திங்கள், 22 அக்டோபர், 2018

கல்வி



கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக.

(அதிகாரம்:கல்வி குறள் எண்:391)




'கற்பவை' என்பது, அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவதற்காக மட்டுமேயன்றி பிற தேவையற்ற அறிவைப் பெறுவதற்காக அல்ல. அதை முதலில் நீ புரிந்து கொள்ள வேண்டும்.


கற்பவற்றில் தேவையற்றவற்றை நீக்கி மேற்சொன்ன நான்கு பெரும் செல்வங்களான இலட்சியத்தை அடையவே உண்மையில் “நீ” கற்றல் வேண்டும்.


இந்த நான்கு விஷயங்களையும் “புருஷார்த்தம்” என்று சாஸ்திரம் முறைப்படுத்தி அவைகளை, சமஸ்கிருதத்தில் தர்ம:, அர்த்த:, காம:, மோட்ச: என்று அழைக்கின்றது.


இதனை அழகிய தமிழில் அறம், பொருள், இன்பம், வீடு என்றும் நான்கு இலட்சியங்களாக வகைப்படுத்திக் கொள்கின்றது.


புருஷன் + அர்த்தம் என்பது புருஷார்த்தம் ஆகின்றது. அதாவது ‘புருஷன்’ என்றால் மனிதன் என்றும், ‘அர்த்தம்’ என்றால் இலட்சியம் என்றும் பொருள் உணர்ந்து கொண்டு இதனை “மனிதனின் இலட்சியம்” என்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நீ, இதை உன்னுடைய இலட்சியமாக புரிந்து கொள்ள வேண்டும்.


இதில் நீ முதலில் உன்னுடைய வாழ்வாதாரத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை அடைவதற்காக பெரும்பாடு படுகின்றாய் என்றால், அவைகளில் உண்ண உணவு, உடுக்க உடை மற்றும் வசிக்கும் இடம் என உன்னுடைய தேவைகளை நீயே  பூர்த்தி செய்துகொள்ள, அவைகளை தேடி நிச்சயம் அடைந்தாக வேண்டும்.


இவைகள் அனைத்தும் நீ வாழத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் ஆகும். இதனை சாஸ்திரம் “அர்த்த:” அல்லது தமிழில் “பொருள்” என்று அழைக்கின்றது.


நீ, பொருளை முதலில் நாடுவதற்குக் காரணம், என்னவெனில் மற்ற ஜீவராசிகளைப் போன்றே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவைகள் தங்கள் உணவுக்காக இங்கும், அங்கும் அலைவதைப் போன்றே, நீயும் உன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருப்பதினால், முதலில் பொருள் பற்று கொண்டு, இன்றைய காலத்திற்கு ஏற்ப பணத்தை சம்பாதித்து, அந்தப் பணத்தைக் கொண்டு உணவையே நாடுகின்றாய். உன்னுடைய வயிறு நிறைந்த பிறகுதான் நீ மற்ற விஷயங்களில் நாட்டம் கொள்கின்றாய்.


மற்ற உயிரினங்களைப் போன்றே மனிதனாகிய உனக்கு மட்டும் இது விதி விலக்கல்ல. ஆனால், என்ன ஒரு பெரிய வித்தியாசம் என்றால், அவைகள் வயிறு நிறைந்ததும், அடுத்த வேலைக்குத் தேவையான உணவைக் கூட சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் திருப்தியாகச் சென்று விடுகின்றன.


ஆனால், மனிதனாகிய நீ மட்டும் உன்னுடைய வயிறு நிறைந்து விட்டது, உடுக்க உடை வந்து விட்டது, இருக்க இடம் கிடைத்து விட்டது என்றாலும், நீ  முழு திருப்தி அடைந்து விடுவதில்லை. இன்னும், இன்னும் வேண்டும் என்ற சுய நலத்தினால், உனக்கும், உன்னைச் சார்ந்தவர்களுக்கும் மேலும், மேலும் தேடுகின்றாய்.


உண்மையில் நீ திருப்தி அடைந்து விட்டால், அடுத்த ருசியை நாடி இன்னும் சில போகப் பொருட்களை விரும்ப மாட்டாய்.


ஆனால், நீ வயிறு நிறைந்து விட்டாலும், நாக்கின் ருசிக்காக இன்னும் சில திண்பண்டங்களை சாப்பிடுகின்றாய், உன்னுடைய மானத்தைக் காக்கும் உடை கிடைத்து விட்டாலும், ஊர் பகட்டிற்காக சில பட்டாடைகளை உடுத்துகின்றாய். உனக்கு வசிக்க இடம் கிடைத்து விட்டாலும், மேலும் சில கட்டிடங்களைக் கட்டி அதை அதிக வாடகைக்கு விட்டு மேலும், மேலும் “பொருள்” சம்பாதிக்க விரும்புகின்றாய்.


நீ ஏன் இப்படிச் செய்கின்றாய் என்றால், உன்னுடைய உடல் சுகத்தைக் கடந்து, உனது உள்ளச் சுகத்தை விரும்பி, மனம் போன போக்கில் அதிக ஆசை வயப்படுவதினாலேயே, உன்னால் உண்மையான சுகம் எது? என்று அறிய முடியாமல் போகின்றது.


இதிலிருந்து அத்தியாவசியப் பொருளீட்டுவதினாலேயே நீ திருப்தி அடையாமல், உண்மையான சுகத்திற்காகவே அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றாய். ஆனால், அந்த உண்மைச் சுகம் எது? என்று தெரியாமல், உன்னுடைய வாழ் நாளில் (அர்த்த:, காம:) “பொருள்” மற்றும் “இன்பம்” அடைவதிலேயே இந்த இரண்டு இலட்சியங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன.


இது போன்ற அடிப்படைத் தேவைகளில் வாழ்ந்து, அதனது இன்பங்களை பழகிவிட்ட பிறகு, நீ அதிலிருந்து கீழ் நிலை வாழ்க்கைக்கு செல்ல முடிவதில்லை. சில பொருட்களும், இன்பங்களும் உன்னை அடிமைப்படுத்தி வைத்துக் கொள்வதினால், உன்னால் அதிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கின்றாய்.


இந்த இன்பம் எங்கு உன்னிடமிடமிருந்து விலகி விடுமோ என்ற பயத்தினால் நீ உன்னுடைய எதிர்காலத்திற்காக திட்டமிடவும் செய்கிறாய். அந்த எதிர்காலத்திற்கு திட்டமிடல் என்பது, நீ உன்னையும், உன்னைச் சார்ந்த உறவுகளையும் மட்டுமே பார்க்கின்றாய். உனக்காகவும், அவர்களுக்காகவும் பொருள் சேர்க்க விரும்பி சுய நலத்துடன் சுகமாக வாழ விரும்பி எதையும் செய்ய ஆசைப்படுகின்றாய். ஏன் இந்த அவல நிலை உன்னிடையே உண்டானது என்பதை நீ அறிய மறுக்கின்றாய்.


கற்ற கல்வியை புரிந்து கொள்ளாமல், அந்த கல்வியின் வாயிலாக அறிந்து கொண்ட நல்ல விசயங்களை நடை முறைப்படுத்த முடியாமல் உன்னை தடுப்பது எது? என்பதை என்று நீ அறிகின்றாயோ, அன்றே நீ உன்னை அறிந்தவனாகின்றாய்.



என்று நீ உண்மையில் உன்னை அறிகின்றாயோ, அன்றே நீ கற்றதினால் முழுமையடைகின்றாய். இனி, கற்பதற்கு எதுவுமில்லாமல், நீ என்றும், எக்காலத்திலும் முழுமையானவனாகின்றாய். 

ஓம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்