முன்னுரை
மனிதர்களின்
ஒவ்வொரு செயல்களுக்கும் பின்னால், அவர்களது ஏற்றி வைக்கப்பட்ட பல்வேறு எண்ணங்களால்
ஆன அவர்களது மனம் அவர்களை அதன் போக்கில் இயக்குகின்றது.
அவர்களும்
மனம் போன போக்கில் அப்படியே போய்க் கொண்டு இருக்கின்றனர். ஒரு சாக்கடையில்
வாழுகின்ற புழுவுக்கு அழுகிய, நாற்றமடிக்கின்ற உணவுகளையே பெரிதாகக் கருதி,
அவைகளையே உணவுகளாக உட்கொண்டு, துன்பத்தை, இன்பமாகக் கண்டு, அந்த இருப்பிடத்திலேயே
இறுதிவரை அது வாழ்ந்து மடிகின்றது.
அதுவே,
அந்த புழுவுக்கு தெளிந்த நீரைப் பற்றிய, தெளிவான அறிவு இருந்திருந்தால், அது
நிச்சயமாக சாக்கடையிலேயே வாழ்ந்து மடிந்திருக்காது. நல்ல நீரோடையில் வாழ்ந்து,
நல்ல காய்கறிகளை உணவாக உட்கொண்டு, உன்னதமான வாழ்க்கையை தனது வாழ் நாள் முழுவதும்
வாழ்ந்து இன்பத்துடன் மடிந்திருக்கும்.
இந்த
இருவேறுபட்ட இன்ப, துன்பங்களுக்குக் காரணம் அறியாமை என்றால் அது மிகையாகாது.
அந்த
அறியாமையின் காரணமாக, மனிதர்களும் அந்த அற்ப புழுவைப் போன்றே, தாங்கள் வாழும் துன்பம்
நிறைந்த வாழ்க்கையை இன்பம் எனக் கருதி ஏற்றுக் கொள்கின்றனர். மரணத்தின் இறுதிவரை இவர்கள்
உண்மையான இன்பத்தை அறியவும் மறுக்கின்றனர்.
அதனால்தான்,
அவர்கள் தாங்கள் செய்கின்ற செயல்களை எல்லாம், தங்கள் நன்மைக்காக எனக் கருதிக் கொண்டு
செய்து, இறுதியில் அதன் வாயிலாகவே பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.
ஏன்?
இவர்கள் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்றனர் என்றால்,
இவர்கள் மனதின் ஆதிக்கத்தில் இருந்துக் கொண்டு செய்கின்ற செயல்களினால் துன்பத்தையும்,
அறிவின் ஆதிக்கத்தில் இருந்துக் கொண்டு செய்கின்ற செயல்களினால், இன்பத்தையும் என இருவேறு
அனுபவங்களை அடைகின்றனர்.
இதிலே
எவர் ஒருவர் தன் மனதை புத்தியால் விசாரித்து, அறிவை அறிந்து கொள்கின்றாரோ, அவரே அந்த
மனதில் இருந்து விடுபட்டு, மகத்தான அந்த அறிவாகவே மாறி, மலர்ந்து விடுகின்றார்.
இவரைத்தான் “ஞானி” என்கின்றோம்.
தன்னை அறியத் தனக்கொரு
கேடில்லை
தன்னை அறியாமல் தானே
கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை
அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத்
தானிருந் தானே.
இவ்வாறு
தன்னை அறிந்த தத்துவ ஞானிகள் மட்டுமே, தங்களை அந்த அறிவாகவே அறிந்து, அந்த
அறிவினாலேயே அவர்களது முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கின்றனர், பின்னை வினையைப்
பிசைந்து பிணைகின்றனர் என்று தனது திருமந்திரத்தில் திருமூலரும் அறிவை அறியச்
சொல்கின்றார்.
அந்த
ஞானிகள்
அடைந்த அனுபவ உண்மை என்பது, தனக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேகமான ஆறாவது அறிவைக்
கொண்டு நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து, அதன்
வாயிலாக இந்த உலகிற்கு அவர்கள் உணர்த்த விரும்பியது ‘அறிவால்
அறிவை அறி’ என்பதையே ஆகும்.
அதாவது பிரகாசமான ஒரே சூரியன் எப்படி பிரதி பிம்பிக்கின்ற உபாதிகளான நீர் நிலைகளைப் பொருத்து, சாக்கடை நீரில் சூரியப் பிரகாசம் சற்று மங்கியதாகவும், அதுவே தெளிந்த நீரில் சூரியப் பிரகாசம் மிகுந்ததாகவும் காணப்படுவதை நாம் நம் நடை முறையில் காண்கின்றோம் அல்லவா?...
அதுப்போன்றே, இருக்கின்ற அந்த ஒரே அறிவு தன்னை பிரதி பிம்பித்துக் கொள்கின்ற உபாதிகளைப் (உடல்களைப்) பொருத்து, செடி, கொடிகள், மரங்கள் போன்ற தாவரங்களில் ஒரு அறிவாகவும், புழு, பூச்சி இனங்களில் இரண்டு அறிவுகளாகவும், நீர் வாழ்வனவற்றில் மூன்று அறிவுகளாகவும், பறவைகள், விலங்குகள் போன்றவைகளில் நான்கு, மற்றும் ஐந்து அறிவுகளாகவும், மனிதர்களில் ஆறு அறிவுகளாகவும் பிரகாசிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக