புதன், 27 ஜூலை, 2022

ஸத்ய தத்துவம்

 

ஸத்ய தத்துவம்

 


ஸத்ய தத்வத்தை மறைத்து த்வைதக் காட்கிகளையும், அநுபவங்களையும் உண்டாக்கும் சக்தியைத்தான் மாயை என்கிறோம்.

     அந்த ஸத்யமான ஆத்ம தத்வத்துக்கு அந்நியமான வஸ்துவே கிடையாதாதலால், இந்தக் காட்சிகள், அநுபவங்கள் எல்லாம் அதனுடைய வேஷங்கள்தான்.

     ஸத்ய தத்வத்தை மறைப்பதை ஆவரணம் என்றும், அந்த ஒன்றையே பல வேஷங்களில் காண்பிப்பதை விக்ஷேபம் என்றும் சொல்வார்கள். 

மாயைக்கு ஆவரணம் - விக்ஷேபம் என்ற இரண்டு சக்திகள் இருக்கின்றன. 

இப்படி மாயாவி போன்று பல வேஷங்கள் போடுபவன்தான் ஈஸ்வரன். 

அதாவது, ப்ரஹ்மமே மாயையோடு கூடி ஈஸவரனாகி, த்வைதங்கள் நிறைந்த இந்த ஜகத்தைத் தன்னிலேயே தோற்றுவித்துக் கூத்தடிக்கிறது. 

அதாவது, ப்ரஹ்மம் என்றால் அது ஆத்மாதான். 

ஜீவனுக்கு மூலம் என்ன என்று பார்க்கும்போது 'ஆத்மா' என்று கூறுகிறோம். 

ஜகத்துக்கு மூலம் என்ன என்று பார்க்கும்போது "ப்ரஹ்மம்" என்று கூறுகிறோம். 

இதிலே, ஜீவ மூலமும், ஜகத் மூலமும் ஒன்றுதான். 

அதாவது, ப்ரஹ்மம் ஒன்றிலிருந்தேதான் ஜீவ - ஜகத்துக்கள் தோன்றியிருக்கின்றன. 

ஜீவனுக்கு ஆதாரமான ஆத்மாவுக்கு அந்நியமாக எதுவுமில்லை என்று கூறியபிறகு, ப்ரஹ்மம் மட்டும் அவைகளுக்கு வேறாக இருக்கமுடியுமா? 

ஆக, ஆத்மாவும் ப்ரஹ்மமும் ஒன்றேதான். 

ஆனாலும், அந்த ஒரே ஸத்ய வஸ்து ஜீவனை மட்டும் குறிக்கும்போது, அது ஆத்மா என்றும், எத்தனையோ லக்ஷக்கணக்கான ஜீவராசிகளும், கோடானு கோடி வஸ்துக்களையும் கொண்டதான ஜட ப்ரபஞ்சமும் அடங்கிய ஜகத்தைக் குறிக்கும்போது, ஈஸ்வரன் என்றும் கூறப்படுகின்றது. 

இதிலே, ஆத்மா என்றாலும், ஜீவன் என்றாலும், ஈஸ்வரன் என்றாலும், இந்த நாம, ரூபங்கள் உண்டாக, உள்ளது எதுவோ, அதுவே ப்ரஹ்மம். 

அதுவே ஸத்யம்.

 

 

ஓம் தத் ஸத்!

 

 

மதிப்பு யாருக்கு?

        ஞானி ஒருவர், தன்னிடமிருந்த தங்க மோதிரமொன்றை அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து, தூக்கிக்காட்டியவாறு, இது சுத்தமான 22 காரட் தங்கத்தினாலான மோதிரம்.

        இதனை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் யார்? என அங்கு குழுமியிருந்தவர்களிடம் கேட்டார்.

        மக்களின் கைகள் ஒவ்வொன்றாய் உயரத் தொடங்கின.
        பின்னர் அவர் மெழுகுவர்த்தி யொன்றை எரியச் செய்து, குறடு ஒன்றின் உதவியுடன் அந்த மோதிரத்தை மெழுகுவர்த்தியின் தீச்சுவாலையில் பிடித்தார்.
        சிறிது நேரத்தில் புகைக்கரி பட்டு, அம்மோதிரம் முற்றிலும் கறுப்பாக மாறியது.
        இப்போது இதனைப் பெற்றுக் கொள்ள யார் விரும்புகிறீர்கள்?" எனக் கேட்டார்.
        அங்கு குழுமியிருந்த அனைவருமே கைகளை உயர்த்தினர்.
        நல்லது!
        நான் செய்வதை "இன்னும் கொஞ்சம் கவனியுங்கள்" என்று கூறிய ஞானி, தனது கையிலிருந்த மோதிரத்தை கீழே போட்டுப் பாதணியினால் மிதித்து நன்றாக தரையில் அழுத்தித் தேய்த்து அதை ஒடுக்கினார்.
        பின்னர், அதனை உயர்த்தி பிடித்து, கருகிய, கோணல், மானலாக இருக்கும் இதனைப் பெற விரும்புபவர் யாராவது உண்டா? எனக் கேட்டார்.
        அப்போதும் அங்கிருந்த அதிகமானோர் கைகளை உயர்த்தினர்.
        சரி, இப்போது "நான் செய்வதை பாருங்கள்!" எனக் கூறிய அவர் அந்த மோதிரத்தைக் கீழே போட்டு ஒரு சுத்தியலால் அடித்து உருக்குலையச் செய்தார்.
        அவ்வாறு உருக்குலைந்து போன அந்த மோதிரத்தைத் தூக்கிப் பிடித்த அவர் இனிமேலும், "யாராவது இதனை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா?" என்று கேட்டார்.
        அப்போதும், அதன் உருவத்தின் மீது ஆர்வம் கொள்ளாமல், அந்த தங்கத்தின் மதிப்பிற்காக, முன்போலவே பலரும் தங்கள் கைகளை உயர்த்தினர்.
        பின்னர் அவர் அங்கிருந்தவர்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்:
        அன்பர்களே! உங்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை வழங்குவதற்காகவே நான் இதனைச் செய்தேன்.
        பாருங்கள்!
        நான் இந்த மோதிரத்துக்கு என்ன ஆக்கினை செய்த போதிலும், நீங்கள் அதனைப் பெற்றுக்கொள்ளவே விரும்புகிறீர்கள்.
        ஏனெனில், நான் கொடுத்த வதைகளினால், இந்த மோதிரத்தின் உருவத்தில்தான் மாற்றம் உண்டானதே தவிர, அதன் மதிப்பீட்டில் எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடவில்லை.
        இதைப்போன்றுதான், உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக அல்லது நீங்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் காரணமாக உங்கள் மீதும் கரி பூசப்படலாம்.
        நீங்கள் கீழே போட்டு மிதிக்கப்படலாம்.
        அல்லது அடித்து நொறுக்கப்படலாம்.
        இந்த மாதிரியான நிலைமைகளில் நீங்கள் உங்களைப் பற்றித் தாழ்வாக மதிப்பிட்டுவிடக் கூடாது.
        ஏனெனில், அப்படி என்ன நடந்தாலும், உங்கள் உண்மையான பெறும் மதிப்பு, ஒருபோதும் குறையாது.
        காரணம், நீங்கள் உண்மையில் இந்த உடலுக்காக மதிக்கப்படவில்லை.
        உங்களிடம் உள்ள உயிருணர்வுக்காகவே மதிக்கப்படுகிறீர்கள்.
        ஆம்! வந்து, தேய்த்து போகின்ற உருவத்திற்கு முக்கியத்துவம் கிடையாது.
        எனவே, உடற்பற்றைக் கடந்து, அந்த உடலுக்கு ஆதாரமான உணர்வுக்குத்தான் உலகில் மதிப்பு உள்ளது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
        ஆகவே, மற்றவர்களின் உணர்வுக்கும் மதிப்பு கொடுக்க மறந்து விடாதீர்கள்!
        மதிப்பு, மரியாதை எல்லாம், அந்த மகத்தான உணர்வுக்குத்தான்.
        உணர்வாகிய உயிர் இல்லாத உடலை யார் மதிப்பார்கள்...?
        ஆக,
        "உணர்வே இறைவன்"
        மதிப்பு, மரியாதை எல்லாம் அந்த உணர்வுக்கே உரித்தானது.

                                நன்றி 🙏

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்