வியாழன், 25 பிப்ரவரி, 2021

அறிவை அறியும் அறிவு!



இந்த நூலைப் படிக்க மேலே உள்ள இணைப்பை அழுத்தவும்!

முன்னுரை

 

மனிதர்களின் ஒவ்வொரு செயல்களுக்கும் பின்னால், அவர்களது ஏற்றி வைக்கப்பட்ட பல்வேறு எண்ணங்களால் ஆன அவர்களது மனம் அவர்களை அதன் போக்கில் இயக்குகின்றது.

அவர்களும் மனம் போன போக்கில் அப்படியே போய்க் கொண்டு இருக்கின்றனர். ஒரு சாக்கடையில் வாழுகின்ற புழுவுக்கு அழுகிய, நாற்றமடிக்கின்ற உணவுகளையே பெரிதாகக் கருதி, அவைகளையே உணவுகளாக உட்கொண்டு, துன்பத்தை, இன்பமாகக் கண்டு, அந்த இருப்பிடத்திலேயே இறுதிவரை அது வாழ்ந்து மடிகின்றது.

அதுவே, அந்த புழுவுக்கு தெளிந்த நீரைப் பற்றிய, தெளிவான அறிவு இருந்திருந்தால், அது நிச்சயமாக சாக்கடையிலேயே வாழ்ந்து மடிந்திருக்காது. நல்ல நீரோடையில் வாழ்ந்து, நல்ல காய்கறிகளை உணவாக உட்கொண்டு, உன்னதமான வாழ்க்கையை தனது வாழ் நாள் முழுவதும் வாழ்ந்து இன்பத்துடன் மடிந்திருக்கும்.

இந்த இருவேறுபட்ட இன்ப, துன்பங்களுக்குக் காரணம் அறியாமை என்றால் அது மிகையாகாது.

அந்த அறியாமையின் காரணமாக, மனிதர்களும் அந்த அற்ப புழுவைப் போன்றே, தாங்கள் வாழும் துன்பம் நிறைந்த வாழ்க்கையை இன்பம் எனக் கருதி ஏற்றுக் கொள்கின்றனர். மரணத்தின் இறுதிவரை இவர்கள் உண்மையான இன்பத்தை அறியவும் மறுக்கின்றனர்.

அதனால்தான், அவர்கள் தாங்கள் செய்கின்ற செயல்களை எல்லாம், தங்கள் நன்மைக்காக எனக் கருதிக் கொண்டு செய்து, இறுதியில் அதன் வாயிலாகவே பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகின்றனர்.

ஏன்? இவர்கள் இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டு தத்தளிக்கின்றனர் என்றால், இவர்கள் மனதின் ஆதிக்கத்தில் இருந்துக் கொண்டு செய்கின்ற செயல்களினால் துன்பத்தையும், அறிவின் ஆதிக்கத்தில் இருந்துக் கொண்டு செய்கின்ற செயல்களினால், இன்பத்தையும் என இருவேறு அனுபவங்களை அடைகின்றனர்.

இதிலே எவர் ஒருவர் தன் மனதை புத்தியால் விசாரித்து, அறிவை அறிந்து கொள்கின்றாரோ, அவரே அந்த மனதில் இருந்து விடுபட்டு, மகத்தான அந்த அறிவாகவே மாறி, மலர்ந்து விடுகின்றார். இவரைத்தான் “ஞானி” என்கின்றோம்.

தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.

இவ்வாறு தன்னை அறிந்த தத்துவ ஞானிகள் மட்டுமே, தங்களை அந்த அறிவாகவே அறிந்து, அந்த அறிவினாலேயே அவர்களது முன்னை வினையின் முடிச்சை அவிழ்க்கின்றனர், பின்னை வினையைப் பிசைந்து பிணைகின்றனர் என்று தனது திருமந்திரத்தில் திருமூலரும் அறிவை அறியச் சொல்கின்றார்.

       அந்த ஞானிகள் அடைந்த அனுபவ உண்மை என்பது, தனக்கு கொடுக்கப்பட்ட பிரத்யேகமான ஆறாவது அறிவைக் கொண்டு நன்மை, தீமைகளைப் பகுத்தறிந்து, அதன் வாயிலாக இந்த உலகிற்கு அவர்கள் உணர்த்த விரும்பியது ‘அறிவால் அறிவை அறி’ என்பதையே ஆகும்.

 ஆனால், மனிதர்களாகப் பிறந்த அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவால் அனைத்தையும் பகுத்தறிந்து அந்த அறிவை அறிகின்றனரா? என்றால், இல்லை என்றே கூறலாம். அதற்குக் காரணம் அந்த “ஒரே அறிவு” பிரதி பிம்பிக்கின்ற உபாதிகளைப் பொருத்தே அந்த, அந்த உடலில் வெளிப்படுகின்ற நிலையில் ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றது.

அதாவது பிரகாசமான ஒரே சூரியன் எப்படி பிரதி பிம்பிக்கின்ற உபாதிகளான நீர் நிலைகளைப் பொருத்து, சாக்கடை நீரில் சூரியப் பிரகாசம் சற்று மங்கியதாகவும், அதுவே தெளிந்த நீரில் சூரியப் பிரகாசம் மிகுந்ததாகவும் காணப்படுவதை நாம் நம் நடை முறையில் காண்கின்றோம் அல்லவா?...

அதுப்போன்றே, இருக்கின்ற அந்த ஒரே அறிவு தன்னை பிரதி பிம்பித்துக் கொள்கின்ற உபாதிகளைப் (உடல்களைப்) பொருத்து, செடி, கொடிகள், மரங்கள் போன்ற தாவரங்களில் ஒரு அறிவாகவும், புழு, பூச்சி இனங்களில் இரண்டு அறிவுகளாகவும், நீர் வாழ்வனவற்றில் மூன்று அறிவுகளாகவும், பறவைகள், விலங்குகள் போன்றவைகளில் நான்கு, மற்றும் ஐந்து அறிவுகளாகவும், மனிதர்களில் ஆறு அறிவுகளாகவும் பிரகாசிக்கின்றது.

 இந்த அறிவுப் பிரகாசம் என்பது, கற்கின்ற கல்வியினால் உண்டாவதாகக் கருதுவது, நம்மிடையே ஏற்றி வைக்கப்பட்ட அறியாமை என்றே கூறலாம். அதாவது, வெளியே நாம் கற்கின்ற விசய, சுகங்களில் இருந்து ‘அறிவு’ உண்டாவதாகக் கூறுவது அறியாமை என்றே அறியப்பட வேண்டும்.


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

சிவயோகம்


யோகமென்னும் பொருளுக்கு ஒன்று கூடுதல் என்று பொருள்; இணைப்பு என்றும் பொருள்.

எண்ணங்கள் பல வகையாகச் சிதறுண்டு போகாமல் மனம் அடங்கி, ஒடுங்கி, ஒன்றுகூடி வர வேண்டும்.
அதுதான் யோகம்.
‘யோகாத் சித்த வ்ருத்தி நிரோத:’ என்று பதஞ்சலி முனிவர் தமது யோக சூத்திரத்தில் முதலில் இதைத்தான் கூறுகிறார்.
மனம் ஒருமைப்பட்டு நிற்க, இறைவனோடு ஒன்றுபட வேண்டும். இதற்காகத்தான் தியானம் செய்ய வேண்டும்.
சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று நான்கு படி நிலைகளைச் சொல்வார்கள்.
இந்த யோகம் செய்வதே ஞானம் என்ற லட்சியத்தை அடையத்தான் ஆகும்.
யோகத்திற்கு மேலும் ஞானம் என்ற படி இருப்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். யோகத்தை முடிந்த முடிபு என்று கொள்ளக்கூடாது.
ஞானிகள் அநுபவமாகிய அந்த இலட்சியத்தின் கடைசிப்படியை மிதிக்கிறார்கள். யோகத்தில் மட்டும் முழுப் பயன் அடைய முடியாது. இறைவனுடைய நினைவு இல்லாமல் செய்கிற யோகம் பயன்படாது. அவ்வாறே அந்த ஞானமும் பயன் படுவதில்லை.
யோகத்தைத் தொடங்கும்போது இறைவனுடைய திருவருளைப் பெறவேண்டும் என்ற நினைவோடுதான் பலர் தொடங்குகிறார்கள்.
யோகம் செய்வதனால் ஒருவகையான வலிமை உண்டாகும். இடையே சில வகையான கிளு கிளுப்புகள் உண்டாகும். அவற்றை அநுபவிக்கும்போது, இவையே யோகத்தினால் உண்டாகும் பயன் என்று சிலர் ஏமாந்து போகிறார்கள்.
என்றைக்கும் மாறாத இன்பத்தை, இறைவனுடைய திருவருள் இன்பத்தைப் பெற வேண்டும் என்ற நினைவு போய்விடும்.
வெளி ஊருக்குப் போய் நிறையப் பணம் சம்பாதித்துக் கொண்டு, மீண்டும் தன் சொந்த ஊருக்கு வந்து மனையாளோடும், உறவினர்களோடும் வாழ வேண்டும் என்று ஒருவன் நினைக்கிறான். யாவரிடமும் விடை பெற்றுக் கொண்டு வெளியூருக்குப் போகிறான். அங்கே போய்ப் பணம் சம்பாதிக்கிறான். அந்த ஊரில் ஒருத்தியுடன் அவனுக்கு நட்பு ஏற்படுகிறது. அங்கே வீடு கட்டிக் கொண்டு அவளோடு வாழ்கிறான். இவ்வாறு அவன் செய்வது ‘அறம்’ ஆகாது.
அதுபோலவே யோகம் என்ற ஏணியை வைத்துக் கொண்டு இறைவனுடைய திருவருள் இன்பமாகிய லட்சியத்தை அடைய வேண்டும். அந்த அநுபவம் கிடைப்பதற்கு முன்னால் யோக நிலைகளில் பல வகை அநுபவங்கள் ஏற்படும்.
சாமானிய மனிதனுக்குக் கிடைக்காத அநுபவங்கள் அவைகள் எனலாம். இது யோகத்தில் மாத்திரம் அல்ல. பக்தி முதலிய நெறிகளிலும் இப்படி இடையிடையே சில உயர்ந்த அநுபவங்கள் உண்டாகும். அந்த அநுபவங்கள் உலகப்பற்றில் சிக்கி உழலுகின்ற மக்களுக்கு கிடைக்காதவை.
ஆனால் அந்த அநுபவங்களை முடிந்த முடிவு என்று கருதி நாம் மிக உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டோம் என்று ஏமாந்து, அப்படியே நின்றுவிடுகிறவர்கள் பலர் இருக்கிறார்கள்.
அவர்கள் மீண்டும் உலக மாயையில் சிக்கிக் கொண்டு தடுமாறிக் கீழே விழுந்து விடுவார்கள். பல துறவிகளும், யோகிகளும் மிகவும் தீவிரமாக வைராக்கியத்தோடு சாதகம் செய்வார்கள். அதில் ஏதோ ஒரு நிலை வந்துவிடும். நமக்கு முடிந்த நிலை கிடைத்துவிட்டது என்று எண்ணி நின்று விடுவார்கள். கடைசியில் பெண் மயலில் சிக்கிக் கீழே விழுந்து விடுவார்கள்.
இதற்கு உதாரணமாகப் பலரை நாம் கூறலாம். இதற்குக் காரணம் என்ன?
அவர்கள் லட்சிய நிலையை அடையவில்லை. அடைந்திருந்தால் இந்த உலகமே எதிர்த்து நின்று மயக்கினாலும் அவர்கள் மனம் மயங்க மாட்டார்கள்.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

ஞானியின் கல்

 ஞானியின் கல்


புத்தகம் 👈

அமுரி எனும் அமிர்தம் உட்கொண்டு தமது உடலை காய சித்தியால், ஒளியுடலாய் மாற்றி, சொரூப சித்தி அடைந்து, பிறவாப்பெரு நிலை பெற்றவர்களில் ஒருவரே நமது வள்ளல் பெருமான் ஆவார்.

 பொதுவாக பிறந்தவர்கள் இறப்பதும், இறந்தவர்கள் பிறப்பதும் பொது விதி ஆகும். இதிலே, பஞ்ச பூதங்களால் பரு உடல் கொண்டு பிறந்த மனிதன் மட்டுமே பிறப்புக்கு பின் வரும் இறப்பை வென்று, சொரூப சித்தி பெறுவது சாத்தியம் என்பதை சாகாக்கல்வி கற்ற நம் தமிழ் சித்தர் பெருமக்கள் மூலமாக அறிய முடிகின்றது.

 அவ்வாறு சாகாக்கல்வி கற்றவர்கள், இந்த ஸ்தூல உடலை அவர்கள் விரும்பிய காலம் வரையிலும் வைத்துக் கொண்டிருந்துவிட்டு, வேண்டாம் என்று கருதினால், அந்த உடலுடன் மண்ணில் சமாதி ஆவதும், அல்லது உடலைப் பிறர் கண்களுக்கு புலப்படாது மறைத்து வாழ்தலும் என எல்லா விதமான திறன்களைக் கொண்டவர்கள் நம் சித்தர்கள் எனலாம்.

 இப்படிச் சித்தர்களது வழி முறையில் கூறப்பட்ட, அதி அற்புதமான 'சாகாக்கல்வி' முறையை, தாங்கள் பெற்ற அனுபவத்தைக் கருணை வயப்பட்டு, மற்றவர்களும் அறியும் படி, அழகிய தமிழ்ப் பாடல்களில் பாடியும், எழுதியும் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.

      சித்தர்களது பாடல்கள் மூலமாக, நாம் பல துறைகள் பற்றிய விவரங்களையும் பெறமுடியும். அதிலே மிகவும் முக்கியமானது, உடலுடன் கூடிய முக்தியைப் பெறும் வழி முறையாகிய சாகாக்கல்வி என்பது ஆகும்.

      நம்முடைய நவீன கல்வித் திட்டத்தின் வாயிலாக, நாம் ஏற்றி வைத்துக் கொண்ட ஏகப்பட்ட எண்ணங்களால், எதையுமே ஏற்க மனமின்றி, நமக்கு சித்தர்கள் கூறும் ‘சாகாக்கல்வி’ சாதனைகளைப் பற்றி ஆராயவும், அதற்கான பொறுமையும் சிறிதும் இல்லை.

      இதனாலேயே, இன்றும் நம்முடன் உடலோடு வாழ்ந்து வருகின்ற பல சித்தர் பெருமக்களைப் பற்றிய உண்மைகளை நாம் சரியாக உணர்ந்துக் கொள்ள முடிவதில்லை.

    சித்தர்களைப் பற்றிய விவரங்களைக் கூறும் போது, அகத்தியர் உட்பட, அனைத்து சித்தர்களும், சாகாக்கலையை அறிந்தவனது சுவாசம், முற்றிலும் மாறுபட்டு இருப்பதைப் பற்றி மிகவும் முக்கியமாகக் குறிப்பிடுகிறார்கள்.

      காயசித்தி பெற்றவரது சுவாசம் சுழுமுனையால் தான் நடக்கும். அவர்களுக்கு மற்றவர்களைப் போன்று உடலில் சுவாசம் நிகழாது, என்பதாக ஒரு அற்புதமான விபரத்தைத் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல பசி, தாகம், உறக்கம் ஆகியனவும் மாறிப்போகும் எனவும் கூறுகின்றனர்.

      இப்படி எல்லாம் சித்தர்களது உடலில் ஏற்படும் மாற்றம் எப்படி ஏற்படுகிறது?

      எதன் மூலமாக அந்த மாறுதல்களை அவர்களால் அடைய முடிகிறது?

    என்பதை அறியும் பொழுது, அவர்கள் காயசித்தி எனும் முறையில் “அமுரி” என்னும் கற்ப மருந்தைக் கண்டறிந்து, அதனைக் கொண்டு ‘முப்பு’ முடித்துள்ள காரணத்தினால், அவர்களால் இவ்வாறு இருக்க முடிகின்றது என்பதை அறிய முடிகின்றது.

புதன், 11 நவம்பர், 2020

மனமடங்கும் மார்க்கம்

 


                    ↑ இந்த புத்தகத்தை மேலே உள்ள இணைப்பை அழுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மாயை நம் வாழ்வில் ஏற்படுத்தும் விளைவுகளைச் சற்று சிந்திக்க வேண்டும்.

 நேற்று ஒரு விசயத்தைப் பற்றி ஒரு மாதிரி சிந்தித்தவன். இன்று அதே விசயத்தைப் பற்றி வேறு விதமாக சிந்திக்கிறான்.

 ஒரு உணர்ச்சியால் மனிதன் தவறு செய்கிறான். மற்றொரு உணர்ச்சியால் இறைவனை பக்தி செய்கின்றான்.

ஒரு நேரம் ஒருவனுக்கு உதவி செய்கின்றான், மறுநேரம் மற்றொருவனுக்கு தீங்கு செய்கின்றான். மேலும் அதை எண்ணி வருந்துகிறான். இரண்டும் ஒரே மனிதனே.

 நல்லதாக சிந்திப்பதும், மாறாக கெட்டதாக சிந்திப்பதும் ஒருவனே.

எண்ணங்களின் நிமிடத்திற்கு நிமிடம், நொடிக்கு நொடி மாறும் குணத்தை அறிந்துக் கொண்டால், நாம் அதன் பிடியில் எவ்வாறு சிக்கிக் கொண்டுள்ளோம், கட்டுண்டு உள்ளோம் என உணர முடியும்.

 ஒரு மனிதன் வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்ய முடிவு செய்கிறான். அப்போது முதியவர் ஒருவரை சந்திக்கிறான். எப்படியோ அவன் மனதை அறிந்து கொண்ட அந்த முதியவர் இன்று இரவு மட்டும் தூங்கி எழுந்து, நாளை நீ தற்கொலை செய்து கொள் என்று கூறுகிறார்.

  அவனுக்கு வேறு ஆறுதலோ, அறிவுரையோ எதுவும் அவர் கூறவில்லை. அன்று இரவு அவனுக்கு வயிறார உணவு கொடுத்து தங்க இடம் தருகிறார். நன்கு சாப்பிட்டு இரவு நன்றாக உறங்கி எழுகிறான் அந்த மனிதன்.

 மறுநாள் காலையில் அவனுக்கு சாக வேண்டும் என்ற எண்ணம் முற்றிலும் நீங்கி விட்டது.

 அவனிடம் சரியாக வாழ்வதற்கு ஏற்ற எண்ணங்கள் தோன்றுகின்றன. பழைய வாழ்வில் தோல்வி உண்டானதற்கு காரணமானவற்றை ஆராய்கிறான். இது தான் எண்ணங்களின் குணம்.

 ஒரு நாள் நல்ல மழை. ஒரு மனிதன் குடையுடன் நடந்து செல்கிறான். வழியே வயதான ஒரு ஏழைப் பெண்மணி மழையில் நனைவதைப் பார்க்கிறான். அவள் மேல் அவனுக்குக் கருணை பிறக்கிறது. தன் குடையைத் தரலாம் என்று எண்ணியவன், பக்கத்தில் தானே தன் வீடு இருக்கிறது, ஆகவே நானும் நனையாமல் அங்கே போய் வேறொரு குடை கொண்டு வந்து தரலாம் என்று எண்ணி வீட்டுக்கு போகிறான்.

குடையும் எடுத்து விட்டான். இப்போது வேறு விதமான எண்ணங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. வீட்டில் மொத்தம் மூன்று குடைகள்தான் உள்ளது. நாமோ மொத்தம் நாலு பேர் உள்ளோம். 

 அவசரத்திற்கு குடை வேண்டும் என்றால் என்ன செய்வது?

 ஒரு குடை 200 ரூபாய் ஆகும். சரி விடு! நம்மை எதிர்ப்பார்த்தா, அந்த கிழவி இருக்கிறாள். என்று எண்ணிக் கொண்டு வேறு வேலையை பார்க்கப் போய் விட்டான்.

எனவே, கருணை வந்தபோது ஒரு எண்ணம், சுயநலம் வந்தபோது ஒரு எண்ணம். இரண்டு எண்ணங்களும் ஒரே மனிதனுக்கு உண்டாயின.

 இதுதான் எண்ணங்களின் வலிமை. இதுவே மாயை.

 நம்மை ஒன்றுபோல் எண்ண விடாமல், எதையாவது, மாற்றி, மாற்றி எண்ணத்தோன்றும் எண்ணங்களின் தொகுப்பே மனம் எனும்போது, இதுதான் மாயை என்று அறிவதற்காக, அதே மனதை விசாரம் செய்யப்பட வேண்டும்.

ஞாயிறு, 1 நவம்பர், 2020

முப்பூ இரகசியம் (அகமும் - புறமும்)

முப்பூ இரகசியம் புத்தகம் 👈

 ↑  புத்தகம் பதிவிறக்கம் செய்ய இந்த லின்கை அழுத்தவும்.




படைப்பிலுள்ள எல்லா உயிர்களும் அகரத்தில் தொடங்கி, உகரத்தில் உழன்று, மகரத்தில் அடங்கும் தன்மை உடையவை.

 பிழைப்பு சார்ந்த சமூக வாழ்வில் சிக்கியுள்ள உயிர்கள், அன்னையின் கர்ப்பத்தில் (அகரம்) தொடங்கி, உலக வாழ்க்கையில் (உகரம்) உழன்று, மரணத்தின் பின் மண்ணுள் (மகரம்) அடங்கும். படைப்பிலுள்ள உயிரானது உயிர்மெய் (ஞானோதயம்) அறிந்து, வீடுபேறு என்ற முக்தி நிலையை அடையும் வரை, இத்தகைய பிறப்பு-இறப்பு சுழற்சி தொடரும்.

 ஆன்மீகப் பாதையில் செல்லும் சாதகர்கள், அ(கரம்) + உ(கரம்) + ம(கரம்) என்பது படைத்தலின் ஆதாரமானது ஓங்காரம் என்ற பிரணவ ஒலி என்பதை அருளால் அறிந்து, படைத்தவனின் ஒலி வடிவமாகிய (நாதப்பிரம்மம்) அதனுடன் படைப்பாகிய நமது அதிர்வுகள் (vibration) ஒத்திசைவு (resonance) அடைவதற்கான பயிற்சிகளின் மூலம், படைப்பு வேறு, படைத்தவன் வேறு என்ற அறியாமையால் விளையும் இருமை நிலையைக் கடந்து, ஓங்காரத்துடன் ஒன்றி, பிறப்பு -இறப்பு என்ற சுழலிலிருந்து விடுதலை பெறுவதையே மனிதராகப் பிறவியெடுத்தலின் பயன் என்பதை உணர்ந்து, அதற்கான முயற்சிகளைத் துவக்க வேண்டும்.

புதன், 21 அக்டோபர், 2020

வெட்டவெளி இரகஷியம்

              



                எதனுடனும் மதிப்பிடமுடியாத மகத்தான பூஜ்ஜியமே பூரணம், அந்த பூரணமே ப்ரஹ்மம். ப்ரஹ்மமே வெட்டவெளி. அந்த வெட்ட வெளியே “நான்” என்று அறிந்துக் கொண்டால், அந்த அறிவே ‘சித்’. அது நடனமாடும் உணர்வுவெளிதான் (அம்பலம்). அதுவே சிற்றம்பலம்.

            இதைத்தான், சித்தாகிய இறைவன் (திரு) நடனமிடும் ஆகாயமே (அம்பலமே) ‘திருச்சிற்றம்பலம்’ என்று அறிக.
            அதைவிடுத்து, வெறும் வாய் வார்த்தையினால், ‘திருச்சிற்றம்பலம்’ என்று கூறிக் கொண்டிருப்பது இறைவனை அறியாத மூட பக்திக்கு ஒப்பாகும்.
            இந்த அறிவு ஆகாசத்தில் (சிதாகாசத்தில்) விழித்துக் கொண்டவருக்கு, உள்ளும், புறமும் ஒன்றேயான ‘வெட்டவெளி’ மட்டும்தான் முழுமை.
            அந்த முழுமையே இறைவன். அந்த இறைவன் சொரூபமே என் உண்மைச் சொரூபம் என்று அறிய முடியும்.
            வெட்டவெளி பூஜ்ஜியம், சூன்யம், ப்ரஹ்மம், அறிவு என்பதெல்லாம் வெறும் நாமங்கள் (பெயர்கள்) மட்டுமே.
            நாமங்களிலும், ரூபங்களிலும் சிக்கிக் கொண்டு இருப்பதைத் தவிர்த்து, அந்த ஏக இறைவனை நம் நேரடி அனுபவமாக்குவது எவ்வாறு? என்று அறிவதே பகுத்தறிவு படைத்த மனித தேகத்தின் மகத்துவம் என்றும் அறிக.
            நாமமும், ரூபமும் இல்லாத அந்த அன்பு உணர்வு வெளிப்படுகின்றது அல்லவா? அது மட்டுமே தூய்மையான பேருணர்வு. அதுவே சத்தியம், நித்யம், அனந்தம், அகண்டம், ஆனந்தம்.
            அந்த உணர்வு மையம் விழிப்படைய வேண்டுமானால், தனக்கு வேறாக எதுவுமே இல்லை என்ற, இருமைகள் அற்ற அபேத அன்பே, உண்மையான தூய அன்பு. அந்த அன்பு வெளிப்படுவதே ஆன்மாவின் நேரடி அனுபவம்.
            அது நம்முடைய இயல்பு, அது நம்முடைய சொரூபம். அது நம்முடைய உணர்வு. அது நம்முடைய அறிவு.
             நமக்கு வேறாக எதுவுமே கிடையாது. இருப்பதாகத் தெரிவதெல்லாம் உள்ளுணர்வின் அறிவுப் பிரகாசம். அதாவது, அனைத்தையும் அறியும் அறிவு. அதுவே நான்.
            அந்த “நான்” இருப்பதினாலேயே, அனைத்தையும் அறிய முடிகின்றது.
            அதாவது எனது உணர்வு மையமே அவ்வாறு அனைத்தையும் என்னுள்ளேயே அறிகின்றது. அது எனக்கு வேறாக எப்பொழுதும் இல்லை.
            இதை ஒரு எளிய உதாரணத்தின் முலம் அறியலாம்.
            அதாவது, ஒன்றுமற்ற வெள்ளைத்திரை ஒன்று உள்ளது. அதற்கு அசைவுகள் ஏதும் கிடையாது.
            ஆனால், அதன்மீது ப்ரொஜெக்டரில் இருந்து வெளிப் படுகின்ற படம் ஓடுகின்றது, அது வெள்ளைத் திரையில் பிம்பிக்கின்றது. அதிலேயே அனைத்து காட்சிகளுமே காணப்படுகின்றது.
            அதாவது, சண்டை, சோகம், காதல், கோபம், அன்பு, மகிழ்ச்சி என பலவாறான தோற்ற மாயைகள் அந்த திரையில் பிம்பிக்கின்றது.
            ஆனால், அவைகளால் அந்த திரை ஒருபொழுதும் பாதிக்கப்படாது. மேலும், அந்த அனுபவங்கள் எதுவுமே அந்த ஒன்றுமற்ற கலங்கமற்ற திரையினுடைய சொந்த அனுபவங்கள் கிடையாது.
            அந்த கலங்கமற்ற வெள்ளைத் திரை எதனாலும் பாதிக்கப்படாதது. தூய்மையானது. தன்னில் தானாய் இருப்பு கொண்டுள்ளது. அது இருப்பதினால்தான் அதன் மீது படம் ஓடுகின்றது.
            இதுவரை கூறப்பட்டது, ஒரு திரையரங்கத்தில் உள்ள ஜடமான வெள்ளைத் திரையைப் பற்றியதாகும்.

            இனி, ஆன்மா என்றொரு வெள்ளைத்திரை உள்ளது. அதற்கு அசைவுகள் ஏதும் கிடையாது.
            ஆனால் அதற்கு அறிவு உண்டு. அதன் வயிலாகவே, அதன்மீது ஏற்றி வைக்கப்பட்ட எண்ணங்கள் என்ற பிலிம் ரோல்கள் வாயிலாக, மனம் என்ற ப்ரொஜக்டரில் இருந்து படங்கள் (எண்ணங்கள்) வெளிப்படுகின்றது.
            அந்த ஆன்மா என்ற கலங்கமற்ற, தூய்மையான வெள்ளைத்திரையின் மீது அந்த படங்கள் ஓடுகின்றது,
            அதிலே காட்சிகள் விரிகின்றது. சண்டை, சோகம், காதல், அன்பு, மகிழ்ச்சி என பலவாறான தோற்ற மாயைகள் அந்த வெள்ளைத் திரையில் பிம்பிக்கின்றது.
            ஆனால், அவைகளால் அந்த வெள்ளைத் திரை ஒருபொழுதும் பாதிக்கப்படாது.
            மேலும், அந்த அனுபவங்கள் எதுவுமே அந்த ஒன்றுமற்ற கலங்கமற்ற திரையினுடைய சொந்த அனுபவங்கள் கிடையாது.
            அந்த கலங்கமற்ற வெள்ளை நிறமுடைய ஆன்மத் திரையோ எதனாலும் பாதிக்கப்படாதது, தூய்மையானது. அது தன்னில் தானாய் இருப்பு கொண்டது. அது இருப்பதினால்தான் அதன் மீது மனம் என்ற எண்ணங்கள் படமாக ஓடுகின்றது.
            ஆனால், இந்த ஆன்மத் திரை அறிவுடையது, உணர்வுடையது. ஆதலால், இதற்கு வேறாக எதுவுமே அங்கு திரையிடப்பட முடியாது.
            அனைத்தையும் அது சாக்ஷியாகப் பார்த்துக் கொண்டே இருக்கின்றது. அனைத்து அனுபவங்களும் அந்த ஆன்ம திரைக்கு உண்டாவதுப் போன்று காணப்படுகின்றது.
            ஆனால், அதற்கு உண்டாகும் அனுபவங்கள் அனைத்துமே அதன் மீது ஏற்றிவைக்கப்பட்ட ப்ரொஜெக்டரில் இருந்து (மனதில்) வெளிப்படுகின்ற படங்களைச் சார்ந்தது.
            ஆனால், அந்த படங்கள் அந்த ஆன்மாவை (திரையை) பாதிக்காது.
            அந்த வகையிலே, இங்கும் அந்த மனமே அன்பு (பக்தி) செய்கின்றது. அந்த அன்பு (பக்தி) சுய நல அன்பாக இருந்தால், அந்த மனம் தன்னை அறிய முடியாமல் அல்லல் படுகின்றது.
            அதுவே, தனக்கு வேறாக ஒன்றுமே இல்லை என்ற அடைந்த அறிவால், அதாவது ஆத்ம ஞானத்தின் வாயிலாக, அதே மனம் தனக்கு வேறாக எதையும் பார்க்காமல், அனைத்தையும் தன்னில் தானாய்ப் பார்த்து, அவைகளை அன்பு செய்கின்ற பொழுது, அந்த பக்தி இரண்டற்ற அநன்ய பக்தியாக மாறிவிடுகின்றது.
            இந்த அன்பினாலேயே, அதாவது இந்த அநன்ய பக்தியினாலேயே, ஆன்மாவிற்கு வேறாக பிரதிபிமித்த மனம் மீண்டும் அந்த ஆன்மாவிலேயே தன்னில் தானாய் கரைந்து விடுகின்றது.
            அதன் பிறகு அங்கே, இருப்பு கொண்டிருப்பது வெறுமையான, வெள்ளையான, ஒன்று மற்ற வெட்டவெளி என்ற ஆன்மா (திரை) மட்டுமே. அதற்கென்று, எந்த ஒரு அனுபவமும் கிடையாது.
            அது அசைவற்றது. அனைத்தையும் தனக்கு வேறாக பிரதிபிம்பித்துப் பார்க்கின்ற அறிவு மட்டும் உடையது.
            அதுவே இறைவன்! அதுவே ஆன்மா! அதுவே நான்!
            இதுவே ஆன்ம அனுபவம், இதை அடைவதே ஆனந்தம்.
            இதை அறிவதே அறிவு.


ஓம் தத் சத்!

வியாழன், 8 அக்டோபர், 2020

குருவாய் வருவாய்


சாஸ்திரத்தின் வாயிலாக உபதேசித்து, தன்னை தனக்குக் காட்டிக் கொடுத்த ஆத்ம ஞானம் என்ற மிகப் பெரிய சொத்தை கொடுத்த சத் குருவிடம், ‘எவனுக்கு ஈஸ்வரனிடம் உத்தம பக்தி இருக்கின்றதோ, அதைப்போன்றே மாறாத உத்தம பக்தி சத்குருவிடமும் வைக்கப்படுகின்றதோ, அந்த மஹாத்மாவுக்கு மட்டுமே தத்வார்த்தங்கள் எல்லாம் தானாகவே பிரகாசிக்கும்’ என்பதை, ஸ்வேதாஸ்வதர உபநிஷத்து மற்றும் குரு கீதை என இரண்டிலும் கூறப்பட்டுள்ளது.

அந்த ஸ்லோகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

யஸ்ய தேவே பராபக்திர் - யதா தேவே ததா குரௌ |

தஸ்யைதே கதிதாஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந: ||

 


புதிய பதிவுகள்

ஈசாவாஸ்ய உபநிஷதம் [வகுப்பு - 4]

ஒலிப்பேழைகள்