புதன், 21 அக்டோபர், 2020

வெட்டவெளி இரகஷியம்

              



                எதனுடனும் மதிப்பிடமுடியாத மகத்தான பூஜ்ஜியமே பூரணம், அந்த பூரணமே ப்ரஹ்மம். ப்ரஹ்மமே வெட்டவெளி. அந்த வெட்ட வெளியே “நான்” என்று அறிந்துக் கொண்டால், அந்த அறிவே ‘சித்’. அது நடனமாடும் உணர்வுவெளிதான் (அம்பலம்). அதுவே சிற்றம்பலம்.

            இதைத்தான், சித்தாகிய இறைவன் (திரு) நடனமிடும் ஆகாயமே (அம்பலமே) ‘திருச்சிற்றம்பலம்’ என்று அறிக.
            அதைவிடுத்து, வெறும் வாய் வார்த்தையினால், ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறிக் கொண்டிருப்பது இறைவனை அறியாத மூட பக்திக்கு ஒப்பாகும்.
            இந்த அறிவு ஆகாசத்தில் (சிதாகாசத்தில்) விழித்துக் கொண்டவருக்கு, உள்ளும், புறமும் ஒன்றேயான ‘வெட்டவெளி’ மட்டும்தான் முழுமை.
            அந்த முழுமையே இறைவன். அந்த இறைவன் சொரூபமே என் உண்மைச் சொரூபம் என்று அறிய முடியும்.
            வெட்டவெளி பூஜ்ஜியம், சூன்யம், ப்ரஹ்மம், அறிவு என்பதெல்லாம் வெறும் நாமங்கள் (பெயர்கள்) மட்டுமே.
            நாமங்களிலும், ரூபங்களிலும் சிக்கிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து, அந்த ஏக இறைவனை நம் நேரடி அனுபவமாக்குவது எவ்வாறு? என்று அறிவதே பகுத்தறிவு படைத்த மனித தேகத்தின் மகத்துவம் என்றும் அறிக.
            நாமமும், ரூபமும் இல்லாத அந்த அன்பு உணர்வு வெளிப்படுகின்றது அல்லவா? அது மட்டுமே தூய்மையான பேருணர்வு. அதுவே சத்தியம், நித்யம், அனந்தம், அகண்டம், ஆனந்தம்.
            அந்த உணர்வு மையம் விழிப்படைய வேண்டுமானால், தனக்கு வேறாக எதுவுமே இல்லை என்ற, இருமைகள் அற்ற அபேத அன்பே, உண்மையான தூய அன்பு. அந்த அன்பு வெளிப்படுவதே ஆன்மாவின் நேரடி அனுபவம்.
            அது நம்முடைய இயல்பு, அது நம்முடைய சொரூபம். அது நம்முடைய உணர்வு. அது நம்முடைய அறிவு.
             நமக்கு வேறாக எதுவுமே கிடையாது. இருப்பதாகத் தெரிவதெல்லாம் உள்ளுணர்வின் அறிவுப் பிரகாசம். அதாவது, அனைத்தையும் அறியும் அறிவு. அதுவே நான்.
            அந்த “நான்” இருப்பதினாலேயே, அனைத்தையும் அறிய முடிகின்றது.
            அதாவது எனது உணர்வு மையமே அவ்வாறு அனைத்தையும் என்னுள்ளேயே அறிகின்றது. அது எனக்கு வேறாக எப்பொழுதும் இல்லை.
            இதை ஒரு எளிய உதாரணத்தின் முலம் அறியலாம்.
            அதாவது, ஒன்றுமற்ற வெள்ளைத்திரை ஒன்று உள்ளது. அதற்கு அசைவுகள் ஏதும் கிடையாது.
            ஆனால், அதன்மீது ப்ரொஜெக்டரில் இருந்து வெளிப் படுகின்ற படம் ஓடுகின்றது, அது வெள்ளைத் திரையில் பிம்பிக்கின்றது. அதிலேயே அனைத்து காட்சிகளுமே காணப்படுகின்றது.
            அதாவது, சண்டை, சோகம், காதல், கோபம், அன்பு, மகிழ்ச்சி என பலவாறான தோற்ற மாயைகள் அந்த திரையில் பிம்பிக்கின்றது.
            ஆனால், அவைகளால் அந்த திரை ஒருபொழுதும் பாதிக்கப்படாது. மேலும், அந்த அனுபவங்கள் எதுவுமே அந்த ஒன்றுமற்ற கலங்கமற்ற திரையினுடைய சொந்த அனுபவங்கள் கிடையாது.
            அந்த கலங்கமற்ற வெள்ளைத் திரை எதனாலும் பாதிக்கப்படாதது. தூய்மையானது. தன்னில் தானாய் இருப்பு கொண்டுள்ளது. அது இருப்பதினால்தான் அதன் மீது படம் ஓடுகின்றது.
            இதுவரை கூறப்பட்டது, ஒரு திரையரங்கத்தில் உள்ள ஜடமான வெள்ளைத் திரையைப் பற்றியதாகும்.

            இனி, ஆன்மா என்றொரு வெள்ளைத்திரை உள்ளது. அதற்கு அசைவுகள் ஏதும் கிடையாது.
            ஆனால் அதற்கு அறிவு உண்டு. அதன் வயிலாகவே, அதன்மீது ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்கள் என்ற பிலிம் ரோல்கள் வாயிலாக, மனம் என்ற ப்ரொஜக்டரில் இருந்து படங்கள் (எண்ணங்கள்) வெளிப்படுகின்றது.
            அந்த ஆன்மா என்ற கலங்கமற்ற, தூய்மையான வெள்ளைத்திரையின் மீது அந்த படங்கள் ஓடுகின்றது,
            அதிலே காட்சிகள் விரிகின்றது. சண்டை, சோகம், காதல், அன்பு, மகிழ்ச்சி என பலவாறான தோற்ற மாயைகள் அந்த வெள்ளைத் திரையில் பிம்பிக்கின்றது.
            ஆனால், அவைகளால் அந்த வெள்ளைத் திரை ஒருபொழுதும் பாதிக்கப்படாது.
            மேலும், அந்த அனுபவங்கள் எதுவுமே அந்த ஒன்றுமற்ற கலங்கமற்ற திரையினுடைய சொந்த அனுபவங்கள் கிடையாது.
            அந்த கலங்கமற்ற வெள்ளை நிறமுடைய ஆன்மத் திரையோ எதனாலும் பாதிக்கப்படாதது, தூய்மையானது. அது தன்னில் தானாய் இருப்பு கொண்டது. அது இருப்பதினால்தான் அதன் மீது மனம் என்ற எண்ணங்கள் படமாக ஓடுகின்றது.
            ஆனால், இந்த ஆன்மத் திரை அறிவுடையது, உணர்வுடையது. ஆதலால், இதற்கு வேறாக எதுவுமே அங்கு திரையிடப்பட முடியாது.
            அனைத்தையும் அது சாக்ஷியாகப் பார்த்துக் கொண்டே இருக்கின்றது. அனைத்து அனுபவங்களும் அந்த ஆன்ம திரைக்கு உண்டாவதுப் போன்று காணப்படுகின்றது.
            ஆனால், அதற்கு உண்டாகும் அனுபவங்கள் அனைத்துமே அதன் மீது ஏற்றிவைக்கப்பட்ட ப்ரொஜெக்டரில் இருந்து (மனதில்) வெளிப்படுகின்ற படங்களைச் சார்ந்தது.
            ஆனால், அந்த படங்கள் அந்த ஆன்மாவை (திரையை) பாதிக்காது.
            அந்த வகையிலே, இங்கும் அந்த மனமே அன்பு (பக்தி) செய்கின்றது. அந்த அன்பு (பக்தி) சுய நல அன்பாக இருந்தால், அந்த மனம் தன்னை அறிய முடியாமல் அல்லல் படுகின்றது.
            அதுவே, தனக்கு வேறாக ஒன்றுமே இல்லை என்ற அடைந்த அறிவால், அதாவது ஆத்ம ஞானத்தின் வாயிலாக, அதே மனம் தனக்கு வேறாக எதையும் பார்க்காமல், அனைத்தையும் தன்னில் தானாய்ப் பார்த்து, அவைகளை அன்பு செய்கின்ற பொழுது, அந்த பக்தி இரண்டற்ற அநன்ய பக்தியாக மாறிவிடுகின்றது.
            இந்த அன்பினாலேயே, அதாவது இந்த அநன்ய பக்தியினாலேயே, ஆன்மாவிற்கு வேறாக பிரதிபிமித்த மனம் மீண்டும் அந்த ஆன்மாவிலேயே தன்னில் தானாய் கரைந்து விடுகின்றது.
            அதன் பிறகு அங்கே, இருப்பு கொண்டிருப்பது வெறுமையான, வெள்ளையான, ஒன்று மற்ற வெட்டவெளி என்ற ஆன்மா (திரை) மட்டுமே. அதற்கென்று, எந்த ஒரு அனுபவமும் கிடையாது.
            அது அசைவற்றது. அனைத்தையும் தனக்கு வேறாக பிரதிபிம்பித்துப் பார்க்கின்ற அறிவு மட்டும் உடையது.
            அதுவே இறைவன்! அதுவே ஆன்மா! அதுவே நான்!
            இதுவே ஆன்ம அனுபவம், இதை அடைவதே ஆனந்தம்.
            இதை அறிவதே அறிவு.


ஓம் தத் சத்!

வியாழன், 8 அக்டோபர், 2020

குருவாய் வருவாய்


சாஸ்திரத்தின் வாயிலாக உபதேசித்து, தன்னை தனக்குக் காட்டிக் கொடுத்த ஆத்ம ஞானம் என்ற மிகப் பெரிய சொத்தை கொடுத்த சத் குருவிடம், ‘எவனுக்கு ஈஸ்வரனிடம் உத்தம பக்தி இருக்கின்றதோ, அதைப்போன்றே மாறாத உத்தம பக்தி சத்குருவிடமும் வைக்கப்படுகின்றதோ, அந்த மஹாத்மாவுக்கு மட்டுமே தத்வார்த்தங்கள் எல்லாம் தானாகவே பிரகாசிக்கும்’ என்பதை, ஸ்வேதாஸ்வதர உபநிஷத்து மற்றும் குரு கீதை என இரண்டிலும் கூறப்பட்டுள்ளது.

அந்த ஸ்லோகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யஸ்ய தேவே பராபக்திர் - யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந: ||

 


புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்