மேலே உள்ள இணைப்பை அழுத்தி புத்தகத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
ஹரிஓம்!
ஸ்ரீ குருப்யோ நம:
முகவுரை
ஒரு தொடக்கம் என்று இருந்தால்,
அதன் முடிவு நிச்சயம் இருந்தாக வேண்டும். இந்த தொடக்கத்திற்கும், முடிவுக்கும் இடையில்
உள்ள இடை ‘வெளியை’ “காலம்” என்று அழைத்துக் கொண்டு,
அதன் தோற்றம் - மறைவு குறிப்பிடப்படுகின்றது.
இது படைக்கப்பட்ட பொருள்கள்
எதுவாக இருப்பினும், அவைகள் அத்தனைக்கும் இந்த காலம் பொருந்தும். அதனால், படைத்தல்
என்றால், அதற்கு முடிவாக அழித்தல் என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கும்.
இதில், ஜடப் பொருள்களாகட்டும்,
உயிர் பொருள்களாகட்டும் அனைத்திற்கும் ஆதாரமான மூலப்பொருள் என்ற ‘பரம்பொருள்’ ஒன்று இருப்பதை யாரும் மறுக்க
முடியாது.
அதனால்தான், படைக்கப்பட்ட
அனைத்துப் பொருள்களும் மீண்டும் மூலத்தை (பரம்பொருளை) நோக்கி நகர்கின்றது. இந்த நகர்கின்ற
காலம் பொருள்களைப் பொருத்து மாறுபடுகின்றது.
இந்த கால வேற்றுமைகளுக்குக்
காரணம், அவைகள் கடந்து வந்த பாதைகளில் உள்ள ஏற்றத் தாழ்வுகள் என்ற இருமைகள் எனலாம்.
எது ஒன்று, இதுபோன்ற
இருமைகளில் சிக்கிக் கொள்கின்றதோ, அது, அந்த மூலத்தை அடைவதற்கு இங்கும், அங்கும் அலைந்து
காலதாமதம் ஆகின்றது.
இங்கு காலம் என்பது இரண்டு
நிகழ்வுகளுக்கு இடையில் உள்ள ‘இடைவெளி’
என்பதினால், அந்த ‘வெளி’ ஒன்றே அனைத்தையும்
தீர்மானிக்கின்றது.
இங்கு ‘வெளி’ என்று குறிப்பிடுவது, இந்த பிரபஞ்சத்தையே
வெளிப்படுத்துகின்ற “வெட்டவெளி” (ஆகாசம்) பற்றி கூறப்படுகின்றது.
இத்தகைய வெட்டவெளியில்
மிதக்குகின்ற பிரபஞ்சத்திற்குள் காணப்படுகின்ற கோடானு, கோடி சூரியன்களும், விண்மீண்களும்,
அந்த சூரியன்களை சுற்றுகின்ற கோள்களும், அந்த கோள்களில் வசிக்கின்ற கோடானு, கோடி சீவர்களும்
என அத்தனைக்கும் ஆதாரமாக, அதனுள்ளே ‘உள் வெளியாக’
ஊடுறுவி இருக்கின்றது.
ஆம், அதுவே, பரவெளி,
பரம்பொருள், பரமாத்மா, பரமேஸ்வரன், பராசக்தி, பரிபூரணம் என பலவாறாக அழைக்கப்படுகின்றது.
அந்த வெட்டவெளி என்ற
வெள்ளைத் திரையினிலே, ‘பிரபஞ்சம்’ என்ற
வர்ணப்படம் திரையிடப்பட்டு, தினசரி மூன்று காட்சிகளாக கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்
என திரைப்படம் அரங்கு நிறைந்து ஓடிக்கொண்டிருக்கின்றது.
திரைப்படத்தின் கதாநாயகனாக
‘பரமாத்மா’ மிகச்சிறப்பாக படத்தில் நடிக்கின்றார்.
அவரது நடிப்பை பார்க்க விரும்பிய அவரது ரசிகர்களான, அனேக சீவர்களும், அவரவர்களின் தகுதிக்கு
ஏற்ப நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு, உலகம் என்ற அரங்கினுள் அமர்ந்து, உல்லாசமாக
படம் பார்த்துக் கொண்டு உள்ளனர்.
படம் பார்த்து முடிக்கின்றவரை,
அந்த படத்தில் வருகின்ற காட்சிகளாகவே இந்த சீவர்கள் மாறி விடுவதினால், அந்த காட்சிகளுக்கு
வேறாக, ‘நான்’ என்ற ’இன்னார்’ அந்த திரையரங்கத்தின் உள்ளே இருப்பதை
மறந்துவிட்டு, அந்த திரைப்படத்துடன், திரைப்படமாக ஒன்றாகி விடுகின்றன.
அதாவது, “காண்பான், காட்சி, காணப்படும்
பொருள்” என ‘திரிபுடி’ (மூன்றும்) இல்லாமல் ஒன்றாகி விடுகின்றன.
படத்தைப் பார்ப்பவன்,
படத்தின் காட்சிகள், படத்தில் உள்ள அனைத்தும் என இதில் எந்தவித பேதமைகளும் இன்றி ஒன்றாக
மாறி விடுவதைப் போன்று, இந்த உலகத்தை உண்மை என்று கருதி, அதனுடன் ஒன்றாகி, அதிலிருந்து
விடுபட முடியாமல், உண்மை என்று நாம் நம்பிக் கொண்டிருக்கின்ற வரை, நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கின்றோம்.
இதற்குக் காரணம், மனம்
கற்பித்துக் கொண்ட கற்பனைகளுக்கு ஏற்ப, இந்த உலகம் ஒவ்வொரு விதமாக ஒவ்வொருவருக்கும்
உண்மை போன்று, காட்சியாகின்றது.
திரைப்படம் முடிந்ததுமே,
நாம் அதிலிருந்து பிரிந்து, வெளியே வந்து, அது பொய் என அறிந்து, இந்த உலகத்தை உண்மை
என்று அபிமானிக்கின்றோம்.
அதுப்போன்று, இந்த உண்மை
உலகத்தில் ஒன்றாகிப் போன நம் மனம், அதிலிருந்து விடுபட்டு, நம் உண்மை சொரூபத்தை அறிந்து
கொண்டால் மட்டுமே, இந்த படம் பார்த்ததின் (உடல் எடுத்ததின்) பலன் நமக்கு உண்டாகும்.
அந்த ‘பலன்’ என்னவெனில், திருப்தி, ஆனந்தம், அமைதி,
மெளனம் என பலவாறாக பெயர்கள் கொண்டு அழைக்கப்படுகின்றது.
அந்த பேரானந்தம் மட்டுமே
பலனாக மனதில் நிலைத்திருக்க வேண்டுமெனில், மனதின் அறியாமை அகற்றப்பட வேண்டும். அதற்கு
மனதை விசாரித்து, அதன் உண்மைத் தன்மையை உணர வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு, இந்த
நூலை ஏகாந்த பரவெளிக்கு எளிமையுடன் படைக்கின்றேன்.
நன்றி!
என்றும்
அன்புடன்,
சுவாமி பிரபஞ்சநாதன்.