வெள்ளி, 27 ஆகஸ்ட், 2021
சனி, 7 ஆகஸ்ட், 2021
பதஞ்சலி யோக சூத்திரம் (விபூதி பாதம்)
பதஞ்சலி யோக சூத்திரம் (விபூதி பாதம்) புத்தகம்
அறிவின் மீது, ஏற்றி வைக்கப்பட்ட இந்த மனம் அறிவது எல்லாமே, அந்த ஏக அறிவு இருப்பதினால்தான் என்பதை எளிதாக அறிய முடிகின்றது. ஆதலால், அறிவதை அந்த அறிவுக்கு ஒத்திசைவோடு கூடிய பகுத்தறிவு கொண்டு அறியப்பட வேண்டும். அதைவிடுத்து, அறிவதை எல்லாம் ‘அறிவு’ என்று ஏற்றி வைத்துக் கொண்டால், அது மனதின் அறியாமையை மேலும் வலுவாக்கும்.
அந்த அறிவோ சுயம் பிரகாசமானது.
உதாரணமாக, சூரிய ஒளிப்பிரகாசம் சந்திரன் மீது விழும் பொழுது, சுயம் பிரகாசமற்ற சந்திரன், அந்த சூரியப் பிரகாசத்தைப் பெற்றுக் கொண்டு, தன்னுடைய சுயப்பிரகாசம் போன்று, வெளிப்படுத்திக் கொள்கிறது.
அந்த சந்திரனிடம் உண்டான பிரகாசம் உண்மையில் சூரியனுடையது.
அவ்வாறே, அறிவுப்பிரகாசம் மனதின் மீது விழும் பொழுது, சுயம் பிரகாசமற்ற மனம், அந்த அறிவுப்பிரகாசத்தைப் பெற்றுக் கொண்டு, தன்னுடைய சுயப்பிரகாசம் போன்று, வெளிப்படுத்திக் கொள்கிறது.
அந்த மனதிடம் உண்டான பிரகாசம் உண்மையில் அறிவினுடையது.
ஆகவே, நமது முன்னோர்கள் சில நல்ல விசயங்களை நமக்குக் கூற வரும்பொழுது, அவர்களை பின்தொடர்ந்து வருபவர்கள் எளிதாக எதையும் ஏற்றுக் கொள்ளுமாறு, எடுத்துக் கூறுவது, நமக்கு ஒன்றும் புதிய விசயமல்ல.
அதுப்போன்றுதான், ‘நான் கடவுள்’ என்கிற இதுவும். எனவேதான், இருமைகளற்ற ஒருமை உணர்வு, ஆன்ம விடுதலையை நம் அனுபவத்தில் கொண்டு வரும் என்று சொல்லாமல் சொல்லி உள்ளனர்.
ஆகவே, மனம் தன் போக்கில் போகாமல், தன்னை அந்த அறிவாகவே அறிந்துக் கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள்.
“தத்துவமஸி” - அதுவாகவே நீ இருக்கிறாய்.
“தோன்றியது
தொம் பதம் தற் பதம் சூழ்தர
ஏன்ற அசிபதம் இம் மூன்றோடு எய்தினோன்
ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற
ஏன்றனன் மாளச் சிவமாய் இருக்குமே”. - திருமந்திரம்.
இதை உணர்ந்தவர்களே அறிவார்கள்.
ஆனால், அதை தன் அறிவு சொரூபமாக உணராமல், ஏற்றி வைத்துக் கொண்ட எண்ணங்களின் அடிப்படையில், தன்னை “ப்ரஹ்மம்” என்று பாவித்துக் கொள்வதும், செயல் எதுவும் செய்ய மாட்டேன் என்று, ‘சும்மா இருப்பதே சுகம்’ எனக்கருதி, சோம்பேறிகளாக தன் வயிற்றை வளர்ப்பதும், வீண் விவாதங்கள் பல புரிந்து, அறிவாளி போன்று தன்னைக் காட்டிக் கொள்வதும் போன்ற, விவேகமற்ற மனிதர்களாக பலரும் உள்ளனர்.
இன்னும் சிலரோ, அது ஒன்றுமே இல்லாத வெற்று உணர்வு, அது வெறுமையாக மட்டுமே உள்ளது. ஆகவே, அதைப்பற்றி ஆர்வம் காட்டினால், “நான் ஜடம்” ஆகி, செயலற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவேன் என பயந்து, இதனால், இந்த உலக சுகத்தை முற்றிலுமாக இழந்து விடுவேன் எனக் கருதி, அதை “சூன்யம்” என விட்டு விடவே விரும்புகிறார்கள். அத்துடன், தங்களது மனத்தால் எதையாவது பற்றிக் கொண்டு இருக்கவே ஆசைப்படுகிறார்கள்.
அதனால்தான், பஞ்ச கோஷங்களான உடல், மனம், புத்தி, பிராணன் மற்றும் ஆனந்தம் என எதையாவது பற்றாமல், இவர்களால் இருக்கவே முடிவதில்லை.
அதனால், அந்த பற்றற்றான் பதத்தைப் பற்றி இவர்களால் அறிய முடிவதில்லை.
இதிலே, இன்னும் சிலரோ, மனதைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால், கட்டாயம் தனித்து இருக்க வேண்டும், தியானம் செய்ய வேண்டும், கற்பம் சாப்பிட வேண்டும், முப்பு முடிக்க வேண்டும் என, எதையாவது மனதில் ஏற்றி வைத்துக் கொண்டு, அந்த எண்ணங்களால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்.
இவர்களைக் கண்ட, திருமூலர் கூறுகிறார்.
“தன்னை அறியத்
தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல்
தானே கெடுகின்றான்
தன்னை அறியும்
அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத்
தானிருந்தானே”. - திருமந்திரம்.
இவ்வாறு அரிதாக கிடைத்த ‘ஆறறிவு’ படைத்த மனித உடலைப் பெற்றவர்கள், தங்களது அலைபாயும் மனதை ஆய்வுக்கு உட்படுத்தி, விசாரத்தின் வாயிலாக, விழிப்புற்ற புத்தியைக் கொண்டு, விவேகத்தை அடைந்தவர்கள் மட்டுமே, இத்தகைய சாஸ்திரங்களைக் கற்றறிந்துக் கொள்ளக் கூடிய தகுதியுடைய ‘அதிகாரிகள்’ என்று சனாதன தர்மம் அறிவிக்கிறது.
அத்தகைய அதிகாரிகளுக்கு மட்டுமே, “சாதன சதுஷ்டய சம்பத்தி” என்ற நான்கு
தகுதிகள் உண்டாகும்.
1. விவேகம்.
2. வைராக்யம்
3. ஷமாதி ஷட்க சம்பத்தி:
(இது ஆறு பண்புகளின் தொகுப்பு ஆகும்).
ஷமம் - மனக்கட்டுப்பாடு.
தமம் - புலன்கள் கட்டுப்பாடு.
உபரமம் - கடமையைச் செய்தல்
திதிக்ஷா - பொறுமை, சகித்துக் கொள்ளுதல்
ஸ்ரத்தா - நம்பிக்கை
சமாதானம் - மன ஒருமுகப்பாடு.
4. முமுக்ஷுத்வம்.
இந்த
நான்கு சாதனைகளும் சம்பத்தி (செல்வம்) எனப்படும்.
இந்த நான்கு சாதனைகளின் இருப்பிடம் நமது மனம் என்பதினால், இதை ஒரு அகச் செல்வம் என்று அறிந்து, “அந்த அறிவாகவே நான் இருக்கிறேன்” என்ற இரண்டற்ற அத்வைத நிலையை அடைய வேண்டும்.
இவர்களுக்கு மட்டுமே “தன்மயமாதம்” என்ற, தன்னுடைய இயல்பான சொரூபம் அனுபவமாகும்.
அத்தகையவர்களால் மட்டுமே தங்களது கர்ம வினைகளின் ஒட்டு மொத்த தொகுப்பாகிய ‘சஞ்சித கர்மா’ என்ற காரண உடலை அழிக்கவும் முடியும்.
“தன்னை அறிந்திடுந் தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்
சென்னியில் வைத்த சிவனருளாலே”. - திருமந்திரம்.
இவ்வாறு, அந்த காரண தேகத்தை (சஞ்சித கர்மாவை) அழிவுக்கு உட்படுத்துவது, மனதின் “மஹா பிரளயம்” என்கிறது சாஸ்திரம். அந்த மஹாபிரளயத்தை அறியும், அறிவின் “இருப்பு நான்” என்பதினால், ‘நானே மனாதீதன், ‘நானே குணாதீதன், ‘நானே தத்வாதீதன்’ ஆகின்றேன்.
எனக்கு (அறிவு) வேறாக இருப்பதாகத் தெரிவது எல்லாமே, என்னுடைய அறிவு சொரூபத்தின் மீது, ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்களான மனதின் மாயத் தோற்றங்களே என்பதையறிந்து, அந்த மனதை “மாயை” எனத் துறந்து, எதனாலும் துன்பமடையாமல் எப்பொழுதும் இருப்பவனே “ஜீவன் முக்தன்”.
நன்றி! என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
பகுத்தறிவும் பரிணாமமும்
அகண்ட சக்ஷிதானந்த ஸ்வரூபமாகிய அந்த பரிபூரண பரமானந்த இருப்பு ஒன்று மட்டுமே என்றும் இருக்கிறது. எல்லையில்லாத அந்த ஆனந்த அறிவு அணுவுக்குள் அணுவாகவும், பிருஹத்துக்கு பிருஹத்தாகவும் இருக்கிறது.
‘அணு’ என்றால் புலன்களுக்கு புலப்பட முடியாத மிகமிகச் சிறியது என்றும், ‘பிருஹத்’ என்றால், மிக, மிகப்பெரியது என்றும் பொருள்.
சாஸ்திரங்களின் உபதேசம் எல்லோருக்கும் ஒன்று போலவே உபதேசிக்கப்பட்டாலும், அவைகள் மாணவர்களின் (சிஷ்யர்களின்) பக்குவத்தைப் பொறுத்தே ஒவ்வொருவரும் அதனால் பிரயோஜனம் அடைகிறார்கள்.
அந்தவகையிலே, சனாதன தர்மம் என்ற மிகப்பெரிய ஆலமரத்தின் அழகான கிளைகளாக உள்ள உபநிஷதங்களில் வருகின்ற உபதேசப்பகுதிகளில், தேவராஜாவான இந்திரன், அசுர ராஜாவான விரோசனன் ஆகிய இருவருக்கும் பிரஜாபதி என்ற குருவானவர் பாடங்களை உபதேசிக்கும்பொழுது, "கண்ணினால் எவன் பார்க்கிறானோ அவனே ஆத்மா" என்று ஒரே வரியில் உபதேசத்தைச் செய்கிறார்.
கண் முதலான புறக்கரணங்கள், மனம் முதலான அகக்கரணங்கள் ஆகிய எல்லாவற்றுக்கும் பின்னால், அவற்றுக்கு ஆதாரமாக இருக்கிற ஒரு வஸ்துவை அவர் இப்படி மறைமுகமாக குறிப்பிட்டார்.
ஆனால் இதை சரியாகப்புரிந்து கொள்ளாமல் அவர்கள் இருவரும் தங்களைத் தாங்களே கண்களால் பார்த்துக் கொள்ளும்படியாகத் தோன்றும் தங்களுடைய பிரதி பிம்பங்களையே “ஆத்மா” என்று அர்த்தம் பண்ணிக் கொள்கிறார்கள்.
பிரதிபிம்பத்தில் சரீரம் தானே தெரிகிறது?
அதனால் சரீரமே ‘ஆத்மா’ என்று விரோசனன் முடிவாகத்தீர்மானம் செய்து விடுகிறான். அதிலிருந்து நாஸ்திகவாதம், லோகாயதம், போன்றவைகளில் எல்லாம் ஈடுபாடு உண்டாகி, அவைகள் அசுரர்களின் கொள்கையாகி விடுகிறது.
இந்திரனும் முதலில் சரீரத்தையே ‘ஆத்மா’ என்று தவறாகப் புரிந்துக் கொண்டாலும், அதன் பிறகு அவன் தன் விவேகத்தைக் கொண்டு
விசாரித்து, பிருகு முனிவர் எவ்வாறு, தனக்கு கிடைத்த பகுத்தறிவைக் கொண்டு, இந்த உடலாகிய
அன்னமயகோசத்திலிருந்து ஒவ்வொன்றாகப் பகுத்துப் பார்த்து, இறுதியில் ஆனந்தமயகோசம் எப்படிப்பட்டது,
என்பதை அறிந்துக் கொண்டதுப் போன்றே, இங்கே இந்திரனும் ஸ்தூல தேகத்திலிருந்து சூக்ஷும
தேகமான கனவு சரீரம், அதன்பிறகு கனவுகளும் இல்லாமல் ஆழ்ந்து தூங்குகிற காரண சரீரம் முதலான
ஆனந்தமயகோஷம் வரை ஆராய்ந்து, அந்த அறிவை அறிந்துக் கொண்டு, “அதுவே நான்” என்று தெரிந்து கொள்கிறான்.
நான் யாரு?
புத்தகம் 👈
“நான்” என்பது என்ன? என்பதை அறிந்துக் கொண்டால் வழிபடுபவன் - வழிபடப்படும் கடவுள் என்ற இருமை நிலைகள் இல்லாமல் போகிறது.
இதை அறிவுசார்ந்த, மனதைக் கடந்த மகத்தான உணர்வுநிலை எனலாம்.
‘அறிவு’ என்பதாக இதுவரை நாம் அறிந்து வைத்துக்கொண்டுள்ள அனுபவங்களை எல்லாம் கடந்து, “சுயவுணர்வை” (உள்ளுணர்வை) அறிந்துக் கொண்ட பின்னர், அந்த உள்ளுணர்வாகிய சுயவுணர்வில் ஆழ்ந்துபோகும் அனுபவம்தான் “நான்” எனப்படுகிறது.
உடல் அழியும். உடல்சார்ந்த மனம்கூட அழிந்து போகும். ஆனால், இந்த உடலையோ, மனதையோ சார்ந்திராத ஆன்மாவாகிய “தன்னுணர்வு” (தன்னை அறியும் அறிவு) என்றுமே அழிவற்றது.
ஆகவே, மனத்தைக் கடந்து உள்ளே சென்றால், உள்ளுணர்வைச் சந்திக்க முடியும். அதை அனுபவமாக அனுபவிக்கவும் முடியும்.
அதை உணர்கிற உள்ளூணர்வே “நான்”. அதன் அனுபவமே “நான்”. அதை அறிபவனும் “நான்”.
ஆக, உணர்வு! (சத்), அறிவு! (சித்), அனுபவம்! (ஆனந்தம்), என ஒன்றேயாகிய “சத்சிதானந்தம் நான்”.
புதிய பதிவுகள்
ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]
ஒலிப்பேழைகள்
-
ஓம் தத் சத் ஸ்ரீ திரிபுர ரகசியம் (ஞான காண்டம்) ஸ்ரீ திரிபுர ரகசியம் (பாகம் - 1) 👈 முன்னுரை இந்த அரிய நூலான...
-
ஸ்ரீ குருப்யோ நம: அபரோக்ஷ அனுபூதி (ஸ்ரீ சங்கராச்சாரியார்) அபரோக்ஷ அனுபூதி புத்தகம் 👈 முகவுரை வேதாந்த நூல்கள் பல இர...
-
வெட்ட வெளி புத்தகம் 👈 வெட்டவெளி ======================== பிரபஞ்சம் என்பது ‘ஒளியிலிருந்து ஐந்து பூதங்களாக விரிந்து...