இந்த உலகில் தோன்றிய ஒவ்வொரு மனிதனும் மகிழ்ச்சியை மட்டுமே விரும்புகின்றான். அந்த மகிழ்ச்சி என்பது அவனுடைய இயல்பு. ஆனால், அந்த மகிழ்ச்சி நிலையாக இல்லாமல் இருப்பதற்கு, மனம் அமைதியில்லாமல் அலைபாய்வதே காரணமாகும்.
மனதிற்கும், அமைதிக்கும், நெருங்கிய நட்பு உண்டு. அதனால்தான் மனம் சலனமடையும் போது அமைதி பறிபோகின்றது. அமைதி போனவுடன் மகிழ்ச்சி சென்றுவிடுகின்றது.
மகிழ்ச்சி என்பது மனதின் அடிப்படையில் உருவாகும் விஷயம். மனதில் தோன்றும் எண்ணங்களை வைத்து மகிழ்ச்சி முடிவு செய்யப்படுகின்றது.
மகிழ்ச்சி என்றுமே நிலைத்திருக்க விரும்பினால், நம்முடைய செயல்கள் நல்லதாக இருக்க வேண்டும். பிறரை மகிழ்விக்கக்கூடிய செயல்கள் இருக்க வேண்டும். செயல் தூய்மையாக இருக்க வேண்டுமெனில், நம் மனம் தூய்மையாக இருக்க வேண்டும். மனம் தூய்மையாக இருக்க எண்ணங்கள் நல்லவைகளாக தோன்ற வேண்டும்.
செய்யும் செயல்களினால் வருகின்ற நன்மை, தீமைகளை அந்த செயல் செய்தவன் அடைந்தாக வேண்டும் என்பது பிரபஞ்சநியதி.
நம் ஒவ்வொரு எண்ணங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அப்பொழுதுதான், அதில் நல்லது, கெட்டதை பிரித்து அறியமுடியும். நல்லது, கெட்டதை அறிந்து செயல் நடைபெற்றால், அந்த செயலின் விளைவாக கிடைக்கும் பலன்கள் நமக்கு சாதகமாக இருக்கும்.
பலன்கள் நமக்கு சாதகமாக இருந்தால்தான், நாம் மகிழ்ச்சியை அடையமுடியும்.
ஆகவே, ஒருவன்
தன்னுடைய மனதினை நல்ல எண்ணங்களால் நிரப்பினால்,
அவன் நல்லவனாக அனைவராலும் விரும்பப்படுகிறான். அதுவே, அவன் தீய எண்ணங்களால் நிரப்பினால், அவன் கெட்டவனாக அனைவராலும் வெறுக்கப்படுகிறான். எவன் ஒருவன் நல்லவனாக வாழ விரும்புகின்றானோ, அவனே மகிழ்ச்சியுடன் வாழ்வான்.