புதன், 2 செப்டம்பர், 2020

அத்வைத போத தீபிகா (ஞான நூல்)

ஞான நூல்கள்

^^^^^^^^^^^^^^^^^

(English & தமிழ்)
------------------------



அத்வைத ஞான தீபம் தமிழ் புத்தகம்  👈


ஆதி சங்கரரும் அவர் போன்ற ஏனைய மாபெரும் ஞானிகளும் வேதாந்த சூத்திரங்களுக்கு விரிவான விளக்கங்களை வெகுகாலம் முன்பாகவே கொடுத்தும், அதன் வாயிலாக ‘ஆன்ம விசாரம்’ செய்யும் வழிமுறைகளை நன்கு சுட்டிக் காட்டியும் சென்றிருக்கின்றனர்.

அவ்வாறு உரைகளில் அவர்கள் சுட்டிக்காட்டிய முக்கியமான கருத்துக்களைத் தொகுத்து, அவைகளை சமஸ்கிருத ஸ்லோகங்களாக எழுதி. “ஸ்ரீ அத்வைத போத தீபிகா” என்ற தலைப்பில் பன்னிரெண்டு அத்தியாயங்களாக கொண்டதொரு அருமையான நூலை ஸ்ரீ கரபாத்திர ஸ்வாமிகள் அவர்கள் இயற்றியுள்ளார்.

இவர் காசியில் வசித்து வந்த மிகப்பெரிய மஹான்களில் ஒருவர். இவர் தன் வாழ் நாட்களில் தனது கரத்தையே (கைகளையே) பாத்திரமாகக் கொண்டு பிச்சை எடுத்து உணவு உண்டு வாழ்ந்து வந்ததால், இந்த காரணப்பெயர் இவருக்கு உண்டானது.

இவர் எழுதிய அந்த அற்புதமான நூலை தமிழ் மொழியில் பெயர் தெரியாத ஏதோ ஒரு மஹான் எடுத்து தமிழ் மக்களுக்காக அந்தக் காலத்திலேயே கொடுத்திருக்கின்றார். ஆனால், துரதிருஷ்ட வசமாக அந்த நூலில் இருந்து 12 அத்தியாயங்களும் கிடைக்காமல், வெறும் எட்டு அத்தியாயங்கள் மட்டுமே தமிழில் கிடைக்கப்பெற்றது.

அந்த அரிய நூலை, உண்மையைத்தேடி அறிய விரும்பும் அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நல் நோக்கத்தில் பகவான் ஸ்ரீ இரமண மகரிஷியின் முதல் சீடரான முனகால வேங்கடராமையா என்ற ஞானி, பின்னாளில் ஸ்ரீ இரமணானந்த சரஸ்வதி என்றும் ரமணாஸ்ரமத்தில் அனைவராலும் அறியப்பட்டவரான “அத்வைத போத தீபிகா” என்ற ஆங்கில நூலின் ஆசிரியருமான இவரின் வாயிலாக இந்த நூல் ஸ்ரீ ரமணாஸ்ரமம் மூலமாக ஆங்கிலத்தில் முதன் முதலாக வெளியிடப்பட்டது.

அதன் பிறகு தற்போதைய அந்த ஆங்கில நூலை எளிய தமிழில் திரு. எஸ். ராமன் அவர்களால் மொழிப் பெயர்க்கப்பட்டு “அத்வைத ஞான தீபம்” என்ற பெயரில் முமுக்ஷுக்களுக்காகவே இங்கு கொடுக்கப்படுகின்றது.

விரும்பும் அன்பர்கள் இந்த நூலைப் படித்துப் பிறவிப்பயனை அடையுமாறு வேண்டப்படுகின்றது.


ஆங்கில நூலைப் பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:-


Advaita Bodha Deepika (English)


நன்றி! 🙏

ஆத்ம வித்யா விலாஸம்

 ஆத்ம வித்யா விலாஸம்

========================
ஆக்கம்:- ஸ்ரீ சதாசிவ பிரஹ்மேந்திரர்.


எளிய தமிழ் ஆடியோ விளக்கம்:-
---------------------------------------------------
சுவாமி பிரபஞ்சநாதன்.


ஒரு ஜீவன், தக்க குருவை அடைந்தானானால், அவர் அருளால் அவரிடம் உள்ள ஸ்ரத்தையால், பக்தியால், அவனால் கரையேற முடியும். அறிவு துலங்கும்.

பாசி விலகும். மாயை அறுபடும். தேகம்தான் ஆத்மா என்கிற தேஹாத்ம புத்தி அகலும். விடா முயற்சியாலும், பயிற்சியாலும் உண்மையிலே தான்யார்? என்று அறிவான்.

அதற்கும் அவன் உடலுக்கும் என்ன உறவு என்று புலனாகும். இதுவே அவனை சத் சித் ஆனந்தமாக்கும்.

துக்கம் சுகம், துன்பம் இன்பம் எதுவும் நெருங்காமல் அவன் சமநிலையில் எப்போதும் நிலைப்பான். சுத்த சைதன்யநிலை ஆனந்த ஸ்வரூபத்தை அவனுக்கு கொண்டுவரும். ஆழ்ந்த அமைதியின் உருவே அவன்.

குருவின் கடாக்ஷம் பூரணமாக ஜீவன் மேல் இருக்கும் பக்ஷத்தில் ஆனந்த சாகரத்தில் அவன் மூழ்குவான்.

அவன் மனம் எண்ணங்களிலிருந்து விடுபட்டு, அனைத்து உலக விவகாரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு, எதில் எப்பொழுதும் இலயிக்க வேண்டுமோ, அந்த ஆத்ம சாக்ஷாத்காரத்தில் நிலைத்து நிற்பான். அவனது மாயை மறைகிறது. இத்தகைய ஜீவன்தான் பிரம்ம ஞானி.

குருவின் அருளால், ஜீவனுக்கு பரிபூர்ண ஆனந்தம் மட்டும் அல்ல அசைவற்ற ஆழ்ந்த அமைதி கிட்டுகிறது. அவனது ஹ்ருதயம் உலகியல் சம்பந்தப்பட்ட இன்ப துன்பங்கள் அறவே நீங்கி, சம நிலையில் ஆத்மாவோடு ஒன்றிய இயல்பு ஏற்படுகிறது.

அந்த ஆனந்த அனுபவத்தை தான் அடைந்தது போன்றே மற்ற ஜனங்களும் அடைய வேண்டி, அதை அனைவரும் அறியும் பொருட்டு ஸ்ரீ சதாசிவ பிரஹ்மேந்திரர் தன்னுடைய “ஆத்ம வித்யா விலாஸம்” என்ற பிரகரண கிரந்தத்தில் எடுத்துக் கூறுகின்றார்.

அத்தகைய அரிய நூலை, இந்த தமிழ் விரும்பும் நல் உலகிற்கு நல்கவேண்டும் என்ற நல்நோக்கத்தில், இதை ஆடியோ பதிவாக மாற்றி இங்கு கொடுக்கப்படுகின்றது.

விரும்பும் அன்பர்கள் இந்த ஆடியோ பதிவுகளை பதிவிறக்கம் செய்து கேட்க விரும்பினால், கீழே உள்ள ஆடியோ லிங்க்கில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அழுத்தி பதிவிறக்கம் செய்தும் கேட்டுக் கொள்ளலாம்.

மேலும், ஆடியோவுடன், ஸ்லோகங்களையும் படிக்க விரும்பினால், இதே பகுதியில் உள்ள “ஆத்ம வித்யா விலாசம்” என்ற புத்தகத்தின் கீழே உள்ள இணைப்பை அழுத்தி நூலைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.


PDF BOOK LINK:-




ஆத்ம வித்யா விலாஸம்     👈



Audio Links:- 👇
-------------------

முதல் வகுப்பு MP3 ஆடியோ

இரண்டாம் வகுப்பு MP3 ஆடியோ

மூன்றாம் வகுப்பு MP3 ஆடியோ

நான்காவது வகுப்பு MP3 ஆடியோ

ஐந்தாம் வகுப்பு MP3 ஆடியோ

ஆறாம் வகுப்பு MP3 ஆடியோ நிறைவுற்றது.



நன்றி! 

செவ்வாய், 5 மே, 2020

"பராவித்யா ஆடியோ டெலிகிராம் ஆப்" (Paravidya Audio Telegram App)

ஸ்ரீ குருப்யோ நம:
ஹரி ஓம்!



கீழ்க்கண்ட இணையதள இணைப்பின் வாயிலாக “பராவித்யா டெலிகிராம்” ஆடியோ குழுவில் இணைந்து, அதில் கொடுக்கப்படுகின்ற ஆன்ம ஞான விசயங்களை கேட்டு பயன் பெறலாம்.


அர்த்த: (பொருள்)
================

சனாதன தர்மம் போதித்த தர்ம:, அர்த்த: காம:, மோக்ஷ: என்பதில், அர்த்த: என்பதை பொருள் என்றும், அவைகள், நம்முடைய அத்தியாவசிய வாழ்வியலுக்குத் தேவையான பொருள்கள் என்று கருதுவதில் எந்த தவறும் இல்லை.
ஆனால், இன்னும் சற்று ஆழமாகத் தேடினால் அது, நம் தர்மம் கூறிய அகண்டமான பொருள் எது என்பது அறிய வேண்டியது வரும்.
பொதுவாக நாம் நம் அன்றாட வாழ்விற்குத் தேவையான பணம், வீடு, கார், டி.வி. ஃபிரிட்ஜ், வாசிங் மெஷின் போன்றவைகளை மட்டுமே பொருள் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.
அதை சம்பாதிக்கவே அல்லும், பகலும் அரும்பாடு படுகின்றோம்.
ஆனால், நாம் சம்பாதித்து வைத்துள்ள உண்மையான பல பொருள்களை அனுபவிக்கத் தெரியாமல் இருக்கின்றோம்.
உதாரணமாக நம் உடலே, நமக்கு மிக ஒரு விலையுயர்ந்த பொருள். இந்த உடலுடன் ஒட்டிக்கொண்டு வந்துள்ள கைகள், கால்கள், தலை, இருதயம் என ஏகப்பட்ட இலவச இணைப்புகளை இருப்பதை நாம் அறியாமல், வெளியே இலவச பொருள்களுக்கு ஆசைப்படுகின்றோம்.
இதனுடன், இந்த விலைமதிப்பற்ற உடலை நம்பி, நம்மைக் கட்டிக்கொண்டு வந்த மனைவி மிகவும் மதிக்கப்பட வேண்டிய அற்புதமான பொருள் ஆகும். அத்துடன், அவளது அன்பினால், நாம் அடைந்த நம் அருமைக் குழந்தைகளின் அன்பு, எவ்வளவு விலை உயர்ந்த பொருள்களை நாம் வாங்கி வந்தாலும், இவர்கள் முன்பு, அதற்கு ஈடாகாது.
நாம் எதை மற்றவர்களுக்குக் கொடுக்கின்றோமோ, அதை மட்டுமே நாம் திருப்பிக் கேட்கவும் முடியும். மற்றவர்கள் நம்மிடம் கொடுக்காத பொருளை திருப்பிக் கேட்டால், நாம் மட்டும் என்ன கொடுத்து விடவாப் போகின்றோம்.
ஆகவே, நாம் அன்பைக் கொடுத்தால், நமக்கு அன்பு திரும்பக் கிடைக்கும், சிரிப்பைக் கொடுத்தால், சிரிப்பு நமக்குத் திரும்பக் கிடைக்கும். அதுவே, கோபத்தை, துயரத்தை, மற்றவர்களுக்குக் கொடுத்தால், அதுமட்டும்தான் நமக்குத் திரும்பக் கிடைக்கும்.
இதுவே, இயற்கையின் கொடுக்கல், வாங்கல் நியதி எனப்படுகின்றது.

பொருள்:
========
ஆடியோ இணைப்பு 👇

பொருள்  (ஆடியோ கேட்க இங்கே அழுத்தவும்)


****** ஓம் தத் சத் ******

ஞாயிறு, 3 மே, 2020

அறம்




தர்மம் (அறம்) என்பது மனிதர்கள் தங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து வாழ்வதற்காக உருவானது. நம்முடைய சனாதன தர்மத்தில் அறம் என்பதை, தனி மனித தர்மம், சமுதாய தர்மம், தேசத்தின் தர்மம் என ஒன்றைச் சார்ந்து ஒன்று உள்ளது என்றும், அது இறுதியில் ஒரு தனிமனித தர்மத்தினால் மட்டுமே, இந்த ஒட்டுமொத்த தேசத்தின் தர்மம் இருக்கின்றது என்றும், அந்த தர்மத்திற்கு எது ஆதாரமாக உள்ளதோ, அந்த ஆத்மாவை அறிவது மட்டும்தான் ‘உண்மையான தர்மம்’ (சரியான அறம்) என்றும் வலியுறுத்துகின்றது.


சனி, 2 மே, 2020

புருஷார்த்தம்


வேதத்தில் முதன் முதலில் பேசப்படும் கருத்து புருஷார்த்தம் ஆகும். புருஷார்த்தம் என்பது ஜீவர்களின் இச்சைக்கு உரிய விஷயம் எதுவோ, அதுவே புருஷார்த்தம் எனப்படும்.

சமஸ்கிருதத்தில்  தர்மார்த்தகாமமோக்ஷம் (தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்) எனப்படும். நம்முடைய தமிழ் மொழியில் அறம், பொருள், இன்பம், வீடு எனப்படும்.

புருஷன் என்றால் மனிதன். அர்த்தம் என்றால் இச்சைக்கு உரிய விஷயம் அல்லது இலட்சியம் என்று பொருள். அதாவது, மனிதனுக்கு இருக்க வேண்டிய இலட்சியம் புருஷார்த்தம் ஆகும்.

ஓம் தத் சத்

திங்கள், 27 ஏப்ரல், 2020

சாந்தி மந்திரங்கள்


சாந்தி மந்திரங்கள்





எந்த ஒரு காரியத்தை தொடங்கும் பொழுதும் அதற்கான மன நிலையில் இருப்பது மிகவும் அவசியம்.

சாந்தி மந்திரங்கள் நம் பாரத தேசத்தில் வாழ்ந்த பழம்பெரும் ரிஷிகளின் அனுபவத்தில் வெளிப்பட்ட வேதப்பொக்கிசங்கள்.

பொதுவாக, உபநிஷதங்கள், ஸூக்தங்கள், போன்றவைகளைப் படிக்கும் பொழுது, அவைகளின் ஆரம்பத்துலும், இறுதியிலும் இந்த சாந்தி மந்திரங்கள் ஓதப்படுகின்றன.

சாந்தி மந்திரங்கள் அனைத்தும், இறுதியில் 'ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:’ என்று நிறைவு பெறுவதைக் காணலாம்.

'சாந்தி' என்றால் ‘அமைதி’ என்று பொருள்.

     நம் அன்றாட வாழ்வில் நமக்கு உண்டாகின்ற பல்வேறு துன்பங்களுக்கு மூலம், இங்கு கீழே கூறப்படுகின்ற மூன்று விதமான துன்பங்கள் ஆகும்.
அத்தகைய துன்பங்களிலிருந்து விடுபட்டு, நாம் அமைதியை அடையவே ஓம் சாந்தி சாந்தி சாந்தி என்று மூன்று முறை சொல்லப்படுகிறது.

மூன்று வகை துன்பங்கள் வருமாறு.

1.    ஆத்யாத்மிகம்: நம்மால் நமக்கு வரும் துன்பம்; உடல் நோய், மனப் பிரச்சினைகள் போன்றவை.

2.    ஆதி பௌதிகம்: பிற உயிர்களால் நமக்கு வரும் துன்பங்கள்.

3.    ஆதி தைவிகம்: இயற்கை சக்திகளால் வரும் துன்பம், மழை, இடி, தீ போன்றவற்றால் வருபவை.

மூன்று முறை சாந்தி என்று கூறுவதின் மூலம், இந்த மூவகைத் துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுவதற்காகப் பிராத்தனை செய்யப்படுகிறது.


ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:


******

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

அணுவும் ஆன்மாவும்


ஆன்மா எதுவாக இருந்தாலும், எந்தப் பெயரில் அழைக்கப்பட்டாலும் சரி, அது உருவமற்றது.

சிஷ்யனுக்கு குரு உபதேசிக்க விரும்புகின்றார். அந்த உபதேச உரையாடல் பின்வருமாறு அமைகின்றது.



குழந்தாய்! ‘ஆலம் பழம் ஒன்றைக் கொண்டு வா’
‘இதோ அய்யனே’
‘அதைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
‘அங்கு என்ன காண்கிறாய்?’
‘அணு வடிவான விதைகள், அய்யனே’
‘குழந்தாய்! அவற்றுள் ஒன்றைப் பிள’
‘பிளக்கப்பட்டது அய்யனே’
அங்கு என்ன காண்கிறாய்?’
ஒன்றுங்காணவில்லை’

குரு, சிஷ்யனை நோக்கிக் கூறுகின்றார்.

எந்த சூக்சும பொருளை நீ காணவில்லையோ, அந்த சூக்சும பொருளிலிருந்தே இந்த மிகப் பெரிய ஆல மரம் உண்டாகி நிற்கின்றது.

குழந்தாய்! அதில் மட்டும் சிரத்தை வைப்பாய். அணு மாத்திரமான அந்த ஸூக்சுமப் பொருள் எதுவோ…. அதுவாக நீயே உள்ளாய் (தத்-துவம்-அஸி).

எது உருவமற்றதோ, அது எங்கும் நிறைந்ததாகத்தான் இருக்கமுடியும் என்ற கருத்தை எல்லா தத்துவப் பிரிவுகளும் ஒப்புக் கொள்கின்றன.

ஓம் தத் சத்!

புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்