ஞாயிறு, 3 ஜனவரி, 2021

சிவயோகம்


யோகமென்னும் பொருளுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள்; இணைப்பு என்றும் பொருள்.

எண்ணங்கள் பல வகையாகச் சிதறுண்டு போகாமல் மனம் அடங்கி, ஒடுங்கி, ஒன்றுகூடி வர வேண்டும்.
அதுதான் யோகம்.
‘யோகாத் சித்த வ்ருத்தி நிரோத:’ என்று பதஞ்சலி முனிவர் தமது யோக சூத்திரத்தில் முதலில் இதைத்தான் கூறுகிறார்.
மனம் ஒருமைப்பட்டு நிற்க, இறைவனோடு ஒன்றுபட வேண்டும். இதற்காகத்தான் தியானம் செய்ய வேண்டும்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படி நிலைகளைச் சொல்வார்கள்.
இந்த யோகம் செய்வதே ஞானம் என்ற லட்சியத்தை அடையத்தான் ஆகும்.
யோகத்திற்கு மேலும் ஞானம் என்ற படி இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். யோகத்தை முடிந்த முடிபு என்று கொள்ளக்கூடாது.
ஞானிகள் அநுபவமாகிய அந்த இலட்சியத்தின் கடைசிப்படியை மிதிக்கிறார்கள். யோகத்தில் மட்டும் முழுப் பயன் அடைய முடியாது. இறைவனுடைய நினைவு இல்லாமல் செய்கிற யோகம் பயன்படாது. அவ்வாறே அந்த ஞானமும் பயன் படுவதில்லை.
யோகத்தைத் தொடங்கும்போது இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்ற நினைவோடுதான் பலர் தொடங்குகிறார்கள்.
யோகம் செய்வதனால் ஒருவகையான வலிமை உண்டாகும். இடையே சில வகையான கிளு கிளுப்புகள் உண்டாகும். அவற்றை அநுபவிக்கும்போது, இவையே யோகத்தினால் உண்டாகும் பயன் என்று சிலர் ஏமாந்து போகிறார்கள்.
என்றைக்கும் மாறாத இன்பத்தை, இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெற வேண்டும் என்ற நினைவு போய்விடும்.
வெளி ஊருக்குப் போய் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு, மீண்டும் தன் சொந்த ஊருக்கு வந்து மனையாளோடும், உறவினர்களோடும் வாழ வேண்டும் என்று ஒருவன் நினைக்கிறான். யாவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியூருக்குப் போகிறான். அங்கே போய்ப் பணம் சம்பாதிக்கிறான். அந்த ஊரில் ஒருத்தியுடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. அங்கே வீடு கட்டிக் கொண்டு அவளோடு வாழ்கிறான். இவ்வாறு அவன் செய்வது ‘அறம்’ ஆகாது.
அதுபோலவே யோகம் என்ற ஏணியை வைத்துக் கொண்டு இறைவனுடைய திருவருள் இன்பமாகிய லட்சியத்தை அடைய வேண்டும். அந்த அநுபவம் கிடைப்பதற்கு முன்னால் யோக நிலைகளில் பல வகை அநுபவங்கள் ஏற்படும்.
சாமானிய மனிதனுக்குக் கிடைக்காத அநுபவங்கள் அவைகள் எனலாம். இது யோகத்தில் மாத்திரம் அல்ல. பக்தி முதலிய நெறிகளிலும் இப்படி இடையிடையே சில உயர்ந்த அநுபவங்கள் உண்டாகும். அந்த அநுபவங்கள் உலகப்பற்றில் சிக்கி உழலுகின்ற மக்களுக்கு கிடைக்காதவை.
ஆனால் அந்த அநுபவங்களை முடிந்த முடிவு என்று கருதி நாம் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று ஏமாந்து, அப்படியே நின்றுவிடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் உலக மாயையில் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கீழே விழுந்து விடுவார்கள். பல துறவிகளும், யோகிகளும் மிகவும் தீவிரமாக வைராக்கியத்தோடு சாதகம் செய்வார்கள். அதில் ஏதோ ஒரு நிலை வந்துவிடும். நமக்கு முடிந்த நிலை கிடைத்துவிட்டது என்று எண்ணி நின்று விடுவார்கள். கடைசியில் பெண் மயலில் சிக்கிக் கீழே விழுந்து விடுவார்கள்.
இதற்கு உதாரணமாகப் பலரை நாம் கூறலாம். இதற்குக் காரணம் என்ன?
அவர்கள் லட்சிய நிலையை அடையவில்லை. அடைந்திருந்தால் இந்த உலகமே எதிர்த்து நின்று மயக்கினாலும் அவர்கள் மனம் மயங்க மாட்டார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்