ஸ்ரீ குருப்யோ நம:
அபரோக்ஷ அனுபூதி
(ஸ்ரீ
சங்கராச்சாரியார்)
முகவுரை
வேதாந்த
நூல்கள் பல இருந்தாலும், அதில் மிகவும் முக்கியமாக மூன்று நூல்களை எடுத்து, அவைகளைப்
“பிரஸ்தான
திரையம்” (प्रस्थानत्रयी)
என்று அழைக்கப்படுகின்றன.
அதாவது,
பிரஸ்தான திரையம் என்றால் மூன்று முக்கியமான நூல்கள் என்று அழைக்கப்படுகின்றன.
அவைகள்,
உபநிஷதங்கள், பகவத் கீதை, பிரம்ம சூத்திரம் என்பனவாகும். அந்த வகையிலே இந்நூல்கள் சுருதி பிரஸ்தானம், ஸ்மிருதி பிரஸ்தானம், தர்க்கப் பிரஸ்தான அடிப்படையில் அமைந்துள்ளது.
ஸ்ரீ
சங்கராச்சாரியார் இந்த மூன்று நூல்களுக்கும் பாஷ்யம் (விளக்கம்) எழுதியுள்ளார். இதனால்
அவருக்கு பாஷ்யக்காரர் என்ற பெயரும் உண்டானது.
பாஷ்யம் மட்டுமன்றி ஸ்ரீ சங்கரர் எழுதிய
பல நூல்களில் தற்பொழுது நாம் அறிந்து கொள்ள இருக்கின்ற “அபரோக்ஷ
அனுபூதி” என்ற நூலும் ஒன்றாகும்.
பிரஸ்தான திரயத்தின் அடிப்படையில் சுயமாக
இயற்றப்படும் நூல்களுக்கு “பிரகரண கிரந்தங்கள்”
என்று பெயர்.
இவை
வேதாந்தத்தின் துவக்க நிலையில் இருப்பவர்களுக்காக இயற்றப்படுபவை.
மூன்று
வகையான பிரகரண கிரந்தங்கள் உள்ளன. அவை,
1. முழு வேதாந்தத்தின் சாரத்தையும் தருவது.
உதாரணம்:-
தத்துவ போதம்.
2. ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு
விளக்குவது.
உதாரணம்:-
பஞ்சதசி.
இந்நூலின்
ஒவ்வொரு அத்யாயமும் ஒரு தலைப்பை எடுத்துக் கொண்டு விளக்கும்.
3. முதலில் முழு வேதாந்தத்தையும் சுருக்கமாகச்
சொல்லிவிட்டு, பிறகு ஒரு தலைப்பை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாகப் பேசுவது.
நாம் பார்க்கவிருக்கும்
அபரோக்ஷ அனுபூதி இந்த வகை நூல்களுக்கு உதாரணம்.
இந்த
அபரோக்ஷ அனுபூதியில் விரிவாக விளக்கப்படும் தலைப்பு நிதித்யாசனம் அல்லது தியானம்.
அதாவது
ஒரு நிதித்யாசகன் எவ்வாறு இந்த உலகம் பற்றிச் சிந்திக்க வேண்டும் என்று விளக்கப்படுகிறது.
ஸ்ரீ
வித்யாரண்யர் என்ற ஞானி இந்த அபரோக்ஷ அனுபூதிக்கு “வித்யாரண்ய
தீபிகா”
என்ற பெயரில் மிகவும் தெளிவாக விளக்கம் எழுதியுள்ளார்.
அனுபூதி என்ற சொல்லுக்கு ஞானம், உணர்தல்
அல்லது அனுபவித்தல் என்று பொருள்.
அனுபூதி என்றால் அனுபவம்
என்றும், அபரோக்ஷம் என்றால் நேரடியாக என்றும் பொருள் கொண்டு “நேரடி அனுபவம்” என்று அழைக்கப்படுகின்றது.
அபரோக்ஷ அனுபூதி
என்றால் சுயமாக பிரகாசிக்கின்ற அனுபவம். அல்லது. ஆத்மாவை நேரிடையாக அனுபவித்தல் என்று
பெயர்.
நம்முடைய
ஒவ்வொரு அனுபவத்திலும் நமக்கு அறிவு ஏற்படுகிறது. அதுப்போல, ஒவ்வொரு அறிவிலும் ஒரு
அனுபவமும் ஏற்படுகின்றது. பொதுவில் அடைந்த அறிவில் நிச்சயமாக ஒரு அனுபவ உண்டாகின்றது.
ஆனால்
நாம் பெறும் அறிவு உடனே அனுபவத்தை தர வேண்டும் என்ற அவசியமில்லை.
அப்படியானால், அது என்ன
நேரடி அனுபவம்?
நாம் இதுவரை பார்த்து
அனுபவிக்கின்ற அனுபவங்கள் எல்லாம் நேரடி அனுபவங்கள் இல்லையா?
ஏன்? இதை மட்டும் நேரடி
அனுபவம் என்று கூறவேண்டும்?
இங்கு எதை நேரடி
அனுபவமாக அடைகின்றோம்?
உலகத்தில் எத்தனையோ
பொருட்களை பார்க்கின்றோம், கேட்கின்றோம், அனுபவிக்கிறோம்.
அவைகளும் நேரடி
அனுபவங்கள்தானே, அதிலிருந்து இதுமட்டும் தனித்த நேரடி அனுபவமாக எப்படி ஆகும்?
அப்படிப்பட்ட அனுபவம்
எது?
என்றால், வேதாந்த சாஸ்திரம்
கூறுகின்றது நாம் இந்த உலகத்தில் காணுகின்ற எதுவும் நேரடியாக அனுபவம் ஆகாது
என்றும், இதற்கு “மனம்” என்ற கரணம் அவசியம்
ஆகின்றது.
அதாவது, எதை அறிந்து அனுபவம் உண்டாக வேண்டுமானாலும், அதற்கு இடைப்பட்ட
கருவியாக மனம் ஒன்று அவசியம் என்று தெளிவுபடுத்துகின்றது.
சிலர் கூறுவார்கள்
புலன்களின் வாயிலாக அனுபவப்படுகின்றேனே என்று, அதையும் ஏற்க முடியாது எப்படி
எனில், கண்கள் ஒரு பொருளை பார்த்தும் மனம் அதனை கவனிக்காமல் விட்டு விட்டு வேறு
சிந்த்னையில் இருப்பின், அந்த பொருளை அனுபவப்பட முடியாது.
இதுபோன்றே மற்ற
புலன்களான காது, மூக்கு, நாக்கு என்று அனைத்துமே மனதைக் கொண்டே அனுபவிக்கின்றது.
ஆதலால், மனம்
கவனிக்காவிடில், அந்தப் பொருளைப் பற்றிய அறிவு உண்டாக வாய்ப்பு இல்லாமல்
போகின்றது.
ஆகவே, பொதுவாக
ஒன்றைப்பற்றிய ஞானம் ஒருவனுக்கு உண்டாக வேண்டுமானால், எதையாவது ஒன்றைச் சார்ந்தே
அவனுக்கு ஞானம் உண்டாகின்றது.
அது புலன்களினாலோ,
மனதினாலோ மட்டுமே உண்டாக முடியும். அதாவது, எதையாவது ஒன்றைச் சார்ந்தே அந்த ஞானம்
உண்டாகின்றது.
அதுவே அவனுக்கு அனுபவமாகின்றது.
அப்படியானால், எதையும்
சாராமல் ஒன்று அனுபவிக்கக்கூடிய வகையில் இருக்கின்றதா?
என்றால்,
ஆம், அதுமட்டுமே
இருக்கின்றது.
அதுவே “ஆத்மா”
என்று அழைக்கப்படுகின்றது.
அது எதையும்
சார்ந்து இருப்பதில்லை.
ஆனால்,
இருக்கக்கூடிய மற்றவைகள் அனைத்தும் அந்த ஆத்மாவைச் சார்ந்தே இருக்கின்றன.
ஆத்மா
இருக்கின்றது என்பது அனைவருக்கும் அனுபவ உண்மை!
எப்படி?
ஒருவன்
“நான் இருக்கின்றேன்”
என்று கூறுவதில் சந்தேகம்
கொள்வானா?
ஒரு
இருட்டு அறையில் இருக்கின்ற ஒருவனுக்கு எதையுமே, புலன்களாலும், மனதினாலும் அறிய முடியவில்லை
என்றாலும், “நான்” இருக்கின்றேன் என்ற உணர்வு அவனிடம் நிச்சயமாக
காணப்படும்.
அந்த “நான்” என்பது எது?
வேதாந்த
சாஸ்திரங்கள் அனைத்துமே முடிவில் இந்த “நான்
யார்?” என்று அறிந்து கொள்வதற்காகவே இத்தனை உபதேசங்களையும் கூறுகின்றது.
அதாவது, சூரியன்
எப்பொழுதுமே இருக்கின்றது, ஆனால், மேகம் மறைத்துக் கொள்ளும் போது அதன் பிரகாசம் இல்லாமல்
போவதாகத் தோன்றுகின்றது.
சூரியனை
மறைத்துக் கொண்டிருக்கின்ற மேகம் நீங்கினால், சூரியன் பிரகாசமாகத் தெளிவாகத் தெரிவது
போன்று, ஆத்மாவை அறிய விடாமல் மறைத்துக் கொண்டிருக்கின்ற அறியாமை என்ற தவறான புரிதல்
நீக்குவதன் வாயிலாக ஆத்மாவின் பிரகாசத்தை அறிந்து கொள்ள முடியும்.
சூரியனின்
பிரகாசத்தை மறைத்துக் கொண்டுள்ள மேகம் காற்றினால் விலக்கப்படும் பொழுது எவ்வாறு பிரகாசமாக
வெளிச்சம் வெளிப்படுகின்றதோ அதுப்போல, ஆத்மாவை மறைத்துக் கொண்டுள்ள அறியாமை நான் யார்?
என்ற விசாரணை மூலமாக விலக்கப்படும் பொழுது, அங்கு அறிவு அனுபூதியாக பிரகாசிக்கின்றது.
அதாவது,
இவ்வாறு நான் யார்? என்று விசாரித்து அறியும் போது, அறியாமை அகன்று, தன்னுடைய உண்மை
சொரூபம் வெளிப்படுகின்றது.
இந்த
ஆத்ம அனுபவம் உண்டாவதற்கு எந்தவித புற இந்திரியங்களின் உதவியோ, அல்லது அந்தக்கரணங்களின்
உதவியோ இன்றி இயல்பிலேயே அதுவாகவே இருக்கின்றோம் என்பதை இந்த நூலின் வாயிலாக அதை அனுபவமாக
அறிவதற்குத் தேவையான சாதனங்களையும், விளக்கங்களையும் “அபரோக்ஷ அனுபூதி” என்ற ஒரு நேரடி அனுபவமாக ஸ்ரீ சங்கராச்சாரியார்
கொடுக்கின்றார்.
இந்த
அபரோக்ஷ அனுபூதி என்ற நூலில் 144 ஸ்லோகங்களின் வாயிலாக விளக்கமாக கூறுகின்றார்.
ஆத்மா
பற்றிய உபதேசத்தைக் கேட்டு அந்த அறிவு நம் மயமாகும் போது நாம் பெற்ற அறிவு அனுபூதியாக
மாறுகிறது.
இந்நூலில்
நாம் பெற்ற ஞானத்தை அனுபூதியாக்கும் உபாயம் கூறப்பட்டுள்ளது.
பெற்ற
ஞானம் ஞான நிஷ்டையடையும் போதுதான் ஞானத்தின் பலனான மோக்ஷம் கிட்டுகிறது.
ஆத்மா
பற்றி நாம் அடையும் ஞானத்துக்குப் பகைவன் நமது சம்ஸ்காரங்களும், வாசனைகளும்தான் என்பதை
அறிந்து அந்த தடையை நீக்க நாமே முயற்சிக்க வேண்டும். முயற்சி தீவிரமாகும் போது ஞான
நிஷ்டை எளிதில் சித்திக்கும்.
அனுபூதி
என்பதற்குத் தடையில்லாத ஞானம் என்று பொருள்.
அபரோக்ஷம்
என்ற சொல்லுக்கான விளக்கத்தைப் பார்ப்போம்.
அக்ஷம்
என்ற சொல்லுக்குப் புலன்கள் என்று பொருள். பரோக்ஷம் என்பதற்குப் புலன்கள் தாண்டி இருப்பது
என்றும், ப்ரத்யக்ஷம் என்பதற்குப் புலன்களின் எல்லைக்குள் இருப்பது என்றும் பொருள்.
ஆனால்,
அபரோக்ஷம் என்னும் சொல்லுக்கு புலன்களின் தேவை இன்றி சுயமாக விளங்கும் ஒரு பொருளைக்
குறிக்கிறது.
பார்க்கப்படுவதும்
அல்லாத, பார்க்க இயலாததும் அல்லாத பிரம்மத்தையே அபரோக்ஷம் என்ற சொல் குறிக்கிறது.
அதுவே
பிரம்மம் என்றும், இரண்டற்றது என்ற அத்வைதம் என்றும் குறிக்கப்படுகிறது.
பிருஹதாரண்யக
உபநிஷத்தில் அபரோக்ஷம் என்ற சொல்லுக்கு ஆத்மா என்று பொருள் சொல்லப்படுகிறது.
அபரோக்ஷ
அனுபூதி நூற்றி நாற்பத்து நான்கு ஸ்லோகங்களில், பதினோரு ஸ்லோகங்கள் வேதாந்த அறிமுகத்துக்காக
ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
பிறகு
த்வம் பத விசாரமும், இந்த உலகத்தை மித்யா என்று புரிந்து கொள்வதும், ராஜயோகம் என்ற
தலைப்பில் தியானமும் விளக்கப்படுகின்றன.
ஆத்ம
ஞானத்தினுடைய தன்மையும், ஞானி இந்த உலகத்தை எவ்வாறும் பார்ப்பான் என்பதும் விளக்கப்படுகின்றன.
நூல் ஒரு
பிரார்த்தனை ஸ்லோகத்துடன் துவங்குகிறது.
நூலாசிரியர்
தான் துவங்கிய இந்த நூல் நல்லமுறையில் இயற்றி முடிக்கப்பட வேண்டும் என்பதே பிரார்த்தனையினுடைய
தலையாய நோக்கம் ஆகும்.
இதற்கு கிரந்த
சமாப்தி என்று பெயர்.
பிரார்த்தனை
ஒரு கர்மம் ஆதலால் நூல் இயற்றுவதில் ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை அது நீக்கும்.
அதே
நேரம் இந்த நூலைப் பயிலும் மாணவர்களுக்கு, அவர்கள் வாழ்வில் எதைச் செய்தாலும் பிரார்த்தனையுடன்
ஆரம்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவதற்காகவும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
பிரார்த்தனையின்
மூன்றாவது பலன் படன சமாப்தி.
அதாவது
இதை பயிலும் மாணவர்கள் இந்நூலை நன்முறையில் பயின்று முடிக்க வேண்டும் என்பதாகும்.
பிரார்த்தனை மூன்று விதத்தில் செய்யப்படுகின்றது.
முதலில்
சகுனப் பிரம்மமாகவுள்ள தனது இஷ்ட தேவதையை நோக்கியும், இரண்டாவது இந்த உலகின் முழுமையான
காரணமாக சமஷ்டி தத்துவமாக உள்ள ஈஸ்வரனை நோக்கியும், இறுதியில் நமக்கு ஆத்ம தத்துவத்தை
போதிக்கும் குருவை நோக்கியும் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
பிரார்த்தனை
ஸ்லோகம்
=================
ஸ்ரீஹரிம் பரமானந்தம் உபதேஷ்டார மீஸ்வரம்
வ்யாபகம் சர்வ லோகானாம் காரணம் தம் நமாம்யகம்
பொருள்:
------------
என்
இஷ்ட தேவதையாகவும், குருவாகவும், எங்கும் நிறைந்தவராகவும் உள்ளவரை வணங்குகிறேன்.
ஸ்ரீ என்ற
சொல்லுக்கு லக்ஷ்மி என்று பொருள்.
ஆனால்,
லக்ஷ்மி என்றால் செல்வம் என்றே பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.
அஷ்ட
லக்ஷ்மிகளில் அவரவருக்குத் தேவையானதை அடைவதே “செல்வம்” என்று பொருள்படும்.
ஆதலால்,
இங்கு செல்வம் என்று குறிப்பிடுவது வித்யாலக்ஷ்மியான ஆத்ம வித்தையை மட்டுமே.
மோக்ஷத்தை
அடைய விரும்புபவர்களுக்கு இங்கு செல்வம் ஆத்ம வித்யை ஆகும்.
ஹரி
என்றால் அறியாமையை நீக்குபவர் என்று பொருள்.
“பிரம்ம
வித்யயா அஞ்ஞானம் ஹரதி இதி ஸ்ரீ ஹரி”
அஞ்ஞானத்தை
அழித்து பிரம்மஞானம் என்னும் செல்வத்தை வழங்குபவரே ஸ்ரீஹரி ஆவார்.
பரமானந்தம்
என்றால் ஸ்ரீஹரியின் சொரூபமே மேலான ஆனந்தம் என்பது பொருள்.
உபதேஷ்டாரம்
என்பது ஈஸ்வரனாகவே இருக்கும் குருவைக் குறிக்கிறது.
குரு
உபதேசிக்கும் வார்த்தைகளில் சிரத்தை வருவதற்காகவே குருவிடம் அளவற்ற மதிப்பு காட்டப்படுகிறது.
ஈஸ்வரம்
என்ற சொல்லின் மூலம் இந்த உலகின் நிமித்த காரணமாக இருப்பவரும், வ்யாபகம் சர்வலோகானாம்
என்ற சொற்றொடரின் மூலம், உலகின் உபாதான காரணமாக இருப்பவரும் “ஈஸ்வரன்” என்று குறிப்பிடப்படுகிறார்.
இனி இந்த
“அபரோக்ஷ அனுபூதி”
என்ற இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ள
144 சமஸ்கிருத மூல ஸ்லோகங்களை ஒவ்வொன்றாகப்
படித்து, அதன் விளக்கமான பொருளை எளிய தமிழ் மொழியில் அறிந்து கொள்ளலாம்.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.