புத்தகம் 👈
புத்தகம் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
நூல் விளக்கம்
இந்த நூலின் தலைப்பு “நாநா சீவ வாதக் கட்டளை” என்று
இருப்பதற்குக் காரணம், ஆன்ம சொரூபமான தன்னிடத்தில் அறியாமையினால், தன்னை, கர்தா, போக்தா,
ஞாதா என்றவாறு, அதாவது செயல் செய்பவன், செயலை அனுபவிப்பவன், அனைத்தையும் அறிந்தவன்
என்ற பல வாறான (நாநாவித) சீவ தத்துவங்களை தன் மீது ஏற்றி வைத்துக் கொண்டு, தன்னை ஆணவம்,
கன்மம், மாயை போன்ற மலங்களினால் சூழப்பட்டு, தன் உண்மை சிவ சொரூபத்தை பிரகாசிக்க முடியாமல்
களிம்பு ஏறிய களங்கத்துடன் சீவர்கள் காணப்படுகின்றார்கள்.
எவ்வாறு, தங்கம் போன்று பளபளப்பாக மின்னக்கூடிய பிரகாசமான செம்பு,
களிம்பு ஏறியவுடன் கறுத்து காணச் சகியாதவாறு, தன் உண்மைப் பிரகாசமான, இயல்பு சொரூபத்தை
இழந்து காணப்படுகின்றதோ, அவ்வாறே இந்த சீவர்களும் அறியாமையினால் தங்கள் மீது ஏற்றி
வைத்துக் கொண்ட பலவாறான மலங்களினால், தங்கள் உண்மையான சுயம் பிரகாசத்தை இழந்து, ஏறிய
களிம்பினால் களங்க மடைந்து காணப்படுகின்றனர்.
எவ்வாறு, ஒரு உலோகமான செம்புவில் களிம்பு ஏறிய அழுக்கினை வேதி வினைக்கு
உட்படுத்தும் பொழுது, அதன் உண்மைத் தன்மையான தங்கம் போன்ற அதன் சுயம் பிரகாசம் வெளிப்படுகின்றதோ,
மேலும், அதை வெளிக் கொண்டு வருவதற்கு ஒரு வேதியியல் வல்லுநரான ‘வேதி’ (வேதியியல் இராசயண வல்லுஞர்) தேவைப்படுகின்றாரோ,
அவ்வாறே, இந்த சீவர்கள் தங்கள் மீது ஏற்றி வைத்துக் கொண்ட பலவிதமான (நாநாவிதமான) மலங்களான
களிம்பினை, தன் ஞானத்தினால் வேதிவினைக்கு உட்படுத்தி, அவர்களது உண்மை சொரூபத்தை வெளிச்சத்திற்கு
கொண்டு வர, ‘சத்குரு’ என்ற ஒரு ‘வேதி’ வேண்டியதாக இருக்கின்றது.
அவர், இந்த சீவர்கள் அறியாமையினால் ஏற்றி வைத்துக் கொண்ட பலவாறான
சீவ தத்துவங்களை நீக்கும் பொருட்டு, அவர்களது அறியாமையை சுட்டிக் காட்டி, அவர்களது
மனதில் ஏற்றி வைத்துக் கொண்ட மலங்களை, தன்னுடைய ‘ஞானம்’ என்ற இரசாயணத்தினால், வேதியல்
விளைவுக்கு உட்படுத்தி, சீவர்களது உண்மை சொருபத்தை வெளிப்படுத்தி, அவர்களை தங்களது
உண்மைச் சொரூபத்தில் பிரகாசிக்கச் செய்கின்றார்.
அந்த வகையிலே, இந்த “நாநா சீவ வாதக் கட்டளை” என்ற
நூலுக்கு பொருள், சீவர்களின் பலவாறான மலங்களை போக்கும் வேதியல் விளைவுக்கு உட்படுத்தும்
வாதியாக இந்த ‘சத்குரு’ இருந்து, தனது உபதேசத்தால்
இந்த சீவர்கள் தங்கள் மீது ஏற்றி வைத்துக் கொண்ட மலங்களை (மன அழுக்குகளை) நீக்கும்
கட்டளை (உபதேசம்) என்பதாக இந்த நூல் தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறு ஒரு வேதியானவன் செம்பு மீது உள்ள களிம்பை வேதித்து, அதன்
உண்மை சொரூபமான தங்கம் போன்ற பிரகாசத்தை வெளிக் கொண்டு வருகின்றானோ, அதுப்போன்று, இந்த
சீவர்கள் மீது ஏற்றி வைத்துள்ள அனேக களிம்புகளான, கர்த்தா, போக்தா, ஞாதா என்ற பல்வாறான
சீவ தத்துவங்களை தன் மீது ஏற்றி வைத்துக் கொண்டுள்ளதை சுட்டிக் காட்டி, அந்த பலவாறான
சீவ தத்துவங்களிலிருந்து, அந்த சீவனை விடுவித்து, ஏக தத்துவமான “அதுவாகவே நீ இருக்கின்றாய்” என்ற ஆன்ம தத்துவத்தை உபதேசித்து,
சீவனின் உண்மை சொரூபத்தை, சுயம் பிரகாசத்தை வெளிக் கொண்டு வருகின்றார்.
அந்த வகையிலே, இந்த “நாநா சீவ வாதக் கட்டளை” என்ற
நூல், பலவாறான அறியாமைகளை ஏற்றி வைத்துக் கொண்டுள்ள சீவர்களை தன்னுடைய உபதேசக் கட்டளையினால்,
அவர்களுக்குள் இரசவாதத்தை ஏற்படுத்தி, வேதித்து, தன் உண்மை சொரூபத்தை வெளிக் கொண்டு
வருகின்ற சாதனமாக அமைந்துள்ளது.
எந்த ஒரு ஜடப்பொருளான உலோகமாக இருக்கட்டும், உயிர் பொருளாக இருக்கட்டும்,
அவைகள், தன்னைப் பற்றிய உண்மைத் தன்மையை தானாகவே என்றுமே அறிந்துக் கொள்ள முடியாது.
அறியாமையிலே இருக்கின்ற அந்த சீவனை, அது செய்த புண்ணியங்களின் அடிப்படையில்,
முழுக்க முழுக்க ஈஸ்வர அனுக்கிரகம் உண்டாகி, அதன் வாயிலாக, தக்க சத்குருவின் சந்நிதியில்
கொண்டு சேர்த்து, அவர் வாயிலாகவே தன் உண்மை சொருபத்தை அறிந்துக் கொள்ள வைக்கும்.
பொதுவாக, எல்லா ஜடப் பொருட்களும், உயிர் பொருட்களும் தங்கள் உண்மை
இயல்பினை, தாங்களாகவே இந்த உலகத்திற்கு வெளிப்படுத்திக் கொள்ளாது.
எதற்கு, அதன் முன்வினைப் பலன்களால் ஈஸ்வர அனுக்கிரகம் உண்டாகின்றதோ,
அப்பொழுது மட்டுமே உலோகம் போன்ற ஜடப் பொருளாக இருந்தாலும், மனிதன் போன்ற உயிர் பொருளாக
இருந்தாலும், ஈஸ்வரனின் விருப்பத்தின், ஆணைப்படியே இந்த உலகத்தின் வெளிப்பாட்டிற்கு
கொண்டு வரப்பட்டு, மற்றவர்களுக்கு பயன் படுகின்றது.
அந்த வகையிலே, ஒரு உலோகம் தன் களிம்புகள் (அழுக்குகள்) நீங்கி, தன்
உண்மை சொரூபத்தில் பிரகாசிக்க ஒரு வாதி எப்படி அவசியமோ, அப்படியே ஒரு சீவன் தன் களிம்புகள்
(அழுக்குகள்) நீங்கி தன் உண்மை சொருபத்தில் பிரகாசிக்க ஒரு ‘சத்குரு’ மிகவும் அவசியம்.
ஒரு இரசவாதி செம்பு போன்ற உலோகத்திற்கு கிடைத்து, அதனைப் பிரகாசிக்கச்
செய்வது என்பதுவும், ஒரு சத்குரு சீவனுக்கு கிடைத்து அவனை பிரகாசிக்கச் செய்வது என்பதுவும்,
தானாகவே நடைப்பெற்று விடாது.
அதற்கு பல கோடி சென்மங்களாக அந்த சீவன் செய்த புண்ணியத்தின் அடிப்படையிலே
மட்டுமே, அதற்கு ஈஸ்வர அனுக்கிரகம் உண்டாகி, தக்க ஆசானாக ஜடப்பொருளுக்கு ஒரு இரசவாதியோ,
உயிர் பொருளான சீவர்களுக்கு ஒரு சத்குருவோ கிடைக்க முடியும்.
அனைத்து செம்பு உலோகங்களும் மறைப்பிலிருந்து வெளிப்பட்டு, தன் உண்மை
சொரூபத்தில் பிரகாசித்து இந்த உலகத்திற்கு பயன்பட்டு விடாது.
அதுப்போன்ற, எல்லா சீவர்களும் மறைப்பிலிருந்து வெளிப்பட்டு, தன்
உண்மை சொரூபத்தில் பிரகாசித்து, இந்த உலகத்திற்கு ஜீவன் முக்தனாக பயன்பட்டு விட முடியாது.
அவ்வாறு உலகத்திற்கு பயன்பட வேண்டுமானாலும், அதனை இரசவாதத்திற்கு
உட்படுத்துபவன் சாக்ஷாத் அந்த சர்வேஸ்வரனைத் தவிர வேறு ஒருவராலும் ஆகாது.
அதனால்தான் இதை அறிந்துக் கொண்ட அன்றைய மகான்கள் “அவன் அருளாலே அவன் தாள் பணிந்து” என்று பாடிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள்.
ஆகவே, இந்த நூலைப் படிக்கின்ற அதிகாரி யாராக இருக்க வேண்டும், இந்த
நூலிலே கூறப்பட்டுள்ள விசயம் யாருக்குப் போய்ச் சேர வேண்டும், இந்த நூலைப் படிக்கின்றவர்களுக்கும்,
இந்த நூலுக்கும் எப்படிப்பட்ட சம்பந்தம் உண்டாக வேண்டும், இந்த நூலைப் படிப்பதினால்
உண்டாகும் பிரயோஜனம் என்னவாக இருக்க வேண்டும் என்ற அனைத்தையுமே அந்த ஒரே ஒருவன்தான்
தன்னில் தானாக இருந்து இவைகளைத் தீர்மானிக்கின்றான்.
அந்த வகையிலே, இந்த நூலைப் படிக்க ஆர்வத்துடன் வந்திருக்கின்ற அதிகாரிகளான
முமுக்ஷுவுக்கு, இந்த நூலை முழுமையாக படித்து முடிக்க, எந்தவிதமான விக்னங்களும் உண்டாகாமல்,
விக்னங்களை நீக்கி அருளுகின்ற விநாயகப் பெருமானின் ஆசிப்பெற்று, இந்த நூல் வாசிக்கப்படுகின்றது.
நன்றி!
என்றும் அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக