புதன், 11 நவம்பர், 2020

மனமடங்கும் மார்க்கம்

 


                    ↑ இந்த புத்தகத்தை மேலே உள்ள இணைப்பை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாயை நம் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளைச் சற்று சிந்திக்க வேண்டும்.

 நேற்று ஒரு விசயத்தைப் பற்றி ஒரு மாதிரி சிந்தித்தவன். இன்று அதே விசயத்தைப் பற்றி வேறு விதமாக சிந்திக்கிறான்.

 ஒரு உணர்ச்சியால் மனிதன் தவறு செய்கிறான். மற்றொரு உணர்ச்சியால் இறைவனை பக்தி செய்கின்றான்.

ஒரு நேரம் ஒருவனுக்கு உதவி செய்கின்றான், மறுநேரம் மற்றொருவனுக்கு தீங்கு செய்கின்றான். மேலும் அதை எண்ணி வருந்துகிறான். இரண்டும் ஒரே மனிதனே.

 நல்லதாக சிந்திப்பதும், மாறாக கெட்டதாக சிந்திப்பதும் ஒருவனே.

எண்ணங்களின் நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறும் குணத்தை அறிந்துக் கொண்டால், நாம் அதன் பிடியில் எவ்வாறு சிக்கிக் கொண்டுள்ளோம், கட்டுண்டு உள்ளோம் என உணர முடியும்.

 ஒரு மனிதன் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறான். அப்போது முதியவர் ஒருவரை சந்திக்கிறான். எப்படியோ அவன் மனதை அறிந்து கொண்ட அந்த முதியவர் இன்று இரவு மட்டும் தூங்கி எழுந்து, நாளை நீ தற்கொலை செய்து கொள் என்று கூறுகிறார்.

  அவனுக்கு வேறு ஆறுதலோ, அறிவுரையோ எதுவும் அவர் கூறவில்லை. அன்று இரவு அவனுக்கு வயிறார உணவு கொடுத்து தங்க இடம் தருகிறார். நன்கு சாப்பிட்டு இரவு நன்றாக உறங்கி எழுகிறான் அந்த மனிதன்.

 மறுநாள் காலையில் அவனுக்கு சாக வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் நீங்கி விட்டது.

 அவனிடம் சரியாக வாழ்வதற்கு ஏற்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. பழைய வாழ்வில் தோல்வி உண்டானதற்கு காரணமானவற்றை ஆராய்கிறான். இது தான் எண்ணங்களின் குணம்.

 ஒரு நாள் நல்ல மழை. ஒரு மனிதன் குடையுடன் நடந்து செல்கிறான். வழியே வயதான ஒரு ஏழைப் பெண்மணி மழையில் நனைவதைப் பார்க்கிறான். அவள் மேல் அவனுக்குக் கருணை பிறக்கிறது. தன் குடையைத் தரலாம் என்று எண்ணியவன், பக்கத்தில் தானே தன் வீடு இருக்கிறது, ஆகவே நானும் நனையாமல் அங்கே போய் வேறொரு குடை கொண்டு வந்து தரலாம் என்று எண்ணி வீட்டுக்கு போகிறான்.

குடையும் எடுத்து விட்டான். இப்போது வேறு விதமான எண்ணங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. வீட்டில் மொத்தம் மூன்று குடைகள்தான் உள்ளது. நாமோ மொத்தம் நாலு பேர் உள்ளோம். 

 அவசரத்திற்கு குடை வேண்டும் என்றால் என்ன செய்வது?

 ஒரு குடை 200 ரூபாய் ஆகும். சரி விடு! நம்மை எதிர்ப்பார்த்தா, அந்த கிழவி இருக்கிறாள். என்று எண்ணிக் கொண்டு வேறு வேலையை பார்க்கப் போய் விட்டான்.

எனவே, கருணை வந்தபோது ஒரு எண்ணம், சுயநலம் வந்தபோது ஒரு எண்ணம். இரண்டு எண்ணங்களும் ஒரே மனிதனுக்கு உண்டாயின.

 இதுதான் எண்ணங்களின் வலிமை. இதுவே மாயை.

 நம்மை ஒன்றுபோல் எண்ண விடாமல், எதையாவது, மாற்றி, மாற்றி எண்ணத்தோன்றும் எண்ணங்களின் தொகுப்பே மனம் எனும்போது, இதுதான் மாயை என்று அறிவதற்காக, அதே மனதை விசாரம் செய்யப்பட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்