற சந்தேகங்களை இல்லாமல் செய்து விடுகின்றன.
 
ஆகவே, ‘அஜாதவாதம்’ என்ற, திருஷ்டி - சிருஷ்டி தத்துவத்தைக் குறித்து நல்லதோர் ஞானம் நமக்கு வேண்டும்.

1. அஜாத வாதம்

பிரபஞ்சம் என்று ஒன்று படைக்கப்படவேயில்லை. பிரபஞ்சம் என்பது மனித மனதின் சிருஷ்டியே. தேச, கால வேற்றுமைகள் என்பது நமது சங்கல்பங்களே. தேசம், காரண காரியங்கள், எல்லாம் நம் மனதில் தோன்றுபவைகள்தான். ஆத்மா ஒன்று தான் உண்மையாக உள்ளது. அதை நாம் புரிந்து கொள்ளும் பொழுது மட்டும்தான், நமது அஞ்ஞானம் விலகி, வெளிச்சம் ஏற்படுகிறது. அந்த ஒளியில் பிரகாசத்தினால், இந்த பிரபஞ்சம் மறைந்துவிடும்.

ஆன்மாவின் உண்மை சொரூபத்தை அறியாத நிலையில் நமது மனம் அவித்யையில் (அறியாமையில்) மூழ்கி நீ, நான், இது, அது என்ற வேறுபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டு, ஒரு மாயா உலகத்தை சிருஷ்டிக்கின்றது.

இது நாம் கனவுகளில் காணுகின்ற உலகத்திலிருந்து மாறுபட்டதல்ல.

விழித்தெழுந்திருக்கும் பொழுது அந்த உலகம் காணாமல் போய் விடும்.

நமது வாழ்விற்கும் நாம் காணுகின்ற கனவுகளுக்குமுள்ள வித்தியாசம் அவைகளுக்காக மனம் எடுத்துக் கொள்ளும் காலத்தைச் சார்ந்தது. அதனால், கனவு உலகம் என்பது, மனம் படைத்தவற்றில் காலம் சிறியதாகவும், நனவு உலகம் என்பதில், மனம் படைத்தவற்றில் சிறிது நீண்ட கால அளவுடையதாகவும் உள்ளது என்பது தான் அறியபப்ட வேண்டிய உண்மையாகும்.


2. திருஷ்டி - சிருஷ்டி வாதம்

முன்னர் கூறிய “அஜாத வாதம்” அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாமல், அதை ஜீரணிப்பது கடினமாக இருக்கும். இதையே, மற்றொரு விதத்தில் கூறுவதுதான் இரண்டாவது தத்துவம். அதை “திருஷ்டி சிருஷ்டி வாதம்” என்று எளிமையாக கூறப்படுகிறது.

இங்கே, எப்பொழுது “நான்” என்ற எண்ணம் உதிக்கின்றதோ, அப்பொழுது இந்த உலகம் உருவாகிறது. ஆக, நான் காண்கிறேன், நான் செய்கிறேன், நான் இங்கிருக்கிறேன், நான் சுகமாக இருக்கிறேன், நான் துக்கமாக இருக்கிறேன், என எல்லாம் “நான்” எனும் சிந்தையுடன் தொடர்பு உடையது.

‘தேஹமே நான்’ என்ற நினைப்புடைய நான், ‘நான் இங்கிருக்கிறேன்’ என்றால், இந்த தேகம் இங்கிருக்கிறது என்று பொருள். ‘எனக்கு வலிக்கிறது’ என்றால் இந்த தேகத்திற்கு வலிக்கிறது என்றர்த்தம்.

தேக அபிமானமான நான் மறைந்து உண்மையான நான் உதயமாகும்பொழுது மட்டுமே, இந்த தேச கால வித்தியாசங்கள் மறைகின்றன.
 
அப்போது மட்டுமே, இந்த உண்மையான ‘நானுக்கு’ வலியும் தெரிவதில்லை. ருசியும் தெரிவதில்லை. இதைத்தான், திருஷ்டி-சிருஷ்டி வாதம் என்று கூறுப்படுகின்றது. அஜாதவாதமேதான் இதுவும். ஆனால், வேறு விதமாக விளக்கப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்!...
          இந்த உலகம் நம் திருஷ்டியில் தான் நிலை கொள்கிறது. நான் முதலில் தோன்றுகிறது; பிறகு உலகம் தோன்றுகிறது. உலகத்தை நம் மனது சிருஷ்டிக்கின்றது. நான் மறைந்தால் உலகமும் மறைகின்றது.
 
பெரும்பாலானவர்கள் இந்த உலகம் மறைகின்றது என்றவுடன் நம் கண்களில் இருந்து மறைந்து விடுவதாக கற்பனை செய்துக் கொள்கிறார்கள். அதற்குக் காரணம், அவர்களிடம் காணப்படுகின்ற உடற்பற்று என்ற அபிமானம் எனலாம். 

உண்மையில் இந்த உலகம் இல்லாமல் போகின்றது என்பது என்னவெனில், ஒருவன் இறந்தபின்பு அவனுக்கு மட்டுமே இந்த உலகம் இல்லாமல் போகின்றது அல்லவா?, நம் எல்லோருக்கும் எப்பொழுதும் போல இந்த உலகம் இருந்துக் கொண்டுதான் இருக்கின்றது அல்லவா?

இங்கு என்ன புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த ‘அஜாத வாதம்’ என்ற தத்துவம் மூலம், அதை அறிந்துக் கொண்ட என்னுடைய மனதிற்கு மட்டுமே, இந்த உலகம் என்மீது (அறிவு மீது) ஏற்றி வைக்கப்பட்டுள்ளது என்பது புரியவரும். 

ஆனால், மற்றவர்களுக்கு இந்த ஞானம் இல்லாததினால், இந்த உலகம் உள்ளது போன்று அவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள்.

உண்மையான முக்தி மார்க்கத்தை விளக்கும் வழிமுறைகள் கீழ்க்கண்ட கட்டமைப்புடன் காணப்படும் அதுவே, அஜாதவாதம் என்று அழைக்கப்படும்.

• உண்மை நிலை - என்றுமெவர்கும் இயல்பாக உள்ள நிலை. அதை வெளியேயிருந்து கொண்டு வர வேண்டியதில்லை. தனியாக எந்த முயற்சியும் தேவையில்லை. எதையும் தியானம் செய்ய வேண்டியதில்லை. ஒன்றையும் தியானம் செய்யாமல், எதையும் நினையாமல் சும்மா இருத்தலே அதற்கான மார்க்கம்.

• நீ பற்றற்ற மாசற்ற, சுயம் பிரகாசன். நீ சமாதி மற்றும் ஏனையே மார்க்கங்களை தேடி ஓடுகிறாயே அதுவே உன் பந்தம்.

• சித்த விருத்தியை அடியோடு ஒழி. சித்த விருத்தியால் எந்த பயனும் இல்லை. நீ பந்தமற்று, முக்தனாகவே உண்மையான ஆத்மாவாகவே இருக்கிறாய்.

• பிரபஞ்சமனைத்தும் உன் மனதின் கற்பனையே. உன் மனமும் கற்பனையே. ஆத்மா ஒன்று தான் நிஜம்.

• கரும நினைவு எவ்வாறு அறியாமையினால் எழுகிறதோ அவ்வாறே கருமத்தை துறத்தலும் ஆகும்.

• ஆகவே நிவிருத்தியை விரும்புவதும், பிரவிருத்தியை வெறுத்தலும் பாழ்.

ஓம் தத் ஸத்!

மாயை


மாயை என்பது என்ன?

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

மாயத் தோற்றம் என்பதை எளிமையாக பொருள் கொள்ளலாம். அதாவது, இல்லாததை இருப்பதாக நினைத்து மயங்குவது என்றும் கூறலாம்.

அத்வைத தத்துவம் மாயையைப் பற்றிப் பேசுகிறது.
நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் பிரம்மமே. பிரம்மத்தைத் தவிர இரண்டாவதாக ஒன்றில்லை என்கிறது அத்வைதம்.
மனிதர்கள், மரங்கள், விலங்குகள், புல் பூண்டுகள், அண்ட சராசரங்கள் ஆகிய யாவும் பிரம்மமே என்கிறது அத்வைதம்.
அப்படியானால் நாம் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் என்ன? வெவ்வேறு மனிதர்கள், உயிர்கள், சூரியன், சந்திரன், பிற கிரகங்கள் ஆகியவை எல்லாம் என்ன?
எல்லாம் மாயை என்கிறது அத்வைதம்.
சகமனைத்தும் பொய்யெனவே தானுணர்ந்தால் துக்க
சுகமனைத்தும் பொய்யன்றோ சோரா - திகபரத்தும்
விட்டுப் பிரியாத மேலான அத்துவிதக்
கட்டுக்குள் ஆவதென்றோ காண்.
- தாயுமானவர் பாடல்.
‘எல்லாம் மாயை, சத்தியமாக எதுவும் இல்லை’ என்று பௌத்த மதம் கூறுவதுப்போன்று, அத்வைதம் கூறவில்லை.
‘பிரபஞ்சமெல்லாம் மாயைதான். ஆனால், இதற்கு ஆதாரமாக பிரம்மம் என்பது பரம சத்தியமாயிருக்கிறது’ என்கிறது அத்வைதம்.
“உலகத்தை மாயை என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம்? இந்த உலகத்தில் இத்தனை காரியங்கள் கண்கூடாக நடந்து கொண்டிருக்கும்போது, இதை எப்படி மாயை என்று கூறலாம்?” என்று பலரும் நினைக்கின்றனர்.
மாயை என்றால் அடியோடு இல்லாத ஒன்று என்று நினைத்துக்கொண்டு இப்படிக் கேட்கிறார்கள். ஆனால் மாயை என்பது அடியோடு இல்லாத வஸ்து (அத்யந்த அஸத்) அல்ல.
முயல் கொம்பு அல்லது மலடி மகன் என்று கூறினால், உடனே அது அடியோடு இல்லாத ஒன்று என்பதினால், அவைகளை தள்ளி விடுகிறோம்.
மாயை அப்படி அல்ல...!
அது இருப்பதாக நினைக்கின்றவரை இருப்பதாகவே தோன்றும். அதாவது, அது முயல் கொம்பு போன்றது அல்ல! ஆனால், அது கானல் நீர் போன்றது.

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்