புதன், 31 ஜூலை, 2019

பிரபஞ்ச மனம்




இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகின்றான். அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய இயல்பு. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையாக இல்லாமல் இருப்பதற்கு, மனம் அமைதியில்லாமல் அலைபாய்வதே காரணமாகும்.

மனதிற்கும், அமைதிக்கும், நெருங்கிய நட்பு உண்டு. அதனால்தான் மனம் சலனமடையும் போது அமைதி பறிபோகின்றது. அமைதி போனவுடன் மகிழ்ச்சி சென்று விடுகின்றது.

மகிழ்ச்சி என்பது மனதின் அடிப்படையில் உருவாகும் விஷயம். மனதில் தோன்றும் எண்ணங்களை வைத்து மகிழ்ச்சி முடிவு செய்யப்படுகின்றது.

மகிழ்ச்சி என்றுமே நிலைத்திருக்க விரும்பினால், நம்முடைய செயல்கள் நல்லதாக இருக்க வேண்டும். செயல்கள் நல்லதாக இருக்க வேண்டுமெனில், நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தூய்மையாக இருக்க எண்ணங்கள் நல்லவைகளாக தோன்ற வேண்டும்.

எண்ணங்கள் நல்லனவாக தோன்ற அவனது குணம் சத்துவ குணமாக வேண்டும். குணம் சத்துவமாக வேண்டுமானால், அவனது சித் என்ற அறிவு தெளிய வேண்டும், அறிவு தெளிந்தவனுக்கு ஆனந்தம் உண்டாகும். அப்படி என்றும் மகிழ்ச்சி உடையவன் செய்யும் செயலும் சிறப்பானதாக அமையும்.

ஒருவன் செய்யும் செயல்களினால் வருகின்ற நன்மை, தீமைகளை அந்த செயல் செய்தவன் அடைந்தாக வேண்டும் என்பது பிரபஞ்சநியதி.

ஒருவன் எண்ணும் ஒவ்வொரு எண்ணங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், அதில் நல்லது, கெட்டதை பிரித்து அறிய முடியும். நல்லது எது?, கெட்டது எது என்பதை அறிந்து செயல் செய்பவன், தன்னுடைய செயலில் முடிந்தவரை கெட்டதை தவிர்க்க நினைப்பான். நல்லதை நடைமுறைப்படுத்துவான். அந்த நல்ல செயலின் விளைவாக கிடைக்கும் பலன்களும் நல்லதாக இருக்கும்.

பலன்கள் நமக்கு நல்லதாக இருந்தால்தான், நாம்  நிலையான மகிழ்ச்சியையும் அடைய முடியும்.
இந்த புத்தகத்தின் வாயிலாக நிலையான அந்த மகிழ்ச்சியை நிலைத்திருக்கச் செய்யும் வழிமுறைகளை கூறி, மனம் மனிதனை எப்படியெல்லாம் மாற்றுகின்றது என்பதை, ஒரு பாமரனும் படித்து பயன் அடையும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

ஆத்மாவை அறி!



ந தத்ர ஸூர்யோ பாதி ந சந்த்ர தாரகம்
நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி |
தமேவ பாந்தமனுபாதி ஸர்வம்
தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி ||

அங்கே சூரியன் ஒளிர்வதில்லை, சந்திரனும் நட்சத்திரங்களும் ஒளிர்வதில்லை, மின்னல் ஒளிர்வதில்லை. 

இந்த அக்கினி எப்படி ஒளிர முடியும்?

ஒளிர்கின்ற அறிவை அனுசரித்தே மற்ற அனைத்தும் ஒளிர்கின்றன. அனைத்தும் அதன் பிரகாசத்தால் ஒளிர்கின்றன.

ஆன்ம அனுபூதி என்பது சாதாரண கண்களால் காணக்கூடிய ஒரு புறக்காட்சி அல்ல என்று இங்கே கூறப்படுகிறது.

அனைத்தையும் காண ஒரு விளக்கின் வெளிச்சம் தேவை.

சூரியனைக் காண விளக்கு தேவையா?

தேவையில்லை.

ஏனெனில் சூரியனின் பிரகாசத்தால்தான் அனைத்தும் ஒளிர்கின்றன.

அதுபோல, அறிவின் பிரகாசத்தால் நாம் அனைத்தையும் காண்கிறோம்.

உலகப் பொருட்களைக் காண்பதற்கு உதவுகின்ற சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் அனைத்தும் பிரகாசிப்பது அறிவுப் பிரகாசத்தால்தான்.

எனவே ஆன்ம (அறிவு) ஒளியைக் காட்ட இந்த ஒளிகளால் இயலாது.

பொதுவாக ஒளி, காட்சி என்றெல்லாம் படிக்கும்போது அது சாதாரணமாக நாம் காண்கின்ற ஒளியைப் போன்றது, அதைவிடப் பேரொளியானது என்றெல்லாம் எண்ணிக்கொள்கிறோம். 

ஆனால் உண்மை அதுவல்ல.

பெட்ரோமாக்ஸ் விளக்கிலிருந்து வருகின்ற ஒளி போன்றதல்ல ஆன்ம ஒளி. அல்லது அறிவுப் பிரகாசம் என்பது.

அனைத்தையும் நாம் அறிந்துகொள்வது ஆன்ம ஒளி என்ற அறிவுப் பிரகாசத்தால்தான்.

இந்த ஒளி நாம் காண்கின்ற ஒளி அல்ல.

அதாவது, பௌதீக ஒளி அல்ல. ஒரு அனுபவம்!

ஆன்ம அனுபூதி, இறையனுபூதி என்பது ஓர் அனுபவம்.

இது உணர வேண்டியது. உணர்ந்து அனுபவிக்க வேண்டியது.

மற்ற புறக் காட்சிகள் போல அதனைக் காண முடியாது.

அன்பு, இரக்கம், இன்பம் போன்றவற்றை யாரும் காண முடியாது, அனுபவிக்கவே முடியும்.

அதுப்போல, ஆன்ம அனுபூதியையும் அனுபவிக்க முடியுமே தவிர காண முடியாது.

இதையே ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனிடம், உனது இந்தக் கண்ணினால் என்னைப் பார்க்க இயலாது. எனவே உனக்கு என்னுடைய (அறிவுக்கண்) தெய்வீகக் கண்ணைத் தருகிறேன் என்று கூறுகிறார். (கீதை, 11.8)

அந்த அறிவை (ஆத்மாவை) அறிவது எப்படி?

வித்யா கீதை




எதனைக் கேட்பதால் சம்சாரக் கடலில் இருந்து சுலபமாக கரையேறுவார்களோ, பஞ்ச பூதங்களும், ஈரேலு பதினான்கு உலகங்களும், கடல்களும், மலைகளும், தேவர்களும், அரக்கர்களும், ரிஷிகளும் மற்றும் அனைத்து அசையும், அசையா பொருட்களும், கந்தர்வர்களும், பிரதம கணங்களும், நாகர்களும் எல்லோருமே எனது அம்சங்கள் ஆகின்றனர். ஆதியில் பிரம்மா முதலான தேவர்கள் எல்லோருமே என் உருவத்தைக் காண விரும்பியவர்களாக எனக்குப் பிரியமான மந்தர மலையை அடைந்து, தேவர்கள் கைக்கூப்பியவாறு, என்னைத் துதி செய்தவர்களாக நின்றார்கள்.

இத்தகைய தேவர்கள் முதற்கொண்டு அனைத்துமாக இருக்கின்ற ஸ்ரீ திரிபுரையின் உபதேசத்தால் வெளிப்பட்ட இதனை வித்யா கீதை என்று அழைக்கப்படுகின்றது.

தினம் இதனைப் பாராயணம் செய்து வருபவர்களுக்கு பாவங்கள் அனைத்தும் நாசமாகும். உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் தினமும் வாசித்து (படித்து) வருபவர்களுக்கு வித்யா தேவி இருமைகளை அழித்து, பூரண ஞானத்தை வழங்குகின்றாள்.

சம்சாரக் கடலில் இருந்து கரையேற இதுவே சிறந்த (தோணி) படகு.

18 – ல் புதைந்திருக்கும் இரகசியம்


பகவத் கீதை
<<<<<<>>>>>>>

அத்தியாயம் - 18, ஸ்லோகம் - 18.
**********************************************

கர்மமும், ஞானமும்.
=====================

ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना
करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥


ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா கர்மசோத³நா | 
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித
: கர்மஸங்க்³ரஹ: || (18- 18)


அறிவு, அறியப்படும்பொருள், அறிவோன் இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.
கருவி, செய்கை, கர்த்தா என்று மூன்று விதங்களும்
 கர்மத்தின் கட்டமைப்பு ஆகும்.

___________________________________________________________________


அறிவு, அறியப்படும்பொருள், அறிவோன் இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன.

கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் கட்டமைப்பு இந்த மூன்றும் சேர்ந்தது.


அறிவு (கருவி) - புத்தி.

அறியப்படும் பொருள் (செய்கை) - புலன்கள்.

அறிபவன் (கர்த்தா) - மனம்.


இந்த கட்டமைப்பைக் கொண்டு கர்மாவை நமக்கு வெளியே செய்தால் என்ன நடக்கும்,  நமக்கு உள்ளே செய்தால் என்ன நடக்கும் என்பதை அறியலாம்.


ஒருவன் தன்னுடைய வெளி நோக்குப் பார்வையால் புறத்தே காணுகின்ற காட்சியில்,


இதில் அறியப்படும் பொருளாக புலன் ஒரு ஆப்பிளை சுவைத்து, அறிபவனாக (மனது), அதனை அனுபவித்து, அறிவு என்ற கருவியைக் கொண்டு, தீர்மானம் செய்தவுடன் மனம் திருப்தி அடைகின்றது.


மனம் இந்த ஆப்பிளை பற்றியதால், தின்பதற்கான செயலைச் செய்கின்றது.


இதுவே, கர்மா அல்லது செயல் எனப்படுகின்றது.
இந்த செயல்கள் மனம் எதை எதையெல்லாம் பற்றுகின்றதோ, அந்த பற்றுதலுக்கு ஏற்ப செயலைச் செய்யத் தொடங்கி விடுகின்றது.


இது மனதின் புறப் பார்வையால் விளைகின்றவை.


இது அஞ்ஞானிகளின் நிலை.


அடுத்து, ஒருவன் தன்னுடைய உள் நோக்குப் பார்வையால் உள்ளே காணுகின்ற காட்சியில்,


இதில் அறியப்படும் பொருளாக உள்ள புலன்களை அடக்கி, அறிபவனான ஆழ் மனதை உள் நோக்கி விசாரித்து, அதன் வாயிலாக அறிவு என்ற கருவியைக் கண்டு கொண்ட மனம், அதைப் பற்றியவுடன் உண்டாகும் அனுபவே ஆத்ம அனுபவம் எனப்படும்.


இந்த அனுபவத்தை அடைந்த மனம் திருப்தி அடைகின்றது.


இனி மனதிற்கு தேடுதல் வேலை இல்லை.


எதை அறிந்து கொண்டால் வேறு எதையும், அறியத் தேவை இல்லையோ, அதை அறிவதே அறிவு


என்று அறிந்து கொண்ட மனம் அமைதியாக தன்னை அறிவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கி விடும்.


அதாவது, அறியப்படும் பொருளாக ஆத்மாவை அறிபவன் (மனது), அதனை தன் சொரூபமாக அறிந்தவுடன் அங்கே பற்றுவதற்கு ஆத்மாவைத்தவிர எதுவும் இல்லாததினால், மனம் ஆத்மாவை அறிந்து கொள்கின்றது.


இதுவே, ஞானம் அல்லது ஆத்ம நிஷ்டை எனப்படுகின்றது.


இது மனதின் அகப் பார்வையால் விளைந்தவை.


ஆகவே, புறப்பார்வை என்பது ஊனக்கண்ணினால் உண்டாகி, ஆசையின் காரணமாக கர்மாவில் ஈடுபட வைக்கின்றது.


அதுவே அகப்பார்வை என்பது மனக் கண்ணினால் உண்டாகி, ஆத்மாவை அறிந்து அங்கே செயல் எதுவுமற்ற ஆத்ம அனுபவம் உண்டாகின்றது.


இங்கு செயல் இல்லை. ஞான அனுபவம் மட்டுமே!


இதுவே சாரம்!

ஆகவே,


புறத்தில் பார்த்து கர்மாவை சேர்த்துக் கொள்ளலாமா?

(அல்லது)

அகத்தில் பார்த்து ஆத்ம ஞானத்தை அனுபவிக்கலாமா?


என்பதை அவரவர்களின் மனதின் சம்ஸ்காரத்தைப் பொருத்து முடியுமா?, முடியாதா என்பதைத் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.


ஓம் தத் சத்!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்